மே 21, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

கொஞ்சம் அரசியல், கொஞ்சம் நாட்டுநிலை

பேராசிரியர். க.பூரணச்சந்திரன்

Mar 28, 2015

konjam arasiyal2“எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்” என்பது ஒரு கவிஞனின் கனவு. இதில் உலகத்தில் எல்லாரும் நன்றாக இருக்கவேண்டும் என்பதைத் தவிர வேறு என்ன கெடுதல் இருக்கிறது? ஆனால் இந்தக் கொள்கையே தவறு என்பவர்கள் உலகத்தில் நம்மிடையே இருக்கிறார்கள். தங்கள் “சொந்த”(!) ஆற்றல், உழைப்பு போன்றவற்றால் “தாங்கள்” “உண்டாக்கும்” செல்வத்தை முட்டாள்கள், சோம்பேறிகள், ஏதிலிகள், சிக்கனமற்றவர்களுடன் ஏன் பகிர்ந்து கொள்ளவேண்டும்? மக்களில் பெரும்பகுதியினர் ஏழைகளாக இருந்தால், இருந்துவிட்டுப் போகட்டுமே, ஒன்றுமில்லாமல் செத்துப் போகின்றவர்கள் போகட்டுமே, எல்லாம் அவன்(?) விதி என்று சொல்பவர்கள் உலகில் எத்தனை எத்தனை பேர்?

அண்மையில் சில மாணவர்கள் (இவர்கள் யாவரும் இப்போது பேராசிரியர்களாகவோ வேறு துறைகளிலோ பணியிலிருப்பவர்கள்) என்னிடம், “ஐயா, சோஷலிசம் என்கிறார்கள், கம்யூனிசம் என்கிறார்கள், இவையிரண்டும் ஒன்றா அல்லது வெவ்வேறா?” என்று கேட்டார்கள். பலருக்கும் இவ்விதச் சந்தேகங்கள் இருக்கின்றன. ஆகவே அதைப்பற்றிக் கொஞ்சம் பேசலாம். இன்றைக்கு சோஷலிசமும் கம்யூனிசமும் காணாமற் போய்விட்டன என்றும், அதனால் அவற்றைப் பற்றி எதற்குப் பேசுவது என்றும் சிலர் நினைக்கலாம்.

ஆனால் முதலாளித்துவ ஒடுக்குமுறை அதிகமாக அதிகமாகத் தான் கம்யூனிசம் வலுப்படும்; வலுப்படுகிறது. மேலும், ஒடுக்கப்படுபவர்களும் சுரண்டப்படுபவர்களும் ஏழைகளும் உலகில் இருக்கும்வரையில் பொதுவுடைமைக் கோட்பாட்டின் அவசியம் இருந்தே தீரும் என்பது விதி. என்றைக்குமே வாய்திறக்காத வாயில்லாப் பூச்சிகளாகிய, அல்லது தங்களையும் முதலாளிகள் அல்லது குட்டிமுதலாளிகள் என்றே நினைத்துக் கொண்டிருக்கும் கணினித் துறை, மென்பொருள்துறை அலுவலர்கள்கூட சங்கம் (யூனியன்) வைப்பதாக அண்மையில் ஒரு செய்தியைப் படித்தேன். நாற்பது வயதாகி விட்டால் “உன்னால் பயனில்லை, போ” என்று பெரிய நிறுவனங்களின் பணியிலிருந்துகூட பல்லாயிரக் கணக்கில் அவர்கள் வெளியேற்றப்படும்போது பாவம், அவர்கள் வேறு என்னதான் செய்யமுடியும்? இத்தனைக்கும் சங்கம் வைப்பது என்பது அவர்கள் பார்வையில் மிக இழிவான செயல். கம்யூனிசம் என்ற உதவாத கோட்பாட்டில் நம்பிக்கைவைத்த ஆக்கம் கெட்ட கூகைகளின் செயல்.

சோஷலிசம் என்பதைத்தான் தமிழில் சமதர்மம் என்கிறோம். கம்யூனிசத்தைப் பொதுவுடைமை என்கிறோம். பொதுவுடைமைக் கோட்பாடு தோன்றுவதற்கு முன்னாலேயே பலவிதமான சோஷலிசங்கள் ஐரோப்பிய நாடுகளில்-இங்கிலாந்து உட்பட இருந்தன. அவை மனித சமுதாயத்திற்கு நல்லது செய்பவை என்று ஏற்றுக் கொள்ளப்பட்டும் இருந்தன. அவை பற்றிய விமரிசனங்களும் இருந்தன. எனவே பொதுவுடைமையைவிட சோஷலிசம் மூத்தது.

