ஆகஸ்டு 8, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

சங்கநூல்களிற் கூறப்படும் வேதசமயக் கருத்துகள்

தேமொழி

Jul 13, 2019

Siragu tamilagaththin saadhi2

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வடமொழிப் பேராசிரியராகப் பணியாற்றிய பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரியார் (Dr. P.S. Subrahmanya Sastri-பின்னங்குடி சாமிநாத சுப்பிரமணிய சாஸ்திரி) அவர்கள் ஒரு பன்மொழி அறிஞர். தமிழிற்கும் வடமொழிக்கும் இலக்கியப்பணிகள் பல ஆற்றியவர். தமிழிலக்கணப் பணியும் மொழிநூற் பணியும் செய்த இவர் தொல்காப்பியத்தை முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். “சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதி” உருவானதிலும் இவருக்குப் பெரும் பங்கு உண்டு. இவரது சிறந்த மொழியியற் புலமையையும், மொழியிலக்கண அறிவையும், ஒப்பியல் ஆய்வுத் திறமையையும், கண்டு வியந்து இவரது பெயரான பி.சா. சுப்பிரமணியம் என்பதன் சுருக்கமாக, செல்லமாக “பிசாசு” என்றும் அழைக்கப்பட்டார் (இவரை குறித்து “தமிழாய்வில் முதலில் முனைவர் பட்டம் பெற்றவர்” – http://siragu.com/தமிழாய்வில்-முதலில்-முனை/ – என்ற சிறகு கட்டுரை வழியாக மேலும் அறியலாம்). உரையாசிரியராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் பலநூல்கள் எழுதிய இவருக்கு, சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை ஆய்வில் “முதல் முனைவர் பட்டம் பெற்றவர்” (1930 ஆம் ஆண்டு) என்ற பெருமையும் உண்டு. தமிழ் இலக்கணக்கொள்கை வரலாறும் அதன் வடமொழி இலக்கண உறவும் என்ற தலைப்பில் முனைவர்ப்பட்ட ஆய்வேட்டை எழுதினர். சமஸ்கிருத இலக்கிய வரலாறு, சமஸ்கிருத இலக்கண வரலாறு ஆகியவற்றைத் தமிழில் எழுதியுள்ளார். இவரது தொல்காப்பிய ஆய்வில் வடமொழி சார்பின் தாக்கம் அதிகம் என்ற கருத்துகளும் அக்காலத்தில் தமிழறிஞரிடையே இருந்தன. தொடர்ந்து “தொல்காப்பிய சொல்லதிகாரக் குறிப்பு” என்ற இவரது நூல் சென்னைப் பல்கலைக்கழக தமிழ் வித்துவான் பாடநூலாகத் தேர்வு செய்யப்பட்ட பொழுது விவாதங்கள் வெடித்தன. தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்தைச் சார்ந்த தமிழறிஞர்கள் அவர்களின் திங்கள் இதழான தமிழ்ப் பொழில் மூலம் பல மறுப்புக் கட்டுரைகளை, மாற்றுக் கருத்துகளை, விளக்கங்களைத் தொடர்ந்து 6 ஆண்டுகள் பதிவு செய்து வந்தனர் என்பது சென்ற நூற்றாண்டின் தமிழ் வரலாற்றின் ஒரு பகுதி.

siragu pssasthiri book1

செம்மொழிகளான தமிழுக்கும் வடமொழிக்கும் இடையே தொன்றுதொட்டு இருந்துவரும் தொடர்பு இவரது ஆய்வுகளின் அடிப்படையாகவும் இருந்து வந்திருக்கிறது. இருமொழிகளிலும் இலக்கண இலக்கியப் படைப்புகளையும் ஒப்பிடுவதில் தொடங்கிய இவரது முயற்சியின் தொடர்ச்சியில் உருவான மற்றொரு நூல் “சங்கநூல்களும் வைதிகமார்க்கமும்”. இந்நூலின் நோக்கம் சமஸ்கிருத இலக்கியங்களில் உள்ள வைதீக சமயக் கருத்துகளைச் சங்க இலக்கியப்பாடல்களின் கருத்துகளுடன் ஒப்பிடுவது. டாக்டர். பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரி எழுதிய இந்த ஒப்பீடு நூல், திருப்பனந்தாள் மடம் நல்கிய 400 ரூபாய் பொருளுதவியுடன் 500 பிரதிகள் அச்சிடப்பட்டு 1951 ஆண்டு வெளியிடப்பட்டது. எழுபது பக்கங்களைக் கொண்ட இந்த மிகச்சிறிய நூல் 1. சங்கநூல்கள், 2. வைதிகமார்க்கம், 3. சங்கநூல்களும் வைதிகமார்க்கமும் என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இந்நூல் கருத்துகளைச் சற்றே விரிவாகக் காணுவது தமிழரின் பெருமைக்குரிய கருவூலமான சங்கப்பாடல்களில், தமிழுக்குச் செம்மொழி என்ற சிறப்பை நல்கிய சங்கப்பாடல்களில் ஆரிய வேத சமயத்தின் சமய அடிப்படைக் கருத்துகளின் தாக்கம் எந்த அளவு, அதுவும் எக்காலத்திலேயே இருந்துள்ளது என்ற தெளிவைக் கொடுக்கும். ஆய்வுத்திறனுக்காகப் புகழப்படுபவரும், தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழி வல்லுநருமான சுப்பிரமணிய சாஸ்திரி அவர்களின் நூல்வழியே அதை அறிவது ஒரு பெருவாய்ப்பு.

siragu pssasthiri book(I)

முதல் பகுதி-சங்கநூல்கள்:

இப்பகுதி சங்கநூல்கள் குறித்த ஒரு சுருக்கமான அறிமுகத்தை 12 பக்கங்களில் தருகிறது. இதில் 1. தொல்காப்பியம், மற்றும் சங்க இலக்கியங்களான 2. பத்துப்பாட்டு, 3. எட்டுத்தொகை, 4. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் ஆகியவற்றைப் பற்றிய தேவையான அளவு அறிமுகம் கொடுக்கப்படுகிறது.

