ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

சங்க இலக்கியங்களில் கடலியல் சமூகம்

முனைவர். கா. பாஸ்கரன்

Sep 7, 2019

siragu kadaliyal2

தமிழர்களின் உள்ளத்து உணர்ச்சிகளையும் வேட்கைகளையும் புலப்படுத்துவதற்கு இயற்கையைப் பின்னணியாகக் கொண்டு பாடப்பட்டவை சங்க இலக்கியங்கள். மக்கள் தங்கள் வாழிடங்களை ஐந்து வகை நிலங்களாகப் பாகுபாடு செய்துள்ளனர். வயல், காடு, மலை கடல், மணல்பகுதிகள் என ஐந்தாகப் பிரித்து, தனித்தனிப் பெயரிட்டு அழைத்தனர். தங்கள் வாழிடங்களுக்கேற்ப, அக்காலத்தில் காணப்பட்ட தாவரங்கள், விலங்குகள், பறவைகள், தொழில், விழாக்கள், சடங்குகள், உணவுமுறை போன்றவற்றை சங்கப்பாடல்களில் பதிவு செய்துள்ளனர். இப்பாடல்களில் மனித சமுதாயத்தின் உயர்ந்த கருத்துக்களையும் வாழ்வியல் விழுமியங்களையும் காணமுடிகிறது. சங்க அகப்பாடல்களில் குறுந்தொகையில் கடலியல் சார்ந்த வரலாற்றுச் செய்திகள் மிகுதியாகக் காணப்படுகின்றன. குறுந்தொகை நெய்தல் திணைப் பாடல்களில் இடம்பெறும் கடலியல் சமூக வரலாற்றை இக்கட்டுரை ஆய்வு செய்கிறது.

சங்ககால புலவர்கள் 473 பேரில் 205 பேர் குறுந்தொகையிலுள்ள 401 பாடல்களைப் பாடியுள்ளனர். இவர்களுள் 46 புலவர்கள் குறுந்தொகை நெய்தல் திணையைச் சிறப்பித்துப் பாடியுள்ளனர். இந்நூல் 72 நெய்தல் திணைப்பாடல்கள் உள்ளன. இவற்றில் மூன்று பாடல்களை 381, 313, 326 இயற்றிய புலவர்கள் பெயர் தெரியவில்லை. அம்மூவனாரே கடல் சார்ந்த சமூக வரலாற்றை மிகுதியாகப் பத்துப்பாடல்களில் பாடியுள்ளார். அம்மூவனர் கடல் சார்ந்த நிலப்பகுதியின் வரலாறு, அங்கு வாழும் விலங்குகள். பறவைகள், செடி, கொடிகள், தொழில், உணவு முறை, மக்களின் இயல்புகள் மற்றும் தலைவன் தலைவியின் திணை அகஒழுக்கம் குறித்த செய்திகளை மிகுதியாகப் பாடியுள்ளார். சங்க இலக்கியங்களாகத் திகழ்ந்த பத்துப்பாட்டும் எட்டுத்தொகையுமாகும். எட்டுத்தொகை நூல்களுள் புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகியவை புறச் செய்திகளைக் கூறுகின்றன. நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை , அகநானூறு என்ற ஐந்தும் அகம் பற்றிய செய்திகளைக் கூறுகின்றன. பரிபாடல் அகம் புறம் இரண்டையும் ஒருங்கே உணர்த்தும் நூலாகும். சங்க இலக்கியங்கள் மனித வாழ்வை முதன்மைப்படுத்தி பாடுகின்றன. இயற்கை அதற்கு உறுதுணையாய் இரண்டாம் இடமே பெறுகின்றது. சங்க இலக்கியத்தில் விண்ணைத் தொட்டு நிற்கும் மலைகளையும், நீண்ட கடற்பரப்பையும், வயல்வெளிகளையும், அடர்ந்த காடுகளையும் உணர்ச்சி ததும்ப வலிமைமிக்க கருவிகளாகப் பயன்படுத்தியுள்ளனர். அகப்பாடல்களில் முதற்பொருளையும், கருப்பொருளையும் அறிவியல் பூர்வமாகப் பாடியுள்ளனர். இவை உரிப்பொருளுக்கு பின்னணியாக அமைந்துள்ளன.

