மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கோவிட் காலத்து அமெரிக்கச் செய்தி ஊடகங்களும் அவை அடையும் மாறுதல்களும்

தேமொழி

May 29, 2021

செய்திகள் படிப்பது, பார்ப்பது, கேட்பது என்று, செய்தித்தாள்கள், தொலைக்காட்சி, வானொலிகள் மூலம் பயனாளர்களைச் சென்றடைகின்றன.  படிப்பது என்பது அச்சு செய்தி ஊடகங்கள் என்பதில் இருந்த நிலை மாற்றமடைந்து எண்ணிம (டிஜிட்டல் / digital) இணைய ஊடகங்கள் என்ற நிலையை எட்டிவிட்டது.  படிப்பது பார்ப்பது கேட்பது ஆகிய மூன்று முறைகளையுமே இணையத்தின் மூலம் பெறமுடியும் என்ற நிலையில் இளைய தலைமுறையினர் அச்சு செய்தித்தாள்களில் ஆர்வம் காட்டுவதில்லை.

1990கள் முதற்கொண்டு தொழில்  நுட்ப வளர்ச்சி காரணமாக தொலைக்காட்சி  செய்தி நிறுவனங்கள், இணைய வழி ஊடகங்கள் போன்றவற்றுடன் போட்டியில் நிற்க இயலாமல் அழிவை நோக்கி நடை போடத் துவங்கியிருந்த  அச்சு செய்தித்தாள் நிறுவனங்களின்  நிலை, கோவிட் தீ நுண்மி பொதுமுடக்கக் காலத்தில் மேலும் மோசமடைந்துள்ளது.  சிறுவணிக நிறுவனங்களைக்  காக்கும் நோக்கில் அமெரிக்க அரசு பொருளுதவிகள் செய்து முடக்கக்கால நிலைமையைச் சீர் செய்யப் பல முயற்சிகள் எடுத்து வருகிறது.  அதன் மூலம் அரசின் ‘ஊதியப் பாதுகாப்புத் திட்டம்’ (Paycheck Protection Program / PPP) என்பதன் கீழ் சுமார் 2,800 சிறு செய்தித்தாள் நிறுவனங்கள் கடனுதவி பெற்று தொழிலைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

கடந்த ஆண்டில் செய்தித்தாள் நிறுவனங்களுக்கு 42% அளவில் விளம்பரங்களினால் வரும் வருமானத்தில் (advertising revenue) இழப்பு ஏற்பட்டுள்ளது.  இது பொருளாதார  மந்த நிலையில் (recession) இருந்து மீண்டு எழ முடியாமல் தவித்துக் கொண்டிருந்த செய்தித்தாள் நிறுவனங்களுக்கு அடிக்கு மேல் அடி விழுந்துள்ள நிலை. விளம்பரத்தால் கிடைக்கக் கூடிய வருமானங்கள்கூகுள், பேஸ்புக் நிறுவனங்களுக்குச் செல்லத் தொடங்கிவிட்டன. விளம்பர வழியாகக்  கிடைக்கும் வருமானமும் குறைந்துவிட, இணையவழி மாற்றத்தின் காரணமாக அச்சு செய்தித்தாள் வாங்கும் வாசகர் எண்ணிக்கையும்  குறைந்து விற்பனை வருமானம்  (circulation revenue) 8% அளவு குறைந்துவிட இரு வழியிலும் வருமானத்தில் சரிவு நிலை ஏற்பட்டுள்ளதால்,  50% வருமானம் இல்லாத நிலையில் செய்தித்தாள் நிறுவனங்கள் இயங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