இந்த சங்க நூல்கள் அறிமுகப் பகுதியில் சுப்பிரமணிய சாஸ்திரி சொல்லும் சில முக்கியக் கருத்துகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தொல்காப்பியம் – தமிழில் எழுத்துக்கு இலக்கணம் கூறும் எழுத்ததிகாரம் வடமொழியில் ‘சிக்ஷா’ எனப்படும்; தமிழில் சொல்லுக்கு இலக்கணம் வகுக்கும் சொல்லதிகாரம் வடமொழியில் ‘வியாகரணம்’ எனப்படும்; தமிழில் செய்யுட்களின் பொருளுக்கு இலக்கணம் வகுக்கும் பொருளதிகாரம் செய்யுளின் கருப்பொருளின் அடிப்படையில் ‘அகம்’, ‘புறம்’ எனப் பிரிக்கிறது, ஐந்திணை ஒழுக்கம் மற்றும் செய்யுள் அமையும் இலக்கணத்தைக் கூறுகிறது. இது வடமொழியில் “அலங்காரசாஸ்திரம்” எனப்படுகிறது என்கிறார் (பக்கம்: 1-2).

பரிபாடல் – பண்டைய தமிழகத்திலிருந்த வைதீக ஒழுக்கங்களை மிகுதியும் அறிய முடிகிறது. இப்பாடல்களில் காணப் பெரும் முருகன் பிறப்பு, வைதீக ஒழுக்கம் போன்றவற்றை வடமொழியின் உபநிஷத்து மற்றும் மகாபாரதம் போன்ற நூல்களில் பயிற்சி இருந்தாலே பொருள் விளங்கும் (பக்கம்: 7) என்கிறார் நூலாசிரியர்.

திருக்குறள் – மகாபாரதத்தில் தர்மத்தை ‘பிரவிருத்தி தர்மம்’, ‘நிவிருத்தி தர்மம்’ என வியாசர் பிரித்தது போலவே, வள்ளுவரும் அறத்தை ‘இல்லறம்’, ‘துறவறம்’ எனப் பிரித்துள்ளார். மோட்சம் பெறுவதைக் கடவுள் வாழ்த்து, அவாவறுத்தல் ஆகிய அதிகாரங்களில் உணர்த்துகிறார் என்கிறார் சுப்பிரமணிய சாஸ்திரி (பக்கம்: 9)

நாலடியார் – தொடர்ந்து நாலடியார் குறித்துக் குறிப்பிடும் பொழுது சமண நூலான இது அறம், பொருள், இன்பம் எனத் திருக்குறள் போலவே அமைந்ததுடன், திருக்குறள் கருத்துகளை விரிவாக விளக்கும் நூல் என்கிறார் சுப்பிரமணிய சாஸ்திரி. இருப்பினும் திருக்குறளை மகாபாரத ‘பிரவிருத்தி தர்மம்’, ‘நிவிருத்தி தர்மம்’ பிரிவுகளைக் கொண்டது என்று குறிப்பிட்ட சுப்பிரமணிய சாஸ்திரி நாலடியாருக்கு அதனை நீட்டிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது (பக்கம்: 9).

பழமொழி நானூறு – இந்த சமண நூலும் திருக்குறள் கருத்துகளின் தொகுப்பே என்கிறார், சமண நூல் எனக் கூறினாலும் பின்னர் இதிலிருந்தும் சுப்பிரமணிய சாஸ்திரி வைதீக தொடர்பு காட்டுகிறார்.

(II)

இரண்டாம் பகுதி-வைதிகமார்க்கம்: நூலின் இப்பகுதி வைதிகமார்க்கம் என்றால் என்னவென்றும், அதன் கூறுகள் யாவை எனவும் ஒரு 9 பக்கங்களில் 1. வேதங்களும் அங்கங்களும், 2. மக்கட்பிரிப்பு, 3. மக்கட்தொழில், 4. மறுமை, 5. வழிபடு கடவுள், 6. ஊழும் வீடும் என்ற பக்கத் தலைப்புகளில் விவரிக்கிறது.

1. வேதங்களும் அங்கங்களும் :—

வேதம் என்பது, தேவதைகளை அழைக்கும் ‘மந்திரங்கள்” என்ற பகுதியையும், அவற்றுக்கு உரை கூறும் ‘பிராம்மணம்’ என்ற பகுதியையும் கொண்டது. மந்திரங்கள் தொகுக்கப்பட்ட தொகைநூல் ‘சம்ஹிதை’ எனப்படும். ருக் செய்யுளாகவும், யஜூர் வசனங்களாகவும், சாமவேதம் கீதங்களாகவும் உள்ளன. அதர்வ வேதம் ருக் அமைப்பை ஒட்டியது. இவற்றுடன், இவ்வேதங்களின் சாரங்களாக மோட்சம் அடையும் வழிகளைக் கூறும் பற்பல உபநிஷத்துகளையும் கொண்டதே வேத சமயம்.

இவற்றை முறைப்படி பின்பற்ற வேதாங்கங்களும், மக்கள் வைதீக தர்மத்தைப் பின்பற்ற வால்மீகியின் இராமாயணமும், வியாசரின் மகாபாரத இதிகாசங்களும் புராணங்களும் இயற்றப்பட்டன. வைதீக தர்மத்தை அறியும் இந்த நூல்களை அதன் ‘வகை/பிரிவுகளின்’ எண்ணிக்கையின் அடிப்படையில் ‘பதினான்குவித்யை’ என்பர்.

வைதிக மார்க்கம் சொல்லும் நால்வேதங்கள் (ருக், யஜூர், சாம, அதர்வ வேதங்கள்) குறித்து புறப்பாடல்களும் (புறம். 2, 15) கூறுகின்றன.

2. மக்கட்பிரிப்பு :—

பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என மக்கள் 4 வகையாக பிரிக்கப்பட்டனர். முதல் மூன்று வர்ணத்தின் ஆண்களுக்கும், சூத்திர பெண்களுக்கும் பிறந்தோர் ‘அநுலோமசாதியர்’ எனவும், இதன் மாற்று வடிவமாக முதல் மூன்று வர்ணத்தின் பெண்களுக்கும் சூத்திர ஆணுக்கும் பிறப்போர் ‘பிரதிலோமசாதியர்’ எனவும் அறியப்பட்டனர். ப்த்ருதேவதைக்கு செலுத்தவேண்டிய கடனைச் செலுத்த ஆண் வாரிசு இன்றியமையாமை என்ற கருத்தும் இந்த மார்க்கத்தின் பகுதி.

3. மக்கட்தொழில் :—

பிராமணர்களுக்கு ஆறு தொழில்களும் (வேதங்களைக் கற்றல், பிறர்க்குக் கற்பித்தல், யாகங்களைச் செய்தல், பிறருக்கு அவற்றைச் செய்வித்தல், தானம் கொடுத்தல், அதனைப் பெற்றுக் கொள்ளுதல்);

சத்திரியருக்கு ஐந்து தொழில்களும் (வேதத்தைக் கற்றல், யாகம் செய்தல், தானமளித்தல், மக்களைக் காத்தல், குற்றமறிந்து தண்டித்தல்);

வைசியருக்கு ஆறு தொழில்களும் (வேதத்தைக் கற்றல், யாகம் செய்தல், தானமளித்தல், பசுவைப் பாதுகாத்தல், உழவு, வணிகம்);

சூத்திரருக்கு உழவு, தச்சு, சிற்பம், நாட்டியம், மற்ற முதல் மூன்று பிரிவுக்கும் வழிபாடு செய்தல் போன்றவை விதிக்கப்பட்டன.

