பிப்ரவரி 27, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

கொரோனா ஊரடங்கு காலமும், மத்திய பா.ச.க அரசின் திரைமறைவு செயல்பாடுகளும்!

சுசிலா

May 2, 2020

siragu coronavirus6

உலகெங்கிலும் அதி வேகமாக கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த வேளையில், பொருளாதாரத்திலும், மருத்துவத்திலும் உயர்ந்த நிலையிலுள்ள வளர்ந்த நாடுகளே இதை தடுக்க முடியாமல் திணறி வருகின்றன. உலகளவில், நோய்த்தொற்று பரவியவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை கடந்திருந்தது. உயிரிழப்பு 2 லட்சத்தை தாண்டியிருக்கிறது என்பது நம் எல்லோருக்கும் மிகுந்த துயரத்தை தருகிறது. என்ன செய்வது என்றே புரியாத நிலையில் தான் உலக நாடுகள் இருந்து வருகின்றன. இந்திய அளவில், பரவியவர்களின் எண்ணிக்கை 30,000 த்திற்கு மேலேயும் , உயிரிழப்பு எண்ணிக்கை ஆயிரத்தையும் தாண்டியுள்ளது. இந்த வைரஸ் பரவலை தடுக்க முடியாமல், பல வல்லரசு நாடுகள் தவித்து வருகின்றன. தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு மிகுந்த முனைப்புடன் பணியாற்றி வருகின்றன. உலகமே, கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முயற்சியை நோக்கியே பயணித்து வரும் நிலையில், இந்திய அரசு மட்டும் மக்களை பாதிக்கும் வேறு விடயங்களில் கவனம் செலுத்தி வருகிறது.

siragu covid-19 -1

முதலில் பார்ப்போமானால், வைரஸ் நோய்த்தொற்று கண்டுபிடிக்கும் ராபிட் டெஸ்ட் கிட்ஸ் வாங்குவதிலேயே மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. சீனாவிலிருந்து பல நாடுகள் போட்டிப்போட்டுக் கொண்டு வாங்குவதில் முனைப்பு காட்டின. இந்தியாவிற்கு அந்த கருவிகள் வருவதற்கு தாமதமானது. இருப்பினும், அதற்காக காத்திருந்து பரிசோதனைகள் செய்தால், அதில் நம்பத்தகுந்த முடிவுகள் வரவில்லை. 50 லட்சம் கருவிகள் வாங்கியதாக சொல்லப்பட்ட நிலையில், தமிழ்நாட்டிற்கு 20,000 கருவிகள் மட்டுமே அளிக்கப்பட்டன. அதுவும் சரியாக செயல்படவில்லை என்பது வருத்தத்துக்குரிய ஒன்றாக உள்ளது. சீனாவிலிருந்து ரூ. 245 -க்கு வாங்கி, அது ரூ. 400-க்கு நடுவில் ஒரு நிறுவனத்திற்கு விற்கப்பட்டு, பின்பு, அது, நம் தமிழ்நாட்டிற்கு வரும் போது ரூ. 600 க்கு விற்கப்பட்டது. மேலும் அதற்கு ஜிஎஸ்டி வரி வேறு. அதன் மூலம் எத்தனையோ கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் அதைப்பற்றி எந்த பதிலும் சொல்வதில்லை. இவ்வளவு நடந்தும் அக்கருவிகள் சரியாக செயல்படவில்லை. தவறாக முடிவுகளை காட்டுகின்றன. தற்போது அந்த கருவிகளை பயன்படுத்தாமல் நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.

அடுத்து, பிரதமர் நிவாரண நிதி என்ற ஒரு அமைப்பு இருக்கையில், புதிதாக PM கேர்ஸ் என்ற அமைப்பை நிறுவி அதன்முலம் நிதி திரட்டுவதாக கூறிக்கொண்டு, அரசு சாரா தனியார் அமைப்பை துவக்கி அதில் பல கோடி ரூபாய்கள் திரட்டப்படுகின்றன. பிரதமர் நிவாரண நிதியில் சேரும் தொகையை கணக்கில் காட்ட முடியும். ஆனால், இந்த பிஎம் கேர்ஸ் எவ்வளவு நிதி வந்துள்ளது, அதில் எவ்வளவு செலவு செய்யப்படுகிறது என்ற எந்த விவரமும் அறிய முடியாது என்று சொல்லப்படுகிறது. பல பிரபல தொழிலதிபர்கள், நடிகர்கள் என பலரும் அதில் தங்களின் நிதியை செலுத்தியுள்ளனர். ஆனால், அதில் வரவு, செலவு கணக்கு காட்டப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல், மத்திய அரசு அலுவலர்கள் ஊதியத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்து, அதுவும் இந்த அமைப்பிற்கு செல்கிறது. மேலும் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி அடுத்த 18 மாதங்களுக்கு ரத்து செய்யப்படுகிறது என்ற ஒரு அறிவிப்பும் வந்துள்ளது. அந்த தொகையும் இதில் தான் சேகரிக்கப்படுகிறது. டில்லி பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்த குறிப்பிட்ட தொகை பிரதமர் நிவாரணநிதிக்கு செல்வதாக சொல்லப்பட்ட நிலையில், அதுவும், இந்த பிஎம் கேர்ஸ் அமைப்பிற்கு செல்வதாக சொல்லப்படுகிறது. இப்படி பொது மக்களின் பணத்தையெல்லாம் திரட்டி, பிரதமர் பெயரில், தனியார் இயக்கும் ஒரு அமைப்பிற்கு சென்று சேர்க்கிறது, கேள்வியும் கேட்க முடியாது என்பதே மிகப்பெரிய ஊழலாக இது இருக்குமோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் பரவலாக இருக்கிறது.

