மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

குலமும் கோத்திரமும்! – பாகம் 7

முனைவர். ந. அரவிந்த்

May 22, 2021

siragu kulamum kothiramum1ஆதி தமிழனின் இறைவழிபாடு, அவன் வாழும் இடம் மற்றும் செய்யும் தொழிலை மையமாக வைத்து இருந்தது. உதாரணமாக, ஆதிகாலத்தில் மனிதர்கள் தங்கள் வாழ்விடங்களில் இன்றியமையாத தேவையெதுவோ அதற்கு முக்கியத்துவம் கொடுத்து வணங்கினார்கள்.

ஆதி முதலே தமிழகத்தை சேர, சோழ மற்றும் பாண்டியர்கள் ஆண்டு வந்தனர். மலைவாழ் மக்கள் (சேரர்கள்) மலைப்பகுதியில் நெருப்பானது வெளிச்சம் தந்து விலங்குகளிடம் இருந்து தங்களை காப்பதால் நெருப்பினை (அக்னி) வணங்கினார்கள். எனவே அவர்கள் ‘அக்னி குலம்’ என்று அழைக்கப்பட்டனர்.

சோழர்களின் பிரதான தொழில் நெல் விவசாயம். விவசாயத்திற்கு சூரிய ஒளி மிக இன்றியமையாதலால் சோழர்கள் சூரியனை வணங்கினர். இதனால் சோழர்கள் ‘சூரியகுலம்’ என அழைக்கப்பட்டனர்.

பாண்டியர்களின் துறைமுகம் தற்போதைய தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கொற்கை. இவர்களின் முக்கிய தொழில் மீன் பிடித்தல். பாண்டியர்களின் கொடியிலும் மீன் படம் இருக்கும். நிலாவானது கடலில் பயணம் செய்யும்போது கடல் அலையை மேலெழும்பச் செய்யும். அதுமட்டுமின்றி கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும்போது இரவுநேரத்தில் நிலா, வெளிச்சம் தருவதாலும் நிலவினை வணங்கினார்கள். எனவே பாண்டியர்கள் ‘சந்திர குலம்’ ஆனார்கள்.

ஆதியிலும் சங்க காலத்திலும் தமிழ்ச் சமூகம் சாதியற்ற சமூகமாகவே இருந்தது. தமிழ் சமூகத்தில் சாதி குறித்து சங்க இலக்கியங்களில் குறிப்புகள் இல்லை. தொழில்முறைப் பிரிவுகளான கூலவாணிகன், சீத்தலைச் சாத்தன், கணியன் பூங்குன்றன், காக்கைப் பாடினி போன்ற பெயர்களே சங்க இலக்கியங்களில் காணக்கிடைக்கின்றன.

வட இந்தியர்களின் வருகைக்குப் பின்னரே தமிழ் நாட்டில் சாதி பாகுபாடுகள் தோன்ற ஆரம்பித்தன. வட இந்தியர்கள் மனிதர்களை அவர்களின் நிறத்தை வைத்து அந்தணர், சத்திரியர், வைசியர் மற்றும் சூத்திரர் என நான்காக பிரித்தனர். இப்போதைய இந்தியாவில் உள்ள இந்த வர்ண சாதிப் பிரிவுகள் பிறப்பால் நிர்ணயிக்கப்படுக்கின்றன. மேலே குறிப்பிட்டுள்ள பெயர்கள் அனைத்தும் சமஸ்கிருத வார்த்தைகளாகும்.

யூத வரலாற்றின்படி, ஆபிரகாமின் மகன் பெயர் ஈசாக். ஈசாக்கிற்கு இரண்டு மகன்கள். அவர்களின் பெயர் ஏசா மற்றும் யாக்கோபு. யாக்கோபிற்கு 2 மனைவிகள் மற்றும் 2 பணிப்பெண்கள் மூலமாக 12 குழந்தைகள் இருந்தனர்.

யாக்கோபு சகோதரிகளான லேயாள் மற்றும் ராகேல் இருவரையும் திருமணம் செய்தான். சகோதரிகளில் மூத்தவள் பெயர் லேயாள், இளையவள் பெயர் ராகேல்.

யாக்கோபு அவனுடைய முதல் மனைவி லேயாள் மூலமாக ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன் ஆகிய 6 குழந்தைகளையும் மற்றும் அவளுடைய வேலைக்காரி சில்பாள் மூலமாக காத், ஆசேர் ஆகிய 2 குழந்தைகளையும் பெற்றான்.

