கோம்பிப் பாட்டு(கவிதை)
தேமொழிJul 9, 2016
எப்பொழுதும் நான் குறிப்பிடவிரும்பும் ஒன்று;
பெருமையும், இறுமாப்பும், அரட்டையும்
உறுதியாகச் சொல்ல உதவாத அரைகுறைப் பார்வையும்
பேசுபவர்மீது நாம் கொண்ட மதிப்பைக் குலைத்துவிடும்.
இருப்பினும் உலகையே அவர் சுற்றி வருவார்
பார்ப்பதையெல்லாம் பார்த்து வருவார்
பயணம் முடித்தே வந்தார் என்றால்
பத்துமடங்கு துணிவும் அதிகரித்துவிடும்
முயன்றாலும் அவரைப் பேசி நிறுத்தவும் இயலாது
முட்டாள் பயணியும் உங்கள் வாயை அடைத்துவிடுவார்
“நான் நினைப்பது சரி என்றால், எனக்கு உங்கள் அனுமதியுண்டு
நான் பார்த்திருக்கிறேன், நிச்சயமாக நான் அறிந்திருப்பேன்”
என்பவரிடம் பணிந்து போவதைத் தவிர வேறு வழியில்லை
அவரின் விருப்பத்தை மறுக்க முடியாமல் உடன்படுவீர்.
நட்புடனே அத்தகைய நண்பர் இருவர் பயணமாகி
நடந்தார் கடந்தார் அராபியப் பாலையை
வழியெல்லாம் தொடர்ந்தது அவர்தம் உரையாடல்
இதைப்பற்றியும் பேசினர், அதைப்பற்றியும் பேசினர்
எதைப் பற்றியும் பேசினர், அத்துடன் தாம் கண்ட
கோம்பியைக் குறித்த விவாதமும்தான் செய்தனர்
வித்தியாசமான விலங்கென்றே வியந்தார் ஒருவர்
“விண்ணின் கீழுள்ள இவ்வியனுலகு என்றும் கண்டதுண்டோ!
பல்லி போன்ற நீண்ட மெலிந்த உடலுடன்
பாம்பைப் போன்ற நாக்குடன், மீனின் தலையுடன்
பாதத்தில் கூரிய நகத்துடன் பிளவுபட்ட மூன்று விரல்களுடன்
பின்புறம் மிகநீண்டதொரு வாலுடன் மெல்ல மெல்ல
ஊர்ந்த அந்தக் கோம்பி கொண்டதோர் அழகிய நிறம்!
யாரேனும் கண்டதுண்டோ அது போலத்தான் ஒரு நீல நிறம்?”
“நிறுத்து… நிறுத்து” என்றே விரைவில் வந்தது தோழனின் மறுப்பு
“பார்த்தேன் என்னிரு கண்களால் அதன் அழகிய பச்சை வண்ணம்
படுத்தே கிடந்தது தனது வாயை அகலத் திறந்த வண்ணம்
கதிரவனின் ஒளிக்கதிரில் தன்னைச் சூடேற்றிய வண்ணம்
உடலை நீட்டி ஒய்யாரமாக ஓய்வெடுத்த கோம்பியை
நான் கண்டபொழுது காற்றைக் குடித்தே அது களித்திருந்தது.
“தோழா, நீ பார்த்த கோம்பியைத்தானே நானும் பார்த்தேன்
தோலின் நிறம் நீலம்தான் என்று நானும் உறுதியாகச் சொல்வேன்
நீண்டு பரவியிருந்த மரத்தின் கீழ் நானும் பார்த்தேன்
நீண்ட குளிர்நிழலில் ஓய்ந்து கிடந்தது அந்த நீலநிறக் கோம்பி”
“பச்சை நிறம் ஐயா, அது பச்சை என்றே உறுதியாய்ச் சொல்வேன்”
“பச்சையா அந்த நிறம்?” பதிலுக்கு கொதித்தார் தோழர்
“பார்வையற்றவன் நான் என்ற எண்ணமோ உமக்கு?”
