மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

குழந்தைகளை வளர்க்க கற்றுக் கொள்வோம்

சித்திர சேனன்

Jul 18, 2015

kulandhai4முன்பெல்லாம் குழந்தைகளின் பிறப்பு “முட்டுவீடு” எனக் கூறக்கூடிய கூரை வீட்டில், ஒரு பாட்டியின் தலைமையில் நடக்கும். அன்று குழந்தைகளுக்கு தாய்ப்பால் தவிர வேறு பால் எதுவும் கொடுத்ததில்லை நம் தாய்மார்கள். அவ்வளவு ஏன் 5 முதல் 8 வயது வரை தாய்ப்பால் குடித்து வளர்ந்த, வளர்த்தவர்களைப் பார்த்திருக்கிறேன்.

அன்று குழந்தைகளை எவரும் பொத்திப் பொத்தி பார்த்துக் கொண்டது இல்லை. குழந்தைகளின் விருப்பம் போல் வீதியில் விட்டு விடுவார்கள். அவர்களாகவே சாப்பிடுவார்கள், அவர்களாகவே கிளம்பி பள்ளிக்கூடம் செல்வார்கள். மாலையானதும் பற்பல தமிழர் விளையாட்டுக்களை பல குழந்தைகளுடன் குறிப்பாக ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல் விளையாடி மகிழ்வர். இரவானதும் தெருவிளக்கில் கூட்டாக அமர்ந்து படிப்பார்கள். என்ன… வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும், ஞாயிற்றுக்கிழமை மாலை ஒரு படமும் பார்ப்பார்கள்.

thamil vazhi6பாட்டிமார்கள் பேரக்குழந்தைகளுக்கு பல்வேறு நன்னெறி கதைகளும், விடுகதைகளும், பழமொழிகளும், குழந்தைப் பாடல்களும் கற்றுக்கொடுத்து குதூகலப்படுத்துவார்கள். குழந்தைகள் பெற்றோர், ஆசிரியர்களுக்கு பயம் கலந்த மரியாதை செய்வர். ஆதலால் அன்றைய குழந்தைகள் கற்பனை வளம் மிக்கவர்களாகவும், சுயமாக சிந்திப்பவர்களாகவும், எவர் உதவியையும் எதிர் பாராதவர்களாகவும், வளர்ந்து வீட்டிற்கும், சமூகத்திற்கும் அடங்கி நடந்தனர்.

அதற்கு மாறாக இன்று 8வது மாதத்திலேயே, அதாவது குழந்தை பிறப்பதற்கு 2 மாதங்களுக்கு முன்பே மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்கள் இருக்கை பிடித்துப் படுத்துக்கொள்கின்றனர். தாய்ப்பால் இல்லாமல் நான்(NON) – 1,2,3,4,5 வயது வரை கொடுக்கின்றனர். வீதியில் விளையாட விடுவதில்லை. விடுமுறை விட்டாலும் எங்கும் அழைத்துச் செல்வதில்லை, தொலைக்காட்சி, வானொலி, திரைப்படம் எதுவும் பார்க்க விடுவதில்லை. ஆற அமர அமர்ந்து அவர்களோடு மனம் விட்டுப் பேசுவதில்லை.

kulandhai3விபரம் தெரியாமல் எதற்கும் கேள்வி கேட்கும் குழந்தையிடம் முறையாக பதில் சொல்வதில்லை. விடுகதை, பழமொழி, குழந்தைப்பாட்டு, கதை என எதுவும் கூறுவதில்லை. பிறரோடு பழக விடுவதில்லை. குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள ஆயாக்களை தாயார் செய்துவிட்டுச் செல்வது என இன்று மிகவே மாறி விட்டது. இதனால் பாதிப்பு பெற்றோர்களுக்கல்ல அவர்களின் குழந்தைகளுக்கே. எனவே குழந்தைகளிடம் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக்கூடாது என்ற விடயங்களை இன்றைய பெற்றோர்களும், மற்றோர்களும் தெரிந்து கொள்வது அவசியமாகிறது.

