மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சங்ககால மக்கள் கொண்டாடிய விழாக்களும் அவற்றின் தன்மைகளும்

இல. பிரகாசம்

Apr 30, 2016

sanga kaala vizhakkal15

எல்லாவித மக்களுக்கும் வெவ்வேறு வகையான விழாக்கள் சிறப்புடையதாகப் பார்க்கப்படுகின்றன. அவற்றிற்கு முக்கியக் காரணம் அவ்விழாக்களில் சில அவர்களது சமயம் சார்ந்தும் காணப்படுவதுமாகும். அவைகள் கொண்டாடப்பட்ட காலங்கள், அதன் தன்மைகள் பற்றிய குறிப்புகள் அவர்களது இலக்கியங்கள் மூலமாகவோ அல்லது அவர்களது காலத்திய தொல்லியல் ஆய்வுகள் மூலமாகவோ மற்றும் பயணக் குறிப்புகள் மூலமாகவோ கிடைக்கின்றன. பெரும்பாலும் ஒரு ஆய்விற்கு முக்கிய ஆதாரமாக அம்மக்களின் இலக்கியங்களை ஆராய்ந்து பார்க்கின்ற பொழுது, கிடைக்கின்ற சான்றுகளே முதன்மையானதாகும்.

அதனடிப்படையில் தமிழகத்தில் சங்ககால மக்கள் கொண்டாடிய விழாக்கள் பற்றிய பல குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. சங்ககால நூல்களான எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டு நூல்களிலிருந்து ஆய்வு செய்தல் தக்கது என்ற முறையில் அவற்றினுள்ளே புதையுண்டு கிடக்கின்ற, இன்று நமது வாழ்விலிருந்து மறைந்து போயிருக்கின்ற சில விழாக்களின் தன்மைகள் பற்றியும் இங்கே காணலாம்.

கார்த்திகை திருவிழா:

sanga kaala vizhakkal2

தமிழர்கள் கொண்டாடிய விழாக்களில் முக்கிய இடத்தைப் பெறுகின்ற இவ்விழாவானது அடிப்படையில் சமய விழாவாகப் பார்க்கப்படுகிறது. இவ்விழாவினை இன்றும் நாம் கடைபிடித்தும் வருகிறோம். இவ்விழா பற்றிய குறிப்பை சங்ககால நூலான நற்றிணையில் கூறப்பட்டுள்ளது இங்கு கவனிக்கத் தக்கதாகும். ஏனெனில் சங்ககால நூல்களில் முன்னதாக வைத்துப் போற்றக்கூடிய நூல் என்பதாலேயே இத்தகைய முக்கியத்துவம் பெறுகிறது. இவ்விழாவானது கார்த்திகை மாதத்தில் நடைபெற்ற விழாவாகும். கார்த்திகை விண்மீனை “அறுமீன்” என்றும் அழைத்துள்ளனர். கார்த்திகைத் திங்களை “அறஞ்செய்; திங்கள்” (நற்றி-202). என்றும் அழைக்கப்பட்டுள்ளது. வீடுகளும், தெருக்களும் ஒளிவிளக்குகளால் அழகுறுத்தப்பட்டிருத்தல் வேண்டும். அதற்கு ஆதாரமாக அகநானூற்றுப் பாடல் ஒன்றும் நமக்கு சான்று பகர்கிறது.

”மழையால் நீங்கிய மாசு விசும்பின்

குறுமுயல் மறுநிறம் கிளர மதிநிறைந்து

அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள்

மறுகு விளக்குறுத்து மாலை தூக்கிப்

பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய

விழவுடன் அயர” (அகம்-141)

என்பதன் மூலம் அக்கால மக்கள் இவ்விழாவின்பொழுது தங்களது வீடுகளில் அகல் விளக்குகள் ஏற்றினர் என்பதையும், மேலும் இவ்விழாவானது மதுரையில் பரவலாகக் கொண்டாடப்பட்டுள்ளமைக்கு சான்றாக, “பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய” என்ற வரிகள் நமக்கு சாட்சியாக விளங்குவதைக் காணலாம். மூதூர் என்பது மதுரையைக் குறிக்கும் சொல் ஆகும்.

தை நீராட்டு விழா:

இத்தை நீராட்டு விழாவானது இளம்பெண்கள் தங்களுக்கு கணவனாக வரவேண்டிய ஆண் மகன் நற்பண்புடையவராக இருக்க வேண்டும் என நோன்பிருப்பதாகும். இளம்பெண்கள் தங்களது தோழியர்களுடன் ஊரிலுள்ள குளத்தில் தைத் திங்களில் நீராடி இவ்விழாவினைக் கொண்டாடினர் என்பதை சங்ககால நூலான ஐங்குறுநூறு எடுத்துக்காட்டுகிறது.