“பாதிப்பில்லை அதனால் உமக்கு”, என்றார் நண்பர்
“பயனற்ற வகையில் பார்க்க உதவும் உமது
பார்வை இருந்தால்தான் என்ன? போனால்தான் என்ன?”
விவாதம் வளர்ந்தது சச்சரவு முற்றியது
வார்த்தைகள் வெடித்தன சண்டையில் முடிந்தது
நல்ல வேளை, வந்தே சேர்ந்தார் மூன்றாமவர்
அவ்வழி வந்த அவரிடமே வாதத்தை முன்வைத்தனர்
அறிந்தால் சொல்வீர் அன்பரே என்றே வேண்டினர்
“அந்தக் கோம்பியின் நிறமென்ன? பச்சையா நீலமா?”
“ஐயன்மீர் நிறுத்துவீர் உமது கூச்சலை” என்றார் வந்தவர்
“ஐயமின்றி சொல்வேன் அதன் நிறம் பச்சையோ நீலமோ அல்ல,
அந்த விலங்கினை நேற்றிரவு நானும் பிடித்தேன்
அதன் நிறத்தை விளக்கொளியில் நன்கே பார்த்தேன்
நான் பார்த்த கோம்பியின் நிறம் கரி போன்றதொரு கருப்பு
விழிக்காதீர்கள், என்னிடம்தான் இருக்கிறது அது இப்பொழுதும்
காட்டுவேன் உங்களுக்கு, வெற்றி பெற வேண்டிக் கொள்ளுங்கள்”
“நான் வாழ்வையே பணயம் வைப்பேன் அதன் நிறம் நீலமென்று”
“நானும் சத்தியம் செய்வேன், அதைப் பார்த்தவுடன்
நீங்களும் ஒப்புக்கொள்வீர் அதன் நிறம் பச்சையென்று”
“ஆகட்டும், உங்கள் ஐயம் அறவே நீங்கட்டும்
நானும் வெளியே விடுவேன் கோம்பியை” என்றார் வந்தவர்
“உங்கள் கண்முன் வெளிவரும் கோம்பி கருமையாக மட்டும்
இல்லையெனில் கொன்றே நானும் தின்றிடுவேன்” என்றார்
சொல்லியவண்ணம் நன்கு பார்வையில் படுமாறு விடுவித்தார்
கோம்பிதனை வெளியே, ஆகா! வெண்மையன்றோ அதன் நிறம்!
இருவரும் வெறித்து நோக்க, வந்தவரோ வியந்து நோக்கினார்.
திகைத்து பேச்சிழந்த கூட்டத்தில் முதலில் பேசத் துவங்கியதும்
வெளியே வந்த கோம்பியே, “என் மக்களே!” என அவர்களை அழைத்தது
“நீங்கள் சொன்ன யாவும் சரிதான், அவையாவும் பிழையும்” என்றே அறிகுவீர்
“நீங்கள் கண்டதை அடுத்தமுறை பிறரிடம் விவரிக்கும் பொழுது
உங்களைப் போன்றே பிறரும் கண் உடையவர் எனவும் எண்ணுவீர்
உங்கள் பார்வையை நம்புவதைக் காட்டிலும் தான் கண்டதையே
பிறர் நம்ப விரும்பினால் அதில் வியப்பில்லைதான் காண்பீர்”
குறிப்பு:
ஜேம்ஸ் மெர்ரிக் (1720-1769) அவர்களின் ‘கேமலியான்” என்ற ஆங்கிலக் கவிதையின் மொழிபெயர்ப்பு.
மொழிபெயர்த்தவர்: தேமொழி
மூலம்:
The Chameleon
By James Merrick (1720–1769)
(http://www.bartleby.com/380/poem/421.html)
தமிழில் இப்பாடலை “கோம்பி விருத்தம் ” என்ற தலைப்பில் வெ.ப. சுப்பிரமணிய முதலியார் 1897 இல் மொழியாக்கம் செய்துள்ளார். வெ. ப. சு. வின் கோம்பி விருத்தம் பாடலின் மூலமும் உரையும் மதுரை திட்டத்தின் கீழ் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது
(http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0448.html)
தேமொழி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “கோம்பிப் பாட்டு(கவிதை)”