இக்கட்டுரையில் குறுந்தொகை நெய்தல் நிலப்பாடல்களில் இடம்பெற்றுள்ள சமூக வரலாற்றை விரிவாக ஆய்வ செய்கிறது. தமிழர்கள் கடல் சார்ந்த வாழ்க்கையில் உயர்ந்த விழுமியங்களோடு வாழ்ந்துள்ளனர். பல நாடுகளோடு கடல் வாணிகம் நடத்துள்ளனர். சங்கப்பாடல்களும் சிலப்பதிகாரமும் இதனை மெய்ப்பிக்கின்றன. இங்கு கடல் வாணிகம், கடற்கரைத் தாவரங்கள், விலங்குகள், கடல்வாழ் உயிரினங்கள், நெய்தல் நில மக்களின் வரலாறு, பிற கருப்பொருள் செய்திகள் ஆகியவை குறுந்தொகை பாடல்களோடு ஒப்புமைப்படுத்தி ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

கடல் வாணிகம்

siragu kadaliyal3

தொல்காப்பியம் கடல் வாணிகத்தை “முந்நீர் வழக்கம் எனக் குறிப்பிடுகிறது. கப்பல் கட்டிய தச்சர் “கலம் புனர் கம்மியர்’ எனப்பட்டனர். நாவாய், படகு, திமில், அம்பி போன்ற பெயர்கள் சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன. பூம்புகார், கொற்கை, முசிறி, தொண்டி ஆகியவை துறைமுகங்களாக விளங்கின. மேலை நாட்டக்கும் கீழை நாட்டுக்கும் தமிழக கப்பல்கள் சென்று வந்தன. சோழர் சிறந்த கப்பற்படையை நிறுவினான். செங்குட்டுவன் “கடல் மிறக் கோட்டிய செங்குட்டுவன் எனப்பட்டான் .

கரிகாலன், “நளியிரு முந்நீர் நாவாயோட்டி வளி தொழிலாண்ட உரவோன் உம்பல்” எனப் பாராட்டப்பட்டான். கி.மு.3000 த்துக்கு முன்பே சுமேரியாவோடு தமிழர்கள் வாணிகத் தொடர்பு வைத்திருந்தனர். பாரசீக வளைகுடா வழியே எகிப்துவோடு கடல் வாணிகம் செய்து அகில், சந்தனம், யானைத்தந்தம், ஆடைகள் போன்றவற்றை ஏற்றுமதி செய்தனர். கி.மு. 12ல் சாலமன் மன்னனுக்கு மயிற்தோகை, யானைத்தந்தம், வாசனைப்பொருட்கள் ஆகியவை விற்கப்பட்டன. பாரசீகம், ஆப்பிரிக்காவிற்கு எருதுகள் ஏற்றுமதியாயின. உரோமம் நாட்டில் தமிழரின் முத்துக்கள் விற்கப்பட்டன. கி.பி. 60 இல் வெளிவந்த “பெரிபுளுசு“ எனும் நூல் தொண்டி, குமரி, முசிறி, கொற்கை, புகார் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. புகாரில் யவனர்கள் குடியேற்றம் நடைபெற்றதாக அ. தட்சிணா மூர்த்தி குறிப்பிடுகிறார். மேல்குறியீடு செய்யவேண்டும் கி.பி. 150 இல் வாழ்ந்த தாலமியின் கடல்சார் வாணிகக் குறிப்புகள் தமிழரின் உழைப்பை உறுதிப்படுத்துகின்றன.