50,000 முதல் 99,999 பிரதிகள் அச்சிடுபவை சிறு பத்திரிக்கைகள்.  நடுத்தர அளவு அச்சு செய்தித்தாள் நிறுவனங்கள் 100,000 முற்கால 249,999 பிரதிகள் வெளியிடுபவை. 250,000 பிரதிகளுக்கு மேலாக அச்சு செய்தித்தாள்களை வெளியிடுபவை பத்திரிக்கைத் துறையில் பெருநிறுவனங்களாக வகைப்படுத்தப்படுகிறது. அமெரிக்காவின் முதன்மை நிலையில் அதிக வாசகர்களுடன் பெரிய செய்தித்தாள் நிறுவனங்களாக இருக்கும் தி நியூயார்க் டைம்ஸ், தி வால் ஸ்ட்ரீட்ஜர்னல், தி வாஷிங்டன்  போஸ்ட் ஆகியவை ஏற்கனவே காலத்திற்கு ஏற்ப எண்ணிம முறைக்கு மாறத் துவங்கிவிட்டன. கடந்த 14 ஆண்டுகளில் செய்தித்தாள் நிறுவனங்களின் ஊழியர் எண்ணிக்கை 70,000 இல் இருந்து 40,000 கக்கும் கீழ் குறைந்துவிட்டது.  சற்றொப்ப பாதி நிறுவனங்கள்  ஊழியர்களை வேலையை விட்டு நிறுத்திவிட்டன, பல வட்டார சிறு செய்தித்தாள்கள் தங்கள் நிறுவனங்களையே மூடிவிட்டன.

மேலும் சில,  மற்ற சிறு நிறுவனங்களுடன்  இணையும் முயற்சியில் இறங்கியுள்ளன.  மற்றும் சில, இணைய வழியில் மட்டுமே இயங்கப் போவதாக அறிவித்துள்ளன. இவற்றில் 100 ஆண்டுகளுக்கு மேல் இயங்கிவரும் வட்டார சிறு செய்தித்தாள் நிறுவனங்கள் பலவும் அடங்கும்.

1940 முதல்தான் செய்தித்தாள் விற்பனை குறித்த தரவுகள் சேகரிக்கப்பட்டது. இன்றைய நாட்களில் வெளியாகும் செய்தித்தாள்களின் எண்ணிக்கை 80 ஆண்டுகளுக்கும் முன்னிருந்ததைவிடக் குறைவாகிவிட்டது. தற்பொழுது சுமார் 10% அமெரிக்கர்களே அச்சு செய்தித்தாள் படிக்கிறார்கள்.  அச்சு செய்தித்தாள் படிப்பவர்கள் முதுமையடையும் பொழுது, படிக்க விரும்பினாலும் பார்வைத்திறன் குன்றியவர்களாக தொலைக்காட்சியுடன் தங்கள் செய்தி அறிதலை நிறுத்திக்கொள்கிறார்கள். மிகவும் மூத்த குடிமக்களில் இணையம் திறன்பேசி போன்றவற்றைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் மிகவும் குறைவு.  ஸ்மார்ட்ஃபோன் என்ற திறன் பேசிகளும் மக்களிடம் வழக்கத்திற்கு வந்த பிறகு செய்தி ஊடகத் துறையில் போட்டிதான் அதிகமாகியுள்ள தேதவிரச் சற்றும் குறையவில்லை.  திறன்பேசி மற்றும் இணையவழியில் செய்தி பெறுவோர் பெரும்பாலும் இளைய தலைமுறையினரே. அவர்களோ லேண்ட்லைன் என்று குறிப்பிடும் சென்ற நூற்றாண்டு தொலைபேசிகள், கேபிள் நியூஸ் செய்திகள், சாட்டிலைட் தொலைக்காட்சிகள் என அனைத்தையும் கைகழுவிவிட்டு,  செல்போன் ஸ்ட்ரீமிங், கார்ட்கட்டிங் என்று பாதை மாறி பயணிக்கத் தொடங்கிவிட்டனர்.  எவ்வாறு இணைப்புகளைத் துண்டித்துக் கொண்டு மெய்நிகர் உலகில் தங்களுக்கு வேண்டியவற்றைத் தேடியடைவது என்பதை நன்கு அறிந்திருப்பவர்கள் இளைய தலைமுறையினர். சொல்லப்போனால் அவர்கள்தான்  ஊடக உலகை தங்களுக்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  இது போன்ற மாற்றங்களை ஒரு பரிணாம வளர்ச்சியாகக் காண்கையில் அச்சு செய்தித்தாள்கள்  மேலும் குறைந்துவிடும் என்றே கணிக்கலாம்.