பெற்றோர்கள் கவனத்திற்கு:

kulandhai2

 • பெண் குழந்தைகளை அணைத்து வளர்க்க வேண்டும், ஆண் குழந்தைகளை அடித்து வளர்க்க வேண்டும்.
 • குழந்தைகள் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்து பழக்கிவிடக்கூடாது. குடும்பத்தின் பொரளாதார சிக்கலை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
 • கணவன் – மனைவி, குழந்தைகள் முன்பு சண்டை போடவோ, கெட்ட வார்த்தையால் திட்டிக் கொள்ளவோ கூடாது. நாளை இதே வார்த்தைகளை குழந்தைகளும் பேசும்.
 • பெற்றோர்கள் ஆபாசமாக குழந்தைகளிடம் நடக்கக்கூடாது.
 • குழந்தைகள் கேட்கும் சாதாரணக் கேள்வியைக் கூட மதித்து, அதற்கு பதில் அளிக்க வேண்டும். ச்சி போ.. எப்பப்பாரு தொணதொணவென்று, என்று நீங்கள் குழந்தையின் வாயை அடைத்தால் நாளை எச்சந்தேகமானாலும் தம் வாழ்வில் எது நடந்தாலும் அவை உங்களிடம் சொல்லாமலே போகலாம்.
 • நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் எதுவென்று குழந்தைகளுக்குக் கூற வேண்டும்.
 • குழந்தைகள் சிரித்தால் அவர்களோடு சிரியுங்கள். அழுதால் ஆறுதல் கூறுவதோடு ஏன் அழுகிறாய்? என்ற காரணத்தைக் கேளுங்கள். மாறாக திட்டுவதோ அடிப்பதோ செய்யாதீர்கள்.
 • நன்றாக எழுதினாலோ, ஓவியம் வரைந்தாலோ, கடைக்குச் சென்றாலோ, சைக்கிள் ஓட்டினாலோ, பாடினாலோ, நடித்தாலோ, நடனம் ஆடினாலோ இப்படி எது செய்தாலும் தவறாமல் பாராட்டுங்கள். அவை உங்கள் குழந்தைகளின் திறனை மேலும் வளர்க்கும்.
 • கூடப் படிப்பவர்களோடும், தன் தெருக்குழந்தைகளோடும் உங்கள் குழந்தைகளை ஒப்பிட்டு நீ சரியில்லை, அவனைப் பார் எனக் கூறாதீர்கள். ஏனென்றால் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஒவ்வொரு திறன் இருக்கும். முதல் மதிப்பெண் எடுப்பவனைப் போலவேவா எல்லா குழந்தைகளும் இருக்கும்? என புரிந்து கொள்ளுங்கள். மீறி பிறரோடு ஒப்பிட்டு பேசினால் உங்கள் குழந்தையின் மனதில், ஏக்கம், ஆற்றாமை, வெறுப்பு, கோபம், தாழ்வு மனப்பான்மை வருமே தவிர வேறு எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை.
 • குழந்தைகள் தோல்வியைச் சந்திக்கும் போது, “உன்னால் முடியாதது வேறு எவராலும் முடியாது” என்பது போன்ற ஊக்க வார்த்தைகளை உதிர்க்கப் பழகுங்கள்.
 • முடிந்த அளவு உங்கள் குழந்தைகளை அவர்கள் போக்கில் வளர விடுவது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். இதற்கு மாறாக அதைச் செய்யாதே என தடைபோடும் போது, இதைச் செய்தால் என்ன? என்ற முனைப்பு அவர்களுக்குள் தோன்றும்.
 • 2 (அ) 3 வயதிற்கு மேல் உள்ள குழந்தைகள் முன்பு உடை மாற்றிக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
 • சிறு வயது பெண் குழந்தைகளிடம் இது உன் தாய்மாமன், கட்டிக்கப்போறவன், என்று ஒருவரை அடையாளம் காட்டி பேசுவதைத் தவிருங்கள். பின்னாளில் இக்குழந்தை வளர்ந்து வரும் சூழலில் வேறு விளைவுகளை ஏற்படுத்தும்.
 • குழந்தைகள் விளையாடப் போகும் போதும் உங்களின் பார்வை அவர்கள் மீது இருக்கட்டும். ஏனென்றால் அவர்களை அறியாமலேயே பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக நேரிடலாம்.
 • வளரும் பருவத்திலேயே பாலியல் சம்பந்மாக நல்மதிப்பீடுகளை பக்குவமாக எடுத்துக் கூறுங்கள்.
 • குழந்தைகள் கேட்டபின் வாங்கிக் கொடுப்பதை விடுத்து, அவர்களின் தேவை என்ன என்பதை நீங்களாகவே அறிந்து வாங்கிக் கொடுங்கள்.
 • எவை எல்லாம் நல்ல பழக்கம், எவை தீயபழக்கம் என்ற வேறுபாட்டை கூறி புரிய வையுங்கள்.
 • குழந்தைகளை அச்சுறுத்தக்கூடிய அல்லது அவர்களின் மனநிலை பாதிக்கக் கூடியவற்றை முற்றாகத் தவிர்க்கவும்.
 • இரவு நேரங்களில் இனிமையான, சுய முன்னேற்றக் கதைகளைக் கூறி உற்சாகப்படுத்துங்கள். அவை இனிமையான கனவுகளைக் கொண்டு வரும் உங்கள் குழந்தைகளுக்கு, குறிப்பாக இரவில் பேய்க்கதை கூறுவதை தவிர்த்து விடுங்கள்.

