மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

குறையில்லாத கிராமங்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் தலைவர் குத்தம்பாக்கம் இளங்கோ அவர்களின் நேர்காணல்

நிகில்

Mar 5, 2016

kuththambakkam Elango1கேள்வி: உங்களைப் பற்றி கூறுங்கள்?

பதில்: என் பெயர் இளங்கோ, இரசாயனப் பொறியாளர். குத்தம்பாக்கம் என்னுடைய சொந்தஊர், இதுதான் நான் பிறந்து வளர்ந்த ஊர். இந்த கிராமத்தில நான்தான் முதல் பொறியாளரானேன். இந்த குத்தம்பாக்கம் கிராமம் சென்னைக்கு மிக அருகாமையில் இருந்தாலும் பின்தங்கிய கிராமம்தான். மக்கள் ஏழையாக இருந்தார்கள், மதப் பிரச்சனைகள் நிறைய இருந்தது, கள்ளச்சாராயம் காய்ச்சும் பழக்கம் இருந்ததால் குடிகாரர்கள் நிறைய இருந்தார்கள், அதன்காரணமாக வன்முறை நிறைய இருந்தது. நான் இளைஞராக வளரும்பொழுதே இதற்கு ஒரு மாற்று கண்டுபிடிக்க முடியுமா? என்ற சூழ்நிலையில்தான் படித்தேன். வழக்கம்போல் படித்துமுடித்தவுடன் கல்வி வெளியில் அனுப்பிவிடும், இரசாயனப் பொறியாளருக்கு வேலை இங்கு கிடைக்காது, வெளியில்தான் வேலை கிடைத்தது. எனவே வெளியில் சென்று பணம் சம்பாதித்துவிட்டு ஊருக்கு வரும்பொழுதெல்லாம் ஒரு குறை தெரியும். நான் மட்டும் ஏதோ முன்னேறுவதுபோல் தெரிகிறது, நம்முடைய ஊர் அப்படியேதான் இருக்கிறது என்று தோன்றும்.

என்னுடைய குத்தம்பாக்கம் கிராமத்தில் ஓயாமல் சண்டையாக இருக்கிறது, சின்னச்சின்ன பிரச்சனைகளுக்கெல்லாம் சண்டைப்போட்டுக்கொள்வார்கள். இதற்கு தீர்வு கண்டிருக்கலாமே என்ற தேடுதல் இருந்துகொண்டே இருந்தது. நான் பார்த்த பெட்ரோலியம் வேலைகள் எல்லாம் ஆபத்தான வேலைகள், அதிகபட்ச நேரம் அதற்காக சென்றுவிடுகிறது, ஆனால் கிராமத்திற்காக வேலை செய்யவேண்டும் என்றால் அதிக நேரம் தேவைப்படுகிறது. எனவே அந்த மாதிரியான பொறுப்பான வேலையை விட்டுவிட்டு வேறு ஏதாவது சுலபமான வேலையைத் தேடினால், ஊர் மக்களுக்கு வேலை செய்யலாம் என்று CSIRல் விஞ்ஞானியாக பணிபுரிந்தேன். ஒன்பது ஆண்டுகள் இதில் வேலை செய்து வந்தேன். இவ்வேலையில் ஒரு பக்கம் ஆய்வு செய்தாலும் சிறிது நேரம் கிடைக்கும். அதனால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் குத்தம்பாக்கம் கிராமத்தில் மக்களைப் பார்த்து பயிற்சி நடத்துவது, சின்னச்சின்ன சமுதாயப் பிரச்சனைகளுக்கு இளைஞர்களை ஒன்று திரட்டி அந்தப் பிரச்சனைகளுக்கெல்லாம் முடிவு காண்பது என்று பல வேலைகள் நடந்துகொண்டிருந்தது.

kuththambakkam Elango15அந்த நேரத்தில் ராஜீவ்காந்தி 1987-88களில் புதிய பஞ்சாயத்து சட்டத்துக்காக முயற்சி செய்தார்கள். 1992ல் 73வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம் கொண்டுவந்து கிராமங்களில் வலுவான பஞ்சாயத்து அமைப்புகளை உருவாக்குவதற்காக அரசாங்கம் முயற்சி செய்தார்கள். அது எனக்கு ஒரு ஆரம்பமாக இருந்தது. சரியான நேரத்தில் இது வருகிறது, இதை யாராவது சரியாக பயன்படுத்தினார்கள் என்றால் கிராமம் முன்னேறிவிடும் என்ற எண்ணம் வந்தது.

1996ல் பஞ்சாயத்துத் தேர்தலை அறிவித்த பிறகு மக்களை அழைத்து, யாராவது ஒரு நல்ல நபரை நிறுத்தலாம் என்று பேசினார்கள். நான் அதில் வரமாட்டேன், காரணம் நான் விஞ்ஞானியாகிவிட்டேன் என்றுதான் என்னுடைய எண்ணம் இருக்கும். கிராமத்து மக்கள் பஞ்சாயத்து தலைவருக்காக யாரையாவது ஊரில் தேடுவார்கள். ஊரில் யார் கிடைப்பார்கள், ஏற்கனவே இருந்த அரசியல்வாதிகள்தான் கிடைப்பார்கள். அவர் மாற்றிவிடுவாரா என்றால் மாற்றமாட்டார், இவ்வளவு நாட்களாக மாற்றாதவர் இப்பொழுது மட்டும் என்ன மாற்றப்போகிறார். அந்த மாதிரியான சர்ச்சையில், ‘நீங்கள்தான் பேசுகிறீர்கள், ஏன் உங்களை மாதிரியான நபர் வந்தால் என்ன’ என்று என்னிடம் கேட்கப்பட்டது. அப்பொழுது என்னை மாதிரி நபர் வந்தால் என்ன, ஆனால் நான் வரமாட்டேன், காரணம் நான் படித்ததே வேலை, ஆராய்ச்சி என்று செல்வதற்குத்தான். அப்படி இருந்துவிட்டு ஊரைப்பற்றி கவலைப்படுவதற்கு என்ன உரிமை இருக்கிறது. அக்கறை இருக்கலாம் ஆனால் உரிமை இல்லை என்று தோன்றியது. இந்த மாதிரியான சூழ்நிலையில் வேலையை விட்டுவிடலாமா என்று முடிவெடுத்து வேலையை துறந்தேன்.

kuththambakkam Elango21996 பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். 1996லிருந்து 2001, 2001லிருந்து 2006 இந்த பத்தாண்டுகள், பஞ்சாயத்துத் தலைவராக இருந்து படிப்படியாக இந்த குத்தம்பாக்கம் ஊரை மாற்றினேன். ஒவ்வொன்றாக மக்களை இணைத்தேன். எனக்கு ஏற்கனவே அறிவியல் தெரியும், தொடர்பு நிறைய இருக்கிறது, ஆராய்ச்சி செய்ததால் நிறைய நுட்பமான அனுபவங்கள் இருக்கிறது. படித்தவர்கள் பஞ்சாயத்துத் தலைவராகி இரவு பகலாக ஈடுபாட்டோடு வேலைசெய்ததால் அதிகாரிகளுக்கும் நான் செய்வேன் என்ற நம்பிக்கை இருந்தது. மக்களும் நம்ப ஆரம்பித்தார்கள். எல்லோரும் வழக்கம்போல பார்க்கலாம் என்று நினைத்திருப்பார்கள், பின் வருடாவருடம் நிறைய மாற்றங்கள் ஏற்பட ஏற்பட மக்களுடைய ஆதரவும் நிறைய கிடைத்தது. பத்தாண்டுகளில் இந்த ஊரில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு வந்தேன். அது அடிப்படை வசதியாக இருக்கலாம், வீடாக இருக்கலாம், பள்ளிக்கூடமாக இருக்கலாம், சுகாதாரமாக இருக்கலாம் இவையனைத்தையும் படிப்படியாக செய்யச்செய்ய மக்களுடைய பங்கேற்பும் மிக அதிகமாக இருந்தது.

அதன் பிறகு சமத்துவபுரம் என்ற கருத்து தோன்றியது. சாதிக்கு ஒரு முடிவு கட்டலாம் என்று பார்க்கும்பொழுது நாடு முழுக்க முடியுமோ இல்லையோ, இந்த ஊரில் சாதிக்கு முடிவு கட்டலாம் என்று நினைத்தேன். மற்ற சமுதாயம் எல்லாம் சேர்ந்து குடியிருக்கிற தலித் மக்களோடு மற்ற ஏழை மக்களும் சேர்ந்து குடியிருக்கிற மாதிரியான ஒரு கருத்து இங்கிருந்துதான் உருவானது. குத்தம்பாக்கத்தின் திட்டத்தைத்தான் கருணாநிதி சமத்துவபுரமாக அறிவிக்கிறார். இத்திட்டத்தினை நான் ஒரு மாதிரியாகக் கேட்டேன். அந்தத் திட்டத்திற்கு சமத்துவபுரம் என்று பெயர்வைக்கவில்லை, இந்த மாதிரி எங்களது ஊரில் நான் வந்து வேலைசெய்த பிறகு இனஒற்றுமை நன்றாக இருக்கிறது இப்பொழுது, குறைந்தபட்சம் ஏழைகள் நடுவில் இரண்டு சாதி ஏழைகளும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள், அவர்கள் சேர்ந்து குடியிருக்கிறோம் என்று சொல்ல முன்வருகிறார்கள். இதுவரையிலும் ஒரு கிராமம் என்றால் தலித், யாதவர், முதலியார், ரெட்டியார் என்று தனித்தனியாக இருப்பார்கள். ஆனால் இங்கு உள்ள குறைந்தபட்சம் ஏழைகள் ஒன்றுசேர்ந்து குடியிருக்க முன்வருகிறார்கள் எனும்பொழுது கருணாநிதி மிகவும் மகிழ்ச்சியாக ஏற்று, இது அருமையாக இருக்கிறதே, ஒரு பஞ்சாயத்தில் முடிவுசெய்யும் பொழுது, மாவட்டத்திற்கு ஒரு பஞ்சாயத்து என்று கண்டுபிடித்து இந்த புரட்சிகரமான திட்டத்தை நாம் முன்னேற்றினால் என்ன என்று ஆரம்பித்து அதற்கு ‘சமத்துவபுரம்’ என்று பெயர்வைத்தார். அதில் முதல் சமத்துவபுரமாக குத்தம்பாக்கத்தைத்தான் கொடுக்கிறார்.

kuththambakkam Elango18சமத்துவபுரத்தைக் கட்டப்போகும்பொழுது பொதுவாக 2கோடி ரூபாய் முதலீடு செய்கிறோம் என்று வைத்தால், ஒரு ஒப்பந்ததாரரை வைத்துவிட்டால் அவர் கட்டிக்கொடுத்துவிட்டு சென்றுவிடுவார். ஆனால் நான் அப்படி செய்யவில்லை. ஏனென்றால் மக்கள் ஏழைகளாக இருக்கிறார்கள், அவர்களுக்கே வேலையைக் கொடுப்பது மாதிரி செய்து, அவர்களே செய்யக்கூடிய முறையில் Green Technology எல்லாம் கொண்டுவந்து கல், ஓடு என்று எல்லாவற்றையும் அவர்களே உற்பத்தி செய்து வேலை நடந்தது. அப்பொழுது அவர்களுக்கு வேலைவாய்ப்பாகவும் இருக்கிறது, ஒரு பசுமையான தொழில்நுட்பத்தையும் உள்ளே கொண்டுவருகிறோம், இதனுடன் நூதன தொழில்நுட்பத்தையும் அறிமுகப்படுத்துகிறோம், பணத்தையும் மிச்சப்படுத்துகிறோம். இவையெல்லாம் எனக்கு ஒரு அனுபவமாகக் கிடைத்தது. இவையனைத்தையும் 2001க்குள் செய்யமுடிந்தது.

