மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை

அ. அரவரசன்

Feb 23, 2019

siragu vanaviyal1

மாந்த இனத்தின் வாழ்வியல் கூறுகளில் வனவியல் எவ்வாறு ஒன்றியும் இணைந்தும் ஊடுருவியும் உள்ளது என்பதை சங்கத் தமிழ் இலக்கியம் எவ்வகையில் எடுத்துரைக்கின்றது என்பதை பேராழியின் துளி நீரரை சுவைத்துப் பார்க்கும் நோக்கில் நவில்வதே இக்கட்டுரை.

மனித இனம் முதலில் தோன்றிய பகுதி கடல்கொண்ட தமிழகத்தின் தென்பகுதி என்றும் அதன் பெயர் “லெமூரியா” என்றும் அதன் வரலாற்றை நுணுகி ஆராய்ந்து வரையறுத்த வரலாற்று ஆய்வறிஞர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் லெமூரியா என்பது “லெமூர்” என்ற குரங்கின் பெயர்தான் என்பதை நோக்கும் போது பிற்காலத்தில் மனித இனத்தின் மூதாதையர் குரங்குதான் என்று டார்வின் என்ற மேனாட்டு மாந்தவியல் அறிஞனின் கூற்று ஒத்துப் போவதை உணரலாம்.

இங்கு தொடங்கும் வனவியல் என்பது தாவரவியல், விலங்கியல், பறவையியல், பூச்சியியல், நுண்ணுயிரியல். இயற்கையின் சூழலியல் சுற்றுப்புறவியல் என பல்கிபெருகிய அனைத்தையும் உள்ளடக்கிய “பேரியல்” என்பதே வனவியல் என்பதை மனிதில் நிறுத்தினால் அதில் உள்ளடங்கிய தாவரவியலையும் விலங்கியலையும் பறவையியலையும் சேர்ந்த ஒரு சில செய்திகளை கீழ்கண்டவாறு நுகரலாம்.

தலைவி உயிருக்கும் தலைவன் உயிருக்கும் கூற்றுவனாக ஒரு மதங்கொண்ட யானை வந்தது என்றும் அதிலிருந்து விடுபடமுடியாமல் தவித்த நிகழ்வை தோழி உரைப்பதாக வரும் செய்தியில் உள்ளீடாக மேற்கண்ட இருவரின் நிலையும் என்னவாகுமோ என்ற அச்சநிலை உச்சம் பெறுகிறது. இதனை
‘‘காரிப் பெயல் உருமின் பிளிறி சீர்த்தக
இரும்பிணர் தடக்கை இருநிலம் சேர்த்தி
சினம் திகழ் கடாஅம் செருக்கி மரம்கொப்பு
மையம் வேழம் மடங்களி;ன் எதிர்தர
உய்வுஇடம் அறியேம்ஆகி ஓய்வென
திருந்துகோர் எவ்வளை தெழிப்ப நாணுமறந்து
விதுப்புறு மனத்தேம் விரைந்து அவற்பொருந்தி
சூர்வறு மஞ்ஞையின் நடுங்க. . . “
என்ற குறிஞ்சிப்பாட்டு உணர்த்தும் விதத்தில் மதம் கொண்ட வேழத்தின் பிளிறவையும் அது செய்யும் ஆர்ப்பாட்டமான செயல்களையும் ஓவியம் போல் காணலாம். யானையின் செயல்கள் அரிமாவின் பார்வை மயிலின் சாயல் என்ற பன்முகத்தன்மையை தெள்ளிதின் உணரலாம். புனைவியல் காட்சி எனினும் நடப்பியல் நிகழ்வை நலம் அகப்பார்வையில் காணுமாறு வைத்துள்ளதை எண்ணி எண்ணி மகிழலாம்.

