சங்க இலக்கியத்தில் கடல் வாழ் உயிரினங்களின் உவமை
வழக்கறிஞர். ம. வீ. கனிமொழிMar 13, 2021
தமிழர்கள் புலால் உணவையும், கள்ளையும் விரும்பி உண்டும் குடித்தும் வந்திருக்கின்றனர் என்று நம் சங்க இலக்கிய வாயிலாக அறிந்துகொள்கின்றோம் .
அந்த அடிப்படையில் நற்றிணையில் வரும் ஒரு பாடலில் கடற்கரை ஓரம் வளர்ந்திருக்கும் தாழை மரங்களையும் அதன் அரும்புகளையும் பற்றிய குறிப்புக்கள் உண்டு. அந்த தாழை மரத்தை எதனுடன் ஒப்பிட்டு எழுதப்பட்டிருக்கின்றது என்பதைப் படிக்கின்றபோது நமக்கு வியப்பு ஏற்படாமல் இல்லை. அந்த பாடலை எழுதியவர் பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார் . இவர் எழுதிய பாடல்கள் சங்க இலக்கியத் தொகுப்பில் மொத்தம் 6! அவை நற்றிணையில் இரண்டு, அகநானூறு ஒன்று, புறநானூற்றில் 3.
நற்றிணை 19 இல் நெய்தல் திணையில் வரும் பாடல் தான் மேலே கூறப்பட்டுள்ள பாடல். அந்தப் பாடலின் சூழல், தலைவியோடு இயற்கைப் புணர்ச்சி முடிந்தவுடன் தலைவன் தன் ஊருக்குக் கிளம்புகிறான். அப்போது அங்கே வந்த தோழி அவன் சிறிது நாள் பிரிந்திருந்தாலும் தோழியால் தாங்கிக் கொள்ள முடியாது எனவே அவளை திருமணம் செய்து கொள்ளும்படி தெரிவிக்கிறாள்.
பாடல்:
இறவுப் புறத்து அன்ன பிணர் படு தடவு முதல்
சுறவுக் கோட்டன்ன முள் இலைத் தாழை,
பெருங் களிற்று மருப்பின் அன்ன அரும்பு முதிர்பு,
நல் மான் உழையின் வேறுபடத் தோன்றி,
விழவுக் களம் கமழும் உரவு நீர்ச் சேர்ப்ப!
இன மணி நெடுந் தேர் பாகன் இயக்க,
செலீஇய சேறிஆயின், இவளே
வருவை ஆகிய சில் நாள்
வாழாள் ஆதல் நற்கு அறிந்தனை சென்மே!
இறால் மீன் மேற்பகுதி எப்படி சொரசொரப்பாக மீசையோடு இருக்குமோ அதுபோல தாழை மரத்தின் கிளைகள் சொரசொரப்பாக இருக்கும், அதேபோல தாழை மரத்தின் இலைகளின் நுனி சுறா மீனின் கூரிய பற்கள் போல இருக்கும், தாழை மரத்தின் அரும்பு ஆண் யானையின் தந்தம் போல பூத்திருக்கும், தாழை மரத்தின் அரும்பு பூத்திருக்கும் போது ஒரு பெண் மான் எப்படி தலை சாய்த்து நோக்குமோ அதுபோல அந்த பூ மலர்ந்து இருக்கும்,
அப்படிப்பட்ட தாழம்பூ வாசம் கமழும் ஊரின் தலைவனே, நீ இன்றைக்குப் புணர்ச்சி முடிந்து மணிகள் நிறைந்த தேரை பாகன் இயக்க சென்று விடுவாய், நீ சிறிது நாளில் திரும்பி வந்து விடுவாய் என்றாலும் அந்த இடைப்பட்ட நாளில் கூட உன்னுடைய தலைவி உயிருடன் வாழ மாட்டாள் எனவே அந்த செய்தியைப் புரிந்து நீ செய்ய வேண்டியவற்றைச் செய்து விடு, அதாவது தலைவியை மணந்து கொள் என்பதுதான் தோழி தலைவனிடம் சொல்லும் செய்தி.
இந்த பாடலின் உவமையை எண்ணிப் பார்க்கும் பொழுது எத்துணை சிறப்பான இயற்கை அறிவு இருந்தால் இந்த உவமைகளை நக்கண்ணையார் கையாண்டு இருக்க முடியும் என்பதை எண்ணி வியக்காமல் இருக்க முடியாது. இனி தாழை மரங்களைப் பார்த்தால் நமக்கு இறால் மீனும் சுறாவும் தான் முதலில் நினைவுக்கு வரும். ஒரு மலர் பற்றி உவமை கூறும்பொழுது கடல் வாழ் உயிரினங்களை உவமையாகக் கூறலாம் என்ற அருமையான செய்தியை இந்தப் பாடலில் நம்மால் அறிந்துகொள்ள முடியும். நம்முடைய தமிழர்களுக்கு எந்த அளவிற்குக் கடல் வாழ் உயிரினங்களைப் பற்றிய அறிவு இருந்தால் இப்படிப்பட்ட உவமையை ஒரு மரத்தைப் பற்றிப் பாடும் பொழுது கூட எழுத முடியும் என்பதை எண்ணிப் பாருங்கள்.
வால மீனுக்கும் விலங்கு
மீனுக்கும் கல்யாணம்
அந்த செந்நாக்குனி கூட்டமெல்லாம் ஊர்கோலம்
அந்த நடுக் கடலில் நடக்குதையா திருமணம்
அங்கு அசர பொடி ஆளுக்கெல்லாம் கும்மாளம்
என்று ஒரு சில ஆண்டுகளுக்கு முன் ஒரு கானா பாடல் வெளிவந்தது. அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே இப்படிப்பட்ட பாடல்கள் நம் இலக்கியத்தில் உள்ளது என்பதே நாம் அறிந்து கொள்ளும் செய்தி !
வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “சங்க இலக்கியத்தில் கடல் வாழ் உயிரினங்களின் உவமை”