ஐந்தாண்டுகளில் ஏற்பட்ட அந்த மாற்றம் அடுத்த ஐந்தாண்டுகளில் எதிர்ப்பே இல்லை, அதாவது மக்கள் எல்லாருமே ஒற்றுமையாக இருந்து மிகவும் நன்றாக செய்கிறார் என்று மற்றொரு வாய்ப்பு கொடுத்தார்கள். அந்த வாய்ப்பில் சென்ற ஐந்தாண்டுகளில் என்னவெல்லாம் விடுபட்டதோ, அவையனைத்தையும் ஒன்று திரட்டி, இந்த ஐந்தாண்டுகளில் செய்யமுடிந்தது. ஏற்கனவே எனக்கு நல்ல பெயரும் கிடைத்துவிட்டது, அரசாங்கத்திற்கும் தெரியும், அதிகாரிகளுக்கும் தெரியும், மக்களுக்கும் தெரியும். எனவே அடுத்த ஐந்தாண்டுகள் சுலபமாகவே நிறைய செய்ய முடிந்தது. நமக்கு நாமே, வாழ்ந்துகாட்டுவோம் என்ற இம்மாதிரி நல்ல திட்டங்களை மக்கள் பங்கேற்போடு பஞ்சாயத்து ஒரு லட்சம் கொண்டு வருகிறது என்றால், மக்கள் பங்கேற்று ஒன்றரை லட்சம் மதிப்பான வேலையாக செய்வார்கள். முழுக்க முழுக்க அரசையே நம்பி இருக்காமல் அரசு கொடுக்கிற ஒவ்வொரு ரூபாயையும் ஒன்றரை ரூபாயாக மாற்றமுடியுமா, நூறு ரூபாயை நூற்றைம்பது ரூபாயாக மாற்றமுடியுமா என்று இம்மாதிரி மக்களையே பங்கேற்க வைத்தேன்.

பின் திறந்த வெளி அரசாங்கம் கொண்டு வந்தேன். தினமும் என்ன நடக்கிறது என்று தினந்தோறும் தாளில் எழுதி ஒட்டுவோம் பஞ்சாயத்து அலுவலகத்தில். எவ்வளவு செலவாகியிருக்கிறது, எவ்வளவு மீதம் இருக்கிறது என்பது போன்ற நிகழ்வு, கணக்குகள் தினமும் பஞ்சாயத்து அலுவலகத்தில் ஒட்டப்படுகிறது. உதாரணத்திற்கு நூறு விளக்குகள் மாற்றினார்கள் என்றால் நூறு விளக்கு மாற்றினார்களா என்பது மக்களுக்குத் தெரியும். திறந்த வெளி அரசாங்கத்திற்கான ஒரு சிறிய மாதிரி. அது பஞ்சாயத்து அளவிலேயே திறந்தவெளியின் வெளிப்படைத்தன்மையை கொண்டுவரமுடியவில்லை என்றால், இந்தியாவில் வேறு எங்குமே முடியாது. மேலே முடிகிறதோ இல்லையோ கீழே முடியும். பஞ்சாயத்து அலுவலகத்தில் ஒரு தகவல் எழுதி ஒட்டுகிறீர்கள் அல்லது சாக்பீசில் எழுதி வைத்துள்ளீர்கள் என்றால் அதை பார்க்கும் மக்கள், 47 விளக்கு தென்பகுதியில் போட்டோம் என்று எழுதியிருக்கிறார்கள், போட்டார்களா என்று கேட்பார்கள், மக்கள் தெரிந்துகொள்வார்கள்.

kuththambakkam Elango5வழக்கமாக பஞ்சாயத்து பணத்தை தின்றுவிட்டு போகிறார்கள் என்றுதானே பேசுவோம், ஆனால் இந்த பஞ்சாயத்து வீட்டைவிட கவனமாக பஞ்சாயத்து செலவு செய்கிறார்கள், மிச்சப்படுத்துகிறார்கள் என்று மக்கள் கருதும் அளவிற்கு வேலை நடைபெற்றது. பத்தாண்டுகளில் செய்து ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்பொழுது, மற்ற ஊர்களில் ஏன் சாத்தியப்படாது என்ற தேடுதல் இருந்தது. இது நம் ஊரில் நம்மால் முடிந்ததை செய்தோம் நிம்மதியாக தூங்குகிறோம் என்று நினைக்கலாம். ஆனால் நாம்தான் தமிழ் மக்களாயிற்றே, “உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது” என்பார்கள் அதுபோல இந்த ஊரில் இது சாத்தியப்பட்டதே, பக்கத்து ஊருக்குச் சென்றால் இந்த ஊரில் ஏன் இப்படி அநியாயமாக கிடைக்கிறது என்று உங்களுடைய மனது சொல்லும்.

சில நேரத்தில் பக்கத்து ஊர்க்காரர்கள் கேள்வி கேட்கிறார்கள், தலைவரே! உங்களுடைய ஊர் மக்கள் ஏதோ புண்ணியம் செய்தவர்கள் நீங்கள் இருக்கிறீர்கள், எங்களுடைய ஊரிலும் ஒரு தலைவர் இருக்கிறாரே எதையும் செயல்படுத்துவதில்லை என்று சொல்கிறார்கள். சிலர் எங்களுடைய பஞ்சாயத்து தலைவர் சரியில்லை, நீங்கள் சிறிது உதவி செய்யுங்கள், நீங்கள் நன்றாக தெரிந்த தலைவரல்லவா எங்களுடைய ஊருக்கும் சொல்லுங்கள் என்று சொல்கிறார்கள். இதனால் உதவி செய்கிற வாய்ப்பு அதிகமாக கிடைத்துக்கொண்டே இருக்கிறது. இதன் காரணமாகத்தான் பஞ்சாயத்து கல்வி நிலையம் என்று ஒன்றை நடத்துகிறோம். மற்ற பஞ்சாயத்து தலைவர்களை அழைத்துவந்து இந்த மாதிரி ஏன் நீங்கள் செய்யக்கூடாது என்று பயிற்சி கொடுக்கிறோம்.

இந்த குத்தம்பாக்கம் கிராமம் சென்னையை ஒட்டி இருக்கிறது, ரவுடிகள் நிறைய இருப்பார்கள், தப்பு செய்பவர்கள் எல்லாரும் இங்கு வந்து ஒளிந்துகொள்ளப் பார்ப்பார்கள். இங்கிருந்து காய்ச்சுகிற சாராயத்தை சென்னையில் வாங்கிக்கொள்ளத் தயாராக இருப்பார்கள், அல்லது அங்கு ஏதாவது பதுக்கலாம் என்றால் இங்கு இருப்பவர் வீடு கொடுத்துவிடுவார். அப்பொழுது இங்கிருக்கிறவனுக்கு நிறைய வருமானம் கிடைக்கும். தினமும் இரண்டாயிரம் சம்பாதிக்கலாம், இவன் கெடுக்கிறான், அடித்துப் போட்டுவிடலாமா என்று பார்ப்பார்கள். இந்த மாதிரி எல்லாவற்றையும் தாண்டித்தாண்டி வேலைசெய்தேன். இந்த ஊரிலே வாய்ப்பு இருக்கும் பொழுது, இந்த மாதிரி இல்லாமல் எத்தனையோ நல்ல ஊர்கள் இருக்கிறது, ஏன் அங்கு செய்யக்கூடாது, அதுதான் என் முன்னோடி கனவாக இருக்கிறது.

kuththambakkam Elango7இந்த குத்தம்பாக்கம் கிராமத்திற்கு செய்த சில, அந்த ஊர்களுக்கு பொருந்தாது. அந்த கிராமத்திற்கு இதெல்லாம் தேவையில்லை. அந்த கிராமத்திற்குத் தேவையானது என்னவாக இருக்கும். எங்களுடைய ஊரில் மூன்று போகமும் நெல் விளைகிற ஊர். ஆனால் சில ஊரில் வேர்க்கடலை, தேங்காய், கொப்பறை எல்லாம் கிடைக்கும். இந்தக் கொப்பறையை வைத்து அவர்கள் ஏன் முன்னேற முடியாது.

