மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கொலைகாரனை விருந்துக்கு அழைத்த இந்திய தலைமை அமைச்சர்

ஆச்சாரி

May 31, 2014

kolaikaaranai2கடந்த தேர்தலில் காங்கிரசை வீழ்த்தி பாரதீய சனதா கட்சிக்கு பெரும் வெற்றியை தேடித்தந்த திரு.நரேந்திர மோடிக்கு சிறகு இதழின் சார்பில் வாழ்த்துகளைக் கூறும் அதே வேளையில் தமிழ் நாட்டு மக்கள் அனைவரும் அவரது பதவியேற்பு விழாவை புறக்கணிக்க வைத்த பெருமையும் திரு.மோடியையே சேரும் என்பதை இங்கு நாம் நினைவு கூற வேண்டும். திரு.மோடியின் வெற்றி அவரது ஆதரவாளர்களுக்கும், காங்கிரசு அரசின் மக்களாட்சிக்கு எதிரான அயோக்கியத்தனத்தினால் மனமுடைந்து போயிருந்த பலருக்கும் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது என்பது உண்மை. ஆனால் பதவியேற்கும் முன்னரே தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலையைச் செய்த கொடூரன் இராசபக்சேவை பதவியேற்பு விழாவிற்கு அழைத்து மத்திய அரசு எக்காலத்திலும் தமிழர்களுக்கு எதிரானது என்று மீண்டும் நிறுவியிருக்கிறார் திரு.மோடி. ‘பழைய கள் புதிய மொந்தையில்’ என்கிற முதுமொழி போல பா.ச.க. அரசும் எவ்விதத்திலும் தமிழுக்கும், தமிழருக்கும் சார்பாக இருக்காது என்பதையும் நிறுவியிருக்கிறது இந்த புதிய அரசு.

kolaikaaranai5தமிழகத்தில் வரலாறு காணாத வெற்றியை அடைந்திருக்கிறார் மாண்புமிகு முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள். 39 தொகுதிகளில் 37 தொகுதிகளை வென்று இதுவரை எந்த தலைவரும் அடையாத வெற்றியை ஈட்டியிருக்கிறார். தமிழகத்தில் 7 கோடிக்கும் மேல் தமிழர்கள் வாழ்கிறார்கள், மேலும் உலகெங்கிலும் வாழும் தமிழர்களை சேர்த்தால் 9 கோடியையும் தாண்டும். 9 கோடி மக்களின் குரல்தான் 37 தொகுதிகளின் வெற்றி. முதல்வரின் கோரிக்கையையும், தமிழகத்தின் பெரும்பாலான தலைவர்களின் எச்சரிக்கையையும் நிராகரித்து கொலைகாரனை பதவியேற்பிற்கு அழைத்த திரு.மோடியின் செயல் மனித உரிமை ஆர்வலர்களினால் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டும்.

கடந்த ஆண்டுகளில், தமிழக சட்டமன்றத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழகத்தின் தலைவர்கள் இலங்கைக்கு எதிராக குரல் கொடுத்தனர். இலங்கையின் மீது பொருளாதார தடையைக் கோரியது தமிழக அரசு. தமிழர்களுக்கு எதிரான காங்கிரசு அரசு அவையெல்லாவற்றையும் குப்பையில் எறிந்து கொடூரன் இராசபக்சேவைக் காப்பாற்ற பல உத்திகளைச் கையாண்டது. அதன் உச்சம்தான் கடந்த மனித உரிமை அவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்காமல் விலகி கொலைகார இலங்கையை காப்பாற்ற முயற்சித்தது காங்கிரசு அரசு. ஆனால் மனித உரிமையில் ஈடுபாடு கொண்ட உலக நாடுகள் காங்கிரசு அரசின் அயோக்கியத்தனத்திற்கு உடன்படாமல் இலங்கையை குற்றவாளிக் கூண்டிலேற்றியது. இத்தேர்தலில் காங்கிரசு கூண்டோடு அழிந்ததில் அதிகம் மகிழ்ச்சியடைந்தவர்கள் தமிழர்கள்தான், ஆனால் அந்த மகிழ்ச்சியில் மண்ணையள்ளிப் போட்டிருக்கிறார் திரு.மோடி அவர்கள்.

