டிசம்பர் 3, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

குளிர்பானங்களுக்கு போட்டியாக கோடையை தணிக்கும் இளநீர் கடை

சித்திர சேனன்

Mar 14, 2015

இந்தியா ஒரு வெப்ப நாடு. இதுபோல உலகில் பல்வேறு வெப்ப நாடுகள் இருப்பினும் இந்த கொடிய வெப்பத்திலிருந்து மனித குலத்தைக் காப்பாற்ற இயற்கை அளித்த அமுத பானமே இளநீர். கோடையில் உடல் சூட்டை தணித்துக் கொள்வதற்கு உன்னத பானம் இதுவாகும். தற்போது தமிழகத்தில் கோடை வெயில்கொளுத்தத் துவங்கியுள்ளதால் ஆங்காங்கே இளநீர், தர்பூசணி, எலுமிச்சை பானம், ஆரஞ்சு பானம், கூழ், கிருணிப்பழ பானம் என வெப்பத்தைத் தணிக்கும் வியாபாரம் வெளுத்து வாங்குகிறது சென்னையில். இதில் இளநீர் விற்கும் தொழிலாளி ஒருவரைச் சந்தித்தேன். பல சுவாரசியமான தகவல்களை அள்ளி வழங்கினார். அவரின் நேர் காணல் இதோ உங்கள் பார்வைக்கு.

கேள்வி: உங்களைப் பற்றி கூறுங்கள்:

பதில்: என் பெயர் ஜெகநாதன். எனக்கு வயது 23. நான் சென்னை மேடவாக்கம் கூட்ரோட்டில் உள்ள காயிதே மில்லத் கல்லூரியில் பி. எஸ். சி. கணிதவியல் படித்துவிட்டுதகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை செய்தேன். 12 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுத்தனர். சென்னையில் வசிக்க இச்சம்பளம் போதாத காரணத்தினால் என் அப்பா செல்வராஜ் (52) 20 வருடம் செய்துவந்த இளநீர் விற்கும் தொழிலுக்கு வந்துவிட்டேன்.

ilaneer-2

கேள்வி: இளநீர் விற்பனைக்கு எங்கிருந்து இளநீர் வாங்குகிறீர்கள்?

பதில்: வருடம் முழுவதும் பொள்ளாட்சியில் இருந்து இறக்குமதியாகும். இந்த கோடை காலத்திற்கு அதிகமான இளநீர் தேவைப்படுவதால் பொள்ளாச்சியில் இருந்து மட்டுமல்லாது மைசூர், மாயவரம், பட்டுக்கோட்டை, திருப்பாச்சி ஆகிய மாவட்டங்களிலிலுந்து இளநீர் இறக்குமதியாகிறது. கோடை காலத்தைத் தவிர மற்ற மாதங்களில் இறக்குமதியாகும் இளநீரின் விலை காய் ஒன்றுக்கு ரூ. 20 இருக்கும். இதே கோடைகாலத்தில் வரும் இளநீர் ஒன்றின் விலை ரூ. 35 இருக்கும். இதனால் வாங்கும் விiலையில் இருந்து ரூ.10 முதல் ரூ.20 வரை லாபம் வைத்தே விற்கிறோம். இதில் காய் ஏற்றி வரும் வண்டி வாடகையும் அடங்கும்.

கேள்வி: ஒரு முறைக்கு எவ்வளவு இளநீர் வாங்குகிறீர்கள்?

பதில்: 2 நாளுக்கு ஒரு முறை 500 லிருந்து 700 இளநீர் வரை வாங்குகிறோம். ஒரு நாளைக்கு குறைந்தது 100 லிருந்து 120 வரை விற்பனையாகிறது.

ilaneer-3

கேள்வி: இளநீரில் 2 வகை உள்ளது. பச்சை இளநீர், செவ்விளநீர் இரண்டுக்கும் எப்படி விலை நிர்ணயித்து விற்கிறீர்கள்?