தற்பொழுதுகூட தேங்காய் விவசாயிகள் அரசாங்கத்திடம் விலை ஏற்ற வலியுறுத்தி, பட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூருக்கு நடையாக வந்து தேங்காயை நடுச்சாலையில் உடைக்கிறார்கள். நீங்கள் பயிர் செய்கிறீர்கள், அதற்கு அரசாங்கம் ஏன் ஏற்றிக்கொடுக்க வேண்டும். ஏற்றிக்கொடுக்கவேண்டுமா, ஏற்றிக்கொடுக்கக்கூடாதா என்பதை நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும். நீ என்னைக்கேட்டா தேங்காய் எண்ணெயை விற்றாய், நீ உன்னுடைய நிலம், நன்றாக விளைகிறது, உனக்குக் கட்டுப்படியாகவில்லை என்றால் ஏன் கட்டுப்படியாகவில்லை என்று நீதான் சிந்திக்கவேண்டும். இப்பொழுதுகூட விவசாயிகள் எல்லோரும் சேர்ந்து சந்தையை ஓரங்கட்டிவிடுங்கள். என்னாகிவிடப்போகிறீர்கள் பத்து நாட்களுக்கு உங்களுடைய பொருள் விற்காது, பத்துநாட்களுக்குள் இறந்துவிடுவீர்களா, பத்து நாட்களுக்கு போரூரில் நான் அரிசி அனுப்பவில்லை என்றால் நீங்கள் இறந்துவிடுவீர்கள், பத்து நாட்களுக்கு நான் காய்கறி அனுப்பவில்லை என்றால் ஐ.டி. நிறுவனத்தை மூடிவிட்டு நீங்கள் வெளியில் வந்துவிடுவீர்கள். விவசாயி இறந்துவிட மாட்டான். விவசாயிகள் கூடிப்பேசி பத்து நாட்கள், இருபது நாட்களுக்கு அனுப்பாதீர்கள் யாரிடமும் என்று. அவர்கள் எல்லோரும் வருகிறார்களா இல்லையா என்று பாருங்கள். கோயம்பேட்டை மூடிவிடுங்கள்.

kuththambakkam Elango19கிராமத்திலிருந்து தூக்கி வந்து ரெட்டியார் சத்திரத்தில் போட்டு, ஒட்டன்சத்திரத்தில் லாரியைப் பிடித்து கோயம்பேட்டில் போடுகிறார்கள். கோயம்பேட்டில் இருக்கிறவனுக்கு விவசாயத்தைப்பற்றிய எந்த சம்பந்தமும் கிடையாது. பணம் கூட அவன் முதலீடு செய்யவில்லை. விவசாயிக்கு முதலீடு பண்ணினானா கோயம்பேடில் உள்ளவன், கிடையாது. தாளை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறான், எவ்வளவு ஏற்றலாம், இறக்கலாம் என்று. அவன் விவசாயிகளின் தலையெழுத்தை ஆட்டிவைக்கிறான். கிராமமக்கள் எவனுக்கோ உங்களுடைய முடியை கையில் கொடுத்துவிட்டிருக்கிறீர்கள். நாளைக்கு நினைத்தால்கூட உருவிக்கொண்டு வந்துவிடலாம், இறந்துவிடமாட்டீர்கள். இவற்றையெல்லாம் என்றைக்கு மாற்றுவது.

1947ல் சுதந்திரம் அடைந்த அன்று இந்தியாவில் 1ரூபாய் 17 பைசா சேர்ந்தது 1 டாலர். 1948ல் 1ரூபாய் 13பைசா சேர்ந்தது 1 பவுண்டு. அன்றைக்கு இந்த நாட்டினுடைய பொருளாதாரம் யார் கையிலிருந்தது, விவசாயி கையிலிருந்தது. விவசாயம்தான் நாட்டைக் காப்பாற்றிக்கொண்டிருந்தது. 60 வருடத்தில் 66 கொடுத்து 1 டாலர் வாங்குகிறேன். நீ என்னுடைய பொருளாதாரத்தையே வீழ்ச்சி செய்துவிட்டாய், என்னையையும் கேவலமாக்கி கைகட்டி நிற்க வைக்கிறாய். நான் பருத்தி விளைய வைக்கிறேன், நான் ஏன் தற்கொலை செய்துகொள்ளவேண்டும், என்னுடைய பருத்தி இல்லை என்றால் துணி போட முடியாது, என்னுடைய தக்காளி இல்லை என்றால் சென்னையில் வாழ முடியாது. என்னுடைய கத்தரிக்காய் இல்லையென்றால் டெல்லியில் வாழ முடியாது.

kuththambakkam nerkaanal1திட்டமிட்டு விவசாயிகளையும், கிராமத்து மக்களையும் உங்களுடைய பக்கம் இழுத்து நம்ப வைத்துவிட்டாய். என்னுடைய நம்பிக்கையை நான் இழந்துவிட்டு பயிர் செய்துவிட்டேன், என் வீட்டில் சோறு இருக்கிறது, பால் இருக்கிறது, பழம் இருக்கிறது, எல்லாமே இருக்கிறது. நான் மிகவும் கூனிக் குறுகி மிகவும் நொந்துபோன தாழ்வானவனாக நான் நினைத்து வாழ்கிறேன். உன்னிடம் ஒன்றும் கிடையாது, தமிழைக்கூட மாற்றிப் பேச கற்றுக்கொண்டாய். ஆனால் நீ நினைக்கிறாய் அங்கு உட்கார்ந்துகொண்டு கால்மேல் காலைப்போட்டு விவசாயிகள் பாவம் என்று நினைக்கிறாய். இங்கு எங்களுடைய தேங்காய் இல்லை என்றால் நீ வாழ முடியாது. அந்தத் தேங்காயைக் கொண்டுவந்து முட்டாள்கள் தெருவில் உடைக்கிறோம். இவையனைத்தையும் எப்படி மாற்றுவது. இது பெரிய வேலை ஒன்றும் கிடையாது, ராக்கெட் விடுவதோடு ஒப்பிடும்பொழுது மிகச் சிறிய வேலை. சேர்ந்து கூடி பேசவேண்டும் அவ்வளவுதான்.

kuththambakkam nerkaanal9நான்கு நாட்கள் சென்னைக்கு பால் அனுப்பாமல் நிறுத்திவிடவேண்டும். நீங்கள் எங்களை அடித்து பால் கறந்து தரச்சொல்லமுடியுமா உங்களால். இந்தத் தன்னம்பிக்கையை ஊட்டவில்லையென்றால் இந்த நாடு எங்கு போவதென்றே தெரியாமல் போய்க்கொண்டிருக்கும். தன்னம்பிக்கை எனக்கு இருக்கிறது, இது யாருக்கும் எதிரானதல்ல. சகோதரியோ, சகோதரனோ என்னை சுயநலத்திற்காக பயன்படுத்தவில்லை என்றால் உங்களைப் பார்த்தவுடனே மிகவும் மகிழ்ச்சியாகத்தானே வரவேற்பேன். உங்களால் எனக்கு ஆதாயம் கிடைக்கப்போகிறது எனும்பொழுது அந்த உறவினுடைய பாசம் இருக்கிறதில்லையா, அதுதானே இந்நாட்டின் பலம். ஆனால் நீங்கள் அப்படி நினைக்கவில்லையே, நீங்கள் என்னிடமிருந்து வேறுபட்டுவிட்டீர்கள்.

மருத்துவக் கல்லூரியில் படிக்கிறவர்கள் யார் எங்கள் ஊர் பையன்தானே. ஆனால் எங்களை கவனிக்கின்றாயா? நான் எங்கேயோ பிச்சை எடுக்கிறேன். எங்களது சோற்றைத்தானே சாப்பிடுகிறீர்கள், மருத்துவமனை சென்றதால் ரசாயனமா சாப்பிடுகிறீர்கள். நாங்கள் மருத்துவம் படித்தோம், நாங்கள் உங்களுக்கு சேவை செய்கிறோம் என்று வருகிறீர்களா?. இன்று கிராமத்தானுக்கு ஒரு நல்ல மருத்துவமனை இருக்கிறதா? இப்படி எங்களை அழ வைக்கிறீர்களே, சாகிறோமே. சென்ற வாரம்கூட மார்புவலி காரணமாக ஒரு ஏழையை காலையில் 6.30 மணியளவில் தூக்கி வருகிறார்கள். ராமச்சந்திராவுக்கு ஓடுகிறார்கள், அங்கு 5 லட்சம் ஆகும் என்கிறார்கள். இதயம் பிரச்சனை என்று சொல்லிவிட்டார்கள், அந்த 5 லட்சத்திற்கு எங்கு போவார்கள். திருப்பி வண்டி வெளியில் வருகிறது. எங்கேயோ ஓடுகிறான், பின் அவருடைய அண்ணன் தொடர்பு கொண்டு நிலத்தை அடமானம் வைத்து வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தம்பியை காப்பாற்றுகிறான். அது இரண்டு நிமிடத்தில் வேலை செய்யவில்லை என்றால் அவன் மூன்று குழந்தைகளை விட்டு இறந்திருப்பான். எனவே நான் யாருக்கும் எதிராக பேசவில்லை. என்னுடைய மக்களை, என்னுடைய தம்பியை, என்னுடைய அண்ணனை, என்னுடைய சகோதரியை, என்னுடைய மகளைப் பார்த்து கேட்கிறேன்.

kuththambakkam Elango16தேசத்திற்கு நாங்கள்தானே சோறு போடுகிறோம். ஆனால் எவ்வளவோ வித்தியாசமாய் வாழ்ந்து காட்டுகிறீர்கள் நீங்கள், எவ்வளவு வித்தியாசமாய் வீடு கட்டிக்கொள்கிறீர்கள், அதையெல்லாம் நினைத்துப் பார்க்கும்பொழுது மனசு நோகிறது. என்னவென்றால் வீடு கட்டும்பொழுதே இவ்வளவு ஆடம்பரமாக வீடு கட்டுகிறீர்கள், ஆனால் உங்களுடைய சகோதரன் இங்கு பருத்தி விளையவைக்கிறான் தூக்கு மாட்டிக்கொள்கிறான், தக்காளி விளையவைக்கிறான் தூக்கு மாட்டிக்கொள்கிறான், பாலுக்கு விலை இல்லை என்று நொந்து இறந்துபோகிறான். இதை எப்படி நாம் மாற்றவேண்டும் என்று பார்க்கும்பொழுது கிராமசமுதாயத்தோடு வேலைசெய்து நகரத்திற்கு எதிராக செய்யவில்லை. விவசாயிடம் ஆதாரம் இருக்கிறது, திறமை இருக்கிறது, போதும் என்ற மனம் இருக்கிறது, பெரிய தேவை ஒன்றும் கிடையாது. ஆனால் யாரோ சென்னையின் தேவையை நோக்கி உன்னை நகர்த்தியதால்தானே நீ தற்கொலை செய்து கொள்கிறாய்.