kolaikaaranai3முதல்வரின் எச்சரிக்கையையும் தமிழக மக்களின் கோரிக்கைகளையும் நிராகரித்து இந்த அரசும் கொலைகாரனை அழைத்து விருந்தளித்தது தமிழர்களை மீண்டும் கொந்தளிக்க வைத்துள்ளது. 150,000 அப்பாவித் தமிழர்களை கொன்றழித்தவன் இந்த இராசபக்சே. இன்றும் தமிழர்களை முற்வேலி முகாம்களில் அடைத்து வைத்திருப்பவன் இவன். பல கொடுமைகள் இன்றளவிலும் தொடர்கின்றன, தாய் மண்ணிலே அகதிகளாக வாழும் அவலம் ஈழத்தமிழர்களுக்கு மட்டும்தான். இந்திய அரசும், இலங்கை அரசும் கையெழுத்திட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை நிறைவேற்றாமல் தமிழர்களுக்கு உரிமையை மறுத்துவருகிறது இலங்கை அரசு. சீனத்தின் நட்பைக் காட்டி இந்தியாவை மிரட்டிவருபவன் இந்த இராசபக்சே. இவனுக்கு ஒத்து ஊத இந்தியாவில் பலர் உள்ளனர். அவர்களில் முதன்மையாவர்கள், திரு.சுப்பிரமணிய சாமி, திரு.நரசிம்மன், இராம், திரு.சிவசங்கர மேனன், திரு.எம்.கே. நாராயணன், திருமதி.நிருபமா இராவ், திரு.விஜய் நம்பியார் போன்றவர்கள். இவர்கள் ஏன் இந்த கொலைகாரனை ஆதரிக்கிறார்கள் என்பது இவர்களுக்கு மட்டும்தான் தெரியும். இவர்களுக்கும் அந்த கொலைகாரனுக்கும் என்ன உறவோ? நாமறியோம் பராபரமே.

kolaikaaranai4இனப்படுகொலை செய்த இராசபக்சேவை அழைத்தது திரு.மோடியின் மனித உரிமையாளர்கள் அனைவருக்கும் பெரும் ஆத்திரத்தை மூட்டியுள்ளது அவர்கள் அறிக்கைகளிலிருந்து தெரிகிறது. இதற்கும்மேல் திரு.மோடி இன்னொரு துரோகத்தை செய்துள்ளார். அது, திருமதி.சுஷ்மா சுவராஜ் அவர்களை வெளியுறவு அமைச்சராக்கியது. திருமதி.சுவராஜின் தமிழர்களுக்கு எதிரான கருத்துகள், செயல்கள் ஆகியவற்றை நாம் நன்கறிவோம். இவரை அப்பதவியில் வைத்ததிலிருந்து திரு.மோடி ஒன்றை தெளிவாகக் அறிவுருத்திருக்கிறார், அது தன் அரசும் தமிழர்களுக்கு எதிரானதுதான் என்பது. ஒரு வேளை திரு.யஷ்வந்த் சின்ஹாவை அப்பதவியில் வைத்திருந்தால் தமிழர்களுக்கு எதிரானவர் அல்ல என்று எடுத்துக்கொண்டிருக்கலாம். எனவே பதவியேற்பதற்கு முன்பும், பதவியேற்றபின்பும் தமிழர்களுக்கு எதிரானவர் தான், என்பதை மீண்டும் மீண்டும் நிறுவித்திருக்கிறார் திரு.மோடி.

kolaikaaranai6பா.ச.க. கூட்டணி தமிழகத்தில் ஓரளவிற்கு வெற்றியடைந்துள்ளது. இதற்கு ஒரு பெரும் காரணம் மதிமுக பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்கள். தான் வெற்றியடையாவிட்டாலும் தானிருந்த கூட்டணி வெற்றியடைய வேண்டும் என்று உழைத்தவர் திரு.வைகோ. அவரது நெகிழ்ச்சியான கோரிகையையும் தூக்கியெறிந்து அவமானப்படுத்தியுள்ளார் திரு.மோடி. தில்லியில் போராடும் அளவிற்கு திரு.வைகோவை தள்ளியதுதான் இந்த புதிய அரசின் சாதனை.

kolaikaaranai7 இக்கூட்டணியை ஏற்படுத்த அரும்பாடுபட்டவர் திரு.தமிழருவி மணியன் அவர்கள். அன்று அவர் செய்தது பலருக்கு ஏமாற்றத்தையும் கோபத்தையும் தந்தது. அவரே இன்று கடும் கோபத்தில் வைகோ கூட்டணியிலிருந்து விலகுவார் என்று சூசகமாகத் அறிவித்துள்ளார். முதல் கால்வைக்கும் போதே தடுக்கி விழுந்திருக்கிறது பா.ச.க. கூட்டணி, மீண்டும் எழுமா என்பது போகப்போகத் தான் தெரியும். தமிழர்களுக்கு எதிராக ஆட்சி செய்த காங்கிரசு அரசும், அதற்குத் துணைபோன தி.மு.க.-விற்கு நேர்ந்த தோல்வியை இந்த அரசு நினைவில் வைத்து தமிழர்களுக்கு ஆதரவான நிலையை எடுக்கும் என்று நம்புவோம்.