முதல் மூவருக்கும் வேதம் கற்க வேண்டும் என்பதால் உபநயனமும், அது ‘துவிஜ’ என்ற இருபிறப்பு உடையவர் தகுதியாகவும் கூறப்பட்டது. உபநயனத்திற்குப் பிறகுள்ள இரண்டாம் பிறப்பில் காயத்ரீ தாயாகவும், ஆசிரியர் தந்தையாகவும் கருதப்படுவார் என்பதால் காயத்ரீ ஜபம் செய்தல் அவர்கள் கடமையாகிறது. அவ்வாறு செய்தால் பிராமணர்கள் அறிவாலும், சத்திரியர்கள் உடல் பலத்தாலும், வைசியர்கள் செல்வ பலத்தாலும் சிறப்பான நிலை பெறமுடியும். அவ்வாறு பெறும் சிறப்பாலே பிறருக்கும் அவர்கள் உதவ இயலும்.

4. மறுமை :—

இறந்த பின் நல்வினை செய்தோர் சொர்கத்திற்கும், தீவினை செய்தோர் நரகத்திற்கும் செல்வர். மகன் செய்யும் ஈமச் சடங்கு இதற்கு வழியமைக்கும். பித்ருக்களுக்கு பிண்டமிடும் ஆண்மகனைப் பெறவேண்டியது பித்ருக்களுக்குத் தீர்க்க வேண்டிய கடன். சொர்க்கத்திலிருப்போர் தேவர்கள். தேவர்களின் அரசன் இந்திரன். இவர்களுக்கான உணவு மக்கள் பூமியில் நடத்தும் யாகத்தில் இடும் பொருள். யாகம் செய்து தீ வளர்த்து அதில் இடும் அவிர்பாகம் பொருளை அக்னி இந்திரனிடம் சேர்ப்பிப்பான். இந்த உதவிக்குத் தேவர்கள் மக்களுக்கு மழை தருவார்கள்.

5. வழிபடும் கடவுளர் :—

பிரும்மா, விஷ்ணு, சிவன், துர்க்கை, பலராமன், கந்தன், போன்றவரும், இராமாயண மகாபாரத இதிகாசம் கூறும் கடவுளரும், புராணக் கதைகள் கூறும் கடவுளரும் எனப் பற்பலர் வேதசமயக் கடவுளர்.

6. ஊழும் வீடும் :—

மக்கள் தம் வாழ்வில் எதிர்கொள்ளும் நன்மைக்கும் தீமைக்கும் அவரவர் முற்பிறப்பில் அவர்கள் ஆற்றிய நன்மை தீமைகளே காரணம். அடுத்துவரும் பிறப்புகளில் நல்லநிலையை அடைய, இப்பிறப்பில் நன்மை செய்ய வேண்டும். கடவுள் எங்கும் நிறைந்த பரம்பொருள். அவரை அடைய முயல வேண்டும். அதற்கு அறியாமையும், ஆசையும் தடைகளாக இருக்கும். அவற்றை அழித்து முக்தி நிலை அடைய வேண்டும். உயிருடன் இருக்கும்பொழுதே முக்தி பெற்றால் அது ஜீவன்முக்தி. பற்றற்று இருத்தல் முக்தியடையும் வழி என்பது போன்ற கருத்துகளை உபநிஷத்துகள் உணர்த்தும்.

மேற்காட்டியவை யாவும் சுப்பிரமணிய சாஸ்திரியால் வைதீக சமயத்தின் அடிப்படைக் கொள்கைகளாகக் காட்டப்படுபவை. வேதசமயக் கருத்துகளின் அறிவியல் தன்மையை அலசுவது இக்கட்டுரையின் நோக்கத்திற்கு அப்பாற்பட்டது.

(III)

மூன்றாம் பகுதி-சங்கநூல்களும் வைதிகமார்க்கமும்: சங்க நூல்களையும் வைதிக மார்க்கத்தையும் அடுத்துவரும் 49 பக்கங்களில் நூலின் இறுதிப்பகுதி ஒப்பிடுகிறது.

இப்பகுதியில் நூலின் இரண்டாம் பகுதியில் காட்டப்படும் ஆறு வேத சமயக் கூறுகளையும் சற்றே விரிவாக ஒப்பிட முற்படுகையில் எட்டு பக்கத்தலைப்புகளாக இப்பகுதி விரிகிறது. 1. வேதங்களும் அங்கங்களும், 2. வர்ணங்களும் ஆச்ரமங்களும், 3. அக்னிஹோத்ரமும் யாகங்களும், 4. இம்மையும் மறுமையும், 5. தெய்வங்கள், 6. ஊழ், 7. ஏனைய செய்திகள், 8. முக்தி. இப்பகுதியே நூலின் உட்கருத்தான ஒப்பிடுதலின் நோக்கம் என்பதால் இப்பகுதியை நாம் விரிவாக அறிந்து கொள்ளுதல் தேவையுமாகும்.

முதல் பகுதியில் இவையிவை சங்கநூல்கள் என அறிமுகப்படுத்திய பின்னர், அடுத்த பகுதியில் இவையிவை வைதீக சமயத்தின் கூறுகள் என அறிமுகப்படுத்தப் பட்டது. அடுத்ததாக, இந்த வைதீக சமயக் கூறுகள் சங்க இலக்கியங்களில் எங்கெங்கு தென்படுகின்றன எனவும், அந்த வைதீக சமயநெறிகள் கூறும் வடமொழி நூல்களில் அவை இருக்குமிடங்கள் எவை எனவும் மேற்கோள் காட்டி நிறுவுவதுதான் நூலின் இந்த மூன்றாம் பகுதி (சங்கப்பாடல்களைத் தொடர்ந்து அடைப்புக் குறிக்குள் பாடலின் எண், ஒரே பாடலாக இருப்பின் வரியின் எண் கொடுக்கப்பட்டுள்ளது).

1. வேதங்களும் அங்கங்களும் :—

திருமுருகாற்றுப்படை (179-182) நூலில், இருபிறப்பினர் ஆறு அங்கங்களைக் கொண்ட வேதங்களை கற்றது கூறப்படுகிறது. ஒவ்வொரு வேதத்தையும் இருபிறப்பாளர் பன்னிரு ஆண்டுகளில் கற்பார் என்பது போன்ற செய்திகளை வடமொழியின் கௌதமதர்ம சூத்திர நூல் கூறும்.