நீ ஒரு சிறிய விவசாயியாக இருந்து உன் ஊர் கிராமத்துப்பஞ்சாயத்து தலைவரைப் பார்த்து தலைவரே! நம் பள்ளிக்கூடத்தை நன்றாக நடத்தச் சொல்லுங்கள் என்று கேளுங்கள் எங்களிடம், நாங்கள் நன்றாக பள்ளிக்கூடத்தை நடத்துகிறோம், கற்றுக்கொள்ளவேண்டியதெல்லாம் கற்றுக்கொள்ளுங்கள், ஆங்கிலம் வேண்டும் என்றால்கூட கற்றுக்கொள்ளலாம் வாருங்கள். நம் ஊரில் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்வோம். அதை விட்டுவிட்டு 25 ஆயிரம் பணம் கட்டி பூந்தமல்லியில் சேர்த்துவிட்டு கடன்காரனாக ஆகிவிடுகிறீர்கள். அந்த அளவிற்கு படிக்கவைப்பதற்கு நிலம் ஆதரவு தராது. நிலம் சோறு போடும், சிறிது சேர்த்து வைக்கச் சொல்லும் அவ்வளவுதான். மாதம் 25 ஆயிரம் பணம் கட்டி படிக்கவைக்கிற அளவிற்கு நிலம் கொடுக்குமா. அதை நம்பி கடன் வாங்கிவிட்டு தற்கொலை செய்துகொள்கிறாய். இதையெல்லாம் எப்படி மாற்றவேண்டும் என்பது மிகப்பெரிய போராட்டமாக நடக்கிறது. இதை அரசோ, அரசு நடத்துகிறவர்களோ உள்வாங்கவில்லை. நிராகரிக்கிறார்கள், புறக்கணிக்கிறார்கள் என்று சொல்லமுடியாது, அவர்களுக்குத் தெரியாது. நான் இங்கேயே பிறந்து வளர்ந்தேன் இந்த கிராமத்தைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். எனவே இந்தமாதிரி விடயங்களை, கிராமங்களை புணர்நிர்மாணப்படுத்தி சுயசார்புடைய இந்தியாவை உருவாக்க முடியுமா. கிராமங்கள் சுயசார்புடையவை, நாம் சுயசார்புடையவர்கள் என்று கிராமங்கள் நினைத்துவிட்டாலே இந்தியா தலைநிமிர்ந்துவிட்டது என்று அர்த்தம்.

kuththambakkam nerkaanal2ஆனால் அது நடக்கக்கூடாது என்று படித்த சமூகம், கிராமங்கள் பலவீனமானவைகள் என்று காட்டிக்கொண்டிருக்கிறது. இல்லை கிராமங்கள்தான் பலமானவை, இது யதார்த்தம். அமெரிக்க டாலர் வந்தால் என்ன, அமெரிக்கா போனால் என்ன, ஈரான் ஈராக்கில் வாழ்ந்தால் என்ன, மழை மட்டும் பெய்தால்போதும் நான் வாழ்ந்துகொண்டிருப்பேன். நான் வாழ்கிறதால்தான் இந்தியா வாழ்ந்துகொண்டிருக்கிறது. எங்களால் முடியாது என்று நாங்கள் படுத்துக்கொண்டோம் என்று வைத்துக்கொள்ளுங்கள், எங்களுக்குத் தேவையானவற்றை அரை ஏக்கரில் பயிர் செய்து இருந்துவிடுவோம். அதற்கு நீங்கள் சொல்லலாம், பெருநிறுவனங்களை வைத்து பயர் செய்கிறோம் என்று, அதெல்லாம் நடக்காது. அமெரிக்கர்கள் அவர்களுடைய ஊர் விவசாயத்தை செய்யமுடியாததாலேதான் அதை விட்டுவிட்டு வாசிங்டன்னில் குடியேறிவிட்டான். அங்கு 2 சதவிகிதம்தான் விவசாயம் செய்கிறார்கள். இந்த ஊரில் வந்து விவசாயம் பண்ணிவிடுவார்களா. அவர்கள் இங்கு வந்து விவசாயம் செய்வார்கள், நாங்கள் சும்மா உட்கார்ந்திருப்போமா. அப்படி செய்தாலும் எங்கள் 125 கோடி மக்களுக்கும் சோறு போடுவதில்லையா, வாய்ப்பே கிடையாது. அது இந்த நாட்டிற்கு செல்லாது.

இங்கு 500 ஏக்கரில் பெருநிறுவனம் ஒன்று பரங்கிக்காய் போட்டு வைத்திருக்கிறார். நாங்கள் நிலம் இல்லாமல் உட்கார்ந்திருக்கிறோம். அப்படியென்றால் அரசாங்கம் மூன்று வேளை சோறு போட வேண்டும். நீங்கள் தூங்குங்கள் அவர் விவசாயம் பண்ணிக்கொள்வார் என்றோ, அல்லது அவர் விவசாயம் செய்து அறுத்து உங்களிடம் கொடுத்துவிட்டு சிறிது எடுத்துச்செல்வார், நாங்கள் தூங்கிக்கொண்டிருப்போம். இது எங்காவது நடக்குமா. இவையனைத்துக்கும் முடிவு கட்டுவதற்கு ஒரு அருமையான யுத்தி நன்றாகத் தெரிகிறது. நடைமுறையாக செயல்படுத்துகிறோம், வேலை செய்கிறோம், முடிவைப் பார்க்க முடிகிறது, முடியாத காரியம் என்று இல்லை. எங்கள் விஞ்ஞானிகள் ISRO-வில் ஏவுகணை விட்டு ஆரியப்பட்டாவில் ஆரம்பித்து இன்று ASLV, PSLV, GSLV என்று போகிறார்கள். இது அவ்வளவு கடினம் கிடையாது. ஆள் இறங்கி வேலை செய்யவேண்டும் அவ்வளவுதான்.

2006க்குப்பிறகு பஞ்சாயத்து தலைவர் பதவி பெண்ணுக்குச் சென்றது. எனவே 2006லிருந்து முழுக்க முழுக்க மற்ற பஞ்சாயத்துகளுக்கு என்ன செய்யலாம் என்பது நடந்துகொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாது இந்த குத்தம்பாக்கம் என்பது நகர்ப்புற கிராமம், சென்னையை ஒட்டி மிகஅருகில் இருக்கிறது, எப்பொழுதும் நகர்புற படையெடுப்பு(Urban invasion) இருந்துகொண்டே இருக்கிறது, அதனால் இது எவ்வளவுநாள் தாக்குபிடிக்கும் என்ற கேள்வி இருக்கிறது. முடிந்தவரையில் தாக்குபிடிக்கவைப்போம், இல்லையென்றால் இதை விட்டுவிட்டு மற்ற கிராமங்களை வளர்த்தெடுக்க முயற்சிப்போம்.

கிட்டத்தட்ட அறுநூறு கிராமங்கள் என்னுடைய வலையில்(Network) இருக்கிறது. அங்கங்கு ஒரு சில இடங்களில் நன்றாக செய்யும் பஞ்சாயத்து தலைவர் இருப்பார்கள். அவர்களை உதாரணமாக்கி அதாவது நான் என்னுடைய நம்பிக்கையால் செய்தேன், இதனால் என்னை மாதிரியாக்கி சுற்றி இருக்கிற 20 கிராமத்தை இதில் கொண்டு வரமுடியுமோ, மாவட்டத்திற்கு ஒன்று அல்லது ஒன்றியத்திற்கு ஒரு பஞ்சாயத்து என்று தேர்ந்தெடுத்து அந்த கிராமங்களை ஒரு சுயசார்புடைய மாதிரியாக மாற்றி, இயங்குகின்ற மாதிரி (working model)ஆக பண்ணிவிட்டு, அதை சுற்றியிருக்கிற கிராமங்களைக் காட்டி அந்த ஊர் மாறியிருக்கிறது, ஏன் உங்களுடைய ஊர் மாறக்கூடாது என்று என்னுடைய குறிக்கோள் 2016க்குள் 200 முன் மாதிரி கிராமங்களை உருவாக்கவேண்டும் என்று வேலை செய்தேன். 2006லிருந்து அந்த வேலையைத்தான் செய்துகொண்டிருந்தேன். அதற்கான தொழில்நுட்பம்(Technology), முறை(Methodology), சில இந்த ஊருக்கு பொருந்துவது திருவண்ணாமலையில் பொருந்தாது. திருவண்ணாமலையில் பொருந்துவது திருநெல்வேலிக்கு பொறுந்தாது. அங்கு இருக்கிற ஆதாரத்திற்கு (source)க்கு ஏற்றமாதிரி, அங்கு இருக்கிற மக்களுடைய கலாச்சாரத்திற்கு ஏற்றமாதிரி வளர்ச்சியடைவதற்கான முயற்சியில் இருந்தோம்.

kuththambakkam Elango3எதிர்பாராத விதமாக 2012 செப்டம்பரில் மாரடைப்பு வந்தது, அதன் பிறகு அறுவைசிகிச்சை செய்து இதயம் நன்றாகிவிட்டது, நிறைய எலும்புகள் பாதிப்படைந்தது. இரண்டரை வருடமாக படுத்த படுக்கையாக இருந்தேன். அதில் நிறைய வேலைகள் பின்னடைவு இருந்தது. ஏனென்றால் நான் எடுத்த வேலைகள் நிறைய பொருளாதார வளர்ச்சிக்கான முன்மாதிரிகள். சிறிய சிறிய தொழில்கள், விவசாய மேம்பாட்டிற்காக முதலீடு செய்து பலன் தருகிற விடயங்கள், நிறைய முதலீடு செய்து அதை ஆரம்பித்த மாதிரிகள் எல்லாம் இரண்டரை வருடமாக முடங்கிவிட்டது. அதன்பிறகு 2014 சனவரி ஆரம்பத்தில் மெதுவாக நடக்க ஆரம்பித்தேன். 2014 செப்டம்பர் வரையிலும் அப்படித்தான் இருந்தேன். 2014 செப்டம்பரில் இருந்து ஒன்றேகால் வருடமாக விட்ட இடத்திலிருந்து தீவிரமாக வேலை செய்கிறேன். ஆகையால் 200 முன்மாதிரி கிராமங்கள் பின்தங்கியிருக்கிறது, அதில் 60 கிராமங்கள் நன்றாக வந்திருக்கிறது. 200க்கு பதிலாக 60ல் இருக்கிறேன் இப்பொழுது.