அதுபோலவே தலைவன் தலைவியை தேடிவரும் நிகழ்வில் எதிர்ப்படும் பகையின் வகைகளை கூறிடும்போது, இரவிலே தலைவன் வருகின்றான். நீர்நிலைகளில் நீந்திவரும் சூழலில் ஆங்கே முதலைகள் இருக்கின்றன. அதைத்தாண்டி வரும்போது விலங்குகளின் பகை என அடுத்துடுத்து பகைதனை சந்திக்கும் போது தலைவனுக்கு என்ன ஆகுமோ? ஏதேனும் உயிருக்கு இறுதி ஆகிடுமோ? என எண்ணி தோழி உணர்த்தும் பாங்கு நமக்கு சேர்த்தே சொல்லியது போல உள்ளது. அதனை,
‘‘ . . . . . . கங்குல்
அளைசெரிப உழுவையும் ஆளியும் உளியமும்
புழற்கேட்டு ஆமான், புகல்வியும் களிறும்
வலியின் தப்பும் வன்கண் வெஞ்சினத்து
உருமும் சூரும் இரைதேர் அரவமும்
ஒடுங்கு இரும் குட்டத்து அருஞ்சுழிவழங்கும்
கொடுந்தாள் முதலையும் இடங்களும் கராமும்
நூழிலும் இழுக்கும் ஊழ்அடி முட்டமும்
பழுவும் பாந்தளும் உளப்பட பிறவும்
வழுவின் வழாஅ விழுமம் அவர்
குழுமலை விடரகம் உடைய. . . . “
என்று இயம்பிடும் போது நாமும் திகைக்கிறோம்.
உயிரினங்களில் சிற்றினமாக உள்ளவற்றின் பெருமையினைப் பேசவந்த புலவன் , ‘‘இடியோசை முரசு அதிர்வுடன் கேட்கிறது. யாழ் இசைக்கு வண்டின் ஓசை (ரீங்காரம்) உவமையாக கூறும் வழக்கம் எனினும் அழகுமிளிரும் வரிகளை யாழ்போல் ஆரவாரிக்கின்றது என்பதைக் காட்சியாக்கியபதையும் வண்டுகளில் ஆண் இனமும் பெண் இனமும் புணர்ச்சிவிரும்பி “இம்மென” இமிருவது போன்றதுதான் “யாழிசை” என்னும் நுட்பத்தை நுணுக்கமாக கூறிடும் காட்சியை,
‘‘நைவளம் பழுநில பாலை வல்லோன்
கைகவர் நரம்பின் இம்மென இமிரும்
மாதர் வண்டொடு கரும்பு நயத்து இறுத்த” என்று கலித்தொகை இயம்புகிறது.
ஒரு மாலைப்பொழுது அந்தி மயங்கிய நேரம். அப்போத மான் கூட்டம் மரச்செறிவுப்பகுதியில் திரள, பசுக்கூட்டம் பல்வகையில் திரள அன்றில் பறவை தன் குரலில் கூவ, நாகப்பாம்பு தனது நாகமணியின் ஒளியை உமிழ, ஆம்பல்மலர் தனது அழகிய இதழ்களை கூம்பச்செய்திட, ஆம்பல் அம் தீம்குதல் மூலம் நல்லிசை மீட்ட, வனமனையில் உள்ள பெண்டிர்கள் விளக்கை ஏற்றிவைத்து ஒளிவெள்ளம் பாய்ச்ச தீக்கடைக்கோல் கொண்டு தீ மூட்ட மேகங்கள் திரண்டு வந்து இடியென வல்லோசையுடன் கூடிய கானம்பாட, புள்ளினம் ஆர்ப்பரித்து குரலிசைக்க என்று மாலைக் காட்சியை ஒரு எழில்மிகு ஓவியம் போல் தீட்டியுள்ளது போல் விவரித்துள்ளதை,
‘‘மான் கணம் மரமுதல் தெவிட்ட ஆண்கணம்
கன்றுபயிர் குரலமன்று நிறை புகுதர
ஏங்குவயிர் இசைய கொடுவாய் அன்றில்
ஓங்கு இரும்பெண்ணை அகமடல் அகவ
பாம்புமணி உமிழ பல்வயின் கோவலர்
ஆம்பல்அம் தீம்குழல் தெளிவிளிபயிற்ற
ஆம்பல் ஆடப் இதழ் கூம்புவிட வளமனைப்
பூந்தொடி மகளிர் சுடர்தலைக் கொளுவி
அந்தி அந்தணர் அயர கானவர்
விண்தோள் பணவைமிசை ஞெகிழி பொத்த
வானம் மாமலை வாய்சூழ்பு கறுப்ப, கானம்
கல்லென்று இரட்ட புள்ளினம் ஒலிப்ப”
என்று கலித்தொகை கழறும் காட்சிப்படிமத்தில் நாம் சொக்கிப் போகிறோம். இதில் கூறப்பட்டுள்ள அனைத்து வரிகளிலும் இயற்கையின் சமன்பாடும் பேரழகம் தெள்ளிதின் ஒளிவிட்டாலும் ‘‘பாம்பு மணி உமிழ” எனும் வரியில் தற்கால அறிவியல் உண்மை அந்தகமாகி உள்ளதை நாம் கவனித்தில் கொள்ள வேண்டும். நாகப்பாம்பு மணியை உமிழாது என்பதே உண்மையானது.

siragu vanaviyal3கானகத்தின் பேரினமான யானைகள் உள்நுழையும் அளவுக்கு உள்ள பெரிய மலையை பகுத்தாற்போல அழகும் எழிலும் பொருந்திய நிலையுடன் கூடிய கதவுகளை உடைய மிகப்பெரிய அரண்மனையின் நுழைவு வாசல் வழியாக உள் நுழைந்தால் மிக அழகிய முன்றில் காணப்படுகின்றது.