ஆசிரியர்கள் கவனத்திற்கு:aarambappalli5

 • நன்மை செய்தால் மற்ற மாணவர்கள் முன்பு பாராட்டுங்கள். தீமை செய்தால் தனியே அழைத்து அன்பாகக் கூறுங்கள்.
 • பிறர் மாணவரோடு ஒப்பிட்டு அவன் தரத்தை குறைக்காதீர்கள். அவனே இவ்வளவு மதிப்பெண் பெறும் போது உன்னால் முடியாதா என ஊக்கப்படுத்துங்கள்.
 • கோபம் கொள்ளாமல், அடிக்காமல் அன்பால் பேசி பாடம் நடத்துங்கள். பிறகென்ன நீங்கள் பெற்றெடுத்த தாயாய் தெரிவீர்கள் ஒவ்வொரு குழந்தைக்கும்.
 • குழந்தைகள் முகம் சுழிக்கும் அளவிற்கும், அங்கம் தெரியும் அளவிற்கும் உடை உடுத்தாதீர்கள்.
 • படிப்பு, தேர்வு, முதல் மதிப்பெண் எனக் கூறி கூறி குழந்தைகளை பயமுறுத்தாமல் திருப்புதல் தேர்வுபோல் எளிமையாய் முழு ஆண்டுத் தேர்வை எதிர்கொள்ளுங்கள் என ஊக்கப்படுத்துங்கள்.
 • வகுப்பில் சிறு விடயத்திற்குக் கூட பெரிதாகப் பாராட்டுங்கள். ஏனென்றால் அவர்களின் மனது உங்களின் பாராட்டுக்காய் ஏங்கிக்கிடக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்.

ஆதலால் பெற்றோர்களே! ஆசிரியர்களே!… இவை எல்லாம் மனதில் வைத்து நடக்கப் பழகுங்கள். இவை எல்லாம் எங்களுக்கு எடுத்துக் கூறுகிறாயே, நீ இப்படி இருக்கிறாயா? என்றால், நானும் இப்படி இருந்த பின் தான் கூறுகிறேன் என்பதே என் பதில். காரணம் அடிப்படையில் நான் ஒரு தமிழாசிரியர், இரண்டு பெண் குழந்தைகளுக்கு அப்பா. இப்போது கூறுங்கள் நான் கூறுவது தப்பா…..?


சித்திர சேனன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “குழந்தைகளை வளர்க்க கற்றுக் கொள்வோம்”

அதிகம் படித்தது