சனவரி 22, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

கோவையும் கொரோனா தேவியும்

இராமியா

May 29, 2021

siragu covaiyum corona deviyum1

என் நண்பர் ஒருவர் அரசு அலுவலக முறைப்படி சென்னையில் இருந்து 1950களின் தொடக்கத்தில் கோயம்புத்தூருக்கு மாற்றம் ஆகிச் சென்றார். அது பெரியாரின் மூட நம்பிக்கை ஒழிப்பு மற்றும் பகுத்தறிவுப் பிரச்சாரம் முழு வீச்சில் நடந்து கொண்டு இருந்த நேரம். அந்த நண்பர் பெரியாரின் பிரச்சாரத்தின் பால் ஈடுபாடு கொண்டவர். அக்காலத்தில் வேலை நேரம் போக மிகுந்த நேரத்தை விருப்பம் போல் செலவு செய்ய வாய்ப்புகள் மண்டிக் கிடக்கும். அவர் ஊர் சுற்றுவதில் ஆர்வம் கொண்டவர். அப்படி ஓய்வு நேரத்தில் ஊர் சுற்றும் போது கோயம்புத்தூர் புறநகர்ப் பகுதியில் ஒரு சாமியார் இருந்திருக்கிறார்.

அவர் தினமும் காலையில் அங்கு ஒரு கிணற்றுக்கு வருவாராம்; இடுப்பில் ஒரு வெள்ளைத் துண்டு கட்டிக் கொண்டும், கையில் ஒரு வேட்டி, ஒரு காலி வாளி, ஒரு காலிச் செம்பு ஆகியவற்றை வைத்துக் கொண்டும் இருப்பாராம். அவற்றுடன் கிணற்றில் இறங்கிக் குளித்து விட்டு மேலே வருவாராம். அப்படி வரும் போது கிணற்றுக்குள் இறங்கும் போது கொண்டு சென்ற காலிச் செம்பு நிறைய பால் இருக்குமாம். அந்தப் பாலை அங்கு வரும் பக்தர்களுக்குப் புனிதமான தீர்த்தமாக வழங்குவாராம். கிணற்றில் இருந்து பால் கொண்டு வரும் “அபூர்வ சக்தி” கொண்ட சாமியாரின் புகழ் நகரம் முழுவதும் பரவி, தினமும் அவரிடம் இருந்து அந்த “அபூர்வ” தீர்த்தத்தைப் பெறுவதற்கு வரும் கூட்டம் பெருகி விட்டதாம்.

இது எப்படி சாத்தியம்? மண்டையைக் குடைந்து கொண்டு சிந்தித்த என் நண்பருக்கும் அவரது நண்பர்களுக்கும் விளங்கவே இல்லையாம். பின் சில காலம் அச் சாமியாரை அவர் அறியாமல் வேவு பார்த்தார்களாம். ஒரு சில மாதங்கள் கழித்து உண்மை தெரிந்து விட்டது. அவர் கையில் கொண்டு போகும் வேட்டியின் ஒரு பகுதியில் முன் தினம் சுண்டும் வரை கொதிக்க வைத்த பாலை ஊற்றிக் காய வைத்து விடுவார். அவ்வாறு காய்ந்த பால் உள்ள வேட்டியை கிணற்றுக்குள் தண்ணீரில் நனைத்து செம்பில் பிழிந்து மேலே கொண்டு வந்து “தீர்த்தமாக” மக்களுக்கு வழங்கி இருக்கிறார்.

உண்மையை அறிந்து கொண்ட என் நண்பரும் அவரது குழுவினரும் ஒரு நாள் அங்கு சென்று சாமியார் கிணற்றில் இறங்குவதற்கு முன் மிகவும் “அடக்கத்துடன்” அவர் கையில் வைத்து இருந்த வேட்டிக்குப் பதிலாகத் தாங்கள் கொண்டு வந்து இருக்கும் புத்தம் புதிய வேட்டியுடன் கிணற்றில் இறங்குமாறு கேட்டு இருக்கின்றனர். முதலில் கோபாவேசமான சாமியார், நண்பருடன் இருந்த பெரும் கூட்டத்தைப் பார்த்த உடன் அவ்விடத்தை விட்டு ஓடி விட்டாராம். ஆனால் அவர்கள் அச் சாமியாரிடம் இருந்த பால் உலர்ந்த வேட்டியைப் பறித்துக் கொண்டு விட்டனர்.

சாமியார் ஓடி விட்ட பிறகு என் நணபர் குழுவினர் மக்களிடம் சாமியாரின் “மந்திர ஆற்றலை” விளக்கி இருக்கின்றனர். தங்களை ஏமாற்றிய சாமியாரை அனைவரும் திட்டிக் கொண்டே கலைந்து விட்டார்களாம்

பின் சுமார் ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் அதே சாமியார் அதே கிணற்றில் இறங்கி அதே அற்புத வேயைச் செய்து கொண்டு இருந்தாராம். முன்பு அளவு கூட்டம் அலை மோதா விட்டாலும் கணிசமான அளவிலேயே கூட்டம் இருந்ததாம். என் நண்பர் குழுவினர் திகைத்துப் போனார்களாம். தங்கள் முயற்சி முழுமையான வெற்றி பெறாவிட்டாலும் அங்கே கூட்டம் குறைந்து இருப்பது அவர்களுக்கு ஒரு சிறு ஆறுதலைத் தந்தது என்றும் அந்த மூட நம்பிக்கை அறிவியல் துறையில் தமிழ் நாடு வளர்ச்சி அடைவதைத் தடுக்க முடியவில்லை என்பதையும் பார்த்து மன நிறைவு அடைவதாகவும் தன்னுடைய பகுத்தறிவுப் பிரச்சாரத்தைப் பற்றிய நினைவலைகளைப் பகிர்ந்து கொள்ளும் போது கூறுவார்.

அதே கோயம்புத்தூர் நகரில் இப்பொழுது கொரோனா தேவிக்குச் சிலை வைத்து இருக்கிறார்கள். என் நண்பரின் அனுபவம் போல், கொரோனா தேவிக்குச் சிலை வைத்தவர்களையும் மீறி, கொரோனா எதிர்ப்புப் போரில் நாம் முழுமையான வெற்றி பெறுவோம்.

இராமியா


இராமியா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கோவையும் கொரோனா தேவியும்”

அதிகம் படித்தது