அம்முற்றத்தில் மயிர் நீப்பின் வாழாக் கவரிமானும் நீரை விடுத்து பாலை மட்டும் உண்ணும் அன்னமும் துள்ளித் திரிகின்றன என்ற காட்சியைபடம் பிடித்துக்காட்டும் பாடலை,
‘‘திருநிலை பெற்ற தீதுநீர் சிறப்பின்
தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து
நெடுமயிர் எகினத் தூநிற ஏற்றை
குறுங்கால் அன்னமொடு உகளும் முன்கடை”
என்ற நெடுநல்வாடை காட்டும். இதில் கூறப்பட்டுள்ள இரண்டு விதமான நிகழ்வுகளாக உள்ள அதாவது கவரிமானும் அன்னமும் துள்ளிவிளையாடும் நிகழ்வில் அறிவியல் உண்மை ஏதும் இல்லை என்று இன்றைய அறிவியல் சொல்லும். இதில் சொல்லப்படும் விலங்கான “கவரிமான்” என்ற விலங்கு இம்மண்ணில் இல்லை. “கவரிமா” என்ற விலங்குமட்டும் உண்டு. கவரிமான் என்று எந்த வித மான் இனத்திலும் இல்லை என்பதே விலங்கியலாளர்கள் கூறும் ஆய்வுச்செய்தி. எல்லா உரையாசிரியர்களும் புனைவுடன் கூடிய செய்தியாக பதிவிட்டுள்ளதாக இலக்கிய உலகம் பற்றி அறிவியல் உலகம் சொல்கிறது. அதுபோலவே அன்னப்பறவையான தண்ணீரில் கலந்துள்ள பாலை பிரித்து உண்ணும் என்ற செய்தியிலும் அறிவியல் உண்மை இல்லை என்பதே பறவையியல் வல்லுநர்களின் ஆய்வு முடிவாகும். இருப்பினும் இச்செய்தியில் கூறப்பட்டுள்ள நிகழ்வில் வந்து போகும் அன்னத்தையும் கவரிமானையும் இலக்கியச் சுவை கருதி மனதில் இன்பமுடன் அசைபோடலாம்.

மேலும் கலித்தொகை தரும் பாடல் வரிகள் பொதிந்துள்ள பல நூறு பாடல்களின் ஒரு பாடலில் ‘‘அரக்கு” பற்றிய செய்தி உள்ளது. அரக்கு பற்றிய செய்தியில் மகாபாரதம் தோன்றிய காலத்தில் அரக்குமாளிகை இருந்ததாக வரும் தகவலின் தொன்மை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இந்திய மண்ணில் உலவி வருகின்றது. எனினும் மனித வாழ்வுக்கு நற்பயன் தரும் பூச்சிகளில் (தேனீ, பட்டுப்பூச்சி போன்றவை) அரக்குப்பூச்சியும் ஒன்று. 1787 ல் ஜான்கேர் என்ற பிரெஞ்சு தேசத்து பூச்சியியல் அறிஞர் கண்டு பிடித்து அதன் வாழ்க்கைச் சுழற்சியை உலகிற்கு அறிமுகப்படுத்தியதாக அறிவியல் உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது. “காக்சிடே“ என்ற பூச்சிக்குடும்பத்தை சேர்ந்த அரக்குப்பூச்சியின் விலங்கியல் பெயர் லேக்கிபர் லேக்கா என்பதாகும். (இதில் என்ற சொல்லிவரும் பதத்தினை அது தரும் அரக்கிற்கு பெயராக இட்டுள்ள செய்தி சுவையானதாகும்)