இன்றுவரை சோஷலிசம், கம்யூனிசம் என்ற பெயர்களே எவர் வாயிலிருந்தும் உதிர்ந்துவிடக்கூடாது, எந்தப் புத்தகத்திலும்கூட வெளிவரக்கூடாது என்று பயந்து நடுங்கிக் கண்காணிக்கும் ஒரே தேசம் அமெரிக்க ஐக்கியநாடுதான். அவர்கள் தான் கருத்துச்சுதந்திரம் பற்றியும், ஏதோ அது தங்கள் நாட்டில் மட்டுமே இருப்பது போலவும் கதையளப்பவர்கள். ஜியார்ஜ் ஆர்வெல், விலங்குப் பண்ணை என்ற தமது நூலில் “எல்லாரும் சமம், ஆனால் சிலர் மட்டும் கூடுதலாகச் சமம்” (“All are equal, but some are more equal”) என்று பொதுவுடைமைக் கோட்பாட்டைக் கிண்டலடிப்பார். அவர் பாணியிலேயே நாமும் சொல்லலாம்: “எல்லாரும் எதையும் அமெரிக்காவில் பேசலாம், ஆனால் இதை(பொதுவுடைமையை)ப் பற்றி மட்டும் எதிர்த்துத்தான் பேசவேண்டும்.”

சரி, முதல் பத்தியில் கேட்கப்பட்ட கேள்வியின் விடைக்கு வருகிறேன். யார் பெயரையும், நூல் பகுதிகளையும் உதிர்க்காமல், கூடியவரை என் சொந்தச் சொற்களில் விடைதர முயற்சி செய்கிறேன்.

சமூகத்தைப் பற்றி எவ்வித அக்கறையும் கொள்ளாமல், தனி மனித சுதந்திரம், தனிமனிதச் சிந்தனை, தனிமனித இலட்சியங்கள், தனிமனிதச் சொத்துடைமை போன்றவற்றை வலியுறுத்தும் போக்கினை தனிமனிதத்துவம் (இண்டிவிஜுவலிசம்) என்பார்கள். சமூகத்தில் பங்கேற்கும் மனிதன், தன் சுயநலத் தேவைகளுக்காகவே பங்கேற்கிறான், சமூகத்தின் ஆர்வங்களைப் பற்றிய சிந்தனையின்றித் தன் சுயநலத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் உரிமைகளை மட்டுமே வலியுறுத்துகிறான் என்பது தனிமனிதத்துவம். என்ன? நம் இந்தியத்திரு(ட்டு)நாட்டு, தமிழ்த் ‘திரு’(விட) நாட்டு ஆதிக்கக்காரர்களைப் பற்றிப் பேசுவது போலவே தோன்றுகிறதா? “இத்துடன் தொழில்கள் யாவும் தனியார் உடைமைதான்” என்ற கருத்தையும் சேர்த்துக்கொண்டால் அதற்குப் பெயர் முதலாளித்துவம்.

தனிமனிதத்துவத்திற்கு, முதலாளித்துவத்திற்கு எதிராக, சமூகத்தின் மேலுள்ள அக்கறையினால், அரசின் செயல்பாடுகளின் விரிவை வலியுறுத்துகின்றவர்கள் இருக்கிறார்கள். தொழில்முயற்சிகள் மீது அரசின் கட்டுப்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்று அவர்கள் சொல்கிறார்கள். இப்படிப்பட்டவர் கொள்கைகளின் ஒரு குழுவினைச் சமதர்மம் என்ற சொல் குறிக்கிறது. நிலம் முதற் கொண்டு, உற்பத்திக் கருவிகள் உட்பட, எல்லாத் தொழில்களின் கூட்டு உடைமையையும் அரசின் மேலாண்மையையும் தீவிர சமதர்மவாதிகள் வலியுறுத்துகிறார்கள். சற்றே மிதவாதப்போக்கினைக் கொண்ட சோஷலிஸ்டுகள், தனியார் ஆதிக்கத்தில் பாதுகாப்பாக விடமுடியாத மிக முக்கியமான தொழில்களில் மட்டும் கூட்டு உடைமை அல்லது அரசு உடைமையை வலியுறுத்துகிறார்கள். மேலும் மக்களிடையே இன்னும் இருந்துகொண்டிருக்கின்ற மிக முனைப்பான ஏற்றத்தாழ்வுகளைப் போக்க, அவர்கள் வருமானத்தை ஏறத்தாழச் சமப்படுத்த, பொருத்தமான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளவும் அவர்கள் வேண்டுகிறார்கள். அரசுக் குறுக்கீட்டையும் உடைமையையும் சோஷலிஸ்டுகள் ஆதரிப்பதற்குக் காரணம் என்ன?

