செப்டம்பர் 26, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

சங்க இலக்கியங்களில் மனையியல் செய்திகள்

பேரா. பெ. வித்யா

Sep 21, 2019

siragu-manayiyal1
தமிழ் என்னும் சொல்லுக்கு இனிமை, நீர்மை என்று நிகண்டு பொருள் உரைக்கின்றது. ‘‘இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்” (பிங்கலநிகண்டு), “தமிழுக்கும் அமுதென்று பேர்” என்கிறார் பாவேந்தர். இப்பண்புகளே தமிழ் மொழியைப் பல்லாயிரம் ஆண்டுகளாகக் கன்னித் தமிழாக முன்னைப் பழமைக்கும் பழையதாகவும், பின்னைப் புதுமைக்கும் புதியதாகவும் வளமையும் செழுமையும மிக்கதாக அழியாத் தன்மையுடன் நிலை நிறுத்தி வருகின்றன. இவ்வாறாகத் திகழும் தமிழ் மொழியில் இன்று பல துறைகளை நிறுவி சாதனைப் படைக்கின்றனர் சான்றோர்கள். அந்த வகையில் செம்மொழித் தகுதி பெற்ற தமிழ் இலக்கியங்களில் பல்துறை அறிவியல் சிந்தனைகள் என்ற தலைப்பில் “மனையியல்” துறையினை அடித்தளமாகக் கொண்டு “அகநானூற்றுப் பாடல்களில் மனையியல் செய்திகள்” என்ற தலைப்பில் இக்கட்டுரை வரையறுக்கப்பட்டுள்ளது.

மனையியல் – அறிமுகம்

மனையியல் அல்லது மனை அறிவியல் என்பது வீடு. குடும்பம் வாழ்வியல் தொடர்பான பல்வேறு கூறுகளுக்கான ஒரு கல்வித்துறை ஆகும். மனையியல் என்ற சொல்லுக்கு அகராதியில் ‘‘வீட்டைநிர்வகித்தல், குடும்பத்தினருக்குத் தேவையான ஊட்டச்சத்து உள்ள உணவு தயாரித்தல் முதலியவற்றை அறிவியல் முறையில் கற்றுத் தரும் படிப்பு.

உருவாக்கப்பட்டதன் நோக்கம்:

1850 –ல் ஐக்கிய அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட நில அன்பளிப்பு பல்கலைக்கழகங்களாக மாற்றப்பட்டது. இந்த பல்கலைக் கழகங்கள் மரபு வழியில் அளிக்கப்பட்டு வந்த பொறியியல் படைத் துறையியல் ஆகியத் தொழில்சார், திறன்சார் துறைகளில் உயர்கல்வி வழங்கின. இவை பெண்கள் கல்வி பெறவும் வாய்ப்புகளைக் கொடுத்தன. பெண்களுக்கு கைத்தொழிற்கலைகளை திறன்களைக் கற்பிக்கவென உருவாக்கப்பட்ட துறையே மனையியல் துறை.

இத்துறை வீட்டையும் குடும்பத்தையும் மேலாண்மை செய்ய அறிவியல் நோக்கிலான கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டது. இந்தியாவில் 1920 ல் மனையியல் துறை அறிமுகப்படுத்தப்பட்டது. 1938ல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இத்துறை அறிமுகப்படுத்தப்பட்டது.

அகநானூறு கூறும் மனையியல் செய்திகள்

சமூகத்தில் சங்கமித்து வெளிப்படுத்தும் ஆன்மத் துடிப்புகளை அகவய நிலையில் உள்வாங்கிக் கொண்டு புறவய நிலையில் வெளிப்படுத்தும் காலக் கண்ணாடி சங்க இலக்கியம் மன நிலையின் உணர்வுகளை உணர்ச்சியுடன் கூறும் அகவொழுக்கமும், புறவொழுக்கமும் தமிழ் இலக்கியத்தை அலங்கரிக்க வந்த மணிமகுடங்கள். தமிழ் மொழியின் தொன்மையும், தமிழ் நிலத்தின் வளமையும் , தமிழ் இனத்தின் பெருமையையும் மையமாகக் கொண்டு எழுந்த எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று “அகநானூறு”ஆகும்.