ஆனால் அரக்கு பற்றிய சங்கப்பாடல்களில் குறிப்பாக கலித்தொகையில் “பாலைக்கலி” பகுதியில் இடம் பெற்றுள்ள.
‘‘வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர்பெற்ற
முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால்
ஐவர் என்று உலகேத்தும் அரசர்கள் அகத்தராக்
கைபுனை அரக்கு இல்லை கதழ்எரி சூழ்ந்தாங்கு
களிதிகழ் கடாஅத்த கடுங்களிறு அகத்தவா
முளிகழை உயர்மலை முற்றிய முழங்கு அழல்
ஒள்ளுரு அரக்கு இல்லை வளிமகன் உடைத்துத்தன்
எழு. . . . . . கவினே”
என்ற பாடலில் அரக்கு பற்றிய விவரம் விரவியுள்ளன. இதில் அரக்கு மாளிகையை நெருப்பு சூழ்ந்துகொண்டபோது பாண்டவர்கள் எப்படி வெளியேறினார்களோ அது மதங்கொண்ட யானை உள்ளே அகப்பட்டுக்கொள்ள அதிலிருந்து அது எப்படி மீண்டதோ அதுபோல் உளது என்றும் யானை தன் கூட்டத்தைக் காப்பாற்ற அத்தீயை மதித்து அழித்து வெளியேறியது ஒருங்கிணைத்து பாடியுள்ளமை வியப்புக்குரியது எனில் அதுமிகையில்லை.

நெருப்பு போன்ற வெப்பத்தை உமிழும் காடு துடிபோலும் வடிவுடைய கால்களைக் கொண்ட கன்று கலக்கி சேறாக்கி சிறிது நீரையும் காதல் துணையென விளங்கும் பிடிக்கு முன்னே ஊட்டிவிட்டு அதன்பிறகே தான் உண்ணும் களிறும் உளது என்ற காட்சியினையும் தன் அன்பைக் கவர்ந்து கொண்ட மெல்லிய மென்புறா கோடையின் வெப்பத்தில் தளர்ந்து வருந்தும்பொது தனது மெல்லிய சிறகை விரித்து நிழல் அளித்து வெப்பத்தின் தீமையை அதன் தாக்கத்தால் ஏற்பட்ட வருத்தத்தை போக்கும் ஆண்புறாவும் உளது என்ற காட்சியினையும் மலைமேல் வளரும் மூங்கில பட்டுப் போய்விடும் அளவில் கதிரவனின் திரண்ட கதிர்கள் காய்வதால் காட்டுவழியில் செல்லும் போக்கு இயலாது போகும் கொடுமையான தன்மையுடைத்து என்று நினைத்து நிழல் தரும் மரம் இல்லாமையால் வருந்தும் மடப்பம் மிக்க பெண்மானை வெயில் படாமல் தன் உடல் நிழலைக்கொடுத்து பாதுகாக்கும் கலைமானும் உளது என்ற நிகழ்வையும் ஒரே பாட்டில் படம் பிடித்துக் காட்டும் பாங்கு எண்ணி மகிழத்தக்கது. என்பதில் உள்ள நுட்பம் சார்ந்த வனவியலில் தொக்கிநிற்கும உள்ளீட்டு பாத்திர நுணுக்கம் என்பது வாழ்வியல் மேன்மை என்பதே. அதாவது தலைவனின் மேலான பண்பினால் தலைவியின் துன்பம் நீங்கும் என்ற மறைபொருள் நமக்கு முருகியல் நோக்கில் காட்டும் பாடம் என்பதை உணர்த்தத்தான்.
‘‘. . . . . . . .
அடிதாங்கும் அளவின்றி அழலன்ன வெம்மையால்
கடியவே. . . . . . . .
பிடியூட்டி பின் உண்ணும் களிறு”
என்றும்
‘‘இன்பத்தின் இகந்து ஒரீஇ இலைதீந்த உவமையால்
துன்புறூஉம் தகையவே. . . . . . . .
. . . . . . மென்சிறகரால் ஆற்றும் புறவு” எனவும் உரத்தனரே!
என்றும்
‘‘கன்மிசை வேய்வாடக் கனைகதிர் தெறுதலால்
துன்னரும் தகயைவே காடு. . . . . . . . . . . . .
தன் நிழல் கொடுத்தளிக்கும் கலை எனவும் உரைத்தனரே!”

என்ற பாடலில் புறா, யானை, மான் (கடமான்) என்ற மூன்றையும் ஒருங்கிணைத்து காட்டில் வாழ்கின்ற உயிரினத்தின் பாசப்பிணைப்பை வனவியலோடு வாழ்வியலை கலந்து அறிதல் உணர்வாக அன்பின் செழுமையை பாடியமை நமக்கான பண்பாட்டு தடம் ஆகும்.