பொதுவாக முதலாளித்துவவாதிகள், “உற்பத்தியைப் பெருக்க வேண்டும் உற்பத்தியைப் பெருக்க வேண்டும்” என்ற சூத்திரத்தையே பஜனை செய்துகொண்டிருப்பார்கள். சோஷலிஸ்டுகள் பெரும்பாலும் உற்பத்தியைவிட, சரிசமமான விநியோகத்தின் (பங்கீட்டின்)முக்கியத்துவத்தை (அதாவது, எல்லாருக்கும் எல்லாம் ஏறத்தாழச் சரிசமமாகப் போய்ச் சேரவேண்டும் என்பதை) வலியுறுத்துபவர்கள். இதனைச் சரிவர அரசாங்கம் போன்ற ஓர் அமைப்புதான் செய்யமுடியும் என்பதால் அவர்கள் தனியுடைமையைவிட அரசுடைமையை வேண்டுகிறார்கள்.

இன்றைய பொருளாதார அமைப்பில் உழைப்பாளர்கள், பணியாளர்கள், தொழிலாளர்கள் தங்கள் உழைப்பின் பலனை அடைய வில்லை. இன்னும் கேட்டால், யாருக்காக, எதற்காக, எதை நாம் உற்பத்தி செய்கிறோம் என்பதுகூட இன்றைய தொழிலாளர்களுக்குத் தெரியாது. தனியாதிக்கத்தின்கீழ் உற்பத்திக்கருவிகளை வைத்திருக்கின்ற மிகச்சிலரிடமே அரசின் கட்டுப்பாடும் இருக்கிறது, அதாவது, சுருங்கச் சொன்னால், பெருமுதலாளிகள் அரசாங்கத்தையே தங்கள் கையில் வைத்திருக்கிறார்கள். இன்றைக்குத் தெருவில் செல்வபவர்கள்கூட, டாட்டா, பிர்லா, அம்பானியிடம் தான் அரசாங்கமே இருக்கிறது என்று பேசும் அளவுக்கு இந்த விஷயம் யாவருக்கும் தெரிந்திருக்கிறது.

ulaga porulaadhaaram4இந்தப் பெருமுதலாளிகள் வெகுமக்களைச் சுரண்டுகிறார்கள். உதாரணமாக, இலங்கையில் பாரதி ஏர்டெல் கம்பெனி மற்ற எல்லாரையும் சாப்பிட்டுத், தானே தனியாதிக்கம் கொள்வதற்குப் சிலஆயிரம் கோடிகளைச் செலவழித்தது. (இதில் அரசாங்கத்துக்குச் சென்ற பணத்தின் பெரும்பகுதி தமிழர்களை அழிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டது.) இந்தப் பணம் நம் இந்திய மக்களிடமிருந்து அல்லாமல் வேறு யாரிடமிருந்து வந்தது? இன்னொரு உதாரணம், தொலைக்காட்சியில் நம்மில் பெரும்பாலோர்க்குத் தேவையற்ற பல பொருள்களுக்குப் பலகோடிக்கணக்கான செலவில் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. இந்த விளம்பரங்களுக்கு ஆகும் செலவே பலநூறு கோடிகள் என்றால், மொத்தப் பொருளுக்கான விலை எத்தனை எத்தனை கோடி? இந்த விலைகள், ஒரு ரூபாய்ப் பொருளை நூறு ரூபாய்க்கு விற்கும் முதலாளிகளின் கொள்ளை. யாவரும் அறிந்த மிக நல்ல உதாரணம், கொக்கோ கோலா. இருபது பைசா பெறுமானமுமற்ற (நமக்கு உரிமையான) தண்ணீரில் சில இரசாயனப் பொருளைக் கலந்து இருபது ரூபாய்க்கு விற்பவர்களல்லவா அவர்கள்?

முதலாளித்துவ அமைப்பின்கீழ் எவ்விதக் கட்டுப்பாடுமற்ற போட்டிதான் உச்ச ஆதிக்கம் செலுத்துகிறது, ஒருவரை ஒருவர் சாப்பிட்டுவிடுகின்ற கொலைகாரப் போட்டிகள். இவற்றால் சிறு தொழில் முனைவோர், சிறிய கம்பெனிகள் மிக எளிதாகத் தங்கள் தொழில்களிலிருந்து விரட்டப்பட்டு நசுக்கப்படுகிறார்கள், மேலும் ஒரேவித சேவைகளையும் ஒரேவிதமான தொழில்களையும் ஒரே விதமான உற்பத்திப் பொருள்களையும் (இவற்றால் நம் நாட்டின் பெரும்பாலான ஏழை மக்களுக்கு எவ்விதப் பயனும் கிடையாது) போட்டிக்கெனத் திரும்பத்திரும்பச் செய்கிறார்கள். (சான்று வேண்டுமென்பவர்களுக்கு, நம் தொலைக்காட்சி விளம்பரங்களை ஒரு நாள்முழுதும் பார்க்கும் தண்டனையைத் தரலாம்.) இதனால் நாட்டுவளங்களும் மிகச் செலவுசெய்து வரவழைக்கும் இறக்குமதிப் பொருள்களும் பெருமளவு வீணாகின்றன.