அது மட்டுமின்றி, யாக்கோபு அவனுடைய இரண்டாவது மனைவி ராகேல் மூலமாக யோசேப்பு, பென்யமீன் ஆகிய2 குழந்தைகளையும் மற்றும் அவளுடைய வேலைக்காரி பில்காள் மூலமாக தாண், நப்தலி ஆகிய 2 குழந்தைகளையும் பெற்றான்.

இறைவன் யாக்கோபைத்தான் முதன்முதலாக ‘இஸ்ரவேல்’ என்று அழைத்ததாக இஸ்ரவேலர்கள் கூறுகின்றனர். யாக்கோபுடைய 12 மகன்களின் வம்சங்களும் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்கள் என அழைக்கப்படுகிறார்கள். யாக்கோபுடைய 12 மகன்களில் நான்காவது மகனின் பெயர் யூதா. யூதாவின் வழிவந்த வம்சத்தினர் யூதர்கள் என அழைக்கப்படுகின்றனர். பல ஆண்டுகளுக்கு பின்னர் பன்னிரண்டு கோத்திரங்களான இஸ்ரவேலின் பத்து கோத்திரங்கள் வடக்கே ‘இஸ்ரவேல்’ என்றும், இரண்டு கோத்திரங்கள் தெற்கே ‘யூதா’ என்றும் எல்லை பிரித்து ஆட்சியமைத்து வந்தனர்.அதாவது, இஸ்ரவேல் என்ற 12 வம்சா வழிகளில் யூதர்கள் என்பது ஒரு வம்சம். இறைவனின் திராட்சைத் தோட்டம் இஸ்ரவேல் குடும்பம் என்றும் அவர் ஆர்வத்துடன் நட்ட கன்று யூதா மக்கள் என்றும் அவர்களின் வரலாறு கூறுகிறது. இஸ்ரவேல் என்ற மரத்தின் ஒற்றை கிளைதான் யூதா.

மனிதர்களிடையே குலம், சாதி, கோத்திரம், இனம்  மற்றும் மதம் வேறுபாடு பார்ப்பது தவறு. ஆனால், அவற்றைப்பற்றி தெரிந்து கொள்வதில் தவறேதுமில்லை. மகாகவி பாரதியார் சாதி வேறுபாடு பார்ப்பது தவறு என்பதனை ‘கேளடா மானிடவா…எம்மில் கீழோர் மேலோர் இல்லை’ என்று தன்னுடைய பாடலில் குறிப்பிட்டுள்ளார்.  அதுமட்டுமின்றி, அவருடைய வீட்டில் வளர்த்த வெள்ளை நிற பூனை சாம்பல், கருஞ்சாந்து, பாம்பு மற்றும் வெள்ளைப் பாலின் நிறங்களில் குட்டிகள் ஈன்ற போதிலும், தாய் பூனையானது நிற பாகுபாடின்றி தன் குட்டிகளை வளர்த்ததென அதேபாடலில் கூறியுள்ளார்.

siragu kulamum kothiramum2

கி.மு.1000 காலகட்டத்தில், இஸ்ரவேல் நாட்டினை ஆட்சி செய்த தாவீது என்ற மன்னன் அந்த நாட்டினில் யூதர்கள் மற்றும் யூதர்கள் அல்லாத மனிதர்கள் எவ்வளவு பேர்கள் உள்ளனர் என்றும் அதன் மூலம் தனக்கு ஆதரவாக எவ்வளவு மக்கள் இருக்கின்றனர் என்றும் தெரிந்து கொள்வதற்காக கணக்கெடுப்பு நடத்தினான். இதனை இறைவன் வெறுத்தார் என்று யூத வரலாறு கூறுகிறது. அது போலவே, தமிழ் நாட்டினில்  இன்றைய பெரும்பாலான அரசியல்வாதிகள், தேர்தல் சமயத்தில் சாதிகளின்  அடிப்படையில்தான் வேட்பாளர்களை தேர்வு செய்கின்றனர். இது தவறான செயலாகும்.

தொடரும்


முனைவர். ந. அரவிந்த்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “குலமும் கோத்திரமும்! – பாகம் 7”

அதிகம் படித்தது