குழம்பிய குட்டை (கவிதை)
ராஜ் குணநாயகம்Mar 12, 2022
இங்கே
எல்லாம் குழம்பிப்போய்க்கிடக்கிறது.
குழம்பிய குட்டைக்குள்
உறு மீன்களை
பிடித்து ஏப்பமிட காத்திருக்கும்
வல்லூறுகளாய்
இனவாதிகளும்,
மதவெறியர்களும்,
போலித்தலைவர்களும்,
பணமுதலைகளும்
வல்லரசுகளும்.
அரசியலுக்குள் மதம்
மதத்துக்குள்ளும் அரசியல்.
எங்கும் எதிலும்
குறுக்கிடும்
அரசியலும் மதமும்.
மக்களும் அவ்வழியே;
இனம் என்றும்
மொழி என்றும்
மதம் என்றும்
சாதி என்றும்
ஒருவரையொருவர் கொன்று
நாட்டை சுடுகாடாக்கி
பிணங்களின் மேலே வெற்றிக்கொடிகட்டும்
ஆர்ப்பரிப்போடு.
சட்டவாட்சியை
காட்டாட்சி பிரதியீடு செய்கிறது
அதுவே “சனநாயக ஆட்சியாம்”
வெட்கமின்றி
உலகமெங்கும் தம்பட்டமடிக்கிறது.
உயர் நீதிமன்ற தீர்ப்பையும்
கேள்விக்குள்ளாக்கும்
நிறைவேற்றதிகாரம்;
தூக்குத்தண்டனைக்கைதிக்கு விடுதலை
ஆதாரங்களே இல்லாமல்
வெறும் சந்தேகத்தின்பேரில்
பல தசாப்தங்களாய்
தண்டனை அனுபவித்துவரும்
அப்பாவிகள் பலர்
“பயங்கரவாத தடைச்சட்டம்” எனும் பெயரில்.
நிர்வாகம்,
நீதித்துறைக்குள்ளும்
நீளும்
பாராளுமன்றத்தின் அழுக்கு நிறைந்த
கைகளும்
நிறைவேற்றதிகாரத்தின்
கொடுங்கோலும்.
இங்கே
எல்லாமே குழம்பிப்போய்க்கிடக்கிறது.
இந்த நாடு
எப்படி உருப்படும்?
இந்த நாட்டுக்கு
எப்படி விமோசனம் கிடைக்கும்?
ஈழன்
ராஜ் குணநாயகம்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “குழம்பிய குட்டை (கவிதை)”