ஆகவே தொழில்துறைகளில் சிலவற்றையோ பலவற்றையோ அல்லது எல்லாவற்றையுமோ ஏன் அரசுமயமாக்கக்கூடாது என்ற கேள்வி எழுகிறது. (ஆனால், அரசுத் துறைகளும் இன்று பெருமளவு தனியார் துறைகள் போலவே இலாபத்திற்காகவே இயங்குகின்றன என்பதில் சந்தேகமே வேண்டாம். உதாரணத்திற்குத் தமிழ்நாட்டின் பஸ் போக்குவரத்துத் துறையைச் சற்றே பார்த்தாலே உண்மை தெரியும். ஆனால், ஒரு வித்தியாசம். தனியார் துறை என்றால் இலாபம் கிடைக்கும். போனஸ், கூலி உயர்வுக்காகத் தொழிலாளர்கள் போராடுவார்கள். அரசுத்துறை என்றால், இலாபமும் கிடைக்காது, அரசாங்கம்தான் எல்லாச் செலவுகளையும் செய்தாக வேண்டும், கடைசியாக நஷ்டத்தில் இயங்குகிறது என்று சொல்லிவிடுவார்கள். இந்தமாதிரி நட(டி)ப்புகள்-உண்மையில் இவை தனிமனிதவாதத்தின் செயல்பாடுகள்தான்- அரசாங்கம் எந்தத் தொழிலையும் ஏற்பது சரியில்லை என்று முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்களைப் பேசவைக்கிறது. இதைப் பற்றி மிக விரிவாகப் பேசவேண்டும்.)

பலநாடுகளில் சிற்சில தொழில்துறைகளில் கூட்டு மேலாண்மை வாயிலாகக் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டதால், நிலைமைகள் உண்மையில் பெருமளவு மேம்பட்டிருக்கின்றன. அப்படியானால் ஏன் அதை எல்லாத் தொழில்களுக்கும் விரிவுபடுத்தக் கூடாது என்பது சமதர்மவாதிகளின் கேள்வி. மிக முக்கியமான விஷயம், தனிச் சொத்துடைமையின்மீது நிலைத்திருக்கும் எந்தத் தனிமனித முனைப்பை விடவும் சமதர்மம், மனிதனின் சமூக இயற்கைக்கும் உடன்பாடானது. மனிதனே ஒரு சமூகப் பிராணிதானே?

konjam arasiyal1இதுவரை பார்த்த சுருக்கமான விஷயம், பரவலாகக் காணப்படுகின்ற எல்லா சோஷலிச இயக்கங்களுக்கும் பொருந்தும் என்று சொல்லலாம். ஆனால் அவற்றிற்குள்ளாகவே குறிப்பிடதக்க கருத்து வேறுபாடுகளும் உள்ளன. ஆனால், சோஷலிசம் கம்யூனிசத்திற்கு முதற்படி என்பது யதார்த்தம். சோஷலிசத்திற்கு எதிராக வைக்கப்படுகின்ற முக்கியமான ஆட்சேபணைகளைப் பின் வருமாறு சொல்லலாம்.

1. சோஷலிசம், அரசின் சாத்தியத்தன்மை அல்லது காரியம் செய்யும் திறன், திறமை ஆகியவற்றை மிகஅதிகமாக மதிப்பிடுகிறது. தனியுடைமைத் தொழில்கள், பலவிதங்களில், இதுவரையிலும் குறைபாடுள்ளனவாக இருக்கின்றன, இனிமேலும் இருக்கும் என்றால், அரசும் ஏன் அதேபோலக் குறையுடையதாக இருக்கலாகாது?

2. சில முக்கியமான தொழில்களில் சில நாடுகளில் அரசு நிர்வாகங்கள் நன்றாகச் செயல்பட்டுள்ளன என்றால், பிறவற்றில் ஊழல், கபடச் செயல்கள், திறனின்மை ஆகியவை மலிந்துள்ளன என்பதும் உண்மை. அரசாங்கம் சிலவகைத் தொழில்களை நன்கு நிர்வகிக்கக்கூடும் என்பதால் அது எல்லாவற்றையும் நிர்வகிக்கும் என்று சொல்லமுடியாது.