திறன்பேசி வழியே விரல் நுனியில் தகவல்களைப் பெற்றுக்கொள்ளப் பல செயலிகள் சந்தையில் தோன்றியுள்ளன. இந்தச் செயலிகளுக்கு இடையிலும் மக்களைக் கவர போட்டிகள் அதிகம்.  இணைத்துள்ள படத்தில் கூகுள் பிளே தளத்தில் ஆண்டிராய்ட் திறன்பேசிகளுக்காகக் கிடைக்கும் செயலிகளில் சிலவற்றைக் காணலாம்.   பயனாளர்கள் எத்தனை நட்சத்திரங்கள் கொடுத்து இச்செயலிகளை மதிப்பீடு செய்துள்ளார்கள் என்பதன் அடிப்படையில், அவர்களின் பரிந்துரையின் பேரில்   செயலிகளைத் தேவைக்கேற்ப தேர்வு செய்து கைபேசியில் தரவிறக்கி பயன் கொள்ளலாம். பெரும்பாலும் இவற்றிலும் செய்தித்தாள்களில் செய்திகளை வகைப்படுத்துவது போலவே செய்திகள்  தொகுக்கப்பட்டுள்ளன. அத்துடன் வட்டாரத்தில் நிகழும் குற்றவியல் செய்திகள், கொரோனா பாதிப்பு புள்ளிவிவரங்கள், தடுப்பூசி வழங்கும் இடங்களைப் பற்றிய  தரவுகளும், வானிலை செய்திகளும் அளிப்பது மிக்க பயன் தரும் வகையில் அமைந்திருக்கிறது. செயலிகளுக்கு இடையே நடக்கும் போட்டியால் செய்தித் தேர்வுகளும் பகிர்வுகளும் நன்கு செம்மைப்படுத்தப்பட்டு  அமைந்திருக்கின்றன என்றே சொல்லலாம்.

Siragu APPS

பெரும்பாலும் புதிய செய்திகள், தலைப்புச் செய்திகள், நாட்டு நடப்புகள், உலகச் செய்திகள் என்ற அடிப்படையில் வழங்கப்படும் செய்திகளில் படிப்பவர் எந்த வகை செய்தியில் அதிக ஆர்வம் காட்டி, தலைப்பைப் படித்துவிட்டுக் கடந்துவிடாமல், அதைச் சொடுக்கி விரிவான செய்தியைப் படித்து (click through), தொடர்ந்து அது தொடர்பான செய்திகளை மேலும் மேலும் தேடித்தேடிப் படிக்கிறாரோ அந்த வகை  செய்திகளை அவருக்கு வழங்கும் வகையில் செயலிகள் வடிவமைக்கப்படும். அதிலிருந்து படிப்பவரின் ஆர்வம்  பற்றிய புரிதலைசெயலி நிரல்கள் அறிந்துகொள்ளும்.

புதுச் செய்திகள், தலைப்புச் செய்திகள், வட்டாரச் செய்திகள், உலகச் செய்திகள், உள்நாட்டுச் செய்திகள், அறிவிப்புகள், கொரோனா வைரஸ் செய்திகள், உடல் நலம், பொழுதுபோக்கு, விளம்பரங்கள், உறவுகள், விளையாட்டு, அறிவியல், உணவு,  விற்பனை பேரங்கள், பயணம், வானிலை, தொழில்நுட்பம், தனிப்பட்டவர் பொருளாதாரம், இராணுவம், போக்குவரத்து, செல்லப்பிராணிகள் வளர்ப்பு, வீட்டை மேம்படுத்துதல், அழகுக் குறிப்புகள்,  இயற்கை வாழ்வு, விலங்குகள், உடற்பயிற்சி, விளையாட்டுகள், ஜாதகம், காமிக்ஸ் என்ற பல பிரிவுகளில் செய்திகளை அவரவர் விருப்பம் தேர்வுகளுக்கு ஏற்ப படிக்கலாம்.   “The news aggregator collects all the local and national news that matters to you” என்ற உறுதிமொழி செயலியைத் தரவிறக்கம் செய்கையில் கொடுக்கப்படுகிறது. செயலிகள் நமக்குத் தேவையானவற்றைத் தரவரிசைப் படுத்திக்கொள்ளவும் வாய்ப்பளிக்கும்.