புறநானூற்றுப் பாடல் (166) நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களும் சிவனிடமிருந்து தோன்றியதாகக் கூறும். இக்கருத்து உபநிஷத்து, வியாச சூத்திரத்திலும் காணப்படும் கருத்து.

பரிபாடல் (3) உலகின் உயிர்களும் அண்டமும் திருமாலிடம் இருந்து தோன்றியதாக வேதங்கள் கூறுகின்றன என்கிறது. இக்கருத்து கீதையிலும் காணப்படும் ஒன்றாகும். பரிபாடல் (2) வேதங்களால் கடவுள் அறியப்படுவதைக் கூறுகிறது. இதுவும் கீதையின் கருத்தே.

குறுந்தொகை பாடல் (156) வேதங்கள் எழுதப்படாமல் வாய்மொழியாக கற்பிக்கப்படுவதைக் கூறுகிறது. இதனை ‘கேள்வி’ என்று பதிற்றுப்பத்து (64, 70, 74, 361)பாடல்களும், பார்ப்பனர் வேதம் பாடுவதை மதுரைக் காஞ்சி பாடல் (468, 656 வரிகள்), பரிபாடல் (9) பாடல்களும், வேதங்கள் தர்மத்தைக் கூறுகின்றன என ஐங்குறுநூறு (387) பாடலும் கூறுகின்றன.

பார்ப்பனரே வேதம் கற்பித்தனர் என்பதைத் தொல்காப்பியம் (எழுத்து- 102), பரிபாடல் (2, 3), கலித்தொகை (126), திருக்குறள் (543), பெரும்பாணாற்றுப்படை (300), புறநானூறு (2), குறள் (560), திரிகடுகம் (70), நான்மணிக்கடிகை (89), இனியவை நாற்பது (8) ஆகியன கூறுகின்றன என்கிறார் சுப்பிரமணிய சாஸ்திரி.

வேதம் குறிக்கும் வேள்விகளை பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி (புறம் 15), சோழன் கரிகாலன் (புறம் 224) ஆகியோர் செய்ததாகவும் சங்கப்பாடல்கள் காட்டுகின்றன.

2. வர்ணங்களும் ஆச்ரமங்களும் :—

தமிழரிடம் நால்வர்ண (பார்ப்பனர், அரசர், வணிகர், வேளாளர்) கருத்துகள் இருந்தன என்பதை;

அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்

ஐவகை மரபின் அரசர் பக்கமும்

இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும் (தொல். பொருள். புறத்திணையியல் 20 சூத்திரம்)

தொல்காப்பிய பொருளதிகார சூத்திரங்கள் காட்டுகின்றன என்கிறார் சுப்பிரமணிய சாஸ்திரி.

நான்மறைகளும் அவற்றை ஓதுவது பார்ப்பனர் தொழில் என புறநானூறு (6, 26, 93, 221, 361), ஆசாரக்கோவை (53), சிறுபாணாற்றுப்படை (204), பட்டினப்பாலை (202), பதிற்றுப்பத்து (24, 64), நான்மணிக்கடிகை (33), ஐங்குறுநூறு (202), திருமுருகாற்றுப்படை (179-184), குறுந்தொகை (154) ஆகிய சங்கப்பாடல்கள் காட்டுகின்றன. அவற்றில் அந்தணர் உயர்பிறப்பு எனவும், அவர்களது தொழில், பண்பு, தோற்றம் (குடுமி, பூணூல், கமண்டலம் தாங்கியிருத்தல்) ஆகியன காட்டப்படுவதைச் சுட்டுகிறார் ஆசிரியர். அவ்வாறே, தோல்வேலை செய்பவர் இழிபிறப்பாளர் இழிசினன் எனப் புறநானூற்றுப் பாடல்கள் (82, 170, 287) கூறுவதாகவும் காட்டுகிறார் சுப்பிரமணிய சாஸ்திரி.

வடமொழி சாஸ்திரங்கள் காட்டும் 8 திருமண வகைகளைப் பெருந்திணை, களவு, கைக்கிளை என தொல்காப்பியர் களவியல் சூத்திரங்களில் (15,1, 14) வகைப்படுத்தியதாகக் கூறுகிறார். திருமணத்தில் தீயை வலம் வரும் குறிப்பு கலித்தொகை (69), ஏழடி பின் செல்வதைப் பொருநராற்றுப்படை (166) பாடல் வழியாகவும் காட்டுகிறார்.

மேலும், அகநானூற்றுப் (86) பாடலில் மக்களைப் பெற்ற வாலிழை மகளிர் நால்வர் திருமணத்தில் மணமக்களை வாழ்த்துவதைச் சுட்டி, அவர்களை வேத திருமணத்தில் சுமங்கலிப் பெண்கள் வாழ்த்துவதுடன் ஒப்பிடுகிறார். பெண்ணை கொடையாகக் கொடுக்க யாருமில்லாத பொழுது பெண் தானே தன்னைக் கொடையாக்கலாம், முன்னர் முதல் மூன்று குலத்தோருக்கும் இருந்த வைதிக திருமண முறை, பிற்காலத்தில் நான்காம் குலத்தவரிடமும் பரவியது என்று குறிப்பிடும் தொல்காப்பியம் கற்பியல் (2, 3) சூத்திரங்களின் கருத்துகளுக்கு மகாபாரதம், ஆதிபர்வதம் (94, 13) வரிகளை மேற்கோளாகக் காட்டுகிறார்.

