சூலை 21, 2018 இதழ்
தமிழ் வார இதழ்

சங்கப்பாடல் எளிய நடையில் (கவிதை)

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Aug 26, 2017

Siragu kurundhogai-4

குறுந்தாட் கூதளி யாடிய நெடுவரைப்

பெருந்தேன் கண்ட இருக்கை முடவன்

உட்கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்து

சுட்டுபு நக்கி யாங்குக் காதலர்

நல்கார் நயவா ராயினும்

பல்காற் காண்டலும் உள்ளத்துக் கினிதே

இந்தப்பாடல்குறுந்தொகை 60, குறிஞ்சித் திணையில் வருகின்றது. தலைவனது பிரிவை தங்கிக்கொள்ள முடியாத தலைவி, தன் தோழியிடம், தலைவன் தன்னிடம் அன்பும், அருளும்இல்லாதவராக இருந்தாலும் அவரைப் பல முறை பார்த்தாலே சிறப்பு, இன்பம் எனக்கூறுகின்றாள். இப்பாடலை இயற்றியவர் பரணர்.

குறுந்தாட் – குறுகிய அடியையுடைய

கூதளி – கூதளஞ்செடி

யாடிய- அசைதல்

நெடுவரை- பெரிய மலை

உட்கைச் – உள்ளங்கை

சிறுகுடை கோலிக் – பாத்திரம் போன்று குவித்து

இந்தக் குறுந்தொகைப் பாடலை அடிப்படையாக+க் கொண்டு, எழுதப்பட்ட புதுக்கவிதை.

குறிஞ்சியின் தலைவி

வாடிய முகங் கொண்டனள்

ஏன் என்றே

தோழி வினவ

மாமை நிறத்தழகி

அவள் கண்கள் பனித்தன

தேனீக்கள்

ரீங்காரமிடும்

திசை

நோக்கினள்,

நெடிய

மலை மீது ஆடும்

கூதளஞ் செடி

கண்டனள்

ஆங்கே

தேனடையைக் கண்டு

அவள் சிந்தை நொந்து

தோழியிடம் உரைத்தனள்

கண்டாயோ தோழி

அப்பெருந்தேனடையை?

அம் மலை மீதெற காலற்ற

முடவனால் முடியுமோ?

தித்திக்கும் தேனடை

அவன் கைக்கு கிட்டுமோ?

எனினும் அக்குறை

மறைய அம்மலைக்

கீழிருந்து

அத்தேனடையைக் கண்டு

தன் உள்ளங்கைதனைக்

குவித்து

நக்கி இன்பம்

கண்டிடும்

காலிழந்தான் போல்

யானும் தலைவர்

அன்பும் அருளும்

கிட்டாது

துன்பத்தில் உழன்றாலும்

வாடிய மலராய்

என் தலைவனை

பல முறைக்

காணுதல் ஒன்றே

இன்பம் என்றே

வாழ்கிறேனடி

கொம்புத்தேனுக்கு

ஆசைப்பட்ட முடவனும்

யானும் ஒன்றானோம் என்றே

வெளிறிய

முகங் கொண்டு

துடித்தனள்

தலைவி !!


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சங்கப்பாடல் எளிய நடையில் (கவிதை)”

அதிகம் படித்தது