அவ்வாறு  ‘நியூஸ் பிரேக்’ (News Break) என்று பயனாளர்களால்  4.2 ★★★★ தர மதிப்பீடு செய்யப்பட்ட செயலி பயனாளர்களைச் செய்திப்பிரிவுகளைத் தரவரிசைப்படுத்தவாய்ப் பளிக்கும் இடத்தில், ஒவ்வொரு பிரிவுச்செய்திகளையும் எத்தனை மக்கள் படிக்கிறார்கள் என்ற செய்தியையும் கொடுக்கிறது. எடுத்துக்காட்டாக:  ‘”Health” -  40.8M reading about this; Healthy living advice & more’ என்று குறிப்பிடுகிறது.  ஆய்வு நோக்கில் இது ஓர் அரிய தகவல் எனக் கொள்ளலாம். ஒருவர் எத்தகைய செய்திகளில் ஆர்வம் கொண்டுள்ளார் என அறிய அவரிடமே கேட்டு அறிவதைவிட, அவரைப் பற்றிய தரவுகளிலிருந்து ஆய்வாளர்களும் தெரிந்து கொள்ளலாம்.  அது மிக உண்மையாகவும் நம்பகத் தன்மை கொண்டதாகவும் இருக்கும். பயனாளர் கொண்டிருக்கும் சார்பு நிலை, மறைத்துப் பேசுதல், பொய் சொல்லுதல் போன்றவற்றால் பகிரும் பிழையான தகவலை  ஆய்வாளர்கள் எதிர்கொள்ளத் தேவையிருக்காது.

நூல்களின்  விற்பனை அடிப்படையில் மக்கள் “உடல்நலன், செல்வம், உறவுகள்” (Wealth, Health, Relationship) குறித்த தகவல்களையே எக்காலத்திலும் மக்கள் விரும்பித் தேடிப் படிப்பார்கள் என்று அறியப்பட்டுள்ளது.  “When wealth is lost, nothing is lost; when health is lost, something is lost; when character is lost, all is lost” என்ற வழக்கையும் நினைவு கூரலாம். உலகெங்கிலும், காலமெல்லாம்,  வரலாறு நெடுக பார்க்கும் பொழுது மக்கள் அடைய விரும்புபவை இவையே. மானுடத்தின்  அடிப்படை செயல்பாடுகளின் தேவைகள் இதை நோக்கியே அமைவது வழக்கம். உடல்நலன், அழகு, நீண்ட வாழ்வு, நல்ல உணவு போன்றவை உடல்நலம் என்ற பிரிவுக்குள் வரும்.  நல்ல வேலை வாய்ப்பு, பணம், சேமிப்பு, முதலீடு போன்றவை பொருளாதாரம் பிரிவின் கீழ் வரும்.  நல்ல நண்பர்கள், உறவுகள் தேடல், குழந்தை வளர்ப்பு, மனமகிழ்ச்சி, மனவளம் மேம்பாடு போன்றவை உறவுகள் பிரிவின் கீழ் வரும்.   நியூஸ் பிரேக்செயலி தரும் செய்திகள் ஏறத்தாழ இதே வகையில் அமைவதைக் காணலாம். கொரோனா செய்திகளைப் பலர் படிப்பது தரவுகள் மூலம் தெரிகிறது.  இங்கு கவனத்திற்கு வருவது ஆன்மிகம் என்ற பிரிவு இல்லாதிருப்பது.  ஜோதிடம் போன்றவற்றைப் படிப்பதில் மக்கள் அதிக அக்கறை காட்டாததும் தெரிகிறது.  இந்தியா செய்தி ஊடகங்களில் இது மிகவும் மாறுபட்டிருக்கலாம்.

