ஆகஸ்டு 8, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

கைத்தறி ஆடை! (கவிதை)

இல. பிரகாசம்

Dec 9, 2017

siragu kaiththari1

உழைக்கும் பாமரர் அவர்கைகள்
உழைத்து இழைத்த நூலே
நம்மானங் காக்கும் உடையாம்!
நூலிழை யோடவர் கைத்திறம்
நுணங்கிய வேலையே சித்திரமாம்!
அணிய அணியபே ரானந்தம்!

பாடுபட் டுழைக்கும் பாமரர்
வாழ்வினை மானத்தால் காக்கும்
உடையின் தேர்ந்த சிற்பி!
அவர்கை பட்டதாலே பட்டாடை
பளிச்சென புன்னகை புரிகிறது! –சிற்பி
அவர்முகமோ வாட்டமு றுகிறதேன்?

காரண மென்ன பகட்டான
கந்தை யுடுத்தும் பழக்கமே! –அவர்
கைதரும் மென்மையை முடுக்கியோடும்
இயந்திரந்தான் சுகத்தைத் தந்திடுமோ?
கைத்தறி யாடைபோ லொராடையோ?
இல்லையென தேசியங்கள் கூறினவே!

நெசவுத் தொழிலொன்றே மானத்தின்
நிரந்தர சொற்பெய ராகும்!
நலிவுறு நிலையி னின்று – மீட்பதும்
நலந்தேற்று வதும்நம் கடமையே!
நல்லதொரு ஆடையெனில் நெசவு
நூலிழைத்த கைதறி யாடையே!

கைத்தறி யாடைதனை உடுத்தியே
காந்தி எனும்தேசத் தந்தை
சுதந்திரம் எனும்மானம் தந்ததார்! –எளியவர்
தென்னாட்டு தேசத் தந்தையாம்
காமராச ரென்னும் கர்மவீரர்
அணிந்ததும் கைத்தறி யாடையே!

நெசவுத் தொழிலால் நம்தேசம்
நிமிர்கின்ற தென்று பொருள்!
நெசவுத் தொழிலாளர் வளர்வதாலே –நம்
நெஞ்சில்சுய மரியாதை ஓங்கும்!
கைத்தறி ஓடஓட நம்முடைய
கனவுகள் எல்லாம் நிறைவேறும்!


இல. பிரகாசம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கைத்தறி ஆடை! (கவிதை)”

அதிகம் படித்தது