இந்நிலையில், இன்னொரு முக்கிய விசயம் என்னவென்றால், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் ஒரு பெரிய உண்மை வெளிவந்திருக்கிறது. அது என்னவென்றால், வங்கிகளில் கடன் வாங்கி, அதனை காட்டாமல் மோசடி செய்து வெளிநாட்டிற்கு தப்பியோடிய 50 தொழிலதிபர்களின் கடன்தொகை 68,607 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது என்பது தான். இந்த மத்திய பா.ச.க அரசு மக்களுக்கான அரசு இல்லை என்று நமக்கு தெரிந்த விசயம் தான். ஆனால், இவ்வளவு பெரிய தொகையை தள்ளுபடி செய்திருக்கிறது என்பது மிகவும் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது, மக்கள் ஊரடங்கு காலத்தில் கையில் பணமில்லாமல், வயிற்றுக்கு உணவில்லாமல் தவித்துக்கொண்டிருக்கும் வேளையில், அவர்களுக்குத் தேவையான உதவிகளைசெய்ய தவறிய இந்த அரசு, விஜய் மல்லையா, வைர வியாபாரியான நீரவ் மோடி மற்றும் அவரின் கூட்டாளி, மெகுல் சோக்சி மற்றும் பல வடஇந்திய தொழிலதிபர்கள் கடன்களை ரத்து செய்திருக்கிறது. பொருளாதாரம் படு மோசமாக வீழ்ச்சியடைந்த நிலையில், இந்த மாபெரும் தவற்றை மத்திய பா.ச.க அரசே செய்துள்ளது என்ற உண்மை தற்போது வெளிவந்திருக்கிறது.

siragu covid-19 -2

அடுத்து பார்த்தீர்களானால், அரசின் இருப்பில் 7.7 கோடி டன் உணவு தானியங்கள் இருக்கிறது. அதாவது, இந்திய உணவுக் கழகத்தில் கையிருப்பில் இருக்கிறது, அதில் சிறிதளவு எடுத்து தேவைப்படும் ஏழைமக்களுக்கு இலவசமாக கொடுங்கள் என்று முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதற்கும் மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. ஆனால், அந்த அரிசியை பயன்படுத்தி, எத்தனால் வேதிப்பொருளாக மாற்றி, ஆல்கஹால் அடிப்படையில், கிருமி நாசினி தயாரிக்கப்போவதாக, தேசிய உயிரி எரிபொருள் ஒருங்கிணைப்பு குழுவில் முடிவு எடுக்கப்பட்டதாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் கூறியுள்ளார். அதற்கு தன்னுடைய கடும்கண்டனத்தையும் பதிவு செய்திருக்கிறார். நாட்டில் கோடிக்கணக்கான மக்கள், தங்கள் குழந்தைகளுடன், முதியவர்களுடன் ஒருவேளை உணவிற்கு கூட, வழியில்லாமல், இலவசமாக வழங்கப்படும் உணவிற்காக நீண்ட வரிசையில், பல மணிநேரம் நின்றுகொண்டிருக்கும் அவலநிலையை கண்டுவருகிறோம். ஆனால், இந்த அரசு, உணவுப்பொருளை கிருமிநாசினிக்காக பயன்படுத்தப்போகிறது என்பது கொடுமையிலும் கொடுமையாக இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு அரசு உலகில் எங்கும் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை எனலாம்.