அகநானூறு கூறும் ஊட்டச்சத்துச் சொல்:

உடலுக்கு சத்துச் சேர்க்கக் கூடிய “வைட்டமின்” என பலராலும் குறிக்கப்படும் சொல் “உயிர்ச்சத்து” என்று மனையியல் குறிக்கின்றது. இதற்கு இணையான சங்கச் சொல் “உரன்” என்றுக் குறிப்பிடப்படுகிறது. உரன் என்பதற்கு மனஉறுதி, பற்றுக்கோடு என்னும் பொருள்களில் சங்க இலக்கியப் பாடல்களில் கூறப்படுகின்றன.
‘‘பசும்பிசிர்த் திரைபயில் அழுவம் உழக்கி
உரன் அழிந்து நிரைதிமில் மருங்கில்”
(அக. நா. 210)
இவ்வரிகளில் வலுவிழந்து நிற்கும் படகுகள் என்ற வரிகள் “உரன் அழந்து” என்னும் சொல் கொண்டு கூறப்பட்டுள்ளது.

‘‘வினைநசை இப்பரிக்கும் உரன்மிகு நெஞ்சமொடு” (அக.நா.215)
இவ்வரிகளில் “உரன் மிகு நெஞ்சம்” என்ற சொல்லானது துணிவுமிக்க உள்ளத்தைக் குறிப்பிடுகிறது.

‘‘உரன்மலி உள்ளமொடு முனை பாழாக” (அக.நா.349)
இவ்வரிகளில் வலிமைமிக்க உள்ளத்தோடுச் சென்று பகைவரை வெல்ல வேண்டும் எனக் காட்டப்பட்டுள்ளது.

இவ்வரிகளின் மூலமாக உடலுக்கும் உள்ளத்துக்கும் உறுதியையும் பற்றுக் கோட்டையும் நல்கும் வலுவூட்டர் சக்தியரினை நாம் உரன்

என்னும் சொல்லின் அடிப்படையில் “உரனி” எனக் குறிப்பிடலாம்.
உடலுக்கு வேண்டிய அளவு உரனி கிடைக்காவிட்டால் உடல் நலிவுறும். நோய்க்கு இடமாகும் அந்தந்த உரனியின் இயல்பிற்குக்கேற்ப ஒவ்வொன்றிற்கும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. உதாரணமாக நோய் அடிப்படையில் உரனியை வகைப்படுத்துவதில் ஒன்று மட்டும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. நம் உடலில் சுண்ணாம்புச் சத்து தேவைக்கான உரனியை சுதைய உரனி என குறிப்பிடலாம்

“சுதை விரிந்தன்ன பல்பூ
மராஅம்”(அக.நா.211)
சத்து மிகுந்த மரத்தில் படர்ந்திருந்த பூக்கள் பல என்ற பொருளின் அடிப்படையில் இங்கு “சுதை” என்பது சுண்ணாம்புச் சத்தைக் குறிப்பிட்டிருக்கலாம்.
இதனைப்போன்று,
‘‘மாரிச் சுதையின் ஈரம்புறத்து அன்ன”
(அக.நா.346)
இவ்வரிகளில் வெண்மை நிறத்தை ஒத்த என்ற பொருளின் அடிப்படையில் கூறப்படுகிறது.
இவ்வாறாக பல வகையான ஊட்டச் சத்துக் குறிக்கின்ற சொல் உரன் என்று குறிப்பிட்டிருக்கலாம்.

தொகுப்புரை

உலகில் எத்தனையோ மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. இதில் பல மொழிகளுக்கு எழுத்து வடிவங்கள் இல்லை என்பதால் பயன்பாட்டுக்குக் கெணர்டு வர முடியாமல் உள்ளன. ஆனால் சில மொழிகள் மிகப்பழமையானதாகவும், இலக்கியத்தில் சிறந்து விளங்குவதாகும் உள்ளன. இவற்றில் சில மொழிகளை செம்மொழிகள் என்று அடையாளப்படுத்தப்படுகின்றது.

ஒரு மொழியின் சிறப்பிற்கும் . செம்மொழிக்கும் முதல் அடையாளமாகத் திகழ்வது அம்மொழியின் பழமை வாய்ந்த இலக்கியங்கள் தான். அவ்விலக்கியங்களில் ஒன்றான அகநானூற்றில் மனையியல் தொடர்பான அறிவியல் சிந்தனைச் செய்திகள் பல இருக்கின்றன. எனினும் இக்கட்டுரையில் “உரன்” என்பது ஊட்டச்சத்து தொடர்பான சொல்லானது. உடலுக்கும் உள்ளத்துக்கும் உறுதியையும் பற்றுக் கோட்டையும் நல்கும் சொல்லாக அழைக்கப்பட்டிருக்கலாம்.


பேரா. பெ. வித்யா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சங்க இலக்கியங்களில் மனையியல் செய்திகள்”

அதிகம் படித்தது