ருது காலத்தில் கணவன் மனைவியைப் பிரியக்கூடாது எனக் கெளதமரின் தர்ம சூத்திரமும் (1-5-1) , மனு தர்ம சாஸ்திரமும் (113, 46) சொல்வதைத் தொல்காப்பியம் கற்பியல் (46, 47) சூத்திரமும், திரிகடுகம் (17) பாடலும் கூறுவதாகக் காட்டுகிறார் சுப்பிரமணிய சாஸ்திரி. இல்லறத்தில் இருப்போர் ஆற்ற வேண்டியவை ருஷி, தேவ, பிதிர் என 3 கடன்கள். வேதம் படித்தல், தேவர்களுக்கு ஹோமம் செய்தல், பிதிர் கடன் ஆற்ற ஆண்மக்களைப் பெறுதல் ஆகியவற்றால் இக்கடன்கள் நீங்கும் என யஜூர்வேத தைத்திரீய சம்கிதை கூறுகிறது. இதே கருத்துகள் திரிகடுகம் (34), புறநானூறு (2, 9), கலித்தொகை-நெய்தல்கலி (2), பெரும்பாணாற்றுப்படை (315-6), நற்றிணை (141), முல்லைப்பாட்டு (37-8), பொருநராற்றுப்படை (91), மதுரைக்காஞ்சி (463-474) இந்த கடன்களைப் பார்ப்பனர் கடைபிடிப்பதைக் குறிக்கின்றன. இதையே குறள் (41) இல்வாழ்வார் இயல்புடை மூவருக்கு செய்ய வேண்டிய கடமைகள் எனவும் கூறுகிறது. தென்புலத்தார் அல்லது பித்ருக்கள் தென்புலத்தில் வாழ்கின்றனர் என்ற கருத்து ‘தட்சிண பிதர’ என்று தைத்ரீய சம்ஹிதை கூறும் கருத்து. இதை மகாபாரதமும், கடோபநிஷத் ஆகியவையும் கூறுகின்றன.

3. அக்னிஹோத்ரமும் யாகங்களும் :—

இப்பகுதியில் பார்ப்பனர் காலை மாலை இடைவெளியில் தேவர் கடனை அடைக்க முத்தீவளர்த்தனர் என்பதை சங்கப்பாடல்களில் இருந்து காட்டுகிறார் சுப்பிரமணிய சாஸ்திரி. பார்ப்பனர் வேள்வி வளர்த்தனர் என்பதை அவர்களின் வாழ்வியல்முறை குறிக்கும் முந்தைய தலைப்பே அவர்களது கடனாகக் காட்டுவதால், கூறியது கூறல் விடுத்து, சுப்பிரமணிய சாஸ்திரி எந்த சங்கப்பாடல்களை இங்கு பார்ப்பனர்-வேள்வி வளர்த்தல் என்பதற்கு மேற்கோள்களாக காட்டுகிறார் எனக் குறிப்பிட்டுக் கடந்து செல்லுதலே சிறந்தது. புறநானூறு (2, 99, 122, 166), பட்டினப்பாலை (200), குறிஞ்சிப்பாட்டு (225), கலித்தொகை (36, 119), பதிற்றுப்பத்து (70, 74, 21), அகநானூறு(220, 361), பெரும்பாணாற்றுப்படை (315-6), திருமுருகாற்றுப்படை (94-6), சிறுபஞ்சமூலம்(33), கார்நாற்பது (7) ஆகியன வேள்வி குறித்துக் கூறும் சங்கப் பாடல்கள். வேள்விக் குண்டத்தின் கீழ் ஆமை வைப்பதாகத் தைத்திரீய சம்கிதை கூறுவதை அகநானூற்றுப் பாடலும் (361), வேள்வித்தூணில் துணி சுற்றுவதாக பூர்வமீமாம்சை கூறுவதை அகநானூற்றுப் பாடலும் (220), காட்டுகின்றன.

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி (புறம் 15, மதுரைக் காஞ்சி 759-863), சோழன் கரிகாலன் (புறம் 224), இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி (புறம் 363, 400), நலங்கிள்ளி (புறம் 31, 32), சேரன் செல்வக் கடுங்கோ வாழியாதன் (பதிற்றுப்பத்து 64, 70) ஆகியோர் வேள்விகள் செய்ததைச் சங்கப் புலவர்கள் பாடியுள்ளனர். பாண்டியர் பாண்டவ குலம் என்ற கருத்தில் கவுரியர் (புறம் 3, அகம் 342), பஞ்சவர் (அகம் 70, புறம் 58) எனவும் சங்கப்பாடல்களில் காணப்படுகின்றன. சோழர்கள் தம்மைச் சிபியின் வழித்தோன்றல்கள் (புறம் 39, 43) என்றும் எண்ணினார். மூவேந்தர் தம்மை வைதீகம் கூறும் சத்திரியக் குலம் என்று கருதியதால் வேள்விகள் செய்யப் புகுந்தனர்.

4. இம்மையும் மறுமையும் :—

உடலும் உயிரும் கொண்ட உயிரினங்களுக்கு 1. ஸ்தூல சரீரம் உடலில் உயிர் இருக்கும் வரை உள்ள உடல் என்றும், 2. ஸுக்ஷ்மசரீரம் உயிர் முக்தி அடையும் வரை இருக்கும் என்றும், எல்லா உயிரும் ஸ்தூல சரீரம் விட்டு நீங்கும் என்பதும் இம்மை – மறுமை குறித்த வேத சமய நம்பிக்கை. உடலுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு நிலையற்றது. அதாவது வாழ்க்கை நிலையற்றது. உடலிலிருந்து உயிரைப் பிரிப்பது ‘கூற்றம்’ ‘காலன்’ என்பது வைதீக சமயக் கருத்து.

கூற்றம் குறித்து மலைபடுகடாம் (209), புறநானூறு (4, 195), பதிற்றுப்பத்து (39), பரிபாடல் (5) ஆகிய பாடல்கள் கூறுகின்றன. உயிர் நீங்கிய உயிர் மறுமைக்குச் செல்ல மகன் பிண்டம் கொடுப்பார் என்பதைப் புறநானூறு (222, 246) பாடல்கள் காட்டுகிறது. இக்கருத்தை மகாபாரதமும் காட்டும். இம்மையில் செய்த வினைப்பயன் மறுமையில் துய்க்கப்படும் என்பதைப் புறநானூறு (29, 134), நான்மணிக்கடிகை (15) பாடல்கள் காட்டுகின்றன.

நல்வினை செய்தோர் சொர்க்கம் செல்வர் என்ற கருத்தைப் புறநானூறு (174), பரிபாடல் (19), திருக்குறள் (86) பாடல்கள் மூலம் அறியலாம். அவ்வாறே தீவினை செய்தோர் நரகம் செல்வர் என்ற கருத்தைப் புறநானூறு (5), குறுந்தொகை (292), குறள் (130) பாடல்கள் மூலம் அறியலாம். மேலும், பலன் கருதாது நல்வினை செய்யவேண்டும் என்று கீதை (2, 47) கூறும் கருத்தைப் புறநானூறு (134, 182), அகநானூறு (54), பதிற்றுப்பத்து (38) பாடல்கள் காட்டுகின்றன.

கணவனின் மறைவுக்குப் பிறகு மனைவி உடன்கட்டையேறும் நிகழ்வை புறநானூறு (62, 246) பாடல்களும், கைம்மை நோன்பு ஏற்பதை புறநானூறு (234) பாடல்களும் காட்டுகின்றன.

