குளத்துக் கரையில்! (கவிதை)
வழக்கறிஞர். ம. வீ. கனிமொழிAug 14, 2021
தனிமையில் உச்சி வெயிலில்
ஒரு நடை சென்றேன்
நிழல் உடன் வந்தது
செடியின் கிளை
குளத்தின் மேற்பரப்பைத்
தொட்டுக் கொண்டு நீண்டிருந்தது
அழகிய கருநிற பறவை
கிளையின் மீதமர்ந்து
அதன் பிம்பத்தைக்
கண்டு இனிமைக் குரல் எழுப்பிக்
கொண்டிருந்தது
குளத்தில் நீரூற்று;
வாத்துகள் நீந்தி
வருகின்றன,
பறவை ஒன்று நீரின்
கீழிறங்கி
தன் அலகால்
நீரைக் கலைத்து மேலே
பறந்து
செல்கிறது ;
எல்லாம் கவின் காட்சிகள்
கண்களுக்கு,
ஆனால் குளத்து
உயிரினங்களின்
எச்சம் நாசியில்
ஏற மூக்கை மூடிக்கொள்கிறேன்,
ஐம்புலன்களுக்கும்
அனைத்தும் ஒன்றாய்
உவப்பதில்லை
என்றது மூளை;
கண்ணுக்கு இனிமை
மூக்கிற்கு இனிமையாக இல்லை
வாழ்க்கையும்
அவ்வாறே என்ற
தத்துவம் புரிந்தேன்
குளத்துக் கரையில்!
வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “குளத்துக் கரையில்! (கவிதை)”