“நறுவீ யைம்பான் மகளி ராடும்

தைஇத் தண்கயம் போலப்

பலர்படிந் துண்ணுநின் பரத்தை மார்பே”(ஐங்குறு-84)

மற்றும் புறநானூற்றுப் பாடலிலும் மேற்கண்ட பாடலின் வரியானது இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.

“தைஇத் திங்கள் தண்கயம் போலக்”(புறம்-70)

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக வைத்துப் போற்றப்படுகின்ற நற்றிணை நூலிலும் இதற்கான சான்றுகள் கிடைப்பதன் மூலமும், மற்றும் கலித்தொகை நூலிலும் காணப்படுவதன் மூலமும் அக்காலத்தில் இவ்விழாவானது சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளது என்பது இவற்றின்கண் அறியமுடிகிறது. அவை

“தைத் திங்கள் தண்கயம் படியும்

பெருந்தோட் குறுமகள்”(நற்றி-80) மற்றும்

“தையில் நீராடிய தவந்தலைப் படுவாளோ”(கலி-13) ஆகிய வரிகள் பெண்களை பெருமைப்படுத்தும் விதத்தில் அமைந்திருப்பதன் மூலம் நாம் நன்கறியலாம்.

திருவோணம் விழா:

sanga kaala vizhakkal5

திருவோணம் விழா சங்ககாலத்தில் கொண்டாடப்பட்டுள்ளதாக பத்துப்பாட்டு நூலான மதுரைக்காஞ்சியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விழாவானது தற்போது கேரளத்திலும், தமிழகத்திலும், மற்ற பிற தென் மாநிலங்களிலும் ஆங்காங்கே கொண்டாடப்பட்டுவருவது நாம் அறிந்ததே. இவ்விழாவானது திருமாலுக்கு உரியதாகக் கருதப்படுகிறது.

“கணங்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்

மாயோன் மேய ஓண நண்ணாட்” (மதுரைகாஞ்சி-591)

என்ற வரிகளானது கருமை நிறமுடைய திருமாலை குறிப்பிடுவதிலிருந்து ஓணம் விழா திருமாலுக்கென எடுக்கப்பட்டது தெளிவு.

இளவேனில் விழா:

இளவேனிற் காலமானது காமவேளுக்குரியதாகக் கருதப்படுகிறது. இக்காலத்தில் ஊரில் உள்ளவர்கள் கொண்டாடும் விழாவாகும். இவ்விழா பற்றி பரிபாடலில் காமன் கடவுளாகப் போற்றப்பட்டுள்ளது. மேலும் இவ்விழாவானது தொடர்ந்து நடைபெற்றும் வந்ததெனவும் தெரிகிறது. ஆவற்றிற்கு சான்றாக “காமவேள் அம்பின் தொழில் வீற்றிருந்த நகர்” (பரிபாடல்-18:26இ27) என்பதன் மூலம் பெரும் சிறப்போடு கொண்டாடப்பட்டிருத்தல் வேண்டும் என்பதில் ஐயமேதுமிருக்காது.

இவ்விழா நடைபெறுகிறது என்பதனை அறிந்தால் பெண்கள் மிகுந்த வருத்தம் கொள்வர் என

“உறலியா மொளிவாட வுயர்ந்தவன் விழவினுள்

விறலிழை யவரோடு விளையாடு வான்மன்னோ” (கலித்-30)

இவ்வரிகள் காட்டுகின்றன. பரத்தையருடன் இவ்விழாவில் ஆடவர் கூடிடுவர் என்பதனால் பெண் மிகுந்த வருத்தத்திற்குள்ளாவாள் என தோழியானவள் தலைவிக்கு ஆறுதல் கூறும் விதத்தில் கலித்தொகையில் வேறொரு பாடலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவை

“காமவேள் விழாவாயிற் கலங்குவள் பெரிதென

வேமுறு கடுந்திண்டேர் கடவி

நாம்அமர் காதலர் துணைதந்தார் விரைந்தே” (கலி-27)

sanga kaala vizhakkal6

இவ்வரிகள் தோழியானவள் தன் தலைவிக்கு கூறுகிறாள் “தாங்கள் இவ்விழா நடைபெறுவதைக் கண்டு மிகுந்த துன்பம் கொள்வீர்கள் என அறிந்தே தலைவர் தேரினை விரைவாக செலுத்தி வந்ததாக” கூறும்படியாக அமைந்துள்ளதைக் காண்க.