அறுபது கிராமங்களோடு 100, 200 கிராமங்களைத் தேடுகிறோம் இப்பொழுதே. 2016லிருந்து வேலைசெய்து 2021ல் 200 முன்மாதிரி கிராமங்கள், 2000 அந்த வழியில் முன்னேற்றத்தை எட்டிக்கொண்டிருக்கும். இது தமிழ்நாட்டுக்கு. இதேமாதிரி வலை(Network) தேடுகிறோம். ஆந்திராவில் 1000 கிராமங்களில் வேலை செய்யமுடியும். என்னுடைய வலையில் ஆந்திராவில் இருக்கிறார்கள் வலை பஞ்சாயத்துகள், தெலுங்கானாவில் இருக்கிறார்கள், கர்நாடகாவில் இருக்கிறார்கள், ராஜஸ்தானில் இருக்கிறார்கள், உத்திரப்பிரதேசத்தில் இருக்கிறார்கள், மத்தியப்பிரதேசத்தில் தொடர்பு இருக்கிறார்கள். இங்கெல்லாம் முன்மாதிரி கிராமங்களுக்காக வேலைசெய்கிற களப்பணியாளர்கள் அமைப்புகளை உருவாக்கியிருக்கிறோம். என்னுடைய கனவு 2021ல் 20000 பஞ்சாயத்தை இந்தியாவில் சுயசார்புடைய பஞ்சாயத்துகளாக கொண்டுவரமுடியுமா என்பதுதான். 20000 பஞ்சாயத்து என்பது மிக சொற்பம், 2,70000 பஞ்சாயத்தில் 20000 பஞ்சாயத்துகளில் வேலை செய்துகொண்டிருக்கிறோம். 10 சதவிகிதம் கூட நம்மால் சாதிக்க முடியாது. 73வது திருத்தத்தின்படி 20 ஆண்டுகாலங்களில் பத்து சதவிகிதம் கூட மாற்றமுடியாதா என்ற கேள்வி இருக்கிறது, செய்வோம்.

இது இல்லையென்றால் நீங்கள் சொல்லலாம் இதற்கு மாற்றுவழி எவ்வளவோ இருக்கிறது என்று. மாற்று இல்லை, நீங்கள் பேசுவது மாதிரி பேசுவீர்கள், உங்களுக்குத் தெரியாமலே நீங்கள் இந்தியாவை கடன்காரனாக்கிவிட்டீர்கள். நான் யாரையும் குற்றம் சொல்லவில்லை. இந்த பொருளாதாரத்தின் மூலமாக என்னுடைய பணம் உலக பொருளாதாரத்தோடு வீழ்ச்சி அடைந்துகொண்டே இருக்கிறது. ரூபாய் தினம்தோறும் செத்துக்கொண்டே இருக்கிறது, நான் மெலிந்துகொண்டே இருக்கிறேன். இன்னொரு நாற்பது ஆண்டுகளில் ரூபாய் 100 டாலராகிவிடுமா, ஆகாது என்று யாராவது சவால் விடுங்கள். எப்பொழுது சவால் விட முடியும் என்றால் டாலரை நம்பி நான் இல்லை எனும்பொழுதுதான். எவ்வளவுக்கு எவ்வளவு நாம் டாலரை நம்பி இல்லையோ அவ்வளவுக்கு அவ்வளவு சவால் விடுவேன். டாலரையே நம்பி இருந்தால் டாலருக்கு தேவை அதிகமாக இருக்கிறது, அதனால் மதிப்பு கூடிக்கொண்டே போகிறது, நான் மதிப்பு குறைந்து போகிறேன். என்னுடைய காலில் நான் நிற்கிறேன் என்று சொல்லும்பொழுதுதான் என்னுடைய மதிப்பு உங்களுக்கு சமமாக நிற்கும். இதை உறுதியாக கிராமங்களில்தான் ஏற்படுத்த முடியும்.

kuththambakkam nerkaanal7திடீரென நிறுத்திக்கொள்ள முடியுமா என்றால் முடியாது, போகிற பாதையை முடக்கினால் நாளைக்கே அழிந்துவிடுவீர்கள். பெட்ரோலை இறக்குமதி செய்தாகவேண்டும், அவ்வளவு இருசக்கர வாகனம் வாங்கிவிட்டது, அவ்வளவு மகிழுந்து வாங்கிவிட்டது, எல்லோரும் வாகனத்தில் போகும் பழக்கத்தை கொண்டு வந்துவிட்டோம். நாளைக்கே பெட்ரோல் இடத்தை மூடினால் வேலைக்கு போகமாட்டீர்கள். ஏனென்றால் அவ்வளவு பேருந்துகள்இல்லை நம்மிடம். எனவே அதை மெதுவாகத்தான் உருவாக்க வேண்டும். ஒன்று நீங்கள் வேலைக்குப் போகாமல் இங்கேயே வாழ்ந்துகொள்ளலாம் என்று முடிவு எடுத்து விட்டால் வாகனங்களை ஓரங்கட்டிவிட்டு வந்துவிடுவீர்கள். அதற்கு மாற்று கொண்டுவரும்வரை மாற்றுப்பாதைகள் என்னென்ன செய்யவேண்டும் என்று தேடிக்கொண்டிருக்கிறேன். அது பெரிய வேலைதான். ஆனாலும் வேலைசெய்துகொண்டிருக்கிறேன்.

கேள்வி: முன் மாதிரியான கிராமங்களுக்காக என்னென்ன முயற்சிகள் எடுத்து வருகிறீர்கள்?

Elango Nerkaanal2பதில்: மாதிரி கிராமம் என்றாலே அரசாங்கம் பேசுகிறதே அந்த மாதிரி கிராமம் இல்லை. நன்றாக சாலை இருக்கவேண்டும், ஒரு தண்ணீர் தொட்டி இருக்கவேண்டும் இவையெல்லாம் இருந்தால்தான் மாதிரி கிராமம் என்று நினைக்கிறார்கள். இல்லை, சிரித்த முகங்களுடைய மக்கள் இருந்தால்தான் அது மாதிரி கிராமம். மகாத்மா காந்தி கண்ட சிரித்த முகம் எப்பொழுது இருக்கும், பசியில்லை என்றால் இருக்கும், தன் தேவைகள் ஓரளவிற்கு பூர்த்தி செய்யப்பட்ட குடும்பம் என்றால் அங்கு இருக்கும் முகங்கள் சிரிக்கும். நிலைத்த புன்னகையுடைய, முகங்களையுடைய இந்தியர்களைக் காண ஆசைப்படுகிறேன் என்கிறார் மகாத்மா காந்தி. புன்னகை எப்பொழுது நிலைத்த புன்னகையாகும் என்றால், ஓட்டுக்கு ஐநூறு ரூபாய் கொடுத்த அன்று சிரிப்பார்கள், மறுநாள் அந்த ரூபாயை அவருடைய கணவன் குடித்து காலி செய்துவிட்டால் அந்தப் பெண் சிரிக்க மாட்டார். குடியை நிறுத்த முடியாது, ஆனால் அளவாகத்தான் குடிக்கிறார், குழந்தைகளைக் காப்பாற்றுகிறார், ஞாயிற்றுக்கிழமை என்றால் சிறிது குடித்துவிட்டு படுத்துக்கொள்கிறார் என்ற அளவிற்கு இருக்கிறது. நான் மதுவிலக்குக்கு ஆதரவு என்று சொல்லமுடியாது. ஏனென்றால் நான் குடிகாரர்களோடு பிறந்து வளர்ந்தவன், குடியை நிறுத்திவிட முடியுமா என்னால்?, கண்டிப்பாக முடியாது. ஆனால் குடியினுடைய தாக்கத்தை என்னால் குறைக்க முடியும். சிறிது சிறிதாக தாக்கம் குறைந்து குறைந்து குடி நின்று போவதற்கு வாய்ப்பு வரலாம். ஆனால் அது இப்பொழுது அல்ல. இந்த மாதிரி சீரான வளர்ச்சியைக் கொண்டுவருவதற்காக, மக்களிடம் இறங்கி களத்தில் நிறைய வேலைசெய்ய வேண்டியதிருக்கிறது.

களத்தில் வேலை செய்யவேண்டும் வேலை செய்யவேண்டும் என்று எல்லோரும் சொல்கிறார்களே தவிர, களத்தில் வேலை செய்யவில்லை. ஒரு பெண் ஊரக வளர்ச்சித்துறையில் (Rural Development Department) முனைவர் பட்டம் வாங்குகிறார். ஆனால் அவர் கிராம வளர்ச்சியில் வேலை செய்யமாட்டார். முனைவர் பட்டம் வாங்கிக்கொண்டு, மீண்டும் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஊரக வளர்ச்சித்துறை (Rural Development Department) என்று ஒன்றை உருவாக்கி அங்கு பேராசிரியராகத்தான் செல்கிறார்களே தவிர, கிராம வளர்ச்சிக்காக வேலை செய்யமாட்டார்கள். எங்களது ஊர் மாணவனை அழைத்து ஊரக வளர்ச்சி நிபுணராக (Rural Development Expert) மாற்றிவிட்டு அங்கேயே, அண்ணா பல்கலைக்கழகத்திலேயே வேலைசெய்யச் சொல்கிறார்கள். கோயம்புத்தூர் விவசாய பல்கலைக்கழகத்தில் B.Sc Agree படித்தவர்கள் எல்லோரும் எங்கு இருக்கவேண்டும்?. அவர்கள் எல்லோரும் கிராமத்தில்தான் சென்று குடியேற வேண்டும்.

Elango Nerkaanal8அந்தக் காலத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு மருத்துவர் குடியேறுவார். அந்த மருத்துவர் அந்த ஊரில்தான் இருப்பார். ஆனால் இப்பொழுது எல்லோரும் சென்னையில் குடியிருப்பதால் மக்கள் எல்லோரையும் சென்னைக்கு அழைக்கிறார்கள். இதைத்தான் அந்தக் காலத்தில் மு.வ ‘முடத்தெங்கு’ என்று எழுதுவார். தென்னைமரத்தில் ஏறுவதற்கு வசதியாக இருக்கவேண்டும் என்பதற்காக வளரும்பொழுதே சாய்த்துவிடுவானாம். பனையேறி ஏறுவதற்கு வசதியாக இருக்கவேண்டும் என்பதற்காக வளரும்பொழுதே சாய்த்துவிட்டால், அது சாய்ந்த மரமாக இருக்கும். அந்த சாய்ந்த மரத்தில் சிரமப்படாமல் கை ஊண்றியே ஏறலாம் என்பதற்காக தென்னையை முடத்தெங்காக ஆக்கிவிட்டார் அவர். அந்தமாதிரி சமுதாயம் சென்றுகொண்டிருக்கிறது. இந்த யதார்த்தத்தை எங்கு பேசினாலும் எடுபடுகிறது. சமீபத்தில்கூட ஒரு தொழில்நுட்ப கருத்தரங்கில் என்னை அழைத்தார்கள். அங்கு கடினமாகவும் பேசுகிறேன், பாசமாகவும் பேசுகிறேன், அது எல்லோர் மனதையும் தைக்கிறது. நான் கிராமத்தான், ஏழைகளோடு வாழ்கிறேன், சிரமப்படுகிறேன், ஆனால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது, மாறிவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதனால்தான் அவ்வாறு பேசவேண்டியதாக இருக்கிறது. உங்களைக் காயப்படுத்துவதற்காகப் பேசவில்லை, காயப்படுத்தவும் மாட்டேன்.