3. ஒரு தனியுடைமைத் தொழில் அரசாங்கத்தின் ஆய்வுக்கு உட்பட்டது. அதன் கணக்குகள் தணிக்கை செய்யப்படுகின்றன. ஆனால் அரசுடைமைத் தொழிலில், அரசே சொந்தக்காரராக, மேலளாராக, தணிக்கையாளராக இருக்கிறது. ஒரு குடியரசில் கட்சியமைப்பு நன்கு வளர்ந்ததாக இருந்தால், ‘தணிக்கையாள’ரின் பணி எதிர்க்கட்சிகளால் ஆரோக்கியமாகச் செய்யப்படும். ஆனால் கட்சிஅமைப்பு முறை சீராக இல்லாதபோது, அல்லது நன்கு சீரமைக்கப்பட்ட எதிர்க்கட்சிகள் அற்ற நிலையில், திறனும் முன்னேற்றமும் அழியும்வகையில் அரசாங்கம் சர்வாதிகாரியாக மாறிவிடுகிறது.

4. பொதுத்துறையின் வாயிலாக அரசுடைமையும், தனியார் தொழில்களை தேசிய மயமாக்கலும், சமதர்ம அரசுகளைக் கொண்டிருந்த சில ஐரோப்பிய நாடுகளின் சமதர்வாதிகளுக்கும் உடன்பாடானதல்ல. சான்றாக ஸ்வீடன். ஐரோப்பிய சமதர்மவாதிகளில் பெரும்பாலோர் அரசுடைமையாக்கல் பொருளாதாரத்தை வளப்படுத்திச் சுவர்க்கமாக்குவதில்லை என்பதைக் கண்டிருக்கிறார்கள். அரசுத் தொழில்களிலும் தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைப் பிரச்சினைகள் அதேவிதமாகத்தான் இருக்கின்றன.

5. உற்பத்திக் கருவிகள் தனியார் உடைமையாக இருப்பது ஒழுக்கவியலின்படி தவறானது, பொருளாதார நோக்கில் குறையுள்ளது என்ற தன்னிச்சையான யூகத்திலிருந்து சமதர்மவாதிகள் தொடங்குகிறார்கள். உலகிலேயே மிகவும் பொருளாதார வளம் பெற்ற தேசமாகிய அமெரிக்க ஐக்கிய நாட்டில், உற்பத்திக்கருவிகள் தனியார் உடைமையாகவே உள்ளன.

6. அரசு ஆதிக்கம் செய்யாமல் அல்லது கட்டுப்படுத்தாமல், அல் லது அவர்களின் தொழில்களை உரிமையாக்கிக் கொள்ளாமல் தனிநபர்களோ (முதலாளிகளோ), சங்கங்களோ (கார்ப்பரேட்டுகளோ) நியாயமாக நடந்துகொள்ள மாட்டார்கள் என்று கருதுகின்ற நம்பிக்கையின்மைதான் சமதர்மக்கொள்கையின் மையமான பலவீனம்.

இன்று இந்த விமரிசனங்களுக்கு பதிலே தேவையில்லை என்பதும், உச்சமான பன்னாட்டுக் கொள்ளை முதலாளித்துவம் நிலவும் இக்காலத்தில் இந்த விமரிசனங்கள் அர்த்தமற்றுப் போய்விட்டன என்பதும் மெய்ம்மைகள். சமதர்மத்தைப் பற்றிய மேற்கண்ட விமரிசனங்களால், சுரண்டலை எதிர்த்துப் போராடுவ திலும், உழைக்கும் வர்க்கத்தினரின் நிலைமையை மேம்படுத்து வதிலும், பெருமளவு அரசியல் செயல்பாடுகளின் வாயிலாகவும் தொழிற்சங்க இயக்கங்களின் வாயிலாகவும் சமதர்ம அமைப்புகள் செய்துள்ள மிகத் தகுதிவாய்ந்த, வெற்றிபெற்ற முயற்சிகளை நாம் மறந்துவிடலாகாது. தனியார் தொழில்களை ஒழுங்குபடுத்துவதிலும், அரசு மேற்கொள்ளவேண்டிய கடமைகள்மீது பொருளாதார வாதிகள், சமூகவியலாளர்கள் ஆகியோரின் கவனத்தை ஈர்த்தவர்கள் சோஷலிஸ்டு எழுத்தாளர்கள்தான். சமதர்மச் செயல் முறைகளாலும், அதன் செல்வாக்கினாலும்தான், அரசுக்கட்டுப் பாடற்ற, தன்னிச்சையான வணிகக் கொள்கைகள் மதிப்பிழந்தன.

