செப்டம்பர் 19, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

கைபர் காண்வாய் சிரிக்கின்றது… (கவிதை)

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Dec 21, 2019

siragu kaibar1

 

உண்ணும் உணவின்

உறைப்பும் உப்பும்

சுவைக்காது,

கருநீலக் கண்கள்

வெளிறியிருக்கும்

தூங்குவது போன்றது

சாக்காடு பின் தூங்கி

விழிப்பது நம் பிறப்பு,

என்பதில் தூக்கம் கலையா

சாக்காடே மேலென விழித்திருக்கும்

கண்கள் உண்மை உரைக்கும்,

பிறந்த குழந்தை பெற்றவளுக்கு

சுமையாகும்,

உடை பற்றி அலட்டிக்கொள்ள

நேரமில்லை,

உடல் காயமற்று தப்பிக்க மட்டுமே

உயிர் கெஞ்சும்,

ஊன்றி வரும் தடியும்

பிடுங்கப்படலாம்,

பாலுக்கு அழும் குழந்தையின்

பல் உடைக்கப்படலாம்,

நேற்று பூப்பெய்திய மகளின்

வயிற்று வலி பொருட்டல்ல

அவளுக்கு வன்புணர்வு நிகழக்

கூடாது என்ற எண்ணமே

உணவாகும்,

பஞ்சம் பிழைக்க வந்தவர்கள்

மண்ணின் மக்கள்

சிறுபான்மையினர்

எனும் அடையாளங்களில்

உண்மையில்லை,

மனிதன் எனும் அடையாளத்தை

பார்க்க தவறும் அதிகாரத்தின்

கண்களை பிடுங்கிப்போட

தலைவனுக்காக காத்திருக்கும்

சமூகத்திற்கு விடியாது…

விடியலை கதிரவன் வரவு

அறிவிக்கும்,

கதிரவன் ஆதிக்கபுரியை

கேட்டுக்கொண்டு

உதிப்பதில்லை,

இருளும் சனாதனிகளின்

காலடியில் நிலவை ஒளிப்பதில்லை,

நிலவின் வெளிச்சம் கரு வானத்தில்

பரவ அந்தி சாயும் நேரம்

வரை காத்திருக்கவும்…

அந்திக் காலம் பலரின்

அந்திமக் காலமாகலாம்..

அந்திமக் காலங்களில்

சங்கொலி எழுப்பப்படும்

துயரத்திற்கான சங்கொலி அல்ல,

கருட வருகைக்காகவும் அல்ல

கருடன்களின் வதம் நிகழ்வதற்காக…!

நீதிகளைக் கூட

கனிய வைக்க வேண்டும்!

கனிகள் தானாய் பல நேரங்களில்

கனிவதில்லை…

ஏனெனில் அவர்கள் அகதிகளாம்…

மண்ணில் பிறந்தவர்கள்…??

அவர்கள் அந்நிய மதம் ஏற்றவர்களாம்..

பௌத்தமும் சமணமும்

ஒழித்த வைதீகம்

வரலாறு எழுதுகிறது

அவர்கள் அந்நியர்கள் என்று..

கைபர் காண்வாய் சிரிக்கின்றது

கைகட்டி அடிமையாக நிற்கும்

வரலாறைப் பார்த்து !!


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கைபர் காண்வாய் சிரிக்கின்றது… (கவிதை)”

அதிகம் படித்தது