முழங்குகடல் முத்தும், சங்கு வளையல்களும், பரதவரின் கூலமும், தீம்புளியும், வெள்ளுப்ப்பும் விற்றுக் குதிரைகளை வாங்கி வந்ததாக மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது. “கலங்கரை விளக்கம்” பற்றிய குறிப்புகள் பெருபாணாற்றுப்படையில் உள்ளன. மீன்பிடித்தல், முத்துக்குளித்தல் உப்பு விளைவித்தல் போன்றவை நெய்தல் நில மக்களின் முக்கிய தொழிலாக விளங்கியது. தாழையை வேலியாகவுடைய நெய்தலங்கனால், புன்னைமரம், ஆம்பல் மலர், புகார் நகர வணிகம், கருங்குவளைமலர் நறுஞாழல் பூ, பவளம் போன்ற செய்திகளை சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. மேலும் கடற்கரைப் பரப்பில் பூக்கள் மலிந்த சோலை, இனிய கள்ளையுடைய நெய்தல் மலர், மாரிக்காலத்து மலர்கின்ற ம்ர்க்கம்பூ,சண்பகம், கருமுகை, வெண்பூ, மல்லிகை, தாழைமடல், வெட்டிவேர், குமிழமரம், ஆம்பல் மலர் குறித்த செய்திகளும் சிலம்பில் இடம்பெற்றுள்ளன. கடல் வாணிகம் தமிழருக்கு மிகவும் தொன்மையானது என்பதை மேற்கூறிய செய்திகள் அரண்சேர்க்கும் வகையில் அமைந்துள்ளன.

கடற்கரைத் தாவரங்கள்

siragu kadaliyal6

கடல் பகுதியில் உப்புநீர் ஆழ்ந்துள்ளதால் இந்நிலத்திற்கே உரிய தாவரங்கள் குறுந்தொகையில் மிகுதியாக இடம்பெற்றுள்ளன. நெய்தல் நிலத்தின் கருப்பொருளாக தெய்வம், உணவு, விலங்குகள், மரம், செடி, கொடிகள், பறவைகள், தோற்கருவிகள், தொழில், ஊர், நீர், பூ போன்றவை முக்கியமானவை. இதனை இளம்பூரணர், “நிலமும் காலமும் பற்றி வருவன கருப்பொருள் என உணர்க” எனக் கூறுகிறார். சங்கப்பாடல்களில் அகம், புறம் என்ற பாகுபாட்டை உணர்வு நிலையில் மட்டுமின்றி உணர்வுகளோடு தொடர்புடைய சூழல்களை வகைப்படுத்திக் காட்டுவதற்கு பாடல்களில் இடம்பெறும் கருப்பொருள் பெரிதும் பயன்படுகிறது. கருப்பொருளின் பயன்பாடே உரிப்பொருளை விளங்க உதவுகிறது. எனவே புலவர்கள் கடல்சார் பகுதியில் காணப்படும், பூக்கள், மரம், செடி, கொடிகள், விலங்குகள், பறவைகள் போன்றவற்றைபாடலோடு இணைத்துப் பாடியுள்ளார். தமிழரின் தொன்மையான கடல்சார் அறிவை அறிந்து கொள்ள சங்க இலக்கியங்கள் உதவுகின்றன. கருப்பொருளில் ஒன்றான தாவரங்கள் குறுந்தொகையில் மிகுதியாகக் காணப்படுகின்றன.

நெய்தல் கொடிகள்:

கடற்கரைப் பகுதியில் நெய்தல் கொடிகளும் அதில் நெய்தல் மலர்களும் வெள்ளம் பெருகுந்தோறும் நீரில் மூழ்கும். இதனை, “கூழை நெய்தல் 223.3 “இருங்கழி நெய்தல் 336.5, நெய்தல் மாமலர் 336.5 என்று ஓத ஞானி, குன்றியன், அம்மூவனார் ஆகிய புலவர்கள் நுட்பமாகக் கூறியுள்ளனர்.
அடும்பு : – கடற்கரையில் பரந்து விரிந்து கிடக்கும் இக்கொடியை “அடப்பங்கொடி” எனக் கூறுவர். நெய்தல் மலரோடு அடும்பு மலரைச் சேர்த்துத் தொகுத்து மாலை அணிந்ததாக அம்மூவனார் கூறுகிறார்.
“அடும்பின் ஆய்மலர் விரைஇ நெய்தல்
நெடுந்தொடை வேய்ந்த நீர் வார் கூந்தல்” 401-1-2
என்ற அடிகள் உணர்த்தும். கடற்கரை மணல் மேடுகளில் அடுப்பங்கொடி படர்ந்து கிடந்தன என்கிறார் உலோச்சனார். இதனை,
“அடும்பு இவர் மணற்கோடு ஊர” 248.5
என்ற அடி புலப்படுகிறது.
முள்ளிச் செடிகள்:
கடற்கரை மணற்பரப்பில் முள்ளிச்செடி உள்ளதாக பலபாடல்கள் குறிப்பிடுகின்றன. குறுந்தொகை நெய்தற் கழியில் முள்ளிச்செடிகள் நின்றதை அம்மூவனார் “அணில்பல் அன்ன கொங்கு முதிர் முண்டகத்து 49.1 எனச் சுட்டுவர். இச்செடி வளைந்த முள்ளைப் பெற்றிருக்கும் என்பதைக் குன்றியனார் “கூன்முள் முண்டகம்” 51.1 எனக் குறிப்பிடுகிறார். கடற்கரை மணற்பரப்பில் இந்நிலத்திற்குகேயுரிய குறிப்பிட்ட சில தாவரங்களே காணப்பட்டதை அறியமுடிகிறது.
நெய்தல் நில மரங்கள்:
கடற்பரப்பில் முன்னர் காணப்பட்ட குறிப்பிட்ட சில மரங்களையும் குறுந்தொகை குறிப்பிடுகிறது. நெய்தல் சோலையில் புன்னைமரம், குரவமரம், ஞாழல் மரம், கடப்பமரம், பனைமரம் ஆகியவை இடம் பெற்றுள்ளது.
“இணர் அவிழ் புன்னை” 2993
“இன்னிழல் புன்னை” 5.2
“கருங்கோட்டுப் புன்னை “ 123.3
“முள் இலைத் தடவு நிலைத் தாழை 219.6
“கொழுமடல் தாழை” 245.30
“கமழும் ஞாழல்” 310.6
“நறுவீ ஞாழல்” 318.2
“பல்வீ படரிய பசுநனைக் குரவம் 341.1
“நெடும் பனை” 248.5
என்ற தொடர்கள் நெய்தல் நில மரங்களைக் குறிப்பிகின்றன. கருப்பொருளில் மரங்களும் முக்கியப் பங்கு வகித்துள்ளன.

கடல்வாழ் பறவைகள்

கடற்கரைப் பரப்பில் பல பறவைகள் காணப்பட்டாலும், நெய்தற்கு உரிய பறவைகளாக அன்னமும், அன்றிலும் விளங்கும் என்பார் நச்சீனார்கினியர் கடற்காக்கையை நெய்தற்குரிய பறவையாக இளம்பூரணர் கூறுவர்.

அன்னம்

வானில் உயரமாகப் பறக்கக் கூடியது, வெண்ணிறமானது. நீரிலும் நிலத்திலும் வாழும் உடல் அமைப்பை உடையது. மேகம் மழைபொழிகிறது. வெண்ணிறத் தேரில் ஏறிக் கலங்கிய கடலிலுள்ள நீர்த்துளிகள் தேரின் சக்கரத்தை நனைக்குமாறு தலைவன் விரைந்து வந்தான். அதுவானத்தில் பறக்கும் அன்னப்பறவை மேலும் உயர்ந்து பறப்பது போல் காணப்படுகிறது என்பார் உலோச்சனார்,
“மின்னுச் செய் கருவிய பெயல் மழைதூங்க
மவிசும்பு ஆடு அன்னம் பறை நிவந்தாங்கு
பொலம்படைர்ப் பொலிந்த வெண்தேர் ஏறிக்
கலிங்கு கடற் றுவலை ஆழி நனைப்ப
இனிச் சென்றனனே” எனக் குறிப்பிடுகிறார்.

