கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையும், ஒன்றிய அரசின் பொறுப்பற்ற தன்மையும்!
சுசிலாMay 1, 2021
நம் நாட்டில், தற்சமயம் கொரோனா பெருந்தொற்று இரண்டாவது அலையின் தாக்கம் மிகப்பெரிய சுனாமி போன்ற பேரழிவை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். சொல்லொண்ணா துயரத்தை நம் நாடு சந்தித்துக்கொண்டிருக்கிறது. கொரோனா பாதிப்பை விட ஒட்டுமொத்த சுகாதார கட்டமைப்பே சிதைந்து போயுள்ளது. வடஇந்தியாவில், எங்கு பார்த்தாலும், மக்களின் மரணஓலம் கேட்ட வண்ணமாய் இருக்கின்றன. மராட்டியத்திலும், தலைநகர் தில்லியிலும், குஜராத்திலும், உத்திரப்பிரதேசத்திலும், மத்தியப்பிரதேசத்திலும் மக்கள் படும் துயரத்தை சொல்லி மாளாது. ஒரு நாளைக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று, மூன்று லட்சத்து, எழுபதாயிரத்தை கடந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரத்து ஐநூறுக்கும் மேலாக போய்க்கொண்டிருக்கிறது. உலகநாடுகள் அனைத்தும் நம்முடனான போக்குவரத்துத் தொடர்பை துண்டித்துள்ளன. இந்தியாவை தனிமைப்படுத்தியுள்ளன.
வடநாட்டில், நடந்துகொண்டிருக்கும் மாபெரும் மனித பேரவலம் உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறது. தொற்று நாளுக்கு நாள் மிகஅதிகமாகிக் கொண்டிருக்கிறது. மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது. தடுப்பூசி கிடைக்கவில்லை, ஆக்ஸிஜன் கிடைக்கவில்லை, மருத்துவமனைகளில் படுக்கை கிடைக்கவில்லை, ஆம்புலன்ஸ் பற்றாக்குறையாக இருக்கிறது, உரிய பாதுகாப்புடன் சடலங்களை உரியவர்களிடம் கொடுக்காமல், எதோ ஒரு துணியில் சுற்றிக்கொடுக்கும் கொடுமை அங்கே நடந்துகொண்டிருக்கிறது, இறந்தவர்களின் உடலைக் கூட புதைக்கவோ, எரிக்கவோ இடமில்லாமல் அம்மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். 24 மணிநேரமும் இடுகாட்டில் சடலங்கள் எரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உயிரை காப்பாற்றிக்கொள்ள மக்கள் படும் பாடு நம் நெஞ்சை அறுப்பதுபோன்ற உணர்வை உண்டாக்குகிறது. இவ்வளவு நடந்துகொண்டிருந்தாலும், ஒன்றிய அரசின் அமைச்சகம், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், மேற்குவங்கத் தேர்தலுக்காக அங்கே முகாமிட்டு பிரசாரம் செய்துகொண்டிருக்கிறது. நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று உலுக்கிக்கொண்டிருக்கும் போதுகூட உள்துறை அமைச்சர் அமித்ஷா கடைசிகட்டத் தேர்தல் நடக்கும்வரை அங்கே பேரணி நடத்திக்கொண்டிருந்தார். இந்த மோடிஅரசின் நிர்வாகத்திறமையின்மை காரணமாகத்தான் இன்று நாடே இந்த பேரவலத்தை சந்தித்துக்கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல், உத்தரகாண்ட் மாநிலத்தில், கும்பமேளா என்று லட்சக்கணக்கில் மனிதர்களைக் கூட்டி கொரோனாவை மிகஅதிகளவில் பரப்பியுள்ளது.