சொர்க்கம் என்பதை தேவருலகம், உயர்நிலையுலகம், மேலோருலகம், நாகம், வச்சிரத்தடக்கை நெடியோன் கோயில், பெரும்பெயருலகம், புத்தேணாடு, துறக்கம், சிறந்தோருலகம், இமையார் தேயம் என்ற சொற்கள் குறிப்பிடப்படுகின்றன.

இந்திரன் — தேவருலகம் ஆளும் இந்திரனும் பல பெயர்களால் சங்கப்பாடல்களில் காட்டப்படுகின்றான். அவனுக்கு வேள்விகள் செய்யப்படுகிறது என்பதும் அவன் அகலிகையை வஞ்சித்த குற்றத்திற்காக கவுதமர் சாபம் பெற்றான் என்ற கதையும் பரிபாடல் (19) நூலில் காட்டப்படுகிறது. திருக்குறளும் (25) இந்திரனின் ஐம்புலன் அடக்கமின்மையைக் கூறுகிறது. தேவருலகில் வாழ்வோர் குறித்து புறநானூறு (174, 182, 377), குறள் (413), பட்டினப்பாலை (184), கலித்தொகை (2, 82), பதிற்றுப்பத்து (74, 89), அகநானூறு (136), பரிபாடல் (3) ஆகிய பாடல்கள் மூலம் அறியலாம்.

வருணன் — நெய்தல் தெய்வம் எனத் தொல்காப்பியம் (அகத். 5), மன்மதன் – இரதி பரிபாடல் (19) போன்ற பிற தேவருலக தேவதைகள் குறித்தும் சங்கப்பாடல்களில் குறிப்புக்கள் காணப்பெறுகின்றன.

5. தெய்வங்கள் :—

பிரும்மா, திருமால், சிவன், முருகன் தொடர்புகள் குறித்து மிகுதியாகவும், பலராமன், கொற்றவை குறித்து சிலவும் சங்கப்பாடல்களில் குறிப்பிடப்படுகிறது.

பிரும்மா — பிரும்மா குறித்து கலித்தொகை (2), பெரும்பாணாற்றுப்படை(402-4), திருமுருகாற்றுப்படை(164-5), பரிபாடல் (8), இனியவை நாற்பது (1), இன்னாநாற்பது (1) பாடல்களிலும்;

திருமால் — திருமால் குறித்து தொல்காப்பியம் (அகத். 5), முல்லைப்பாட்டு(1-3), பெரும்பாணாற்றுப்படை (29-30), , கலித்தொகை (103, 104, 105, 124, 145), இன்னா நாற்பது (1), இனியவை நாற்பது (1), புறநானூறு (174), கார்நாற்பது (1), திணைமாலை(150-96), பரிபாடல் (4, 8, 13, 15, 49), மதுரைக் காஞ்சி (591) பாடல்களிலும் காணலாம். இப்பாடல்கள் இராமாயணம் மற்றும் மகாபாரதப் பாடல்கள் கூறும் திருமாலுடன் கருத்தொற்றுமை கொண்டவை.

சிவன் — சிவன் குறித்து அகநானூறு (181, 220, 360), கலித்தொகை (2, 38, 103, 142, 150), புறநானூறு (6, 56, 91), இன்னா நாற்பது (1), இனியவை நாற்பது (1), பரிபாடல் (5, 8), மலைபடுகடாம் (83), திருமுருகாற்றுப்படை (151, 256), பழமொழி (124), மதுரைக் காஞ்சி (453) பாடல்களில் வைதிக சமயத்தின் தொடர்பு காட்டப்படுகிறது. இராவணன் கைலாயத்தைத் தூக்கிய கதையைக் கலித்தொகை (38) பாடலும்; சிவன் முப்புரம் எரித்த கதை புறநானூறு (55), பரிபாடல் (2, 5, 8, 9, 13, 82), கலித்தொகை (பாலை 1) பாடல்களில் இடம் பெறுகிறது. சிவன் முப்புரம் எரித்த இதே கதை மகாபாரதம் கர்ணபர்வத்தில் காணப்படுகிறது.

முருகன் — முருகன் குறித்து தொல்காப்பியம் (அகத். 5), அகநானூறு (59), புறநானூறு (23), கலித்தொகை (93), குறுந்தொகை (1), இன்னா நாற்பது (1) ஆகியவற்றிலும் முருகன் பிறப்பு குறித்து பரிபாடல் (5, 8, 9, 14, 17), திருமுருகாற்றுப்படை (151-173, 260) கூறும் புராணக்கதைகள் மகாபாரதம் அநுசாஸநபர்வம் (130,133), வநபர்வம் (227) பகுதியிலும், வால்மீகி இராமாயணம் பாலகாண்டம் (36, 37) பகுதியிலும் காணப்படுகின்றது. சூரபன்மனை முருகன் அழித்ததைப் பதிற்றுப்பத்து (11), புறநானூறு (23, 56), திருமுருகாற்றுப்படை (46), அகநானூறு (59), பரிபாடல் (4, 14) பாடல்கள் கூறுகின்றன. முருகன் வள்ளியை மணந்த கதை மகாபாரதத்தில் இல்லை.

பலராமன் — பலராமன் குறித்து புறநானூறு (56, 58), கலித்தொகை (104), பரிபாடல் (2), கார்நாற்பது (19), பழமொழி நானூறு (37), திணைமாலை நூற்றைம்பது (96) போன்ற நூல்கள் குறிப்பிடுகின்றன. பலராமன் குறித்த இப்பகுதியில் சுப்பிரமணிய சாஸ்திரி வடமொழி நூல்களின் மேற்கோள் கொடுக்கவில்லை. வடமொழி நூல்கள் சொல்லும் பலராமன் தோற்றம் செயல்பாடு குறித்து சங்கப்பாடல்கள் சொல்லும் பலராமன் தொடர்பு காட்டவில்லை.

கொற்றவை — பாலைநிலத்துக் கொற்றவை குறித்து, அவள் பார்வதியின் மறுவுருவம் என்ற கருத்து திருமுருகாற்றுப்படை (258) , நெடுநல்வாடை (166) நூல்களில் இடம் பெறுகின்றன. கொற்றவை என்பதும் துர்க்கை என்பதும் ஒருபொருட்கிளவி என்கிறார் சுப்பிரமணிய சாஸ்திரி. மகாபாரதத்தில் போர் துவங்குமுன் துர்கை துதிக்கப்படுகிறாள் எனக் குறிப்பிட்டு விடாரபர்வம் (8), பீஷ்ம பர்வம் (23) மேற்கோள்களை ஆசிரியர் கொடுக்கிறார். அந்த மேற்கோள் வரியிலேயே ‘ஆர்யே மந்திரவாஸிநி’ என்ற குறிப்பும் உள்ளது. பலராமன் பகுதி போல இப்பகுதியும் மிகச் சுருக்கமாகவே அமைந்துள்ளது.