Siragu news categories

வட்டார வானிலை, குற்றவியல் செய்திகள், போக்குவரத்து தகவல்கள், அறிவிப்புகள், வேலைவாய்ப்புகள் போன்றவை வட்டாரச் செய்திகளின் தனிப்பட்ட சிறப்பு.  அவையே செய்தித்தாள் நிறுவனங்களின் உயிர்நாடியாக இதுகாறும் இருந்து வந்தன.  ஆனால் இவை அனைத்தும் நிகழ் நேரத்திலேயே செயலிகள் மூலம் பெறக்கூடிய நிலை இன்று வந்துவிட்டது. வட்டாரச் செய்தி அளிப்பதை முதன்மைக் குறிக்கோளாகக் கொண்டு மக்களின் தேவைக்காக வடிவமைக்கப்பட்டசெயலி ஒன்றின் மூலம், பயனாளர் பயன்கொள்ளும் அடிப்படையில், மக்களின் செய்தித்தேவையைத் தெளிவாகவும்  எளிதாகவும் விரைவாகவும் வட்டாரச் செய்திகளையும் அறிய முடிகிறது.

புகழ்வாய்ந்த பெரிய செய்தி நிறுவனங்களே பொருளாதார மந்த நிலையிலும் இடர்க்காலத்திலும் அச்சு செய்தித்தாள்கள் வெளியிடுவதைக் குறைத்து எண்ணிம வடிவ ஊடகமாக மாறும் நிலையையும்;  திறன்பேசி பயன்பாடு மக்களிடையே மக்களிடம் அதிகரித்து அவற்றின் செயலிவழியாக மக்கள் தங்களின் தேவைக்கேற்ப செய்திகளைப் பெற்றுக் கொள்ளும் நிலையையும் கொண்டு கணித்தால்,  என்னதான் அரசு உதவி நல்கினாலும் வட்டார அளவில் வெளியாகும் சிறு அச்சு செய்தித்தாள்கள் இனி அமெரிக்காவில் மீண்டு வருவது இயலாத ஒன்று.  வட்டார செய்திகளை மற்றவர்களுக்கு வழங்கும் நிறுவனங்களாக வேண்டுமானால் அவர்கள் மாறலாம், ஆனால் அந்த மாற்றத்திற்கும் வட்டார தொலைக்காட்சி நிறுவனங்களுடன் செய்தித்தாள் நிறுவனங்கள் போட்டியில் இறங்க வேண்டியிருக்கும். குறிப்பாக இளைய தலைமுறையினர் செய்திகளை சமூக வலைத்தளங்கள் மூலம் பெற்றுக் கொள்ளும் முறை வெகுவாக வளர்ந்துவிட்ட நிலையில் சிறுபத்திரிக்கைகள் அச்சு வடிவில் இயங்க முயல்வது இனி வெற்று முயற்சி.

______________________________________________________________

References:

[1] Coronavirus-Driven Downturn Hits Newspapers Hard as TV News Thrives

https://www.journalism.org/2020/10/29/coronavirus-driven-downturn-hits-newspapers-hard-as-tv-news-thrives/

[2] Newspapers Fact Sheet

https://www.journalism.org/fact-sheet/newspapers/

[3] Nearly 2,800 newspaper companies received paycheck protection loans, and most were under $150K

https://www.pewresearch.org/fact-tank/2020/10/29/nearly-2800-newspaper-companies-received-ppp-loans/

[4] A third of large U.S. newspapers experienced layoffs in 2020, more than in 2019

https://www.pewresearch.org/fact-tank/2021/05/21/a-third-of-large-u-s-newspapers-experienced-layoffs-in-2020-more-than-in-2019/

[5]  The coronavirus has closed more than 70 local newsrooms across America. And counting.

https://www.poynter.org/locally/2021/the-coronavirus-has-closed-more-than-60-local-newsrooms-across-america-and-counting/

[6] 10 charts about America’s newsrooms

https://www.pewresearch.org/fact-tank/2020/04/28/10-charts-about-americas-newsrooms/

[7] 10 facts about the changing digital news landscape

https://www.pewresearch.org/fact-tank/2016/09/14/facts-about-the-changing-digital-news-landscape/

[8] Key findings about the online news landscape in America

https://www.pewresearch.org/fact-tank/2019/09/11/key-findings-about-the-online-news-landscape-in-america/

[9] News Break: Local Breaking Stories & US Headlines (- https://www.newsbreak.com/)

https://play.google.com/store/apps/details?id=com.particlenews.newsbreak&hl=en_US&gl=US


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கோவிட் காலத்து அமெரிக்கச் செய்தி ஊடகங்களும் அவை அடையும் மாறுதல்களும்”

அதிகம் படித்தது