முதல் அலையின் மூலம் இந்த மோடி அரசு ஒன்றையுமே பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பது தான் உண்மை. கைத்தட்டவும், விளக்கு ஏற்றவும், கோமியம் குடியுங்கள் என்று சில பாஜக அமைச்சர்கள் கூட சொன்னார்கள், இப்படியெல்லாம் மக்களுக்கு மட்டும் அறிவுரை சொன்ன அரசு, தான் ஒன்றுமே செய்யாமல், இன்று மக்களை கைகழுவி விட்டிருக்கிறது. முதல் அலையின் போது, நாங்கள் திறமையுடன் கையாண்டுள்ளோம், உயிரிழப்பை மிகக் குறைவாக தடுத்துள்ளோம் என்றெல்லாம் கூறி, தங்களைத்தாங்களே புகழாரம் கூட்டி பெருமையடித்து மகிழ்ந்துகொண்டது. ஆனால், அப்போதே, உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்தது. இந்தியாவில், இரண்டாவது அலை மிகவும்மோசமாக இருக்கும் என்றும், அதற்கான முன்னெடுப்புகள் விரைவில் எடுக்கவேண்டும் என்றும் கூறியது. ஆனால், மோடியின் ஒன்றிய அரசு அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. நாடாளுமன்ற நிலைக்குழு கூட, இரண்டாவது அலைக்கான முன்னெடுப்பு நடவடிக்கைகளை எடுங்கள் என்று சொல்லியும், அதையும் பொருட்படுத்தவில்லை.
நம் நாட்டில், தயாரித்த கோவாக்ஸின், மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து ஒப்பந்தத்தின் மூலம் தயாரித்த கோவிஷீல்டு தடுப்பு மருந்துகளையும் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவிட்டது. அதில் சில நாடுகளுக்கு விற்பனையையும் செய்திருக்கிறது. நாம் உற்பத்தி செய்த ஆக்ஸிஜன் கூட ஏற்றுமதி செய்திருக்கிறது. மக்கள் தொகையில் மிகவும் அதிகமுள்ள நாடான நம் நாட்டின் தேவையை கருத்தில்கொள்ளாமல், ஏற்றுமதி செய்ததின் விளைவு தான் நாம் இன்று அனுபவித்துக்கொண்டிருக்கும் அனைத்து கொடுமைகளுக்கும் காரணாமாக அமைத்திருக்கிறது. அதைப்பற்றி சிறிதும் சிந்திக்காமல், எல்லாவற்றையும் தான்தோன்றித்தனமாக செய்துவிட்டு, இன்று மாநிலங்களை கைகழுவி விட்டுள்ளது. துவக்கத்திலேயே, மாநிலங்களுக்கு தங்களுக்கு தேவையான தடுப்பூசிகளை வாங்கிக் கொள்ளும் உரிமை கொடுக்காமல், மத்திய அரசை கேட்க வேண்டும், நாங்கள் தான் அனைத்து மாநிலங்களுக்கும் பகிர்ந்து அளிப்போம் என்று உத்தரவிட்டிருந்தது. நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றவுடன், மாநிலங்களே தடுப்பூசி வாங்கிக்கொள்ளுங்கள் என்று கையை விரித்துவிட்டது. மேலும், மருந்து தயாரிக்கும் நிறுவனங்களே, விலையை நிர்ணயித்துக்கொள்ளலாம் என்றும் சந்தையை திறந்துவிட்டதுபோல், உயிர்காக்கும் மருந்துகளையும், தடுப்பூசிகளையும் ஒரு வர்த்தகமாக மாற்றிவிட்டிருக்கிறது ஒன்றிய அரசு!
இதில் என்ன மிகப்பெரிய கொடுமையென்றால், ஒரு மருந்திற்கு, மூன்று விலைகளை நிர்ணயம் செய்திருக்கிறது. 50% தடுப்பூசிகளை மத்தியஅரசிற்கு மட்டும் 150 ரூபாய்க்கு விற்க வேண்டும் என்றும் , மாநில அரசிற்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் வேறு விலைக்கு கொடுக்கலாம் என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. மருந்து தயாரிக்கும் நிறுவனம், மாநிலங்களுக்கு 300 ரூபாய் என்றும், தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய் என்றும் விற்கின்றன!
