ஏப்ரல் 4, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

சங்க இலக்கியத்தில் வானிலையியல்

முனைவர் பாலசுப்பிரமணியன்

May 18, 2019

siragu vaanilai1தமிழ் இலக்கியத்தில் அறிவியல் என்ற தலைப்பைப் பார்த்ததுமே நினைவுக்கு வருவது ஔவையின் வாக்குதான். இலக்கியத்தில் அறிவியல் குறித்துப் பேச அல்லது எழுதத் தொடங்கும் எந்தவொரு ஆராய்ச்சியாளருக்கும் முதலில் தோன்றுவது திருவள்ளுவமாலையில் ஔவையார் எழுதியுள்ள “அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்” என்ற பாடலே. இந்தப் பாடல் ஔவையாரோடு வள்ளுவரையும் நினைவிற்கு கொண்டு வந்து விடும். ஔவையின் வாக்கு குறித்து அதிக விளக்கம் கூறத் தேவையில்லை.மிகச்சிறிய அலகாகக் கருதப்படும் அணுவையே துளைத்தல் குறித்த சிந்தனை இலக்கியத்தில் எப்படி வந்தது என்பது மிகப்பெரிய வியப்புதான். தொடர்ச்சியாக நினைவில் வருவது, வள்ளுவரின் பெயராகும்.உலக வாழ்க்கைக்கு அடிப்படையாக இருப்பது நீர் எனக் கூறிடின் அதில் மிகையில்லை. ஆங்கிலத்தில் Water – the elixir of life “ என்று சொல்வார்கள். இதையே வள்ளுவர் –

”நீரின்றமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன் றமையாது ஒழுகு.”

siragu vaanilai

என்கிறார். எவ்வகையில் உயர்ந்தவராக இருந்தாலும் நீர் இல்லாமல் இவ்வுலகில் வாழ முடியாது. அதுபோலவே மழை பெய்யவில்லை என்றால் வாழ்க்கையின் ஆதாரமான நீரும் இல்லை. இது ஒரு சுழற்சிச் சக்கரம் போன்றது. இரண்டு வரிகளுக்குள் அடங்கும் இந்த அரிய கருத்துக்கு நிகரான ஆங்கில Water is the elixir of life என்ற கருத்து நிச்சயமாக வள்ளுவருக்கு முன்னால் தோன்றியிருக்க முடியாது. ஆனால் தமிழில் இந்தக் கருத்து சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே பதியப்பட்டிருக்கிறது என்றால், பெருமைப்படுவது ஒருபுறம் இருக்க, அறிவியல் நோக்குப் பார்வையில் வியப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. வள்ளுவருக்கு முன்னர் குடபுலவியனார் என்ற புலவர் புறநானூற்றில் இக்கருத்தை மிக அழகாக சொல்லுகிறார்.

முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்
பரந்து பட்ட வியன் ஞாலம்
தாளின் தந்து தம்புகழ் நிறீஇ
ஒருதாம் ஆகிய உரவோர் உம்பல்
ஒன்றுபத்து அடுக்கிய கோடிகடை இரீஇய
பெருமைத்து ஆக நின் ஆயுள் தானே!
நீர்த்தாழ்ந்த குறுங்காஞ்சிப்
பூக்கதூஉம் இனவாளை
நுண்ஆரல் பருவரால்
குரூஉக்கெடிற்ற குண்டுஅகழி
வான்உட்கும் வடிநீண்மதில்
மல்லல்மூதூர் வயவேந்தே!
செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்,
ஞாலம் காவலர் தோள்வலி முருக்கி
ஒருநீ ஆகல் வேண்டினும், சிறந்த
நல்இசை நிறுத்தல் வேண்டினும் மற்றதன்
தகுதி கேள்இனி மிகுதி யாள!
நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உணவெனப் படுவது நிலத்தோடு நீரே
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே
வித்திவான் நோக்கும் புன்புலம் கண்ணகன்
வைப்பிற்று ஆயினும் நண்ணி ஆளும்
இறைவன் தாட்கு உதவாதே அதனால்
அடுபோர்ச் செழிய! இகழாது வல்லே
நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம இவண்தட்டோரே
தள்ளா தோர்இவண் தள்ளா தோரே.