6. ஊழ் :—

முற்பிறப்பின் வினைப்பயன்கள் இப்பிறவியில் தொடரும் என்பதும், அதனை ஊழ், தெய்வம், வினை, பால் என்ற சொற்களாலும் குறிப்பிடுகிறது வைதீக சமயம். தொல்காப்பியம் (கிளவி. 57), புறநானூறு (236), குறுந்தொகை (366), நற்றிணை (88), கலித்தொகை (118), குறள் (125, 380, 619) போன்ற சங்கப் பாடல்களில் வினை, வினைப்பயன் கருத்துகள் விரவியுள்ளன. இக்கருத்து மகாபாரதத்திலும் பலவிடங்களில் கொடுக்கப்பட்டுள்ளதைச் சுட்டுகிறார் சுப்பிரமணிய சாஸ்திரி.

இப்பிறப்பில் செய்த வினை இப்பிறப்பிலேயும் உறுத்தூட்டும் என்பதற்கு திணைமாலை நூற்றைம்பது (123) பாடலையும், அதே கருத்தைக் கொண்ட ஒரு வடமொழி தர்ம சாஸ்திர செய்யுளையும் கூறுகிறார். மேற்கொண்டு, வினைப்பயன் ஏழு பிறப்புகளிலும் தொடர்வது என்ற கருத்துக்கு குறள் (62, 125, 835, 396) பாடல்களைச் சுட்டும் ஆசிரியர் அதற்கு இணையான ‘ஏழ்பிறப்பு’ என்ற கருத்தாக்கம் கொண்ட வடமொழி செய்யுட்களை மேற்கோளாகக் காட்டினாரில்லை.

7. ஏனைய செய்திகள் :—

இப்பகுதியில்; இராமாயணக் கதைக் குறிப்புகள் இடம்பெறும் சங்கப்பாடல்களாக புறநானூறு (378), அகநானூறு (70), பழமொழி நானூறு (257) பாடல்களும்;

மகாபாரதத்தில் இடம்பெறும் பல்வேறு கதைக் குறிப்புகள் இடம்பெறும் சங்கப்பாடல்களாக புறநானூறு (2, 122), பெரும்பாணாற்றுப்படை (303, 415), கலித்தொகை (2, 25, 26, 52, 104), பழமொழி நானூறு (137, 356), சிறுபாணாற்றுப்படை (238), மதுரைக்காஞ்சி (202), பதிற்றுப்பத்து (31), பரிபாடல் (5), நெடுநல்வாடை (163) பாடல்களும் கொடுக்கப்படுகின்றன.

தொடர்ந்து வைதீக சமயக் கருத்துகள் கொண்ட ஆசாரக் கோவை (17, 24, 29, 35, 39, 43, 46, 83) பாடல்களுக்கு கெளதம தர்ம சூத்திரம் பாடல்கள் பலவற்றை மூலமாகக் காட்டுகிறார் சுப்பிரமணிய சாஸ்திரி.

செய்த தீவினை சிலவற்றுக்குக் கழுவாய் (பரிகாரம்) இல்லை என்ற கருத்து மகாபாரதத்தில் வருவது போன்றே புறநானூறு (34) பாடலும் காட்டுகிறது என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர். முன்னோர் செய்த நல்வினை பின்னோரை காக்கும் எனப் புறநானூறு (102) பாடல் கூறுவதையும் சுட்டுகிறார் ஆசிரியர்.

வானியல் குறிப்புகள் கொண்ட புறநானூறு (117), பரிபாடல் (11) பாடல்களைக் காட்டும்பொழுது, ‘வானியல் குறிப்புகள்’ என்பவையே வேத சமயத்துடன் தொடர்பு கொண்டவை என்ற கருத்து ஆசிரியருக்கு உள்ளதாகத் தெரிகிறது. அவற்றுக்கு அவர் வடமொழி மேற்கோள்கள் காட்ட முற்படவில்லை. அவ்வாறே ‘வடக்கிருத்தல்’ என்ற வழக்கம் புறநானூறு (65), அகநானூறு (55) பாடல்கள் மூலம் காட்டப்படும்பொழுதும் வேத சமய மேற்கோள்கள் கொடுக்கப்பெறவில்லை என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

மேலும், கௌதம தர்ம சூத்திரம் (1,7,1) மேலோர் கீழோர் என்ற வேறுபாடின்றி அனைவரும் கல்வி கற்கலாம் என்கிறது என்று கூறுவதுடன், அக்கருத்தை ‘வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே’ என்ற புறநானூற்றுப் (183) பாடலுடனும், அதே கருத்தைக் கூறும் குறள் (409) பாடலுடனும் இணைத்து சான்றாகக் காட்டப்படுவது சற்றே திகைப்படைய செய்கிறது. இவ்விரு பாடல்களையுமே வேதசமயம் காட்டும் மக்கட்ப்பிரிவுகளையும் அதற்கான வாழ்வியலையும் மறுக்கும் பாடலாகவே நம்மில் பலர் அறிந்துள்ளோம்.

தொடர்ந்து இப்பகுதியில் (பக்கம்: 64), தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்தல் போற்றப்பட்டது என்ற கருத்தைக் கொண்ட — புறநானூறு (183), பதிற்றுப்பத்து (38) பாடல்களை நுழைப்பது பொருத்தமற்று இருக்கிறது. எவ்வாறு தமிழர் வாழ்வியலில் நட்பு என்பதற்கு கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பு குறித்து வடமொழி மகாபாரதக் கதையிலிருந்து மேற்கோள் காட்டுவது பொருந்தாதோ, எவ்வாறு கடையேழு வள்ளல்கள் கொடைக்கு மகாபாரதக் கர்ணன் கதையை அடிப்படையாகக் காட்ட வழியில்லையோ அவ்வாறே மானிடவியல் கீழே வரக்கூடிய காதல், நட்பு, அன்பு, திருமணம், கொடை, வீரம், மரணம் போன்றவற்றுக்கும் தொடர்பு கொடுத்தல் பொருத்தமற்றது.