பொதுவுடைமை:
பொதுவுடைமை என்பது சமதர்மத்தின் மிக தீவிர வடிவத்தைக் குறிக்கிறது என்று சொல்லலாம். மார்க்ஸ், ஏங்கெல்ஸின் படைப்புகளோடு தொடர்பு கொண்ட விஞ்ஞான சோஷலிசம் எழுச்சிபெற்ற ஆரம்ப நிலையில், ஐரோப்பாக் கண்டத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் இந்த இரு கருத்தியல்களுக்கும் இடையில் எவ்வித வேறுபாடும் இல்லை என்றே கருதினார்கள்.

பொதுவுடைமையின் வடிவம் எப்படியிருக்கும் என்பது பற்றி, மார்க்ஸின் மூலதனம் மற்றும் கம்யூனிஸ்டு அறிக்கை போன்ற நூல்கள் ஓரளவு எடுத்துச் சொல்கின்றன. நியாயமாக, இயற்கையின் மூலவளங்கள், உற்பத்திக் கருவிகள் (உற்பத்தியைச் செய்ய உதவக்கூடிய சிறிய கருவிகளிலிருந்து பெருந்தொழிற்சாலைகள் வரை எவையானாலும்) அவற்றைக் கையாளக்கூடிய உழைக்கும் வர்க்கத்தினரிடம்தான் இருக்கவேண்டும். ஆனால் இவற்றைச் சிலபேர் மட்டும் கைப்பற்றிக்கொண்டு பெரும் பணக்காரர்களாகவும் முதலாளிகளாகவும் ஆகிவிட்டநிலையைத்தான் வரலாற்றில் காண்கிறோம். மேலும் இயற்கையின் வளங்கள் எல்லாரிடமும் செல்லாமல் தாங்கள் மட்டுமே அனுபவிக்கவேண்டும் என்ற பேராசையினால், அவர்கள் மற்ற மக்களைச் சுரண்டுகின்ற, ஒடுக்குகின்ற நிலையையும் பார்க்கிறோம். உதாரணமாக, நல்ல விவசாய நிலம், நீர் வசதியோடு விவசாயியின் கையில் இருந்தால் பயிரை உற்பத்திசெய்யத்தான் முனைவான். அதே நிலம் ஏராளமாக ஒரு பெரு முதலாளியின் கையில் குவியும்போது, அவன் அதைத் தரிசாக்கி, பிளாட் போட்டு, தன் இலாபக் கொள் ளைக்காக விற்கவே முனைகிறான்.  தமிழ்நாட்டில் புதிதுபுதிதாக எத்தனை எத்தனை நகர்கள்?

ஆனால் முதலாளிகளின் ஆதிக்கத்தில் அரசாங்கம் இருப்பதால், அவர்கள் தங்கள் கையிலுள்ள எல்லா வழிகளையும் கையாண்டு உழைக்கும் வர்க்கத்தினரின் வெற்றியைத் தடுக்கத் தான் செய்வார்கள். எல்லாவற்றையும் அரசுஉடைமை அல்லது பொதுவுடைமை ஆக்குவதைச் சட்டத்தின் வழியாகவோ அரசியல் செயல்பாட்டின் வாயிலாகவோ செய்ய இயலாது; ஆகவே, முதலாளிகளை ஆதிக்கத்திலிருந்து விலக்கி, முதலாளித்துவ எச்சங்களையும் நீக்கி, உழைக்கும் மக்களின் சர்வாதிகாரத்தை நிறுவ ஒரு புரட்சி எழுந்தாக வேண்டும். இவ்விதப் புரட்சியின் விளைவாக ஏற்படும் அரசுதான் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம்.

இந்த இலக்கை அடைந்த பிறகு ஒரே ஒரு வர்க்கம்தான் இருக்கும்; சமமின்மைகள் இல்லாமல் போகும்; அரசு தானாக ‘உதிர்ந்து போகும்’. இந்த வர்க்கமற்ற, அரசற்ற சமூகம் எப்படி இருக்கும் என்பது பற்றி நமக்கு அதிகமாகத் தெரியாது. பொதுவுடைமைச் சமூகத்தின் விதி என்னவெனில், மக்கள் ‘தங்கள் இயலும் தன்மைக்கேற்ப உழைத்து, தங்கள் தேவைக்கேற்ப எடுத்துக் கொள்வதாக’ இருக்கும்.