பதில்: இவ்விரண்டு காய்களுக்கும் ஒரே விலைதான். இதில் உயர்ந்த ரகம் தாழ்ந்த ரகம் என்று எதுவும் இல்லை. அப்படிப் பார்த்து நாங்கள் விற்பனை செய்வதில்லை. எங்களைப் பொறுத்த வரை நீர் அதிகம் உள்ள இளநீர்,குறைந்த நீர் உள்ள இளநீர் என்றுதான் தரம் பிரித்து அதற்குத் தகுந்தாற்போல் விலை உயர்த்தி விற்போம்.

கேள்வி: அதிக நீர் உள்ள இளநீர் எங்களுக்குத் தெரிவதில்லையே?

பதில்: அது இளநீர் விற்கும் தொழிலாளர்களுக்கே தெரிந்த விஷயம். கொஞ்ச நாள் நீங்களும் இளநீர் விற்றால் நீர் பிடிப்பு அதிகம் உள்ள இளநீரை நீங்களும் தரம் பார்க்கலாம். இதெல்லாம் அனுபவத்தில் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும்.

ilaneer-4

கேள்வி: இளநீரை மொத்த வியாபாரியிடமிருந்து பெற்றபின் அங்கேயே ரொக்கப் பணம் கொடுப்பார்களா?

பதில்: இல்லை. 500 இளநீர் வாங்கி பின் ஒரு வாரம், 10 நாள் கழித்து இளநீரை நன்கு விற்று காசு பார்த்த பின்பே இளநீர் முதலாளிக்கு பணம் கொடுப்போம்.

கேள்வி: ஒரு நாளைக்கு குறைந்தது 100 இளநீர் வெட்டி விற்பனை செய்கிறீர்கள். மீந்துபோன இந்த இளநீர் கூடுகளை என்ன செய்கிறீர்கள்?

பதில்: இதுவரை சென்னை மாநகராட்சி கனரக வாகனத்தார் வந்து ஏற்றிச் செல்வர். ஆனால் இப்போது கயிறு திரிக்கும் நிறுவனத்திற்கு ஏற்றி பணம் பார்க்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. விரைவில் செயல்படுத்துவேன்.

கேள்வி: இந்த இளநீர் கடையை எங்கு எப்போது எவ்வளவு முதலீடு செய்து ஆரம்பித்தீர்கள்?

பதில்: 20 வருடத்திற்கு முன்பு என் அப்பா ஒரு தள்ளுவண்டிக் கடையில் இந்த இளநீர் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். எனது கடையும் வழக்கமான இளநீர் வியாபாரி கடை போல் இல்லாமல் இருக்க வேண்டுமே என்று நினைத்து இதற்கு ஒரு கூரை(Shed) போட்டோம். அதில் இளநீர்களை வரிசையாக அடுக்கினோம். பிறகு இந்தக் குடைகளை வாங்கி வெயிலுக்கு இதமாக இளநீர் குடிக்க வருபவர் நிழலுக்காக நட்டோம். இந்தக் கடைக்கு ஸ்ரீ சாய் இளநீர் எனப் பெயரிட்டதோடு “கோகோனெட் குடிங்க கூலா இருங்க” என்ற வாசகம் தாங்கிய கடைப் பெயர் பலகையை வைத்தோம். இந்தக் கடை துவங்க 25 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தோம்.

கேள்வி: சரி உங்களின் இந்தக் கடையில் உள்ள சிறப்பு என்ன?

பதில்: இதன் சிறப்பு என்னவென்றால் சென்னை இளநீர் கடைக்காரர்கள் செய்யாத ஒன்றை நாங்கள் செய்தோம். அதாவது (ஹோம் டெலிவரி) எங்களுக்கு அழைத்தால் அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து தரும் முறையை நடைமுறைப்படுத்தி வருகிறோம்.