மனித உணர்வுகளின் வெளிப்பாடான செயல்பாடுகளை உலகின் பிற இடத்திலிருந்து மற்றொரு பகுதியினர் அறிந்து கொண்டார்கள் எனக் கூறுதல் ஏற்புடையதல்ல. அதன் அடியொற்றி நிகழும் நடைமுறைகளில் இடம்பெறும் அயல் பண்பாட்டுக் குறிப்புக்கள், அதற்கு இணையான கதைக் குறிப்புகள் மட்டுமே பொருத்தமாக இருக்க வழியுண்டு. பிறப்பு, வாழ்வு, இறப்பு போன்றவை உலகெங்குமுண்டு. அவற்றின் சடங்குகளில் அயல் பண்பாட்டுத் தாக்கத்தை மட்டுமே நாம் ஒப்பிடுகையில் கருத்தில் இருத்தவேண்டும். பசியெடுத்தால் உணவு உண்ணுதல், அதைப் பகிர்ந்துண்ணுதல் என்பவை எல்லாம் அடுத்தவர் கற்றுக் கொடுத்துத்தான் நாம் அறிந்தோம் என்பது எந்த அளவு ஏற்புடையதாக இருக்கும் என்பதைச் சற்றே எண்ணிப் பார்க்க வேண்டும். சுனையில் உள்ள சிறிதளவு நீரையும் பெண்மான் குடிக்கட்டும் (ஐந்திணை ஐம்பது -38) என்று தானும் குடிப்பது போலப் பாவனை செய்து, பெண்மானை நீரைக் குடிக்க வைத்த ஆண்மான் செய்த விட்டுக் கொடுத்தலை அறிய எந்த வேத சமய நூல்களைக் கற்றது? என்ற கேள்வி இதற்குச் சரியான விடையைக் காட்டும்.

8. முக்தி :—

முக்தி என்பது இருவகைப்படும், அவை ‘விதேகமுக்தி’, ‘ஜீவமுக்தி’. இறந்தபின் அடையும் விதேகமுக்தியும் இருவகைப்படும். அது ‘அபராமுக்தி’ என்றும், ஜீவன் பிரும்மத்தோடு ஒன்றுபட்டால் ‘பராமுக்தி’ என்றும் அறியப்படும்.

முக்தியை அடையக் கடவுள் விரும்பும் ஒழுக்க நெறியில் நிற்கவேண்டும். அப்பொழுது அஞ்ஞானம் நீங்கி ஞானம் தோன்றும். திருக்குறள் பாடல்கள் அபராமுக்தியை (குறள் 3), பராமுக்தியை (குறள் 358) காட்டுகிறது என்கிறார் ஆசிரியர்.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ்வார் (குறள் 6), இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சியவர்க்கு (குறள் 352) ஆகிய ஒழுக்கநெறி பாடல்களின் கருத்துகள் கீதையின் கருத்துகள் என்பது ஆசிரியரின் கருத்தாக இருக்கிறது.

கடோபநிஷத் விளக்கும் முக்தி என்பதை ‘செலவு’ என்ற சொல் மூலம் நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் (62) ‘புலம் பிரிந்துறையும் செலவு நீ நயந்தனை’ என விளக்குகிறார் என்று கூறும் ஆசிரியர் முக்தி என்பதும், செலவு என்பதும் ஒருபொருட்கிளவி என்றும் கூறுகிறார். அவ்வாறே ‘அந்நிலை’ என்ற சொல் பெரும்பாணாற்றுப்படையின் (466) ‘நில்லா உலகத்து நிலைமை தூக்கி அந்நிலை அணுக வேண்டி’ என்ற வரியில் முக்தியை விளக்குகிறது என்கிறார்.

அவ்வாறே, இப்பிறப்பிலேயே பற்றற்ற நிலையை அடைவது குறித்து கடோபநிஷத் மற்றும் மகாபாரதம் கூறும் கருத்துக்களைத் திருக்குறள் (370), மதுரைக் காஞ்சி (468-471) சிறுபஞ்சமூலம் (36) காட்டுகிறது என்று கூறும் ஆசிரியர் முடிவாக ……

“சங்கநூல்கள் பலவற்றுள் வைதிகமார்க்கமே உணர்த்தப்பட்டது என்பது அறியப்படும்”

என்று நூலை நிறைவு செய்கிறார்.

இக்கருத்து எந்த அளவு ஏற்புடையது என்பது ஆராயத்தக்கது. சங்க நூல்களில் வைதீக சமய கருத்துகளும் இடம் பெற்றுள்ளன என்றும், வேத சமயத்தைப் பின்பற்றியவரும் அக்காலத்தில் வாழ்ந்த மக்களில் ஒரு பிரிவினர் என்பதுமே ஏற்கத் தக்கதாக இருக்கும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் எத்தனை நூல்களிலிருந்து, எத்தனை பாடல்களை ஆசிரியர் மேற்கோள் கொடுக்கிறார் என்ற ஒரு மீள்பார்வையே பல பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் இதில் இடம் பெறாமையையும் காட்டும். அவ்வாறே வைதீக சமய நூலை மொழியாக்கம் செய்த ஆசாரக்கோவை நூலிலிருந்தே மேற்கோள் கொடுப்பதும் பொருந்தாமல் போகும்.

சமண சமயக் கருத்துகளோ புத்த சமயக் கருத்துகளோ வைதீக சமயத்திலிருந்து பிரிந்த காரணத்தால் அதே இம்மை, மறுமை, வீடுபேறு போன்ற கருத்துகளின் தாக்கத்தோடும், அதே தெய்வங்கள், தேவர்களின் கதைகளுடனும் இருக்கும். ஆனால் அவை வேதத்தை ஏற்ற சமயங்கள் எனக் கூற வழியில்லை என்பதையும் அறிவோம். இதற்கு ஆசிரியர் திருக்குறளை வைதீக சமயநூல் என்ற கோணத்தில் எடுத்துக் கொள்வதைச் சான்றாகக் காட்டலாம்.

சங்க நூல்களில் வைதீக சமய கருத்துகள் எவையெவை என அறிய இந்த நூல் ஒரு சிறந்த குறிப்பு நூல். இது சமய அடிப்படையில் சங்கப்பாடல்களை ஆராய்வோர் எவரும் படித்திருக்க வேண்டிய நூல் என்றால் அது மிகையன்று.

நூல் குறிப்பு:

சங்கநூல்களும் வைதிகமார்க்கமும்

ஆசிரியர் : சுப்பிரமணிய சாஸ்திரி, P. S.

பதிப்பாளர்: திருச்சி : யுனைடேட் பிரிண்டர்ஸ் லிமிடெட், அச்சுக்கூடம் , 1951

https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZMdl0ly

[Source: Tamil Digital Library]

நன்றி: நூல் குறித்து ஆற்றுப்படுத்திய தோழர் மணி மணிவண்ணன் அவர்களுக்கு.


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சங்கநூல்களிற் கூறப்படும் வேதசமயக் கருத்துகள்”

அதிகம் படித்தது