இப்பொழுது நான் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன், உங்களுக்கு எதிராகத்தான் பேசுகிறேன். உங்களை சாடிக்கொண்டே இருக்கிறேன். உங்களது மனசாட்சியை தொடுவதற்காக உரிமையாகத்தான் பேசுகிறேன், பாசமாகத்தான் பேசுகிறேன். அவர் நல்லதுதான் சொல்வார், சரியானதுதான் சொல்வார், ஆனால் செய்யவில்லை என்பார் என் பேச்சைக் கேட்போர். நீங்கள் செய்யவில்லை என்று நான் குற்றம் சாட்டவில்லை, செய்யமுடியாது என்றுதான் சொல்கிறேன். உங்களால் விட்டு வரமுடியாது. இதை இப்படியே விட்டுவிட்டால் எத்தனை நாளைக்குத்தான் இதைப் பேசப்போகிறீர்கள். நானும் 32 வயதில் ஆரம்பித்தேன், 45 வயதில் நோயாளியாகிவிட்டேன். ஏதோ செய்திருக்கிறேன் ஓரளவிற்கு, ஆனால் திருப்தியடைவில்லை. எங்களது ஊரில் சாலைவசதிகள் எல்லாம் இருக்கிறது, இருந்தும் மக்களுக்கு எத்தனையோ பிரச்சினைகள் இருக்கிறது. சிறிய சிறிய பிரச்சினைகளை இங்கிருந்து சரிசெய்துகொண்டிருக்கிறேன். ஒருவேளை அடுத்த நான்கைந்து ஆண்டுகளில் குத்தம்பாக்கத்தில் தேடிப்பார்த்தால் பரவாயில்லை, எல்லோரும் ஓரளவிற்கு நன்றாக இருக்கிறார்கள் என்று சொல்லமுடியும். தமிழ்நாட்டில் 2,76,000 பஞ்சாயத்துக்கள் இருக்கிறது. திருப்பித் திருப்பி குத்தம்பாக்கத்தைப் பேசுகிறார்கள், திருப்பித் திருப்பி அண்ணா அசாரேயைப் பேசுகிறார்கள். விரல் விட்டு எண்ணக்கூடிய 200 பஞ்சாயத்துக்கள் கூட உருப்படியாக இல்லை.

2,76,000 பஞ்சாயத்துகளில் 276 என்பது .001 ஆகிறது. .001 சதவிகிதம் கூட மாற்றத்தை ஏற்படுத்த முடியாததற்கு, மாநிலம் முழுவதும் Rural Development Department, மத்தியில் Rural Development Department, அதற்கு ஒரு துறை, அதற்கு ஒரு ஆசிரியர்கள், அதற்கு ஒரு BDO’s. இது போதவில்லை, அது போதவில்லை என்று அவர்கள் வேலைநிறுத்தம் செய்கிறார்கள். 0.01 சதவிகிதம்கூட சுயசார்புடைய மக்களை என்னால் உருவாக்கமுடியவில்லை. இந்த வேதனை ஒரு பக்கம் இருந்தாலும், நான் வேதனைப்பட விரும்பவில்லை. யாரோ ஒருவர் கிளறிவிட்டால்தான் பற்றிக்கொண்டு எரியும். ஆனால் அது என்றைக்கோ பற்றிக்கொள்ளும். அதுவரையிலும் நீயே கிளறு, நீயே பற்றவைத்ததுதான் அல்லது பற்றவைத்துவிட்டாய், இந்தத் தீ செல்கிறது என்று நிம்மதியாக இருந்துவிடுவாய். அதற்கான நிறைய வேலைகளை நான் செய்து வருகிறேன்.

Elango Nerkaanal4என் அறையில் உள்ள மின்விசிறி சூரிய ஒளியில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதை நான்தான் கண்டுபிடித்திருக்கிறேன். இந்த மின்விசிறியை நீங்கள் பார்த்தே இருக்க முடியாது. சூரிய ஒளி மின்சாரத்தில் Inverter போட்டு Battery சென்று Inverter லிருந்துதான் அந்த மின்விசிறி ஓடும். ஆனால் இந்த மின்விசிறி அப்படி கிடையாது. மேலே சூரியன் இருந்தால் இது ஓடும், DC மின்விசிறி. இது சூரிய ஒளியில் ஓடுகிற மின்விசிறி, அது மின்சாரத்தில் ஓடும் மின்விசிறி. வித்தியாசமே தெரியாது, உலகத்தில் எங்கேயுமே பார்த்திருக்க முடியாது, இது புதிய கண்டுபிடிப்பே கிடையாது. ஒரு சின்ன யோசனைதான். DC motor-ஐ போட்டு அந்த மின்விசிறி மாதிரியே செய்திருக்கிறேன் பார்ப்பதற்கு. உலகத்தில் இருக்கிற அனைத்து விஞ்ஞானிகளும் வந்து பார்க்கிறார்கள். இந்த மின்விசிறிதானா என்று ஆச்சரியப்படுகிறார்கள். இது சிறியதுதான். இந்தத் தேவையை உணர்ந்ததால் நான் விஞ்ஞானியானேன்.

அன்று நான் விஞ்ஞானியாகப் பணிபுரியும் பொழுது ராக்கெட் விடலாமா என்றுதான் கனவுகண்டிருந்தேன். இங்கு பார்க்கும் பொழுது ஒரு இருபதாயிரம் இருந்தால் மின்விசிறி போட்டு ஓடவிட்டுவிடலாம் போலிருக்கிறதே. அப்படியானால் மின்சாரம் இல்லாத ஊர்களிலெல்லாம் இதை செய்துகொடுத்துவிடலாம் போல இருக்கிறதே. இந்த மாதிரி தேவைகளை யதார்த்தத்திற்காக நம்பிக்கையாக செய்துகாட்டமுடியும். முடியாது என்பதை பெரிதாக எடுக்கவில்லை. ராக்கெட்டையே விடும்பொழுது இது முடியக்கூடிய விடயம்தானே. அதற்காக நான் அற்புதமான விடயங்களை உள்வாங்கி இரவு பகலாக அலைந்து தேடி செய்துகொண்டிருக்கிறேன். கூடவே மக்களைத் தேடுகிறேன், அதிகாரிகளைத் தேடுகிறேன், இந்த விடயங்களையும் சொல்கிறேன், பள்ளிக்கூடங்களில் பேசுகிறேன், கல்லூரிகளில் பேசுகிறேன், அண்ணா பல்கலைக்கழகத்தில் பேசுகிறேன், I.I.T.-யில் பேசுகிறேன், பல அறிஞர்கள் கூடும் இடங்களில் பேசுகிறேன். அந்த நம்பிக்கையில் 2021 வரையிலும் நன்றாக வேலை செய்தால் உண்மையான மாற்றத்தைக் கொண்டு வரமுடியும்.

கேள்வி: தாங்கள் செய்யும் வேலைக்கான நிதி எங்கிருந்து கிடைக்கிறது?

பதில்: அதற்காக ஒரு அறக்கட்டளை நடத்துகிறோம். இந்த அறக்கட்டளை முழுக்க முழுக்க காந்திய பாணியில் நடத்துகிற ஒரு அறக்கட்டளை. நான் பஞ்சாயத்துத் தலைவராக இருந்தால், பஞ்சாயத்துப் பணத்தை மட்டும் வைத்துத்தான் செய்யமுடிகிறது. சாலைதான் போடமுடியும் அல்லது சிலவற்றை மட்டும்தான் செய்யமுடியும். கூடுதலாக செய்வதற்காகத்தான் ஒரு தொண்டு நிறுவனம் நடத்துகிறோம். இந்த அறக்கட்டளை மூலமாக நிறைய பணத்தைத் திரட்டி பயிற்சிகள் என்று பலவற்றுக்காகப் பயன்படுத்துகிறேன். எதை செய்தாலும் வியாபார மாதிரியில் நடத்துகிறேன். அரசு திட்டங்களை பயன்படுத்தி நேராக மக்களுக்குக் கொண்டு செல்வேன். தொண்டு நிறுவனம் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து மற்ற பஞ்சாயத்துகளுக்கு பயிற்சி அளிக்கிறேன். மற்ற பஞ்சாயத்துகளிடமும் பணம் பெறுகிறோம். யாரும் எதுவும் இலவசமாக செய்துகொள்ளவேண்டாம், எல்லாம் தொழில் மாதிரிதான் செய்கிறோம். இதில் என்ன வித்தியாசம் என்றால் இது தொண்டு நிறுவனம் மாதிரி இருக்கும், இதில் 10 சதவிகிதம் எனக்கு சேரவேண்டியது ஆனால் நான் அதை எடுத்துக்கொள்ளவில்லை. நான் நீண்ட காலமாக காந்தியத்தில் வேலைசெய்ததால் நான் நன்றாக இருந்தால் நீங்கள் நன்றாக இருப்பீர்கள், நீங்கள் நன்றாக இருந்தால் நான் நன்றாக இருப்பேன். எனக்கென்று எதுவும் கிடையாது.

