மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கொரோனா போர் (சிறுகதை)

குமரகுரு அன்பு

Sep 11, 2021

siragu covid1

“burrythedead” ஆப்பிலிருந்து வந்த நோட்டிஃபிக்கேஷன் படி அவர்கள் இந்நேரம் இங்கே வந்திருக்க வேண்டும். புக் செய்து 2 மணி நேரமாகிவிட்டது, வழி தெரியாமல் எங்கேயாவது அலைந்து கொண்டிருக்கிறார்களா என்றும் தெரியவில்லை. நேற்றிரவு மூச்சுத் திணறலால் அவதியுற்ற தாத்தாவின் கடைசி மூச்சை கொரோனா எடுத்து சென்றுவிட்டது.

பதினோரு வருடங்களாயிற்று இந்த தொற்று வந்து. இன்னும் எல்லோருக்கும் வேக்ஸின் போடவுமில்லை முழு உலகமும் கொரோனாவின் 10வது அலையில் இப்போது சிக்குண்டு ஊரெல்லாம் போர் காலத்தைப் போல பிணங்கள் விழுந்தபடியிருக்கின்றன. குழந்தைகளும் பிறந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த பிஞ்சுகள் வாழ ஒரு நல்லுலகம் வேண்டுமென்று மனது பதற பதற வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதோ முடியும், இதோ முடியும் என்று அப்போது வரை முடியாமலே போய் கொண்டிருக்கிறதிந்த தொற்று.

இப்போதெல்லாம் வெளியே போக வேண்டுமெனில் பி.பி.ஈ கிட் அணிவது கட்டாயமென்றாகி விட்டது. வெளியில் செல்வதேயில்லை. காய்கறிகளை எப்படியாவது எந்த ஆப்பிலாவது எவ்வளவு விலை கொடுத்தாவது வாங்கி பழகிவிட்டோம்.

தாத்தாக்கு தொற்று ஏற்பட்டதிலிருந்தே நாங்கள் அவரிடமிருந்து விலகியே இருந்தோம். வீட்டின் கீழே இருந்த அறையில் அவரை வைத்துவிட்டு ஆம்புலன்ஸுக்கு ஃபோன் பண்ணி அவரை அழைத்து செல்ல முயற்சித்தோம். ஆனால், அவர் “மருத்துவமனைக்கு செல்ல மாட்டேன், அங்கே சென்றால் படுக்கைகள் இருக்குமா என்று தெரியவில்லை, டிவியில் காட்டுவதைப் பார்த்தால் எனக்கு மருத்துவமனைக்கு செல்லவே அச்சமாய் இருக்கிறது” என்று ஒரே முடிவாய் கூறிவிட்டார்.

பிறகு எங்கள் குடும்ப மருத்துவரை டாக்டோ ஆப்பில் தொடர்பு கொண்ட போது, “அவரை வீட்டிலேயே வைத்து கொள்ளுங்கள். இங்கே எந்த மருத்துவமனையிலும் படுக்கைகளில்லை, ஆக்ஸிஜன் தட்டுப்பாடும் பல மடங்கு இருக்கிறது. முடிந்த வரை போராடிக் கொண்டிருக்கிறோம். காப்பாற்ற முடிந்தவர்களை காப்பாற்றுகிறோம். உங்கள் தாத்தா வயதானவர் வாழ்ந்து முடித்தவர்தானே அதனால் வீட்டிலேயே வைத்து பார்த்துக் கொள்ளுங்கள். நான் பிரிஸ்கிரிப்ஷன் அனுப்பும் மருந்துகளை டாக்டோ ஆப்பிலேயே வாங்கி கொள்ளுங்கள், 25% தள்ளுபடியும் உண்டு!” என்று சொல்லிவிட்டார்.

மூன்று நாட்களாக, தாத்தாவின் அறையைப் பூட்டி வைத்து, என் கணவர் மட்டும் கீழே சென்று அவர் அறையைத் திறந்து உணவும் மருந்தும் வைத்துவிட்டு வந்து கொண்டிருந்தார்.

அப்படியிருந்த சூழலில்தான் நேற்று தாத்தா அறையிலிருந்த வீடியோ காமிரா மூலம் அவர் மூச்சு விட மிகவும் சிரமப்பட்டதும் அவர் நெஞ்சுக்கூடு மேலெழும்பி கீழிறங்கி துடித்ததையும் பார்த்து நாங்கள் பதறத் துவங்கினோம். நானும் என் கணவரும் என் 8 வயது பெண்ணை அவள் அறையில் இருக்க செய்துவிட்டு, கீழே போகலாமா என்று யோசித்தபடியே இருந்த நேரம் அவர் உடலின் கடைசி மூச்சை இழுத்து விழுங்கியது கொரோனா!!