வீட்டில் சென்று தர குறைந்தது வேளச்சேரியிலுள்ள எங்கள் கடையிலிருந்து 5 கி.மீ. சுற்றளவு இருக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் குறைந்தது 5 இளநீரையாவது பெற்றால்தான் இதற்கு சம்மதிப்போம். 5 கி.மீ. அதிக தூரத்தில் இருந்து அழைத்தால் கி.மீ. க்கு 20 ரூபாய் பெற்றுக்கொள்வோம்.

ilaneer -5

கேள்வி: உங்களின் தொழிலில் உள்ள சிக்கல் சிரமங்கள் என்ன?

பதில்: முதலில் தாம்பரம் கிழக்கு சாலை ஓரம் போட்டதே ஒரு சிக்கல்தான். காவலர்கள் வந்து இலவசமாக இளநீர் குடிப்பர். தேவைப்பட்டால் சிறு வழக்கு போட்டு சில நேரம் சிறைக்கே இழுத்துச் செல்வர். சில நேரங்களில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் வந்து மிரட்டி கடைகளை எடு என்பர். ஆனால் இதுவரை எவருக்கும் லஞ்சம் கொடுத்ததே இல்லை. மேலும் நாங்கள் 2 நாளுக்கு ஒரு முறை வாங்கும் 500 -700 இளநீர்கள் முழுவதும் நல்ல இளநீர்களாய் இருப்பது சந்தேகமே. எப்படியும் 10 முதல் 15 இளநீர்கள் நீர் இல்லாத தேரைக் காய்களாக இருக்கும். அது எங்களுக்கு இழப்பான விரயமே.

கேள்வி: இந்த இளநீர் கடையில் உங்களின் மாத வருமானம் என்ன?

பதில்: ஒரு நாளைக்கு 100 அல்லது 200 விற்கும். அதனால் எங்களுக்கு சராசரியாக ஒரு நாளைக்கு எங்களுக்கு 5000 ரூபாய் வரை கிடைக்கும். மாதத்திற்கு 150000 ரூபாய் வரை சம்பாதிக்கிறோம் என்றாலும் 80 ஆயிரம் ரூபாய் மதலீடு போக 70 ஆயிரம் ரூபாய் மாதம் ஒன்றுக்கு கிடைக்கும். அதனால்தான் BPO வில் வேலை பார்த்த நானே அந்த வேலையை விட்டுவிட்டு இந்த வேலைக்கு வந்துவிட்டேன். ஏனென்றால் இன்றைய சூழலில் நாம் என்ன படித்தோம் என்ன சம்பாதிக்கிறோம் என்பதைத் தான் நம்மைச் சுற்றி இருக்கும் சமூகம் கவனிக்கிறது.

கேள்வி: இந்த இளநீர் தொழிலில் அடுத்தகட்டமாக என்ன செய்யப்போகிறீர்கள்?

பதில்: இந்த இளநீர் கடையை பிரபல மால்களில் நிறுவ அங்கு பழச்சாறுக்கடை போல் துவங்க வேண்டும். இதில் ஆப்பிள், சப்போட்டா, மாதுளை, எலுமிச்சை போன்ற சாறுகளில் நீர்பால் போன்ற பொருட்களுக்குப் பதிலாக இந்த இளநீரை சேர்த்தால் இன்னும் சுவையாக இருப்பதோடு மட்டுமல்லாது உடலுக்கு மிகவும் ஆரோக்கியம் தரும். இதுவே எனது அடுத்த கட்ட முயற்சியாகும்.

குறிப்பு:   இதுவரை நமக்கு நேர்காணல் அளித்த ஜெகநாதன் என்பவரின் ஸ்ரீ சாய் இளநீர் கடையானது வேளச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து தாம்பரம் கிழக்கு செல்லும் சாலையின் இடது புறத்தில் உள்ள ஆக்சிஸ் வங்கியின் முன்பு உள்ளது. இவரது அலைபேசி எண்: 97910 30327 ஃ 95974 04550


சித்திர சேனன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “குளிர்பானங்களுக்கு போட்டியாக கோடையை தணிக்கும் இளநீர் கடை”

அதிகம் படித்தது