கேள்வி: உங்களுடைய திட்டங்களில் மகளிர் முன்னேற்றத்திற்காக என்ன செய்கிறீர்கள்?

kuththambakkam Elango6பதில்: முழுக்க முழுக்க மகளிருக்காகத்தான் இருக்கிறது. அதற்குமேல் மகளிர் சுயஉதவிக்குழுக்களாக மாற்றி அவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி வருகிறேன். இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் வேலை செய்து வருகிறார்கள். இங்கு வேலை செய்கிறார்கள், மற்ற இடங்களிலும் வேலை செய்கிறார்கள். அவர்களுடைய குடிகார கணவன்களின் பிடியிலிருந்து விடுவித்ததால் அவர்கள் தாராளமாக (liberal) அருகில் வேலைக்குச் செல்கிறார்கள். முன்பு மனைவி கண் பார்வையிலேயே இருக்கவேண்டும் என்று சந்தேகப்பட்டுக்கொண்டிருப்பான் குடிகார கணவன். ஆனால் இப்பொழுது அப்படியல்ல. கணவன் மனைவியை வேலைக்கு அனுப்புகிறான். மெதுவாக இந்த வடிவத்தைக் கொண்டு வந்திருக்கிறேன். இன்றைக்கு குத்தம்பாக்கம் தலைநிமிர்ந்து நிற்கிறது என்றால் மகளிருடைய மேம்பாடுதான் காரணம். ஒரு குடும்பத்தில் நான்கு பெண்கள் இருந்தால், நான்குபேரும் சம்பாதிப்பார்கள். நான்கு ஆண்களும் சம்பாதிப்பார்கள், ஆனால் ஆண்களை விட பெண்கள் சம்பாதிக்கிறார்கள். சுலபத் தவணைக் கடன் மற்றும் பல வசதிகளை செய்து தருகிறேன்.

Elango Nerkaanal7குத்தம்பாக்கத்தில் தலித் மக்கள் நடுவிலேயே ஒரு அரசுப் பள்ளிக்கூடத்தை உருவாக்கி அவர்களை வெளியில் கொண்டு வருகிறோம். தலித்களுக்கென்று நான் பேசவில்லை, அவர்கள்தான் இங்கு மிகவும் மோசமாக இருந்தார்கள். குடித்து, அடிதடி, கலாட்டா என்று செய்துகொண்டிருந்தார்கள். இப்பொழுது அதை நிறுத்தினேன். அந்தக் குடிகார அப்பாக்களை என்னால் பெரிதாக மாற்றிவிட முடியாது, அவர்களுடைய மகள்களை படிக்கவைக்கிறேன். படிக்கவைத்து என்னை மாதிரியே வேலைக்கு செல்பவராகவும் மாற்றவில்லை. இங்கே இருந்து ஐந்தாயிரம் சம்பாதித்தாலும் போதும், நம் மக்களுக்கு ஏதாவது வேலை செய்துவிட்டு வாழ்ந்துவிட்டு போகலாம். இதைத்தான் அதிகமாக செய்கிறேன். திறமை இருந்து வெளியில் சென்று சம்பாதிப்பதாக இருந்தாலும் சம்பாதிக்கலாம். ஆனால் குடும்பத்தை விட்டு வெளியில் செல்லத் தேவையில்லை. நம் படிப்பை வைத்து, நம் ஊரைவைத்து நம்மால் வாழ முடியும். சுய சார்புடைய மக்கள் அமைப்புகளை உருவாக்க முடியுமா? என்பதற்காக நிறைய வேலைகள் செய்துகொண்டிருக்கிறேன்.

கேள்வி: நீங்கள் பஞ்சாயத்துத் தலைவராக 1996-2006 காலகட்டத்தில் எதிர்கொண்ட இன்னல்கள் என்ன?

kuththambakkam Elango2பதில்: இன்னல்கள் என்று பார்க்கும்பொழுது முதலில் மக்களைக் குறிவைக்க வேண்டும், அதுவே பெரிய சோதனையாக இருந்தது. சாராயம் காய்ச்சி பிழைப்பு நடத்தியிருந்தார்கள், குண்டர்களோடு சம்பந்தப்பட்டிருந்தார்கள், சாராயத்தை நிறுத்தியதால், அவர்ளுடைய எதிர்ப்பு மிகவும் ஆபத்தாக இருந்தது. அது எனக்கு சவாலாக இருந்தது. மக்கள் கூடவே இருப்பதால் நான் பலவீனமானவர் அல்ல. சாராயம் காய்ச்சுபவர் நம்மை வாழவிடமாட்டான் போலிருக்கிறதே இவனை அழித்துவிடலாம் என்று பார்ப்பான், அழிக்கச் சென்றால் மீதி எழுநூறு பேர்கள் அவருடன் இருக்கிறார்களே, அவர்கள் நம்மை அழித்துவிடுவார்கள் என்ற பயத்தை உளவியல் ரீதியாக கொண்டுவந்தேன். இதற்காக தனியாக வேலை செய்தேன். நான் இங்கு வேலைசெய்தால் எதுவும் கிடைக்காது என்பதற்காக ஊழல் செய்பவர்களால் வரும் பிரச்சனைகள் எல்லாம் இருந்தது.

Strategic ஆக முதலமைச்சர் அளவில் நெருங்கி வேலைசெய்ததால், குறைந்தபட்சம் அவரை தொந்தரவு செய்யாதீர்கள் என்று மேலே இருந்து நிறைய அழுத்தம் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். எந்த பஞ்சாயத்தில் தொந்தரவு செய்தார் என்பதைத்தாண்டி, குறைந்தபட்சம் இந்த ஆளையாவது விடுங்கள் என்றனர் அதிகாரிகள். எல்லோரும் ஊழல் மிக்கவராகத்தானே இருப்பார்கள். ஒரு செயலாளரைப் பார்த்து சொல்கிறார், இந்த பஞ்சாயத்துத் தலைவர் இப்படி செய்தார் என்றால், ஒரு பைசா கிடையாது நமக்கு என்கிறார். அதற்கு அவர் சொல்கிறார் நமக்கு இல்லாவிட்டாலும் பரவாயில்லை, முதலமைச்சருக்குக் கொடுக்க வேண்டுமே என்னபண்ணுவது என்று. நமக்கு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, பெரிய அளவில் இணைப்பு இருக்கிறது என்கிறார்கள். நான் பெரிய எதிர்ப்பு கிடையாது, என் ஊரில் என்னை விடுங்கள் என்கிறேன். அதற்கு அவர்கள் சொல்கிறார்கள், இந்த ஆளை விடுங்கள், நல்லது செய்கிறார். இந்த மாதிரி ஆதரவு பெரிய அளவில் மேலேயிருந்து DGP-யிலிருந்து நிறைபேர் ஆதரவு தெரிவித்தார்கள். அவர்கள் சாராயத்திற்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது, இவர் நல்லது செய்கிறார், அவருக்கு பாதுகாப்பு கொடுக்காமல் என்ன செய்கிறீர்கள் என்று அழுத்தம் வரும்.

கேள்வி: கிராம தன்னாட்சி அறக்கட்டளை பற்றி கூறுங்கள்?

பதில்: கிராம தன்னாட்சி அறகட்டளையின் நோக்கமே பஞ்சாயத்துக்களை வலுப்படுத்த வேண்டும். இந்த அமைப்பில் 20 நபர்கள் வேலை செய்கிறார்கள். அதைத்தவிர நாங்கள் உருவாக்கியிருக்கிற சிறிய சிறிய நிறுவனங்களில் நூற்றைம்பது நபர்கள் வேலை செய்கிறார்கள். அதற்கு ஆதரவாக நிறைய தன்னார்வத் தொண்டர்கள் வருவார்கள். சிலர் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வந்து இங்கு எனக்காக வேலை செய்வார்கள். நிறைய கல்லூரிகளிலிருந்து மாணவர்கள் வேலை செய்துகொண்டிருப்பார்கள். நான் இந்த அமைப்பை பெரிதுபடுத்த எண்ணவில்லை. எனக்கு அமைப்பு பற்றி நம்பிக்கையெல்லாம் கிடையாது. Floating ஆகத்தான் இருப்பேன். இதை ஒரு அமைப்பாக்கி, இதற்கு ஒரு மண்டபம் (auditorium) கட்டி இதில் ஒரு பயிற்சி நிலையம் வைத்து, இது பெரிதாகவேண்டும் என்பதெல்லாம் இல்லை. வேகவேகமாக திருச்சியில் ஒன்று பண்ணமுடியுமா?, மதுரையில் ஒன்று பண்ணமுடியுமா?, அந்த ஊரில் நீங்கள் செய்தீர்கள், இந்த ஊரில் நாங்கள் செய்கிறோம் என்று அவ்வளவுக்கு அவ்வளவு roll ஆக வேண்டும். எல்லா இடத்திலும் ஒரு அமைப்பு உருவாகிவிடுகிறது. கிராம தன்னாட்சி அறக்கட்டளை, இதுவே ஒரு பல்கலைக்கழகம் மாதிரி உருவாக்கி அதற்கு ஒரு ஆதாரம், அதற்கு ஒரு சொத்து, asset management, அதற்காக நிதி ஒதுக்குவது என்பதெல்லாம் இல்லை. பெரிய அளவில் இதனை விரிவுபடுத்த நான் வேலை செய்யவில்லை. ஒரு பெரிய முட்டையை உருவாக்குவதற்குப் பதிலாக, ஒரு முட்டையை கருத்தரிக்க வைத்துநிறைய முட்டைகளை இட்டுக்கொண்டே செல்லுங்கள். எல்லா முட்டையையும் சேர்த்து ஒரே முட்டையாக பண்ணலாம் என்று பார்ப்பதைவிட நூற்றுக்கணக்கான முட்டைகளை இடுங்கள். ஒவ்வொரு முட்டையும் மற்றொரு முட்டையை உருவாக்கும். இதனை egg layer model என்று சொல்வார்கள். அதில்தான் வேலைசெய்துகொண்டிருக்கிறேன்.

கேள்வி: விவசாயம் சார்ந்து நீங்கள் செய்தவை?

kuththambakkam nerkaanal5பதில்: விவசாய நிலங்களைக் காப்பாற்றுகிறோம். நீர் மேலாண்மையை விவசாயிகளுக்கு சொல்லிக்கொடுக்கிறோம். நான் தொழில்நுட்பம்(Technology), மக்களை திரட்டுவது, அரசாங்கம், நீதிமன்றம் என்று சென்றுகொண்டிருக்கிறேன். ஆனால் நிறைய விவசாயிகளுடன் வேலை செய்து பாரம்பரிய வேளாண்மையை ஊக்குவிக்கிறேன். நிறைய பஞ்சாயத்து தலைவர்களுடன் வேலை செய்கிறோம், இயற்கை வழி வேளாண்மைக்கு விவசாயிகளுடன் வேலை செய்கிறோம். இளைஞர்களை களமிறக்கி இதனை சாத்தியமாக்க (viable) முடியும்.