எந்த வகையிலும் மோடியின் அரசு பெருத்தொற்று காலத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த சீரழிவைப்பற்றி கிஞ்சிற்றும் கவலைகொள்ளவில்லை…பொறுப்பேற்கவும் இல்லை.
எல்லாவற்றையும் வியாபாரமாகவே பார்க்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களை லாபம் சம்பாதிக்க வைப்பதில் உள்ள ஆர்வம், மக்களை காப்பாற்றுவதில் தவறி போயிருக்கிறது. மக்களைப் பற்றிய கவலை முற்றிலும் இல்லாத அரசாகவே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
தலைநகர் தில்லியில், கொரோனா பெருந்தொற்று கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அம்மக்களுக்கு மருத்துவமனைகளில் இடம் கிடைக்கவில்லை, வீதிகளிலும், வாகனங்களிலும் அமர்ந்தபடியே, ஆக்ஸிஜன் சிலிண்டர்களின் மூலம் மூச்சுக்காற்றை உள்ளிழுத்து உயிரைக் காப்பாற்றிக் கொண்டிருகின்றனர். குஜராத்திலும், உத்திரப்பிரதேசத்திலும் கேட்கவே வேண்டாம் என்ற அளவிற்கு கொடுமைகள் அரங்கேறி வருகின்றன. அங்குள்ள ஏழை மக்களை அரசுகள் கண்டுகொள்வதில்லை. படுக்கை இல்லாமல், ஆக்ஸிஜன் இல்லாமல், மருந்து இல்லாமல், தடுப்பூசி இல்லாமல், அவதியுறுகின்றனர். எங்குபார்த்தாலும் பிணக்குவியல்களாகவே இருக்கின்றன என்ற செய்திகள் வருகின்றன. அதையும் கூட வெளிவராமல் அந்தந்த அரசுகள் மூடி மறைக்க முயல்கின்றன. எல்லாவற்றிலும் உச்சபட்சமாக, உ.பி.யில், யோகியின் அரசு, ஆக்ஸிஜன் இல்லையென்று யாரும் சொல்லக்கூடாது, மீறி சொன்னால், அவர்களை தேச பாதுகாப்பு சட்டம் மூலம் கைது செய்வோம் மற்றும் அவர்களின் சொத்துக்கள் முடக்கப்படும் ஏற்று அறிவித்திருக்கிறது.
இந்த இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தியது ஒன்றிய பாஜக அரசு தான். அதனை நிர்வகிக்கும் தலைமை அமைச்சர் தான் முழு பொறுப்பேற்க வேண்டும். மராட்டிய மாநில முதல்வரும் தில்லி முதல்வரும் இம்மாத
துவக்கத்திலேயே கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையாக இருக்கிறது, மருந்துகள் குறைவாக இருக்கின்றன, ஆக்ஸிஜன் மிகவும் குறைவாக இருக்கிறது என்று ஒன்றிய அரசிடம் தினமும் முறையிட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால், மோடியும், அமித்ஷாவும் இதற்கு செவி சாய்க்கவில்லை. மேற்குவங்கத்தில், கூடாரம் போட்டு வாக்குச் சேகரிப்பதில் குறியாக இருந்தார்கள். நிலைமை கைக்கு மீறி போனபிறகு தான் தலைமை அமைச்சர் மோடி, வழக்கம்போல் மக்களிடம் உரையாற்றுகிறேன் என்ற பெயரில், மக்களுக்கும், மாநிலங்களுக்கும் அறிவுரைகூறிவிட்டு, மனிதாபிமானம் என்ற ஒன்றே இல்லாமல், மருந்து விலையையும் அரசு நிர்ணயிக்காமல், வர்த்தகரீதியில், சந்தையை திறந்துவிட்டிருக்கிறார்கள். இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில், மருந்துகளுக்கும், தடுப்பூசிகளுக்கும் என