காமவேள் விழாவில் காதலர்கள் களித்து விளையாடியதும் தெரிகிறது. அவை

“ மல்கிய துருத்தியுள் மகிழ்துணைப் புணர்ந்தவர்

வில்லவன் விழவினுள் விளையாடும் பொழுதன்றோ” (கலி-35)

என இவ்வரிகள் எடுத்துக் கூறுவதன் மூலம் நாம் அறியலாம்.

இந்திர விழா:

இந்திரனைப் பற்றிய குறிப்புகளானது சங்க நூல்களில் சொற்ப அளவிலேயே நமக்குக் கிடைக்கின்றன. அவற்றில் இந்திர விழா கொண்டாடப்பட்டதற்குச் சான்று தரும் விதமாக ஐங்குறு நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வரியானது

“இந்திர விழாவிற் பூவின் அன்ன” (ஐங்குறு-62) ஆகும். இவ்வரியின் மூலம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளதற்கு தகுந்த சான்றாகும். மேலும் இவ்விழா பற்றிய செய்திகளை சங்ககாலத்திற்குப் பின் எழுந்த நூலான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகியவற்றில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டிருப்பதால் இவ்விழா தொடர்ந்து நடைபெற்றிருத்தல் வேண்டும்.

நீர் விழா:

நீர் விழா சோழவள நாட்டில் சிறப்பாக நடைபெற்றதென அகநானூற்றுப் பாடலின் வாயிலாக அறியமுடிகிறது.

“கல்லா யானை கடிபுனல் கற்றென

மலிபுனல் பொருத மருதோங்கு படப்பை” (அகம்-376)

இவ்வரிகளானது, இந்நீர் விழா எத்தகைய அழகோடும் சிறப்போடும் நடைபெற்றது என அறியலாம். மேலும் இவ்விழாவின் பொழுது பல்வேறு இசையொலிகளை எழுப்பும் கருவிகளைக் கொண்டு இசைக்கப்பட்டன என பின் வரும் வரியானது காட்டுகிறது. அவை

“தண்பதங் கொண்டு தவிர்ந்த இன்னிசை

ஓண்பொறிப் புனைகழல் சேவடிப் புரள” (அகம்-376)

மேலும் இவ்விழா “கலிகொள் சுற்றமொடு கரிகாலன்” என இதே பாடலின் மற்றொரு வரியில் வந்துள்ளமையால் கரிகாலனது காலத்தில் நடைபெற்றது என இயம்ப இடம் உண்டு. (எனினும் இம்மன்னனின் காலம் கி.மு 120-கி.மு.90 வரை வாழ்ந்தவரென்றும் தொல்லியல் ஆய்வுகள் மூலம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதைக் காண்க. மேலும் திருமாவளவன் எனப் பெயர்கொண்ட கரிகாற்பெருவளத்தான் காலம் கி.மு. முதல் நூற்றாண்டு என்பதையும் கருத்திற் கொள்ளுதல் வேண்டும். இம்மன்னனைப் பற்றி பொருநர் ஆற்றுப்படையில் முடத்தாமக் கன்னியார் பாடியுள்ளதையும் காண்க.)

பரிபாடலிலும் நீர் விழா பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

“ ———- பூநீர் நிறைதலின்

படுகண் இமிழ் கொளை பயின்றனர் ஆடும்

களிநாள் அரங்கின் அணிநலம் புரையும்” (பரிபாடல்-16)

இதன் மூலம் வைகை ஆற்றங்கரையிலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டமை தெளிவு.

திருப்பறங்குன்றத்து விழா:

sanga kaala vizhakkal7

திருமுருகன் வள்ளியை திருமணம் செய்து கொண்ட இடம் திருப்பரங்குன்றம் என பரிபாடலின் வாயிலாக இத்தகவல் தெரியவருகிறது.

“……..தண்பறங் குன்றத்து இயல்அணி நின்மருங்கு

சாறுகொள் துறக்கத்த வளொடு

மாறுகொள்வது போலும் மயிற்கொடி வதுவை” (பரிபாடல்-19)

இவ்வரிகளானது திருமுருகன் மற்றும் வள்ளியினது திருமணம் நடைபெற்றதை விளக்குகிறது. கூடல் நகர் மக்கள் திருப்பரங்குன்றத்தை நோக்கி நடை பயணம் மேற்கொண்டதைப் பற்றியும், பாண்டியன் திருமுருகனை தரிசிக்க வருகை தந்தமையையும் குறிப்பிடுகிறது. இவ்விழாவின் போது இசையுடன் பாடல்கள் பாடப்பட்டிருத்தல் வேண்டும்.

