மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கொரோனா பெருந்தொற்று காலமும், அடிப்படை வாழ்வாதாரத்தை இழந்த அடித்தட்டு மக்களும்!

சுசிலா

Feb 13, 2021

siragu coronavirus2
இந்த கொரோனா வைரஸ் எனும் பெருந்தொற்று தோன்றி உலகளாவிய அளவில் ஓராண்டை கடந்து விட்டது. நம் நாட்டிலும் பரவி, அதன் மூலமாக ஊரடங்கு பிறப்பித்து ஏறத்தாழ ஓராண்டு நெருங்கிக் கொண்டிருக்கிறோம். கடந்த ஓராண்டு என்பது நம் அனைவருக்கும் மிகப்பெரிய சோதனை காலமாகவே அமைத்திருக்கிறது என்பது கசப்பான உண்மை. உலக அளவில், கோடிக்கணக்கில் பாதிப்பு ஏற்பட்டு, லட்சக்கணக்கில் உயிரிழப்புக்களை கண்டிருக்கிறோம் என்பது மிகவும் வேதனையான ஒன்றாக இருக்கிறது. இந்திய அளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கோடியைத் தாண்டியிருக்கிறது. உயிரிழப்பைப் பொறுத்தவரை, ஒன்றரை லட்சத்திற்கும் மேலாக போய்க் கொண்டிருக்கிறது. நம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 லட்சத்திற்கு மேலாகவும், உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 12,000த்தை கடந்தும் சென்று கொண்டிருக்கிறது.
இந்த பெருந்தொற்று காலம் நமக்கு ஏராளமான பாடங்களைக் கற்றுக்கொடுத்திருக்கிறது என்றால் மறுப்பதற்கில்லை.

உலகளவில் அனைத்து நாடுகளும் இதில் பாதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், ஊரடங்கு மூலம் இந்த தொற்றுப் பரவலை தடுக்க எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து, ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டுவந்திருக்கின்றன என்பது நிதர்சனம். பொருளாதார ரீதியில் அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டிருந்தாலும், தங்கள் நாட்டு மக்களை, தங்களால் முடிந்தவரை பொருளாதார உதவிகள் செய்வதன் மூலம், அந்தந்த அரசுகள் அவற்றின் கடமைகளை நிறைவேற்றி, அம்மக்களைக் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன. தற்சமயம் சில நாடுகள் தடுப்பு மருந்து கண்டுபிடித்து, மக்களுக்கு கொடுக்கப்படுகின்றன என்பது சற்று ஆறுதலான விடயமாக இருக்கிறது. நம் நாட்டில், இந்த பெருந்தொற்று பரவலால், மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் விளிம்பு நிலையில் இருக்கும் மக்களும், நடுத்தர மக்களும், நடுத்தரத்திற்கு சற்று மேலாக மக்களும் தான். இந்த குறிப்பிட்ட, பின்தங்கிய பொருளாதார கட்டமைப்பில் வாழும் மக்கள் தான் தங்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக் கொண்டிருப்பவர்கள். அம்மக்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோயிருக்கிறது. இவர்கள் அன்றாட வாழ்வியலுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல், இன்றளவிலும், பலவிதமான சிரமங்களை எதிர்கொண்டு போராடுகிறார்கள்.

siragu corona job1

ஆட்டோ ஓட்டுனர்கள், நடைமேடை கடை வைத்திருப்பவர்கள், பூ விற்பவர்கள், கை வண்டியில் காய்கறி, பழங்கள் விற்பவர்கள், வீட்டுவேலை செய்பவர்கள் என வருமானம் இல்லாமல் இவர்கள் படும் பாடு ஏராளம். என்ன தான் அரசு உத்தரவிட்டிருந்தாலும், இவர்கள் வாழும் வீட்டு உரிமையாளர்கள் வாடகை பணம் வாங்காமல் இருக்கவில்லை. வங்கிகள் தவணை முறைகள், வட்டி கேட்காமல் இல்லை என்பது தான் உண்மை. இன்னும் சொல்லப்போனால், கொடுக்க வேண்டும் என்று நிர்பந்திக்கப் பட்டிருக்கிறார்கள். இவர்கள் பல ஆண்டுகள் கடுமையாக உழைத்து, சிறுக சிறுக சேமித்துவைத்த தொகையும், வாங்கிவைத்திருந்த சிறுஅளவிலான நகைகளும் சிறிதளவிற்கு பயன்கொடுத்தாலும், அதையும் தாண்டி வறுமை அவர்களை வாட்டி வதைக்கிறது என்பது வருந்தத்தக்க வேதனையான உண்மை. தமிழ்நாட்டு அரசு ஆயிரம் ரூபாய் கொடுத்ததோடு நிறுத்திக்கொண்டது. அதற்கு மேல் உதவ வேண்டும் என்ற எண்ணம் மத்திய, மாநில அரசுகளுக்கு வரவில்லை. வடமாநிலங்களிருந்து இங்கு வந்து பணிபுரிந்த இடம் பெயர் தொழிலாளர்களை கூட கண்டுகொள்ளாமல் விட்ட அரசு தானே ஒன்றிய பாஜக அரசு. பல ஆயிரம் மைல்கள் அவர்களை நடக்கவிட்டு, பல உயிர்களை பழிவாங்கிய அரசுகள் தான் இங்கு ஆட்சியில் இருக்கின்றன என்பது மிகப்பெரிய கொடுமை!

தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, பல குடும்பங்கள் மூன்றுவேளை உண்பதற்கு உணவில்லாமல், இரண்டு வேளை, ஒருவேளை என குறைத்துக்கொண்டு உயிர்வாழும் அவலங்கள் எல்லாம் இங்கு அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. ஆனால், இதைப்பற்றியெல்லாம் இந்நாட்டை ஆளும் அரசுகளுக்கு கவலையில்லை. இந்த பெருந்தொற்று உக்கிரமாக இருந்த காலத்திலும், தங்களின் ஊழல்களை இவர்கள் விடவில்லை. எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என இந்த அதிமுக அரசு மக்களைப்பற்றி அக்கறைகொள்ளாமல், தங்களுக்கு என்ன லாபம் என்பதை கணக்கு பார்த்துத் தான் ஒவ்வொன்றையும் நடைமுறைப்படுத்தி வந்திருக்கிறது. இந்த மாநில அரசு இப்படி என்றால், ஒன்றிய அரசோ, இது தான் தக்க சமயம் என்று அவசர கதியில், வேளாண் சட்டங்கள் என்ற பெயரில், கார்ப்பரேட் கம்பனிகளை வளர்த்துவிடும் சட்டங்களை இயற்றி, விவசாயிகளுக்கு மிகப்பெரிய துரோகத்தை இழைத்திருக்கிறது. அதை எதிர்த்து 75 நாட்களுக்கும் மேலாக போராடிவரும் விவசாயிகளை துளியும் மதிக்காமல், அவர்களின் கோரிக்கைகளை ஏற்காமல் காலம்தாழ்த்தி வருகிறது. இதுவரை, போரட்ட களத்தில், 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்திருக்கிறார்கள். அதைப்பற்றி சிறிதும் கவலைப்படாத அரசாக ஒன்றிய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல், இந்த இக்கட்டான பெருந்தொற்றுக்காலத்தில், அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்கு விற்பதில் குறியாக இருக்கிறது. அம்பானி, அதானி போன்றவர்கள் இன்னும் பெரும் பணக்காரர்கள் ஆகவேண்டும் என்பதற்கான வேலையைப் பார்க்கிறதே தவிர உண்ண உணவில்லாமல் வாடும் ஏழைமக்களைப் பற்றி கிஞ்சிற்றும் பொருட்படுத்தவில்லை!

தங்கள் அடிப்படை வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்கள் ஒருபுறம் என்றால், இந்த அரசுகள் , பெருந்தொற்றால் தான் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது என்றும், அரசிடம் பணம் இல்லை என்றும் சொல்லிக்கொண்டு, மறுபுறம், தேவையில்லாத ஊதாரித்தனமான செலவினங்களைச் செய்து வருகிறது. இம்மாதிரி சமயத்தில், மக்களுக்கு நிதி ஒதுக்கி, பணம், உணவுப்பொருட்கள் என உதவ முன் வராத நம் மாநில அதிமுக அரசு, 70 கோடி ரூபாயில் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்டுகிறது. கோடிக்கணக்கில் பணம் செலவழித்து, தங்களுக்குக்கான விளம்பரங்கள் செய்து அகம் மகிழ்கிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசோ, 2000 கோடி ரூபாயில் பாராளுமன்றம் கட்டுகிறது. பல ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்து பிரதமருக்கு என தனி சொகுசு விமானம் வாங்குகிறது என்றால், இவைகள் என்ன மக்களுக்கான அரசுகளா?

மத்தியில் ஆளும் மோடியின் பாஜக அரசும் சரி… மாநிலத்தில் ஆளும் எடப்பாடி பழனிசாமியின் அதிமுக அரசும் சரி… மக்களைப்பற்றி சிறிதும் கவலைப்படாத அராஜக அரசுகளாக இருக்கின்றன, கார்ப்பரேட் கம்பனிகளுக்காக மட்டுமே செயல்படுகின்றன என்பது தெள்ளத்தெளிவான உண்மை!

குடிமக்களாகிய நம்மைப்பற்றி சிந்திக்காத இவ்விரு அரசுகளையும் மக்களாகிய நாம், ஆட்சியிலிருந்து முற்றிலும் அகற்றுவதற்கு தயாராகுவோம் மக்களே!


சுசிலா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கொரோனா பெருந்தொற்று காலமும், அடிப்படை வாழ்வாதாரத்தை இழந்த அடித்தட்டு மக்களும்!”

அதிகம் படித்தது