நிதி ஒதுக்கிவிட்டு, இன்று மாநிலங்கள் தலையில் இந்த சுமையை சுமத்தியிருக்கிறது ஒன்றிய அரசு. மாநிலங்களே வாங்கிக்கொள்ளலாம் என்றால் கூட, மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி நிலுவை தொகையையும் இன்றுவரை வழங்கவில்லை. இந்த மோடியின் ஒன்றிய அரசு எல்லாவகையிலும் தோல்வியை தழுவியிருக்கிறது. பொருளாதார வகையிலும், பெருந்தொற்று காலத்தில் மக்களை காப்பாற்றும் விதத்திலும், நாட்டின் வளர்ச்சியிலும் எந்த முன்னெடுப்பு வகைகளையும் கையாளவில்லை. உலக நாடுகளின் பிரபல பத்திரிகைகள் இன்று, மோடி என்ற ஒற்றை மனிதரின் நிர்வாகத் திறமையின்மையை வெளிச்சம் போட்டு காட்டிக்கொண்டிருக்கின்றன. இங்குள்ள ஊடகங்களை மிரட்டி உண்மைச்செய்திகளை மறைக்க முயன்றாலும், மற்றநாடுகளின் ஊடகங்களை தன்னுடைய எதேச்சதிகாரத்தின் மூலம் ஒடுக்கமுடியுமா?
இந்தியாவின் இந்த நிலைமைக்கு மோடியின் அரசு தான் காரணம், எவ்வித முன்னேற்பாடுகளையும் அரசு மேற்கொள்ளவில்லை எனவும், முதல் அலையில் கோரானவை வென்றெடுத்துவிட்டோம் என்று ஆர்ப்பரித்து சிறுபிள்ளைத்தனமாக கொண்டாடிய அரசு, இரண்டாம் அலை வருவதற்கு முன் எடுக்கவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் கோட்டைவிட்டுவிட்டது என்றும், மோடி அரசின் ஆணவம், அதீத தேசியவாதம், மக்களை பலிகொண்டுவிட்டது என்றும் உலகின் பிரபல பத்திரிகைகள் எழுதுகின்றன.
‘இந்தியாவை காப்பாற்ற வேண்டுமா, தன்னுடைய இமேஜை காப்பாற்ற வேண்டுமா என்பதில், மோடி தன்னுடைய இமேஜை காப்பற்றிக்கொள்வதில் ஆர்வம் காட்டியுள்ளார்’ என்று நியூயார்க் டைம்ஸ் தலையங்கம் தீட்டியுள்ளது!
நம்நாட்டு நீதிமன்றங்கள், இவ்வளவு நாட்கள் அரசு என்ன செய்துகொண்டிருந்தது, மக்களுக்கு மருந்துகளும், ஆக்ஸிஜனும், தடுப்பூசிகளை உடனே ஏற்பாடு செய்யுங்கள், பிச்சை எடுத்தாவது, திருடியாவது மக்களைக் காப்பாற்றுங்கள் என்றளவிற்கு தங்கள் கண்டனத்தை பதிவு செய்து, தடுப்பூசி விலைகளை ஏன் மூன்றுவிதமாக பிரித்துள்ளீர்கள், எல்லாவற்றிக்கும் கொள்முதல் செய்து, மாநில அரசுகளுக்கு பிரித்துக்கொடுங்கள், இதற்கு முன்னர் வழக்கத்திலுள்ள தேசிய தடுப்பூசி திட்டத்தின் மூலம் மக்களுக்கு இலவசமாக போடுங்கள் என்றும், அவையெல்லாம் போர்க்கால நடவடிக்கைகளாக எண்ணி செயல்படுங்கள் என்று பல கேள்விகளைக்கேட்டு, தலையில் பலமான குட்டு வைத்திருக்கிறது. மேலும், சமூகவலைத்தளங்களில் இது தொடர்பான பதிவுகளை நீக்குவதும், அவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுப்பதும் தவறு என்றும் கூறியிருக்கிறது. இதனை மீறி செயல்பட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயும் என்றும், உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.
