செப்டம்பர் 26, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

கோவூர் கிழாரின் அறிவுரை!! (கவிதை)

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Jun 8, 2019

siragu kovur kilar1

தொண்டை நாட்டில் கோவூரெனும் ஊரில்
தோன்றிய கோவூர் கிழார் புறநானூற்று
பாடலொன்றில்  சோழன் நலங்கிள்ளி நெடுங்கிள்ளி
பகை தகர்த்து ஒன்றிணைய அறிவுரை வழங்கினார்
அக்காலத்து புலவர்கள் பரிசிலும் பெறுவர்
அறிவுரையும் தருவோரென அழகாய் செப்பிடும்
பாடலிது, பாங்காய் கேட்டு பயன்பெறம்மா !!

நலங்கிள்ளி உறையூரை முற்றுகையிட உள்ளே
நெடுங்கிள்ளி அடைப்பட்டானே, போர் தடுக்க
புலவரும் கூறினார் அறிவு மொழி
பூரிப்படையும் தமிழர் ஒற்றுமை மொழி !!
படை திரட்டி பகை கொண்டு
பாடையேற்ற துடிப்பது இனயெதிரி அன்று
உன் உதிரவழி தொடர்பு, வேப்ப மாலை
அணிந்த பாண்டியனும் அல்லன்,பனை
அணிந்த சேரனும் அல்லன், ஆத்தி மாலை
சூடிடும்யுன் பேரரசின் மறு ஆற்றல்,
போரில் யாரொருவர் தோற்பினும் தோற்பது
சோழப் பேரரசே, இருவரும் வெற்றிபெற
இயற்கையது அருளாது,சோழர்களுக்குப்
பொருந்தா செய்கையிது, செங்களத்தில்
யார் தலை உருண்டாலும் சேரனும்
பாண்டியனும் மகிழ்ச்சி கூத்தாடுவர்,
உண்மையுணர்ந்து ஒற்றுமை பேணுக, என்றே
பகிர்ந்து போரும் தடுத்தாரே, பழம்
தமிழ்நாட்டின் புகழும் நிலைத்ததம்மா

முழு பாடல்:

இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்,
கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்,
நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்றே, நின்னொடு
பொருவோன் கண்ணியும் ஆர் மிடைந்தன்றே,
ஒருவீர் தோற்பினும் தோற்ப நும் குடியே,
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே, அதனால்
குடிப்பொருள் அன்று நும் செய்தி, கொடித்தேர்
நும்மோர் அன்ன வேந்தர்க்கு
மெய்ம்மலி உவகை செய்யும் இவ் இகலே.

சொற்பொருள் :
இரும் பனை – பெரிய பனை மரம், வெண்தோடு – வெள்ளை நிற இலை
மலி உவகை – மிகுந்த மகிழ்ச்சி, கண்ணி- மாலை


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கோவூர் கிழாரின் அறிவுரை!! (கவிதை)”

அதிகம் படித்தது