”நீர்நிலை பெருகத் தட்டோர் அம்ம இவண் தட்டோரே தள்ளாதோர் இவண் தள்ளாதோரே” என்ற இந்த அடிகளில் நீர்நிலைகள் கட்டி நீரைத் தேக்கி வைத்தவர்கள், செல்வம், புகழ், ஆட்சி முதலியவற்றைத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்ற கருத்தும் உலகுக்கு நீர் இன்றையமையாததால், நீர்நிலைகள் கட்டி, நீரைத் தேக்கி வைக்கத் தவறியவர்கள் செல்வம், புகழ், ஆட்சி முதலியவற்றை இழக்க நேரிடும் என்றும் குடபுலவியனார் கூறுவதாகக் கொள்ளலாம்.

தொல்காப்பியம் காட்டும் அறிவியல்

தொல்காப்பியம் என்றாலே இலக்கண நூல் என்றுதான் நாம் அறிவோம். ஆனால் இன்று மொழி அறிவியல் என்றொரு வகை இருக்கிறது. லிங்க்விஸ்டிக்ஸ் Linguistics என்னும் மொழியியல் கோணத்தில் பார்க்கும்போது, வள்ளுவருக்கும் முந்தைய தொல்காப்பியத்தில் மொழிக்கு இலக்கணம் மட்டுமல்ல, ஒலி அமைப்பும் உச்சரிப்பும்கூட தெள்ளத்தெளிவாக, இன்றும் திருத்தம் தேவைப்படாத திருத்த முடியாத செம்மையான வடிவத்தில் எழுதப்பட்டிருக்கிறது என்பது தெரிகிறது.

இவ்வளவு தெளிவான மொழியியல் விளக்கங்கள் எப்போது எழுதப்பட்டன என ஆய்வு செய்தோமெனில் வெள்ளைவாரணார் கருத்துப்படி கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முன் – அதாவது ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன் தொல்காப்பியம் எழுதப்பட்டிருக்கிறது. இவ்வளவு முன்னரே தொல்காப்பியம் இயற்றப்பட்டது என்று கருதாவிட்டாலும், குறைந்தபட்சம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது தொல்காப்பியம். அதாவது சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மொழியியல் விதிகள் வரையறுக்கப்பட்டு விட்டன.

தொல்காப்பியப் பொருளதிகாரம் உலகத் தோற்றம், உயிர்களின் வகைப்பாடு, கருப்பொருள்களைக் கொண்ட சூழல், ஆகியவற்றை எல்லாம் விவரிக்கிறது.
நிலம் தீ நீர் வளி விசும்போ டைந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
இருதிணை ஐம்பால் இயனெறி வழாமைத்
திரிவில் சொல்லொடு தழாஅல் வேண்டும்

பஞ்சபூதங்கள் எனப்படும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் கலந்தது இந்த உலகம் என்று கூறும்போது, கலந்த மயக்கம் என்பது கவனிக்கத்தக்கது. அதாவது, ஒன்றொடு ஒன்று ஒட்டியும் ஒட்டாமலும் கலந்தும் கரைந்தும் இருப்பது உலகம் என்கிறார் தொல்காப்பியர்.

இதைத்தொடர்ந்து, உயிரினங்களை வகைப்படுத்துதல் எங்ஙனம் எனத் தொல்காப்பியம் கூறுகிறது.

ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே.

அதாவது ஓரறிவு உயிரானது உடம்பினாலறிவது ஈரறிவு உயிர் என்பது வாயும் கொண்டது. மூவறிவு உடையது மூக்கையும் கொண்டது. நான்கறிவு உடையது கண்ணையும் கொண்டது. ஐந்தறிவு உள்ளது செவித்திறனும் உடையது. ஆறறிவு என்பது சிந்திக்கும் மனமும் கொண்டது. தொல்காப்பியத்தின் மரபியலில் வரும் இப்பாடலைத் தொடர்ந்து, ஓரறிவு உயிர்கள் எவை, ஈரறிவு கொண்ட உயிர்கள் எவை என்ற பட்டியலும் தரப்படுகிறது.

சங்க இலக்கியம் – வானிலையியல் –பல்துறை அறிவியல்

தமிழுக்குத் தனிச்சிறப்புச் சேர்ப்பவை தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியன ஆகும். இச்சங்க இலக்கியங்களை ஆய்ந்து ஆழம் கண்ட அறிஞர் பலர். அவர்களின் ஆய்வுகளில் திணை, துறை, அகத்தின் சிறப்பு, புறத்தின் பெருமை ஆகியவற்றை வெளிப்படுத்திய ஆய்வுகள் பல உள்ளன. மேலும் போரின் ஒழுங்கு, வாழ்வியல் செய்திகள், உளவியற் சிந்தனைகள், இயற்கை எழிலோவியங்கள், செடிகொடிகள், உயிரினங்கள் ஆகியன பற்றிய ஆய்வுகளும் இருக்கின்றன. அவ்வகையில் சங்க இலக்கியங்களில் காணப்படும் வானிலைச் செய்திகள் என்ற தலைப்பிலான ஆய்வும் அவசியமானது.