இவ்வளவு இழப்புகளை சந்தித்தபிறகும் கூட, இந்த ஒன்றிய அரசின் செயல்பாடுகள் துரிதகதியில் இயங்கவில்லை என்று தான் சொல்லவேண்டும். அரசை எதிர்த்து கேள்விகேட்பவர்களையெல்லாம், மிரட்டுகிறதே தவிர, தங்களுடைய கடமையை சரிவர செய்வதில் தவறிவிட்டது. சமீபத்தில்கூட, பாஜக அரசின் தலைமையிடமான ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் புதிய பொதுச்செயலாளர் தத்தத்ரேயா ஹோசப்பலே என்பவர், தேசத்தை எதிர்த்து கேள்விகேட்கும் நாசகார சக்திகளை ஒடுக்க வேண்டும் என்று அறிக்கை விடுகிறார்.
இதற்கு எவ்வித மறுப்பும் சொல்லாமல், இருக்கிறதென்றால், இன்றும் ஒன்றிய அரசு, இந்த பேராபத்தான நிலையில் கூட தன்னுடைய அதிகாரத்தின் விளிம்பு வரை செல்கிறது என்று தானே பொருளாகிறது!
மேலும், மாநிலங்களுக்கு கிடைக்கவேண்டிய மருந்துப்பொருட்களும், தடுப்புசிகளும் இதுவரை வந்துசேரவில்லை. தமிழ்நாட்டிலும், தொற்றின் பாதிப்பு மிக அதிகமாக போய்க்கொண்டிருக்கிறது. முதல் கட்ட தடுப்பூசி போட்டவர்கள், இரண்டாம்கட்ட தடுப்பூசி இல்லாமல், அலைந்துகொண்டிருக்கிறார்கள். அமையப்போகும் புதிய அரசு இவைகளை சரியான விதத்தில் கையாளும் என்ற நம்பிக்கை மக்களுக்கு சற்று ஆறுதலைத் தருகிறது என்று சொல்லலாம். இந்தியாவின் இந்நிலையைக்கண்டு, ஐநா சபை நிவாரணப்பொருட்கள் அனுப்புவதாகக் கூறியுள்ளது. ஆனால், மோடி அரசு அதனை நிராகரித்துள்ளது என்ற செய்தி அதிர்ச்சியை உருவாக்குகிறது.
மேலும், உலகநாடுகள், அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் நமக்கு உதவுவதற்கு நேசக்கரம் நீட்டுகின்றன. ஒன்றிய அரசு தன்னுடைய எத்தேசதிகாரத்தை கைவிட்டு,
அந்நாட்டு உதவிகளைப்பெற்று, நம் நாட்டு மக்களை காப்பாற்றும் வேலையில் இனியாவது செயல்படவேண்டும் என்று ஒன்றிய அரசை நாம் வலியுறுத்துவோம்.
கொரோனா கடும்தொற்று பாதிப்பிலிருந்து, நாம் விரைவில் மீண்டு வர, அனைத்து பாதுகாப்பு முறைகளையும் முறையாக பின்பற்றி, தடுப்பூசிபோட்டுக்கொள்ளும் தடுப்புமுறையை மக்களிடம் தகுந்த விதத்தில், விழிப்புணர்வு ஊட்டி, கட்டாயம் அதற்கான அனைத்துப் பணிகளை செய்வதற்கு விரைந்து செயல்படுவோம்!
ஒன்றிய அரசையும் செயல்பட வைப்போம் மக்களே! கொரோனா பெருந்தொற்றிலிருந்து மிக விரைவில் மீண்டு வருவோம்!
சுசிலா
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையும், ஒன்றிய அரசின் பொறுப்பற்ற தன்மையும்!”