ஒரு பொதுவுடைமைச் சமுதாயம் அமைய சோஷலிசமும், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரமும் படிநிலைகள்தான். மக்கள் நலமாக வாழ்கின்ற எல்லாரும் எல்லாமும் பெற்ற நிலையில் அரசுக் கட்டுப்பாடு என்பது தேவையில்லை. இன்றைய நிலையில் நாம் நம்பிக்கை மட்டுமே வைக்கக்கூடிய ஒரு கற்பனையான சமுதாயம்தான் பொதுவுடைமைச் சமுதாயம். ஏனெனில், இன்றுவரை சோஷலிசத்தின் முதற்படியையே-முக்கியத் தொழில்கள் எல்லா வற்றையும் அரசு உடைமையாக்கும் நிலையையே-உலகில் எந்த அரசும் தாண்டவில்லை.

கிறித்துவம் கூறும் தேவனின் சாம்ராஜ்யத்துடன் பொதுவுடைமை நிலையை ஒப்பிட்டு இரண்டுமே கற்பனைகள் என்ற நிலையில் கேலியும் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் கிறித்துவம் கூறும் தேவனின் அரசு முற்றிலும் கற்பனையானது. இந்த உலகில் அடைய இயலாதது. பொதுவுடைமைச் சமுதாயம், மனிதப் பரிணாமத்தில் போகப்போக இயலக் கூடியது, மனிதன் முயன்றால் அடையக்கூடியது என்பது வேறுபாடு.

1917இல் புரட்சி ஏற்பட்டபிறகு உண்மையில் ரஷ்ய சோவியத் சோஷலிஸ்டு அரசிலும் பிறகு சீனாவிலும் விஷயங்கள் வேறு மாதிரியாக நடந்தன. அதற்குக் காரணங்களை ஆராய இது இடமில்லை. பொதுவாக, கொள்கை ஒருபுறம் இருப்பினும், நடை முறையில் சில அனர்த்தங்கள் விளைகின்றன என்பது ஒன்று. இரண்டாவது, ஓர் அரசு அலுவலகத்தில் நியாயமாக நடக்க முயற்சிசெய்யும் ஒருவனை மற்றவர்கள் எல்லாரும் சேர்ந்து அவதிக்குள்ளாக்குவது போல்தான், உலகில் ஒற்றைச் சோஷலிச நாடாக இருந்த ரஷ்யாவைப் பிற முதலாளித்துவ நாடுகள் எல் லாமும் ஒடுக்கவும் அழிக்கவும் முயன்றன, பொருளாதாரத் தடைகள் விதித்தன, மனைவி உட்பட எல்லாம் பொதுவுடைமையா என்று கேலி பேசின, தனிச்சொத்தின் கருத்தியல்களைப் பரப்பின. அப்போது அங்கு நடந்த தவறுகளை வைத்து நாம் பொதுவுடைமைக் கொள்கை பொருத்தமற்றது என்று எடைபோட முடியாது.     ஆனால் மாறிவரும் சமூகத்திற்கேற்ப அதை நாம் மேம்படுத்த வேண்டும் என்பது உண்மை. உதாரணமாக, இன்றைய உலகளாவிய பெருமுதலாளித்துவ வடிவங்களையோ, அவை உலகின் பல நாடுகளை அழிவுக்கும் அடிமைத்தனத்துக்கும் உள்ளாக்கியிருப்பதையோ, இயற்கை வளங்களை முற்றிலும் அழித்து எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்கியிருக்கும் நிலையையோ மார்க்ஸ் கற்பனையிலும் சிந்தித்திருக்கமாட்டார். ஆகவே இன்றைக்கான கோட்பாடும், நடைமுறை வடிவங்களும் மேம்படுத்தப்பட வேண்டும் என்பது உண்மை.

அதிகார பலத்தின் கருவி, அரசு என்ற கருத்தாக்கத்தையும், சமூகக் காரணத்தன்மை, சமூகப் பரிணாமம், இயங்கியல் பொருள் முதல்வாதம் ஆகியவற்றையும் இயன்றால் வேறொரு கட்டுரையில் காணலாம்.

“பொதுவுடைமை, சமூகத்தின் ஒரு பகுதியுடன்-’மக்கள்’ அல்லது உழைக்கும் வர்க்கத்துடன்-அரசை அடையாளம் காண்கின்ற நிலைப்பாடு ஆபத்தானது. அவ்விதமான வரம்பற்ற ஒரு நிறுவனமாக அது இருக்கிறது. தனிமனிதனுக்கென எவ்வித உரிமைகளும் இல்லை” என்று பொதுவாக, தனிமனித உரிமைகளை மதிப்பவர்கள் கூச்சலிடுகிறார்கள். உண்மையில், இன்றுதான் அரசு சில முதலாளிகளின் (சமூகத்தின் மிகச்சிறு பகுதியின்) கையில் இருக்கிறது-”முதலாளிகளின் சர்வாதிகாரமாக” இருக்கிறது. அது மக்களில் மிகப்பெரும்பான்மையினரான “பாட்டாளிகளின் சர்வாதி காரமாக” மாறுவதில் என்ன ஆட்சேபம்? மிகச் சிறுபான்மையினர் ஆள்வதை விட மிகப் பெரும்பான்மையினர் ஆள்வதைத் தவறு என்பதைவிட என்ன முட்டாள் தனம் இருக்கமுடியும்?