வானிலை(weather), காலநிலை(climate) பற்றிய அறிவியல் பல துறைகளோடு தொடர்புடைய ஓர் அறிவியல் துறையாகும். சங்க இலக்கியங்களிலும் பல்வேறு அறிவியல் துறைகள் பற்றிய செய்திகள் பொதிந்து கிடக்கின்றன. குறுந்தொகையில் அம்மூவனாரும் புலவர் கூவன் மைந்தனும் உறக்கமின்மை நோய் பற்றிக் குறிப்பிடுகிறார்கள். பசலை நோய், கருவுற்ற பெண்கள் மண்ணையும் புளிப்புச்சுவையுடைய பொருட்களையும் உண்ணுதல் ஆகிய மருத்துவச் செய்திகள், வேகம் என்னும் இயற்பியற் கோட்பாடு, நியூட்டனின் இயக்க விதிகள், தெர்மாஸ் பிளாஸ்க் என்றழைக்கப்படும் சேமச்செப்பு, உணவுச் சங்கிலி, மனிதன் சுற்றுப்புறச் சூழலை மாற்றும் தன்மையுடையவன் ஆகியன பற்றிய பாடல்கள் பல சங்க இலக்கியத்தில் உள்ளன.

வானிலையியல் (Meteorology) காற்று, மேகங்கள் ஆகியவற்றின் இயக்கங்களைப் பற்றி ஆய்வு செய்கையில் இயற்பியலோடும் பசுங்குடில் வாயுக்கள் ஏற்படுத்தும் விளைவுகள் பற்றி ஆய்வு செய்கையில் வேதியலோடும் வானிலை, காலநிலை மாற்றங்களால் தாவரங்களும் உயிரினங்களும் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதனை ஆய்வு செய்கையில் தாவரவியல், உயிரியல் துறைகளோடும் எனப் பல்வேறு அறிவியற் துறைகளோடு தொடர்புடையது. எனவே இத்தகையதோர் அறிவியற்துறை பற்றிய கருத்துக்கள் சங்க இலக்கியத்திலும் காணப்படுவதில் வியப்பில்லை அல்லவா.

வானிலைக் கூறுகள்

ஓரிடத்தின் வானிலையைப் பாதிக்கும் வானிலைக் கூறுகளில் முக்கியமானது காற்றாகும் காற்று ஈரப்பதத்தையும் மழையையும் கொண்டுவருகிறது. காற்றிற்கு அடுத்த நிலையில் மழை வானிலையைப் பாதிக்கும் முக்கியக் கூறாகிறது. மழையைத் தருவது மேகங்களே. மேகங்கள் மழையைத் தருவதோடு மட்டுமல்லாமல் மழையில்லாக் காலங்களில் வெயிலில் இருந்து நமக்கு இதந்தருகிறது. இத்தகைய வானிலைக் கூறுகளின் தொகுப்பே காலநிலை.

சங்க இலக்கியம் கூறுகின்ற செய்திகள் அனைத்தும் முதல், கரு, உரி என்னும் மூன்று பொருட்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. வானிலை உட்பட இந்த உலகில் உள்ள எல்லாம் இம்முப்பொருளில் அடங்கும் என்பதனை சங்க காலப் புலவர்கள் நன்கு உணர்ந்திருந்தனர். வானிலை மக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்தது. இதனை

உருமிடைக் கடிஇடி கரையும் பெரு மலை நாடனைப் பற்றியும்
ஊகம் பார்ப்போடு பனிப்ப, பனிமழை பொழிந்த சாரலைப் பற்றியும்
பனியிருஞ்சோலை பற்றியும்
பெயல கடுநீர் வரித்த செந் நிலமருங்கு பற்றியும்

பாடுகின்ற சங்கப் புலவர்களின் பாடல்களிலிருந்து நாம் அறிய முடிகிறது. மேலும் புலவர்கலின் வானிலை பற்றிய நுணுக்கமான கண்ணோட்டமும் இப்பாடல்களிலிருந்து நமக்குப் புலப்படுகிறது.