உயர்ந்த மரங்கள் நிறைந்த வனம். அதில் புலியுடன் மோதிய யானை தன் வலியால் அதனை வென்று தளர்ச்சியோடு மலைச்சாரலில் படுத்துறங்கும்போது கனவிலும் அது நிகழக்கண்டு வெகுண்டெழுந்து தன்முன்னே மலர்ந்து நிற்கும் வேங்கை மரத்தை அந்த புலியாகவே கருதி அதன்மீது சாடிப் பாய்ந்த அந்த மரத்தை மோதி அழித்து விட்டு சினம் குறைந்த பின்னர் தன்னுடைய அறியாமையால் வந்த ஆணவத்தால் அழிந்த மரத்தைக்கண்டு அந்த யானை நாணியதாக ஒரு நெகிழ்ச்சியான சித்திரத்தை காணும்போது மெய்சிலிர்க்கிறது. அதனை,
‘‘கொடு வரி தாக்கி வென்ற வருத்தமொடு
நெடுவரை மருங்கில் . . . . . கனவில் கண்டு கதும் என வெரீஇய. .
எனும் பாட்டு வரிகளின் மூலம் உணர்த்தும் போக்கு புலவனின் கற்பனைத் திறத்தின் உச்சம் எனலாம்.
முல்லை கலியின் முத்தான பாடல் ஒன்றில் கொன்றை, காயா, வெட்சி, பிடவு, முல்லை, கஞ்சாங்குல்லை, குருந்தம். காந்தள், பாங்கர் என்று மலையிலும் மரம் செறிந்த காட்டிலும் மலர்ந்த பல்வகை மலர்களால் ஆன கண்ணியைச் மூடி இளைஞர்கள் கொள்லேறு தழுவுதல் காட்சி நடைபெற்றதை விவரித்த புலவர் பெருந்தனை அதன் பிற்பட்ட பாடலில் வளைந்து வெண்கோடுகளைக் கொண்ட சிவந்த எருதுபோன்ற வீருகொண்டு போரிடவல்ல காளைகள் புகுந்த அத்தெழு சிங்கமும் குதிரையும், களிறும், முதலையும் கலந்து போரிடும் மலைச்சாரல் என்று அதனைக் காட்சிப்படுத்தியதை,
‘‘வளையுபு மலிந்த கோடணி சேயும் ….. போலும்”
என்று பாடுவதன் மூலம் மனநிறைவைத் தருகின்றார்.

இதன் முற்பகுதியில் குறிக்கப்பட்டுள்ள மலர்வகையிலும் குறிஞ்சிப்பாட்டின் குறிக்கப்பட்டுள்ள மலர்வகையிலும் ‘‘கஞ்சாங் குல்லை” என்ற மலர் குறிக்கப்பட்டுள்ளதை நாம் நுணுகி பார்த்தால் தற்போதைய அரசியல் சட்டப்படி இநத தாவரம் சட்டவிரோதமாக பயிரிடப்படும் தாவரவகையில் பட்டியலிடப்பட்டுள்ள முதன்மைவகை சட்டவிரோத மனமயக்க மற்றும் போதை பயிர் வகையாக சுட்டப்பட்டுள்ள “கஞ்சா” என்ற செடிவகை தான் இது என்பதை உணரலாம்.

சங்க காலத்தில் மகளிர்கள் கூந்தலில் அணியும் மலராகவும் ஆடவர்கள் கழுத்தில் அணியும் மலராகவும் வடிவமைக்கப்பட்டு பட்டியலிடப்பட்ட இத்தாவரம் காலத்தின் அடிச்சுவட்டின் தொன்மை தமறந்த காலத்தில் நலம்கெடுக்கும் பூவாக ஒதுக்கப்பட்டு இன்று இத்தாவரம் உலகிலே எங்கும் பயிரிடப்பட்டாலும் அது அனைத்துலக நாடுகளின் போதை தடுப்பு சட்டத்தின் கடும்பிடிக்குள் சிக்கிவிடும் என்பதே இன்றைய வரலாறு நமக்குக் காட்டும் உண்மை என்பதை உணர வேண்டும்.
காதலன் விரைந்து வந்து வரைந்து கொள்ளாது வெளிநாடு சென்று விட்டதால் பெண்ணிய பண்புகளை இழந்து ஓயாத புலம்பிய ஒரு நங்கை காதலன் வரக் கண்டதும் பண்டுபோல் ஆகிவிட்டாள் . இதை ஊரார் பார்த்து பாராட்டியதை,
‘‘அகலாங் கண் இருள் நீக்கி அணிநிலாத் திகழ்ந்தபின் ……நீத்தான்”
என்ற பாடலின் மூலம் வெளிப்படும் கருத்தினை நெஞ்சகத்தில் ஏற்றிப் பார்த்தால் வஞ்ச எண்ணம் கொண்டு நான் வாசித்த யாழ் ஓசை கேட்ட அசுணப்பறவையின் மீது அன்பு காட்டாது அதன் உயிர்போகும் படி பறையறைந்து ஒலி எழுப்பினாற்போல் ஒருவன் முன்னே இன்பம் அளித்து பின்னர் அந்த இன்பத்தோடு என்னுடைய உயிரையும் பொக்கும் படி என்னைக் கைவிட்டான் . . . என்ற செய்திதனை உணர முடிகிறது. இப்பாடலில் வரும் “இசையறிபுள்” என்ற அசுணமா (அசுணம்) என்ற பறவையை எண்ணுகிறபோது ஏறக்குறைய பதிமூன்றாம நூற்றாண்டிலேயே உலகிலிருந்து மறைந்துபோன பறவையின் வரலாற்றை அறியவேண்டும் என்ற ஆவல் மேலிடுகிறது.