தமிழீழச் சிக்கலுக்கு தனித் தமிழீழமே இறுதி தீர்வாக இருக்க முடியும். தமிழர்களால் சிங்களர்களுடன் இணைந்து இனி வாழ முடியாது என்பது உலகறிந்த உண்மை. பதறவைக்கும் நிழற்படங்களும், நிகழ்படங்களும் இதை தெள்ளத்தெளிவாகக் காட்டியுள்ளது. ஒன்றுபட்ட இலங்கை என்பதெல்லாம் போகாத ஊருக்கு வழி சொல்வது போலத்தான். உலகத் தமிழர்களும், தாயகத் தமிழர்களும் 13-வது சட்டத்திருத்தத்தை என்றோ புறக்கணித்து விட்டனர். ஈழத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் அதை ஒரு தீர்வாக ஏற்கவே இல்லை. இலங்கை அரசுடன் கூட்டணி வைத்துள்ள தமிழர் கட்சிகளே 13-வது சட்டத்திருத்தத்தை ஏற்கவில்லை. திரு.இராஜீவ் காந்தி ஒரு முறை தமிழர்களுக்கு எதிரான இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு தமிழர்களை ஏமாற்றினார். மீண்டும் தமிழர் விரும்பாததொரு தீர்வை இந்தியா தமிழர்கள் மேல் திணிப்பதை ஏற்க முடியாது. ஐ.நா. அவையின் தலைமையில் பொது வாக்கெடுப்பு எடுக்க வேண்டும். ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து வாழும் அனைத்து தமிழர்களின் வாக்குகளையும், கோரிக்கைகளையும் ஏற்று தனித் தமிழீழம் அமைப்பதே இச்சிக்கலுக்கு உகந்த தீர்வு.

மேலுமொன்று, தமிழீழ நாடு இந்தியாவிற்கு என்றுமே பாதுகாப்பாகவே இருக்கும், கடந்தகால வரலாறு இதை தெளிவாகக் காட்டுகிறது. இன்றும் காந்தி சிலைகளும், இந்திரா காந்தி, திரு.எம்.ஜி.ஆர் சிலைகளும்தான் ஈழத்தில் அதிகம் உள்ளது. இராமகிருஷ்ண மடங்களும், விவேகானந்தர் மடங்களும் அதிகமுள்ளன. சைவம் தழைத்த மண் ஈழ மண். தொன்மையான சிவாலயங்களுள் முக்கியமானது மன்னார் மாவட்டத்திலுள்ள திருக்கேதீசுவரம் சிவன் கோவில். ஆயிரக்கணக்கானக் கோவில்களை இடித்து தரைமட்டமாக்கியுள்ளது இலங்கை. மேலும், இந்திய அரசு தொடர்ச்சியாக இவ்வளவு துரோகங்களைச் செய்தும் ஈழத்தமிழர்கள் இந்தியாவிற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதில்லை. இன்றும் இந்தியா தங்களை காப்பாற்றும் என்றே நம்பியுள்ளனர். என்றுமே அவர்கள் இந்தியாவிற்கு பாதுகாப்பாகத்தான் வாழ்வார்கள். ஆனால் இலங்கையோ இந்தியாவிற்கு எக்காலத்திலும் நட்புநாடாகவிருந்ததில்லை. சீனப் போரிலும், பாக்கித்தான் போரிலும் இந்தியாவிற்கு எதிராகவே இலங்கை இருந்துள்ளது. இது ஏன் இந்திய வெளியுறவு, பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரியவில்லை? இல்லை இவர்களுக்கு இந்தியாவின் நலம் முக்கியமில்லையா? இலங்கைக்கும் இவர்களுக்கும் என்ன உறவு? தெளியுமா இந்த புதிய அரசு? காங்கிரசு அரசின் இத்துரோகங்களினால் இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது. சீனம் அங்கு நன்கு காலூன்றியுள்ளது பாதுகாப்பு அறிவுசீவிகளுக்கு நன்கு தெரிந்திருக்கும்.

எனவே, இந்தியா தமிழீழத்தை உருவாக்கி தமிழர்களுக்கு தான் செய்த பாவத்தை கழுவ வேண்டும். செய்யுமா மோடி அரசு? இந்திரா காந்தி போன்று மோடி செயல்படுவாரா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

In any case, the numbers speak for mobile spy app themselves

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கொலைகாரனை விருந்துக்கு அழைத்த இந்திய தலைமை அமைச்சர்”

அதிகம் படித்தது