அன்றில்

கடற்கரைக் குழிகளில் மீன் முதலாயவற்றையுண்டு வாழும் பறவையாகும். பனைமரத்தில் கூடமைத்து வாழும் தன்மையது. சிவந்து வளைந்த வாயினை உடையது. இதன் கால் கரியது. ஒன்றைவிட்டு ஒன்றுபிரியாது வாழும் இயல்பின. பிரியின் பனைக்கூட்டில் அமர்ந்து நள்ளிரவில் தன் துணையை உணர்ச்சி மேலிட்டால் அழைக்கும்
“ கடல்படு அவிந்து கானல் மயங்கித்
துறைநீர் இருங்கழி புல்லென் றன்றே
மன்றலம் பெண்ணை மடல்சேர் வாழ்க்கை
அன்றிலும் பையென நரலும்” 1771-4 என்ற அடிகள் புலப்படுத்தும்.

சிறுவெண் காக்கை –

கடற்கரை நெய்தல் கழியில் வாழும் ஒரு வகைக் காக்கை. இதன் கழுத்தின் கீழ் புறம் சிறிது வெளுத்தும் ஏனைய உடல் முழுவதும் கருமையாகக் காணப்படும். இதன் வாயின் உட்பகுதி செந்நிறமாக இருக்கும். வெண்காக்கைக் கூட்டம் நீரில் வேட்டையாடுங்கால் உடல் நனைந்து விடுகின்றன. அதனால் அக்காக்கை சோலையில் தங்கி இன்பம் பெறும் என்கிறார் இளம்பூதனார். அதனை,
“சிறுவெண் காக்கை செவ்வாய் பொருந்தோடு
எறி தனத் திவலை ஈரம் புறம் நனைப்ப
பனிபுலர்ந்து உறையும் பல்பூங்கானல்”
என்ற அடிகள் உணர்த்தும்.
மேலும் நெய்தல் நிலத்துக்குரிய பறவைகளாக கொக்கு, நாரை, குருகு, வெளவால் ஆகியவை குறுந்தொகையில் சிறப்பித்துப் பாடப்பட்டுள்ளன.

கடல் வாழ் உயிரினங்கள்- முதலை , சுறா ஆகிய இரண்டையும் கடல் வாழ் விலங்காக நச்சினார்க்கினியரும், இளம்பூரணரும் கூறுவர். குறுந்தொகையில் முதலை, சுறா மீன்களுடன் அயிரை, ஆரல் போன்ற மீனினங்களும் குறிக்கப்பட்டுள்ளன. கடல் நீரில் வாழும் அலவன் பற்றிய குறிப்பும் மிகுதியாகக் காணப்படுகின்றன. கடலுள் மீன் பிடிக்கச்சென்ற எம் தந்தையை வலிமைமிக்க சுறாமீன் தாக்கியது. அதனால் ஏற்பட்ட புண் ஆறி மீண்டும் மீன் பிடிப்பதற்காக என் தந்தை கடலுள் சென்றுள்ளான் என்கிறார் தலைவி. இதனைக் கல்லாடனார்,
“வயச் சுற எறிந்த புண் தணிந்து எந்தையுயும்
நீலகுறப் பெருங்கடல் புக்கனன்” 269.3-4 எனக் கூறுவர். முதலை அகப்பட்டவறெ பற்றிக் கெ தன்n என்கிறார் கவைமகள் அதனை,
“கொடுந் தாள் முதலை கோள்வல் ஒற்றை
வழி வழக்கு அறுக்கும் கானலம் 324.1-2
என்ற அடிகள் சுட்டும்.
யாமம், மாலை, கங்குல், வையுள் மாலை ஆகிய பொழுதுகள் மிகுதியாகக் காணப்படுகின்றன.


முனைவர். கா. பாஸ்கரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சங்க இலக்கியங்களில் கடலியல் சமூகம்”

அதிகம் படித்தது