வேங்கட விழா:

sanga kaala vizhakkal8

திருமாலுக்கு விழா எடுக்கப்பட்டது பற்றி அகநானூற்றுப் பாடலில் கூறப்பட்டுள்ளது. “விழவுடை விழுச்சீர் வேங்கடன்”(அகம்-61) திருவேங்கடத்தில் திருமாலுக்கு விழாவானது சிறப்பாக நடைபெற்றமையை இது சுட்டுகிறது. திருமாலைப் பற்றிக் கூறுகிறபொழுது நால்வகை யுகங்களைப் பற்றி பரிபாடல் கூறுகிறது. அவை

“நால் வகை ஊழி என் நவிற்றும் சிறப்பினை” (பரிபாடல்-3) இதன் மூலம் திருமால் தெய்வம் வணங்குதல் சிறப்புற விளங்கியிருந்தது என்பது தெளிவு.

உள்ளி விழா:

sanga kaala vizhakkal9

உள்ளி விழாவானது கொங்கர் எனும் மக்கள் கொண்டாடிய விழாவாகும். இவர்கள் இடைப்பகுதியில் மணியைக் கட்டிக்கொண்டு தெருவில் ஆடுவர்.

“——————கொங்கர்

மணியரை யாத்து மறுகின் ஆடும்

உள்ளி விழவின் அன்ன

அலரா கின்றது பலர்வாய்ப் பட்டே” (அகம்-368)

இதன் மூலம் இதுபோன்ற சில விழாக்கள் குறிப்பிட்ட பகுதி மக்கள் மட்டுமே கொண்டாடிய விழாக்கள் நிறைய இருந்திருக்க வாய்ப்புகள் உண்டு. ஆனால் அவை பற்றிய குறிப்புகள் கிடைக்கப்பெறவில்லை.

பங்குனி விழா:

sanga kaala vizhakkal15

பங்குனி விழா சோழர்களின் தலைநகராக விளங்கிய உறையூரில் கொண்டாடப்பட்டுள்ளது.

“வெள்நெறி முரசின் விரல்போர்ச் சோழர்

இன்கடுங் கள்ளின் உறந்தைட ஆங்கன்

வருபுனல் நெரிதரும் இகுகரை பேரியாற்று

உருவ வெண்மணல் முருகுநாறு தண்பொழில்

பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்” (அகம்-137)

இன்றும் பங்குனி விழா தமிழகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.

பூந்தொடை விழா:

இவ்விழா படைக்கலப் பயிற்சி பெற்ற வீரர்களின் திறமையை அரங்கேற்றம் செய்யவே கொண்டாடப்பட்டுள்ளது. வில்லில் கணைகளை ஏற்றி குறிபார்த்து எய்தும் விழா என்று கொள்வது பொருத்தமாகும்.

“வார்கழல் பொழிந்த வன்கன் மழவர்

பூந்தொடை விழவின் தலைநாள் அன்ன

தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றம்” (அகம்-187)

கோடியர் விழா:

ஆடும் கலைஞர்களின் விழாவாகக் கருதப்படுகிறது. இவ்விழாவில் கூத்தர் பாணர் விறலியர் போன்ற கலைஞர்கள் கலந்துகொண்டு ஆடுவதாகும். இவ்விழாவில் பல வகையான இசைக் கருவிகள் வாசித்தனர் என அறியலாம்.

“கோடியர் விழவு கொள் விறலி பின்றை முழவன் போல்” (அகம்-352) என்ற வரியானது பாணர் மற்றும் கூத்தர்களையும், விறலியர்களையும் குறிப்பிடுகிறது. (முழவன்- முழவு என்பது ஒரு வகை தோல் கருவி ஆகும். அக்கருவியை இசைப்பவன் எனப் பொருள் கொள்க)

வெறியாட்டு விழா:

இவ்விழா முருகக் கடவுளுக்கு எடுக்கப்பட்டதாகும். இது சங்க காலத்தில் பரவலாக கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது. முருகனுக்காக வேலன் கையிலேந்தி ஆடுவான் திணையரிசியை தூவுவான். இதனைப் பற்றி திருமுருகாற்றுப்படை கூறுகிறது. அவை

“சிறுதிணை மலரொடு விரைஇ மறியறுத்து

வாரணக் கொடியோடு வயிற்பட நிறீஇ

ஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும்” (திருமுருகாற்றுப்படை 218-220)

இவ்வரிகள் முருகனுக்காக எடுக்கப்பட்ட இவ்வெறியாட்டு விழாவின் தன்மை பற்றிக் கூறுகிறது. அதாவது குன்றுகள் இருக்கின்ற இடத்தில் எல்லாம் முருகன் வீற்றிருக்கும் இடம் எனக் கருதி அங்கு மலைப் பகுதியில் விளைந்த சிறுதிணையை மலருடன் சேர்த்து பரப்பி ஆட்டினை பலியிட்டும் கோழிக் கொடியை அங்கே நட்டும் முருகன் குடியிருக்கும் இடம் என அம்மக்கள் இவ்விழாவைக் கொண்டாடினர் என்பது இதன் பொருளாகும். மேலும் ஆட்டினை பலி கொடுத்த செய்தியை குறிஞ்சிப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.