பட்டினப் பாலை எனும் பைந்தமிழ் பனுவலில் காவிரி சிறப்பு பற்றிய பாடிய புலவன் தான் பாடிய பாடலின், ‘‘வசைஇல் புகழ் வயங்கு வெண்மீன். . . . . . . . கொழிக்கும்” என்ற வரிகளில் தற்பாடிய தளி உணவின் புள் என்ற சொல் வானம்பாடியை குறிப்பிட்டுச் சொல்லும் அமுதவரிகள் அதாவது கார்முகில்கள் திரண்டு வரும் போது அந்த முகில்கள் முதலில் தள்ளிவிடும் மழைத்தூறல் தளி என்றும் அதன்பின் தள்ளிவிழும் மழைத்துறல் துளி என்றும் வேறுபடுத்தி மழை நீரை (திவலை) உண்டு வாழும் வானம் பாடியானது நீரின்றி தேம்பினாலும் காவிரி பொய்க்காமல் நீர் வழங்கும் என்ற நுணுக்கம் சார்ந்த கருத்தியலை உணர்த்தும் செய்தியும்,
‘‘கொழுங் காற் புதலமொடு செருந்தி நீடி “
எனும் பாட்டுத் தொகுதியில் மருதநிலத்தின் ஊர் புகுந்து முரண்பட்டோரை ஓடச்செய்து அவர்களது ஊர்களை பாழ்படுத்தியதால் நெல் விளைந்த கழனிகள் குவளை மலர்களோடு பிறமலர்கள் மலர்ந்திருந்த பொய்கைகளும் அழிய அதன் உருத்தெரியாமல் மறைவுற்ற அந்த இடங்கள் இரலை மானும் அதன் துணையும் பிளையாடும் இடமாக மாறிதாகவும் அம்பலத்திலுள்ள நெடுந்தூண்கள் பாழ்பட்டு சாய்ந்திருந்த நிலையில் அவற்றின் மீது ஆண் யானைகளும் பெண் யானைகளும் உராய்ந்தனவென்றும் திருவிழா காலத்தின் ஆரவாரம் முடிவு பெற்று விழா மன்றங்களில் நெருஞ்சிப்பூக்கள் பூத்தும் அருகம்புல் தழைத்தும் நரிகள் ஊளையிட்டும் கோட்டான்களும் ஆந்தைகளும் அலறி கூக்குரல் இட்டன என்பதை பதிவு செய்துள்ள பாடலில் கானுயிர்களான யானை, ஆந்தை, கோட்டான், நரி, இரலை மான் போன்றவை வந்து போவதைக் காணுகையில் முக்கியமான செய்தியாக இரலைமான் பற்றிய செய்தியை உணர்ந்தால் “திரிமருப்பு இரலை” என்று இதன் பெயர் என்பதும் இதனை பிற இலக்கியங்களான இராமகாதை “இரலைமான் குன்றம்” (ரிஷிபமுக பருவதம்) என்று கூறியிருப்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

சங்க இலக்கியம் காட்டும் சில பறவைகள் பற்றிய செய்திகளின் சாரமாக வலியன் வங்கா, கிளி, வானம்பாடி முதலியவற்றை காண்போம்.