கடைசியாக ஒரே ஒரு விளக்கத்தை-இது மேற்கண்ட இரு கொள்கைகளுக்குத் தொடர்பற்றது, ஆனால் அரசு அமைப்புகள் பற்றியது என்பதால்-அளித்து முடிக்கலாம். இப்போது நாஜிக்கொள்கை, பாசிசம் குறித்து மீண்டும் பெரிதும் பேசப்படுகிறது. சில தொலைக்காட்சி ‘சேனல்’கள் முனைந்து அக்கருத்துகளைப் பரப்புவதோடு, ஹிட்லரின் பிம்பத்தையும் மீண்டும் மீண்டும் முன் னணிப்படுத்துகின்றன.

“எல்லாரும் அரசுக்குள்; அரசுக்கு வெளியில் எவருமில்லை; அரசுக்கு எதிராக எவருமில்லை” என்பது பாசிசத்தின் கொள்கை. பகுத்தறிவின்மீது நம்பிக்கையின்மையும், தலைவன்/தலைவி வழிபாடும் பாசிசக் கோட்பாடுகளின் சிறப்புப் பண்புகளாகும். இவை தான் தமிழகத்தில் இன்றைய திராவிடக் கட்சிகளின் அடிப்படைகளாகவும் உள்ளன என்பதைச் சிந்திப்பவர்கள் யாவரும் உணரலாம்.

ஆரிய இனத்தின்-குறிப்பாக ஜெர்மானிய ஆரிய இனத்தின்- மேம்பாட்டை வலியுறுத்துவது நாஜிக் கொள்கை. நாஜிக்கோட்பாட்டாளர்களின்படி, “ஒரு சமூகக் குழுவின் இனம் அல்லது ‘இரத்தம்’ அதன் பார்வையையும், சிந்தனைவழியையும் தீர்மானிக்கிறது. ஆரிய இனம் என்பது தலைமையினம் (herrenvolk). அது ஒன்று தான் மனிதப்பண்புகளில் மிகச் சிறந்தவற்றைக் கொண்டிருக்கிறது. ஆகவே அதன் தூய்மையைக் காப்பாற்றியாக வேண்டும். அந்த இனத்திற்கு அந்நியமான பிற இனங்கள், குறிப்பாக யூத இனம்-அழிக்கப்படவேண்டும்” என்பது ஹிட்லரின் கொள்கை. இந்தக் கொள்கையை முன்வைத்து (அல்லது பின்வைத்து- பின்னணியாகக் கொண்டு) பிறரை ஒடுக்குவதற்குத்தான் பழங்கால இந்து மகாசபை முதல் இன்றைய ஆளும்கட்சிவரை அத்தனையும் பாடுபட்டு வருகின்றன. இந்தக் கோட்பாடுகளுக்கு மறுப்பாகப் பெரிய நூல்களே எழுதலாம். மதிநுட்பமிக்க வாசகர்கள் இவற்றைப் பற்றிச் சிந்தித்தாலே போதுமானது.

பாசிச, நாஜிக் கோட்பாடுகளின்படி தனக்கான நியாயத்தை அரசு தானே வழங்கிக்கொள்கிறது. அதன் செயல்பாடுகள் அதன் புகழையும் பெருமையையும் உயர்த்திக் கொள்வதாகவே, பாடுவதாகவே அமைகின்றன. அதுவே எல்லாப் பொருள்களையும் அளவிடும் அளவுகோல். அரசுக்குப் பணியாற்ற எவ்வளவு செயல்திறம் இருக்கிறது என்ற அளவில் தனிமனிதனுக்குச் சார்புநிலை மதிப்பு மட்டுமே உண்டு. இப்படித்தான் இதுவரை மத்திய அரசுகள்-காங்கிரஸ் ஆட்சியாயினும், ஜனதா, பாரதிய ஜனதா ஆட்சிகளாயினும் நடந்துவருகிறது என்பதை 1947 முதலாக இந்திய வரலாற்றைக் காண்பவர்கள் யாவரும் உணரலாம்.


பேராசிரியர். க.பூரணச்சந்திரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கொஞ்சம் அரசியல், கொஞ்சம் நாட்டுநிலை”

அதிகம் படித்தது