ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

சங்கப் பாடல்களை அறிவோம் புறநானூறு-185

பேரா. ருக்மணி

Nov 28, 2015

sanga paadalgal3தொண்டைமான் இளந்திரையனின் பாடல் இது. இடையூறின்றி செலுத்த வேண்டியது வண்டி மட்டுமல்ல; நாட்டின் ஆட்சியையும்தான் என்பதை நயமோடு சொல்லுகின்ற பாடல்.

கால் பார் கோத்து, ஞாலத்து இயக்கும்

காவற் சாகாடு உகைப்போன் மாணின்

ஊறு இன்றாகி ஆறு இனிது படுமே

உய்த்தல் தேற்றான் ஆயின் வைகலும்

பகைக்கூழ் அள்ளற்பட்டு

மிகப் பல் தீ நோய் தலைத்தலைத் தருமே.

பொதுவியல் திணையில், பொருண்மொழிக் காஞ்சித்துறையில் அமைந்த பாடல்.

வண்டியினுடைய சக்கரமும் அச்சும் இணைந்தது போல்தான் இவ்உலகத்து இயக்கமும். நாடு காவலாகிய வண்டியைச் செலுத்துகின்றவன் திறமையானவனாக இருந்தால் வண்டியானது, தடையின்றிச் செல்லும். அதைச் செலுத்துகின்றவன், வண்டியைச் செலுத்துகின்ற முறைமை குறித்துத் தெளிவில்லாதவனாக இருந்தால் அவ்வண்டி ஒவ்வொரு நாளும் பகையாகிய சேற்றில் அகப்பட்டு மிகப்பலவாகிய தீய துன்பத்தினை மேன்மேலும் உண்டுபண்ணும் என்கின்றார் தொண்டைமான் இளந்திரையன்.

sanga paadalgal5சொற்பொருள் விளக்கம்

கால் – சக்கரம், பார்- அச்சு, கோத்து- இணைத்து, ஞாலத்து –உலகத்து, இயக்கும்- செலுத்தும், காவற் சாகாடு- காவலாகிய வண்டி, உகைப்போன் மாணின்-செலுத்துபவன் மாட்சிமைப்பட்டிருப்பின், ஊறு இன்றாகி-இடையூறின்றி, ஆறு இனிது படுமே- செல்லும்வழி இனிதாகும், உய்த்தல் –செலுத்துதல், தேற்றான் ஆயின் – தெளிவில்லாதவனாக இருந்தால்,வைகலும் –நாளும், பகைக்கூழ் –பகையாகிய சேறு, அள்ளற்பட்டு- துன்பப்பட்டு,மிகப் பல்- மிகப் பலவாகிய, தீ நோய் – தீய துன்பம், தலைத்தலை- மேன்மேலும், தரும்- உண்டாக்கும்

வண்டியைச் செலுத்துகின்றவனுக்கும், ஆட்சி அதிகாரத்தில் இருந்து நாட்டைக் காவல் காக்கும் மன்னனுக்கும் முடிச்சுப் போடுகின்றார் தொண்டைமான். வண்டியை ஓட்டுகின்றவன் திறமையானவனாக இருந்தால் வண்டி இடையூன்றி இனிதாகச் செல்லும். அதைப்போல மன்னனும் நாட்டை ஆளுகின்ற முறைமை தெரிந்து ஆட்சி நடத்துவானானாயின் நாடும் நன்றாக இருக்கும் என்பதே தொண்டைமானின் முடிவு.

வண்டியை வைத்தே நாட்டு மன்னனுக்கும் அறவுரை, அறிவுரை பகர்ந்த நம் தமிழ் மண்ணின் மன்னாகிய கவிஞனை என்னென்று புகழ்வது? இதுதான் தமிழ் மண் பெற்ற பெரும் பேறு.


பேரா. ருக்மணி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சங்கப் பாடல்களை அறிவோம் புறநானூறு-185”

அதிகம் படித்தது