வலியன்

இதை காரி என்றும் வலியன் என்றும் நிகண்டுகள் குறிக்கும். பிளவை, கஞ்சணம். கயவாய், கிகிணி, கஞ்சரீடம் என்ற பெயர்களும் உண்டு மலையமான் என்ற வேளிர்குடித்தலைவன் தன் குலப்பெயராக இப்பறவையின் பெயரான காரியை கொண்டிருந்ததால் அவனுக்கு திருமுடிக்காரி என்ற பெயரும் கொல்லி மலையை ஆண்ட வில்லில் வல்ல வல்வில் ஓரி தன் குலப்பெயராக ஓரியை (நரியை) கொண்டதால் அவனுக்கு வல்வில் ஓரி என்ற பெயரும் வழங்கியுள்ளதாக வரலாறு காட்டுகிறது. வலியின் (காரி) கண்களைப்போல் கண்ணன் என்ற புலவருக்கு இருந்ததால் அவருக்கு காரிக்கண்ணன் என்ற பெயர் ஏற்பட்டதாகவும் வழக்கத்தை “கட்சியுட் காரி கடிய குரலிசைத்து காட்டும போலும்” என்று குறிக்கின்றது.

‘‘ஆனை இறாய்ஞ்சி “ என்ற பழந்தமிழ்சசொல் காரியின் பெயராக காட்டப்படுகிறது. அதற்குரிய கரணியம் எதுவெனில் பிற வலிய பெரிய பறவைகள் இரைதனைக் கொண்டு செல்லும் போது அவற்றை தாக்கி அந்த இரையை தட்டிப்பறித்து செல்வதால் (இறாய்ஞ்சி-தட்டிப்பறித்தல்) அதற்கு இப்பெயர் ஏற்பட்டதாகவும் இதன் வலிமை பிற பறவைகளை விஞ்சியிருப்பதால் இப்பெயர் இட்டதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இரட்டைவால் கரிச்சான் அல்லது துடுப்புவால் கரிச்சான் அல்லது மலைவாழ்கரிச்சான் என்ற இரட்டை வால்பகுதியை கொண்டு சாதாரண கரிச்சானை விட சற்று பெரியதாகவும் முரலில் ஒருவித கரகரப்பு மிகுந்த ஒலியை எழுப்புவதால் “கரிச்சுக்கொட்டும் ஒலி” என்று இதனை குறிக்கப்படுகின்றது. கரிச்சுக்கொட்டும் ஒலியுடன் கத்துவால் இந்த ஒலியைப் போல் பூசலுக்கிடையில் நடைபெறும் உரையாடலில் கூட கரிச்குக்கொட்டுகிறாள்(ன்) என்பதை கேட்கலாம். இக்குருவிக்கு “காரடை” என்ற பெயரும் உண்டு. பறவைகளுக்கு அந்தக்காலத்தில் சாத்தன் சாத்தி என்று உயர்திணைப் பெயர்களை இடும் வழக்கம் உண்டு. அதன் அடிப்படையில் துடுப்புவால் கரிச்சானுக்கு “காரடையான் சாத்தான்” என்ற பேரும் உண்டு. இதற்கு மற்றுமொரு காரணமாக, கரவடமுடைய பண்பினை ம(தந்திரமாக ஏமாற்றும் பண்பு) இப்பறவை கொண்டுள்ளதால் பூனைபோன்று குரல் எழுப்பி வேடர்களை திசைதிருப்பி தப்பிச் செல்லும் பறவை என்பதால் “காரடையான்” என்று அழைக்கப்படுவதாக மலையாள நாட்டில் தமிழ்நாட்டின் எல்லையோரப்பகுதியில் பொதுவாக வழங்கும் செய்தியையும பிற பறவைகளின் (பெரிய பறவைகள் உள்பட) கண்களை தன் சிறகால் காயம் உண்டாக்கி அல்லது தாக்கிவிடும் பழக்கம் என்பதால் இதை பறவைகளின் அரசன் என்று அடைமொழியுடன் அழைப்பதும் உண்டு. தமிழில் “கோக்கயம்” என்ற பட்டப்பெயர் உண்டுஅதற்கும் பறவைகளின் அரசன் என்ற பொருள் காணலாம்.

இப்பறவை மரத்தின் உச்சியில் கூடு கட்டியிருந்தால் அந்த கூட்டுக்கு கிழேயுள்ள கிளைகளில் பிற சிறு பறவைகள் கூடு கட்டி வாழுவதாகவும் அதனால் கரிச்சானின் பார்வைக்கும் தாக்குதலுக்கும் பயந்து போய் சிறுபறவைகளை வேட்டையாடும் பெரிய பறவை ஒருங்கிச் சென்றுவிடும் என்றும் பறவையியல் வல்லுநர்கள் குறிப்பர். அதனால் வடமாநிலங்களில் இதற்கு காவல் பறவை என்ற பெயரும் உண்டு.