“——–நெடுவேள்

அணங்குறு மகளிர் ஆடுகளங் கடுப்பத்

திணிநிலை” (குறிஞ்சிப்பாட்டு-174-176) இவ்வரியில் ஆட்டினை பலிகொடுத்து வெறியாடியது பற்றிய குறிப்பு கிடைக்கின்றது. எனவே பெண்கள் வெறியாடிது தெளிவு.

“செறிதொடி முன்கை கூப்பிச் செவ்வேள்

வெறியாடு மகளிரொடு செறியத் தாஅய்க்” (பட்டினப்பாலை 154-155)

ஆகிய வரிகள் வெறியாட்டு விழாவின் தன்மையைப் பற்றிக் கூறுகின்றது. இதன் மூலம் வெறியாட்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது என்பது தெளிவாகிறது.

பொங்கல் விழா:

sanga kaala vizhakkal11

இவ்விழா தைத் திங்களில் கொண்டாப்படுகிறது. முதற்கண் அறுவடை விழாவாகத் தொடங்கி பின் வளத்தைக் குறிக்கின்ற விழாவாக மாறியது. ஆனால் பொங்கல் விழா பற்றிய விவரம் கிடைக்கவில்லை. ஆனால் தைத் திங்களில் பெண்கள் நோன்பு இருப்பதுண்டு என முன்னரே நாம் பார்த்தோம். எனவே தை நீராட்டு விழாவோடு மிகுந்த தொடர்பு கொண்டிருத்தல் அல்லது இவ்விழாவின்கண் தைநீராட்டு விழா நடைபெற்றிருத்தல் வேண்டும். இப்பொழுதும் பொங்கல் தென்னிந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

முடிவு:

இவ்விழாக்கள் சங்ககால மக்களின் வாழ்வியல்போடு பொருந்தியுள்ளதையும் காணமுடிகிறது. மக்களின் வாழ்வில் விழாக்கள் முக்கியமானதாகவும் இருந்துள்ளன எனவும் அறிய முடிகிறது. ஆனால் இவற்றுள் சில விழாக்கள் தற்போது வழக்கத்தில் இல்லை என்பதும் தெரியவருகிறது. எனினும் சங்ககால மக்களின் சமயம் சார்ந்த விழாக்களும் அவை எத்தகைய தன்மை வாய்ந்தவை என்பதையும் அறியவும் முடிகிறது.

பார்வை நூல்கள்:

  1. தமிழ் இலக்கிய வரலாறு- டாக்டர் மா.இராசமாணிக்கனார்
  2. சோழர் வரலாறு- டாக்டர் மா.இராசமாணிக்கனார்.
  3. தமிழர் நாகரீகமும் பண்பாடும்- அ.தட்சிணாமூர்த்தி
  4. திருமுருகாற்றுபடை மற்றும் பொருநராற்றுபடை மூலமும் உரையும்-டாக்டர் கதிர் முருகு
  1. பட்டினப்பாலை மூலமும் உரையும்- டாக்டர் கதிர் முருகு
  2. மதுரைக்காஞ்சி மூலமும் உரையும்- டாக்டர் கதிர் முருகு
  3. குறிஞ்சிப்பாட்டு-டாக்டர் கதிர் முருகு.
  4. நற்றிணை மூலமும் உரையும-அ.ப.பாலையன்
  5. அகநானூறு மூலமும் உரையும்- புலியூர்க்கேசிகன்
  6. புறநானூறு மூலமும் உரையும்- புலியூர்க்கேசிகன்
  7. ஐங்குறுநூறு மூலமும் உரையும்- புலியூர்க்கேசிகன்
  8. பரிபாடல் மூலமும் உரையும்- புலியூர்க்கேசிகன்
  9. கலித்தொகை மூலமும் உரையும்- புலியூர்க்கேசிகன்

இல. பிரகாசம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சங்ககால மக்கள் கொண்டாடிய விழாக்களும் அவற்றின் தன்மைகளும்”

அதிகம் படித்தது