எங்களுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. எவரின் உடலை எப்படி எங்கே கொண்டு போய் எரிப்பது, எங்கள் மத சடங்குளை எப்படி செய்வது என்று எதுவேமே புரியவில்லை!! எங்களின் சொந்தக்காரர்களுக்கெல்லாம் கூறியாயிற்று. அவர் என் அப்பா வழி தாத்தா, என் அப்பாவும் அம்மாவும் பத்தாண்டுகளுக்கு முன்னரே இறந்துவிட்டனர். என் அப்பா அவருக்கு ஒரே பிள்ளை, நான் என் பெற்றோருக்கு ஒரே மகள் ஆதலால் நெருங்கிய சொந்தம் என்று எவருமில்லை.

என் கணவர் ஒரு புறம் அவருக்குத் தெரிந்தவர்கள் அனைவருக்கும் ஃபோன் செய்து ‘என்னென்ன ஃபார்மாலிட்டிஸ் எப்படி செய்வதென்று’ கேட்டபடியிருந்தார். அது போக அவருக்குக் கிடைத்த முக்கியமான ‘அதிர்ச்சி செய்தி’ சுடுகாடுகள் அனைத்தும் ஏற்கனவே நிரம்பி வழிவதால் தகன மேடைகளும் கிடைக்காது என்பது… அப்போதுதான் அவரின் அலுவலக நண்பரின் மூலம் “burrythedead” ஆப்பைக் கண்டுபிடித்தார்.

இதோ அவர்கள் வந்துவிட்டார்கள் போல. கீழேயிருந்தபடி அவர்கள் செக்யூரிட்டி கேமிரா மூலமாக எங்களுடன் உரையாடத் துவங்கினர். அவர்கள் நான்கு பேர் வந்திருந்தார்கள். அனைவரும் பி.பி.ஈ கிட் அணிந்து முகம் மட்டும் தெரியும்படி நின்று கொண்டிருந்தார்கள்.

என் கணவர் அவர்களை உள்ளே வர சொல்லிவிட்டு கீழே கதவைத் திறந்து வைத்துவிட்டு மீண்டும் மேலே வந்துவிட்டார். அவர்கள் தாத்தா இருந்த அறைக்குள் சென்று தாத்தாவின் உடலை ஒரு பெரிய நீல நிற பாலித்தீனுக்குள் அடைத்து கொண்டிருப்பதை நாங்கள் மேலே எங்கள் அறையில் இருந்த டிவியில் பார்த்துக் கொண்டிருந்தோம். அவர்கள் மிக நேர்த்தியாக, தாத்தாவை அதில் அடைத்து அலுங்காமல் அவரைத் தூக்கிக் கொண்டு வெளியில் நின்று கொண்டிருந்த வண்டியில் ஏற்றிவிட்டு மீண்டும் உள்ளே வந்து, தாத்தா இருந்த அறை முழுவதையும் “சானிட்டைஸ்” செய்து கொடுத்துவிட்டு மீண்டும் கீழே செக்யூரிட்டி கேமிராவிலிருந்து பேசினர்.

“உங்க தாத்தாவோட டெத் சர்ட்டிஃபிக்கேட் நாங்களே அரேஞ்ச் பண்ணிடுவோம். என் கூட வந்த டாக்டர், தாத்தாவை செக் பண்ணி அதுக்கான ரிப்போர்ட்டை கொடுத்துட்டார். தாத்தா இருந்த அறையை நாங்க சானிட்டைஸ் பண்ணிடதனால நீங்க நம்பி இப்ப கீழே வரலாம். புரோட்டோகால் படி அவரை நாங்க எங்களோட கிரிமடோரியத்துக்கு கொண்ட போயி தகனம் செய்யும் வரை நீங்க ஆப்ல லைவ் ஸ்டிரீமிங்கல பாக்கலாம்!! வேற எதுவும் உங்க மத முறைப்படி சடங்கு செய்யனும்னா நீங்க ஆப்லையே அதையும் சூஸ் பண்ணிக்கலாம், நாங்க எங்களோட புரஃபசனல்ஸை வைத்து அதையும் செய்திடுறோம்!! மூன்றாம் நாள் பால் தெளித்தல் காரியம் செய்வது போன்ற சடங்குகளும் நீங்க ஆப்லையே கஸ்டமைஸ் பண்ணிக்கலாம்!! ஹோப் அவர் சர்வீஸ் வாஸ் சேட்டிஸ்ஃபேக்டரி, மறக்காம ரேட்டிங் மட்டும் போட்டுருங்க”… என்று சொல்லி தாத்தாவின் உடலையெடுத்து கொண்டு கிளம்பி விட்டார்கள்!!


குமரகுரு அன்பு

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கொரோனா போர் (சிறுகதை)”

அதிகம் படித்தது