ஆப்பிரிக்காவில் சினம் மிகுந்த சிறுத்தையின் பெயரால் இப்பறவை அழைக்கப்படுகிறது. அதனால் இப்பறவையை புறப்பொருள் வெண்பாமாலை
‘‘வெட்சி மலையவிரவார் மணி நிரைக்
கட்சியுள் காரி கலுழ்ம்” என்று சிறப்பிக்கும்.

வங்கா

இப்பறவையின் உடல்பகுதி மஞ்சள் கலந்த கருப்புக் கோடுகள் நிறைந்தாக இருக்கும். மாம்பழத்தான் என்றும் மாங்குயில் என்றும கூறுவர். ஆனால் இது குயில் வகை அல்ல. இப்பறவைக்கு சங்க காலத்தில் “வங்கா “ என்று பெயர்
‘‘வங்காக் கடந்த செங்காற் பேடை. . . . . . . . . . வென்னாது”

என்று குறுந்தொகை பாடலில் வங்கா என்ற பறவையின் பேடையின் மேல் எழால் என்னும் வல்லூறு வீழ்ந்ததால் ஆண் வங்கா நிங்கப்பெற்ற பேடை வங்கா குழலிசைபோல குறுகிய ஒலியுடன் பலதடலை அகவியதாக கூறப்படுகிறது. மயிலின் குரலுக்கு “அகவுதல்” என்பதைப்போல் வங்காவின் குரலுக்கும் அகவுதல் என்ற சொல் தொன்மைநாளில் பயன்படுத்தப்பட்டுள்ளதை காணலாம்.

வேய்ங்குழலின் ஓசையைப்போல் இதன் குரல் இருப்பதாலும் வங்கியம வங்கால் போன்ற இசைக்கருவிகள் தமிழில் உள்ளதாலும் வங்கு என்ற வேர்ச்சொல்லுக்கு உள்ளே துளையாக இருக்கும் பொருள் என்பதை வரையறுத்துக் கூறுவதால் மூங்கிலால் ஆன இயத்தை (புல்லாங்குழல்) வங்கியம் என்றும் ஆச்சாமரத்தால் ஆன நீண்ட குழல் கருவியான நாயனத்தை “பெருவங்கியம்” என்றும கூறுவதை ஒப்புநோக்கினால் “வங்கா” என்ற பெயர் சாலப்பொருத்தம் உடையது என்பதை உணரலாம். இதில் கருப்புவங்கா, செவ்வரி வங்கா என்ற இருவகை உண்டு.

செந்தார்க்கிளி
கிளிகளில் பதினேழுவகை உண்டென்று பறவையியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். கிறுகிளி வகைதான் செந்தார்க்கிளி என்பதாகும். இதன் அழகு வடிவும், தோற்றம், அமைப்பு இவற்றை பேசவந்த இலக்கியமான அகநானூறு ‘‘எய்யா வரிவில் அன்ன பைந்தார்ச். . . . . . . . . உயிர்த்தன பால் நாள்” என்று குறிக்கும் வானத்தில் தோன்றுகின்ற வானவில்லை போன்று இருமுனையும் சேராத பச்சைமாலையை கழுத்தில் அணிந்துள்ள சிறுகிளி என்றும் ‘‘தார்” என்ற சொல்லுக்கு இருமுனைகள் ஒன்று சேராத மாலை என்பதால் அதைக் குறிக்கும் வகையில் ஆண்கிளியின் செந்தாரிலும் , பெண் கிளியின் பைந்தாலிலும் முனைகள் ஒன்று சேர்வதில்லை என்பதை,
‘‘பைந்தாட் செந்தினைக் கொடுங்குரல் வியன்புனம்
செந்தார்க்கிள்ளை நம்மொடு கடிந்தோன் என்று அகநானூறும்
ஏனற் செந்தினைப் பாலார் கொழுங்குரல்
குறுகிளி கடிகஞ் சென்றும். . . . என்று நற்றிணையும் பேசும்.

இதுபோல பல உயர்ந்த சிறப்புமிக்க செய்திகளை உள்ளடக்கிய பழந்தமிழ் இலக்கிய பனுவல்களில் விரவியுள்ள வனவியல் செய்திகளை திரட்டினால் அவை படலமாக தொகுக்கலாம்.


அ. அரவரசன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை”

அதிகம் படித்தது