ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

சங்கப் பாடல்களை அறிவோம்- புறநானூறு- 218

பேரா. ருக்மணி

Nov 21, 2015

sanga paadalgal2கண்ணகனார் என்ற புலவர் பாடியது.

கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டபோது அவரோடு பாண்டிய நாட்டுப் புலவர் பிசிராந்தையாரும் உயிர் துறந்தார். அதனைக் கண்ட புலவர்கள் வியந்து நின்றனர்.  வியப்பில் இருந்த புலவர்களுக்கு விடை தந்தார், புலவர் கண்ணகனார்.

தங்கமானது, நிலத்தின் அடியிலிருந்து கிடைப்பது; பவளம், காட்டிலே கிடைப்பது; முத்து, கடலிலே பிறப்பது. மணி, மலையிலிருந்து பெறுவது. இவை அனைத்தும் தோன்றுமிடம் ஓரிடமல்ல… என்றாலும், அணிகலனாக அமைக்கின்றபோது ஒன்றிணைகின்றன. அதைப்போல்தான் மன்னனாக இருந்தால் என்ன, புலவனாக இருந்தால் என்ன, தொலைவில் இருந்தால் என்ன, இவையெல்லாம் காரணங்கள் அல்ல… இங்கே, வேறோரு முக்கியமான பந்தம் இருக்கிறது. உயர்ந்தோர் என்றும் உயர்ந்தோரோடுதான் இணைவர். அந்த இணைப்புத்தான் மன்னனையும் புலவனையும் இணைத்தது என்கின்றார் புலவர்.  இதோ அவரின் புறநானூற்றுப் பாடல்.

பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய

மாமலை பயந்த காமரு மணியும்

இடைப்படச் சேய ஆயினும் தொடை புணர்ந்து

அருவினை நன்கலம் அமைக்கும் காலை

ஒருவழித் தோன்றியாங்கு என்றும் சான்றோர்

சான்றோர் பாலர் ஆப

சாலார் சாலார் பாலர் ஆகுபவே.

 

கருத்துரை:

பொன், பவளம், முத்து மற்றும் நிலையான பெரிய மலையில் கொடுத்த விரும்பத்தக்க மணிகள் என இவை ஒன்றுகொன்று தொலைவான இடங்களில் தோன்றியிருந்தாலும் மதிப்புமிக்க  அணிகலன்களில் தொடுக்கின்றபோது அவை ஒரே இடத்தில் தோன்றியது போலத் தோற்றமளிக்கும். அதுபோல், சான்றோர் என்றும் சான்றோரோடு சேர்ந்திருப்பர். சான்றோர் அல்லாதவர், சான்றோர் அல்லாதவரோடே இணைந்திருப்பர்

இந்த இயற்கையின் விதி அன்றைக்கு மட்டுமல்ல இன்றைக்கும் நாம் அனுபவிக்கின்றபோது அடைகின்ற மகிழ்ச்சிக்கு எல்லையேது? என்றும் நிலைத்து நிற்கும் இயற்கை விதியை இயம்பிய புலவனின் ஆற்றலுக்கு தலை வணங்காமல் இருக்க முடியுமா?


பேரா. ருக்மணி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சங்கப் பாடல்களை அறிவோம்- புறநானூறு- 218”

அதிகம் படித்தது