கேள்வி: உங்களது குடும்பத்தை பற்றி கூறுங்கள்?

பதில்: என்னுடைய மனைவி சுமதி. எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆகிவிட்டது. நான் இந்தப் போராட்டத்தில் இறங்கும்பொழுது மனைவி மத்திய அரசாங்க வேலைக்குச் சென்றார்கள். மனைவியும், பெண் குழந்தைகள் இரண்டுபேரும் சென்னை அருகில் போரூரில் குடியேறினர். நான் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் சென்று பார்த்துக் கொள்வேன். நேரடியாகக் களத்தில் அவர்களுடைய ஆதரவு இல்லையென்றாலும், எனக்கு குடும்பம் என்று ஆனபிறகு, அந்தக் குடும்பத்தின் பொறுப்பை என்னுடைய மனைவி பார்த்துக் கொண்டார். நேராக ஒத்துழைக்கவில்லை என்றாலும் தடங்கல் இல்லாமல், மகள்களைப் பற்றி கவலைப்படாமல், குடும்பத்தொல்லையில்லாமல் நாம் பார்த்துக் கொண்டால், அவருடைய வேலையை அவர் செய்வார் என்று என் மனைவி எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். 1988க்குப் பிறகு ஒரு ரவிக்கை துணிகூட எடுத்துக் கொடுத்ததில்லை. நானும் அவர்களை அதிகம் தொல்லை செய்யமாட்டேன். நான் உடம்பு சரியில்லாத நிலையில் இருக்கும் பொழுது நாற்பதாயிரம், ஐம்பதாயிரம் செலவு செய்து காப்பாற்றுவார்கள். கைக்கு செலவு இல்லாமல் மிகவும் சுருண்டு போய்விட்டால் நான்காயிரம், ஐந்தாயிரம் கொடுப்பார்கள். மிகப்பெரிய போராளிதான். நேரடியாக களத்தில் வேலை செய்யவில்லை என்றாலும், இந்த மனிதர் செய்வது நல்ல வேலை, அதற்காக காந்தி மாதிரி என்னைப் பாராட்டுவார்கள் என்று சொல்ல முடியாது, ஆனால் என் குறுக்கே நின்றதில்லை.

கேள்வி: உங்களுக்குக் கிடைக்கக்கூடிய அங்கீகாரத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

kuththambakkam Elango5பதில்: எனக்கு அங்கீகாரம் நாடு முழுக்க இருக்கிறது. ஆனால் அதைப்பற்றியே நான் கவலைப்படவில்லை. நான் மிகவும் தீவிரமான காந்தியத்தை உள்வாங்கியதால், காந்தியாவது ஒரு அளவில் நிற்கிறார். நான் வாழவேண்டும் என்பதிலோ, இளங்கோ என்ற ஒருவர் இருப்பதிலோ இல்லை. என்னுடைய பிறவியின் பயன் எவ்வளவுதூரம் பற்றவைக்கிறேன் என்பதுதான். எரியும் நெருப்பு, என்றைக்கு வெண்டுமானாலும் அனைந்துவிடுவேன். நாட்டையே கபளீகரம் பண்ணிவிட்டும் அணையலாம், ஒரு சிறிய தீபமாக விளக்கு ஏற்றிவிட்டு அதன் மூலமாக நூற்றக்கணக்கான குழந்தைகள் உருவாகலாம். கடவுள் இல்லை, கடவுள் மறுப்புக் கொள்கையில் தீவிரமாக இருந்தேன். இப்பொழுது அந்த மாதிரி மறுப்பதைவிட காந்தி சொன்ன மாதிரி ஒரு கொள்கையோடு வாழ்கிறேன் என்று அமைதியாக இருக்கிறேன், நிம்மதியாக இருக்கிறேன். காந்தியைத் தேடச்சென்று அல்லது என்னைத் தேடச்சென்று நிறைய விடயங்களை கொள்கை நோக்கில் பார்க்கிறேன். எனக்கென்று சொல்லிக்கொள்ள என்ன இருக்கிறது. பகவத்கீதையை நம்புகிறவனாக இருந்தால், நான் வரும்பொழுது என்ன கொண்டுவந்தேன், நான் வந்தேன், என்னால் முடிந்ததை செய்துகொண்டிருக்கிறேன். அதனால் எனக்கென்று அடையாளத்தையோ, அங்கீகாரத்தையோ நான் பார்க்கவில்லை.

கலாமும் நானும் நெருங்கிய நண்பர்கள். என் மேல் அவருக்கு மிக அன்பு. கலாமினுடைய உயிர் பிரியும் நேரத்தில் மாரடைப்பு வந்ததால் விரைவில் இறந்துவிட்டார். இரண்டு அல்லது மூன்று மணி நேரம் போராடி இறந்திருந்தால் இது என்ன ஆகுமோ, அது என்ன ஆகுமோ என்று நினைப்பார்கள் இல்லையா. அந்த நேரத்தில் நிச்சயமாக என்னை நினைத்திருப்பார், அந்த தம்பி அதை பண்ணிவிடுவானோ, இதை பண்ணிவிடுவானோ என்று நினைத்திருப்பார். அந்த அளவிற்கு என் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார். இளங்கோ, நான் எத்தனையோ நபர்களைப் பார்த்திருக்கிறேன், நான்கூட ஒரு ராக்கெட் விடுவதில் கனவு கண்டிருக்கிறேன் பொறியாளராக இருந்து. நீ பொறியாளராக இருந்து பஞ்சாயத்து தலைவராக ஆசைப்பட்டீர்கள் என்றால் அதுதான் வெற்றி. அந்த மாதிரி பல மனிதர்கள் நம்பிக்கைப்படுகிற அளவிற்கு வேலை செய்துகொண்டே இருப்பேன். இப்பொழுதுகூட பாரீசில் சுற்றுச்சூழல் மாநாடு நடந்தது. அதில்கூட உலகத்தலைவர்கள் எல்லோருக்கும் பலவித நம்பிக்கை தரக்கூடிய பத்து பரிசோதனை போட்டு காண்பித்தார்கள். அதில் ஒன்று அடித்தள சனநாயகத்தை வலுவூட்டுவதன் மூலமாக சுற்றுச்சூழலைப் பாதுகாக்கமுடியும் என்று நான் ஆதாரமாகப் பேசினேன். மரம் வைக்கவேண்டும், நீங்கள் வைக்க மாட்டீர்கள், கிராமப் பொருளாதாரமும், கிராமத்து மக்களும் புரிந்துகொண்டால் நாங்கள் மரம் வைப்போம். மீண்டும பசுமையாகிவிடும். மீண்டும் தண்ணீரை நீர் மேலாண்மை செய்யவேண்டும். மீண்டும் நூதனமான முறையில் இயற்கை முறையில் உணவு உற்பத்தி செய்வோம். அது எங்களிடம்தான் இருக்கிறது. அதுதான்பஞ்சாயத்து அமைப்பு. அதை வலுப்படுத்தவில்லையென்றால் இது நடக்காது.

kuththambakkam Elango8கிராமத்தில் உள்ள விவசாயி ஒரு நான்கு சக்கர வாகனம் வாங்கிவிட்டு ஊர் சுற்றிக்கொண்டிருப்பார். எங்களது ஊரில் நிலம் போடுங்கள், தண்ணீரைக் கொடுங்கள், சாயம் போடுங்கள் என்பார். எங்களது ஊரில் தொழில் வளர்ச்சிஎன்பார். வேண்டாம் இதெல்லாம் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று சொல்ல ஆரம்பித்தார் என்றால் அது வேண்டாம் என்று நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள். அல்லது கிராமத்து முன்னேற்றத்திற்காக நீங்கள் ஒரு சாயப்பட்டறையைப் போட்டுவிட்டு எங்களை காலிசெய்து சென்றுவிடுவீர்கள். 25 அல்லது 30 பேருக்கு சுத்தம் செய்யும் வேலை கிடைக்கும். இறுதியாக எங்களது ஊரின் பரிமாணத்தையே அழித்துவிடும். தலைமுறை தலைமுறையாக நாம் வாழமாட்டோம். எங்களுடைய சனநாயகம் வலுவாக இருந்தால் அவர்களை வேண்டாம் என்று சொல்லிவிடுவோம், நிராகரிப்போம், எதிர்ப்போம், நீதிமன்றத்திற்குச் செல்வோம், சண்டையிடுவோம். அடிப்படை சனநாயகத்தை வலுப்படுத்தவில்லை என்றால் எதுவுமே நடக்காது.

என்னுடைய நம்பிக்கை மிகவும் வலுவாகவே இருக்கிறது. இந்தியாவுக்கான மாற்றத்தை காந்தி எங்கு விட்டுச் சென்றாரோ அதை மீண்டும் கொண்டுவர என்னால் முடியும். காந்தியின் பலம் என்னவென்றால் தன்னொழுக்கமான மனிதர். தன்னொழுக்கத்தைப் பற்றித்தான் அவர் பேசுகிறார். நாங்கள் தன்னொழுக்கத்தையும் தாண்டி தொழிற்நுட்பத்தை(Technology) வைத்திருக்கிறேன், வலையமைப்பு(Network) வைத்திருக்கிறேன். ஒருவர் நல்லமனிதர் என்று எழுதினால் உலகத்திற்கு பல இடங்களுக்குச் செல்லும். அதைப் பார்க்கும் பத்தாயிரம் பேரில் ஒரு ஆயிரம் பேர் இதைத்தான் எதிர்பார்க்கிறேன் என்பார்கள். சமீபத்தில் லயோலா கல்லூரியில் ஒரு வகுப்பு எடுத்தேன். இரண்டு, மூன்று மணிநேரம் வலுவாகப் பேசினேன். அப்பொழுது அங்கிருந்த சகோதரி என்னிடம் வந்து ஆசிர்வதிக்குமாறு சொன்னாள். அது ஒரு பகுத்தறிவு மேடை. ஆனால் அந்த அளவிற்கு உள்வாங்கும் சகோதரிகள், மக்கள் இருக்கிறார்கள். இவர்கள்அனைவரும் எழுந்து வரத்தான் போகிறார்கள்.

 


நிகில்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “குறையில்லாத கிராமங்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் தலைவர் குத்தம்பாக்கம் இளங்கோ அவர்களின் நேர்காணல்”

அதிகம் படித்தது