siragu covid-19 -3

மேலும், பேரிடர் நிதியிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிதி இன்னும் வரவில்லை. ஒதுக்கியதே மிகவும் குறைவு, அதுவும் வந்துசேரவில்லை. திருப்பிக் கொடுக்கவேண்டிய ஜிஎஸ்டி வரியும் இன்னும் நிலுவையில் உள்ளது. அடுத்து, நாடு முழுவதும் ஊரடங்கில் உறைந்து போயிருக்கும் இந்த வேளையில், காவேரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசின் துறையான நீர்வளத்துறையின் (நீர்வளத்துறையை ஜலசக்தி துறை என்று சமஸ்கிருதத்தில் மாற்றியிருக்கிறது) கீழ் கொண்டு வந்திருக்கிறது. காவேரி நதிநீர் மேலாண்மை ஆணையம் என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் அமைக்கப்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பு. சொல்லப்போனால், இன்னும் கூட அதற்கு முழுநேர தலைவரை நியமிக்கவில்லை. பகுதிநேர தலைவரைக்கொண்டு இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பு என்பது தான் உண்மை. எதோ, ஓரளவிற்கு தமிழ்நாட்டிற்கு கிடைக்கவேண்டிய நீர் அதன் மூலம் இதுவரை கிடைத்து வந்தது. இதனை, மத்திய பா.ச.க அரசு தன்னுடைய அதிகாரத்திற்கு கீழ் கொண்டுவந்ததினால், நமக்கு கிடைக்கவேண்டிய நதிநீர் பங்கீடும் இனி எதிர்காலத்தில் கேள்விக்குறியாகத்தான் இருக்கப்போகிறது. நம்முடைய வாழ்வாதாரத்தையே குலைக்கக்கூடிய ஒன்றாக இந்த செயல் அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டை வஞ்சிப்பதையே குறிக்கோளாய் கொண்டு செயல்படுகிறது மத்திய பா.ச.க அரசு என்றால் அதில், துளியும் சந்தேகமில்லை!

அடுத்து, நம் பிள்ளைகளின் கல்வியில் கை வைத்திருக்கிறது. கலை, அறிவியல் பட்டப்படிப்புகளுக்கும், அதன் மேற்படிப்புகளுக்கும், நுழைவுத்தேர்வு வைக்கப்போவதாக ஒரு செய்தி வருகிறது. யூஜிசி அமைத்திருக்கும் ஒரு குழு, இதனை பரிந்துரை செய்திருக்கிறது. நாம் கல்விபெற்றுவிடக்கூடாது என்பதில் எப்போதுமே பார்ப்பனீயச் சித்தாந்தத்தை கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கவனமாக இருக்கும். ஆதலால் தான் இடஒதுக்கீடு மேல் அவர்களுக்கு உடன்பாடில்லை. அதை ஒழிக்கவேண்டும் என்று நேரம் பார்த்து காத்திருப்பார்கள். மருத்துவப்படிப்பில் நீட் தேர்வை கொண்டுவந்து நம் மாணவர்களை மருத்துவம் படிக்கவிடாமல் செய்துவிட்டார்கள். இப்போது பட்டப்படிப்பிலும் அதே நிலையை கொண்டுவர துடிக்கிறது. கொள்ளைநோய் வந்து உயிர்பலி வாங்கிக்கொண்டிருக்கும் நிலையில் கூட, தன்னுடைய காரியத்தில்மட்டும் கண்ணாக இருந்து செயல்படுகிறது என்றால், இந்த ஆரிய சித்தாந்தம் எவ்வளவு கொடியது என்பதை நாம் உணரவேண்டும்.

உலகநாடுகள் அனைத்தும், கொரோனா கிருமியை அழிக்கும் பணியில் அதி மும்மரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் இவ்வேளையில், இங்கு ஆண்டுகொண்டிருக்கும், பா.ச.க அரசு மட்டும், ஆர்.எஸ்.எஸ். அஜெண்டாவை செயல்வடிவம் கொடுப்பதையே தன்னையுடைய முதல் கடமையாகக் கொண்டு பணியாற்றி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிக்கும் தாக்கத்தை விட, இவர்களின் செயல்தாக்கம் பலமடங்கு கொடுமையானதோ என்ற அச்சம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. மக்கள் வீதியில் இறங்கி தங்களின் உரிமைகளைக் கேட்டு போராட்டம் நடத்தகூட வாய்ப்பில்லாத இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில், திரைமறைவில், ஒவ்வொன்றாக விரைந்து அமல்படுத்திவிட வேண்டும் என்று எத்தனிக்கும் மத்திய பா.ச.க அரசிற்கு மக்கள் தக்க பாடம் புகட்டவேண்டும்!

முதலில், கொரோனவிலிருந்து விரைவில் மீண்டு வருவோம்!
பிறகு, மத்திய பா.ச.க அரசிடமிருந்து நம் மாநில உரிமைகளை மீட்டெடுப்போம்!
சர்வ அதிகாரமும், தன்னிடம் மட்டுமே இருக்க வேண்டும் என்று முயற்சி செய்யும் மத்திய பா.ச.க அரசையும், அதற்கு தன்னுடைய எவ்வித எதிர்ப்பையும் காட்டாமல், எல்லாவற்றிற்கும் கைகட்டி சேவகம் புரியும் அதிமுக அடிமை அரசையும் விரட்டியடிப்போம்!


சுசிலா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கொரோனா ஊரடங்கு காலமும், மத்திய பா.ச.க அரசின் திரைமறைவு செயல்பாடுகளும்!”

அதிகம் படித்தது