காற்று

siragu vaanilai5

காற்று எத்திசையிலிருந்து வீசுகிறது என்பது வானிலை முன்னறிவிப்பில் ஓர் முக்கிய தகவலாகும். சென்னை போன்ற கடற்கரை நகரில் கிழக்கிலிருந்து காற்று வீசும்போது மழைபொழியவும் மேகங்கள் உருவாகவும் வாய்ப்புள்ளது. சங்க இலக்கியப் புலவர்கள் காற்று எத்திசையிலிருந்து வருகிறது என்பதன் முக்கியத்துவத்தை அறிந்திருந்தனர். ஆகவே கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு திசைகளிலிருந்து வீசும் காற்றிற்கு முறையே கொண்டல், கோடை, வாடை, தென்றல் எனப் பெயரிட்டிருந்தனர்.

காற்றிற்கு அசாதாரண வலிமை உண்டு என்பதனையும் அவர்கள் அறிந்திருந்தனர். சங்க இலக்கியங்களில் காணப்படும் காற்று பற்றிய செய்திகள் பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டு இன்று வரை பயன்பாட்டில் உள்ள ப்யூபோர்ட் அளவையில் Beaufor Scale காற்றின் வலிமையைக் கண்டறியும் வகையில் கொடுக்கப்பட்டுள்ள வெவ்வேறு குறியீட்டு எண்களுடைய நிலைகளுக்கான இயற்கைச் செயல்பாட்டு விவரங்களோடு ஒப்பிடும் வகையில் உள்ளன.

எடுத்துக்காட்டாக ப்யூபோர்ட் எண் (6) குறிப்பிடும் நிலையில் பலமான காற்று பெருங்கிளைகளைச் சலனமடையச் செய்யும். தந்திக் கம்பங்களின் ஊடே காற்று வீசுகையில் ஒலி ஏற்படுகிறது. கடலில் பெரு அலைகள் எழுகின்றன. வெண்நுரைப்படலம் ஏற்படுகிறது. நீர்ச் சிதறல் அதிகரிக்கிறது. காற்றால் ஏற்படும் ஒலி பற்றிய குறிப்பொன்றினை ஔவையார்.

பொதுவில் தூங்கு விசியுறு தண்ணுமை
வளி பொரு தெண் கண் கேட்பின் (புறம் 89:8-9 )

எனப் புறநானூற்றில் பொதுவிடத்தில் தொங்குகின்ற முழவினிடத்துக் காற்று மோதி ஓசை எழுப்புதலைக் குறிப்பிடுகிறார். பலமான காற்றினால் வில்லால் அடிபட்ட பஞ்சு போல அலைகள் பிசிர்களைப் பரக்கச்செய்யுமாறு

எழும்பும் அலைகள் பற்றி,
வில் எறி பஞ்சி போல மல்கு திரை
வளி பொரு வயங்கு பிசிர் பொங்கும்
நளி கடற் சேர்ப்பனோடு நகாஅ ஊங்கே நற் 299/8

என நற்றிணையில் நெய்தல் நிலப் பாடலொன்றில் வடம வண்ணக்கன் பேரிசாத்தனார் குறிப்பிடுகிறார்.

மழை:

siragu vaanilai2

மழை உருவாகும் இயற்பியல் அடிப்படையை விளக்கும் வண்ணம் கடல் நீரை முகந்து கொண்டு மேகங்கள் உருவாவது பற்றிய செய்திகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக குறிஞ்சிப்பாட்டில் கபிலர் நீர் நிறைந்த கடலின் நீர் குறைபடும்படி முகந்துகொண்டு மெலிதாக இடித்து முருகனின் வேல் போல மின்னி மலைமிசைப் பொழிந்த மழையைப் பற்றி,

நிறை இரும் பௌவம் குறைபட முகந்து கொண்டு
அகல் இலு வானத்து வீசுவளி கலாலின்
முரசு அதிர்ந்தென்ன இன்முரல் ஏற்றோடு
நிரைசெலல் நிவப்பின் கொண்மூ மயங்கி
இன் இசை முரசின், சுடர்ப்பூண் சேஎய்
ஒன்னார்க்க ஏந்திய இலங்கீலை எ /கின்
மின்மயங்கு கருவிய கல்மிசைப் பொழிந்தென கு பா 47/53

எனக் குறிப்பிடுகிறார். விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படப் பாடலொன்று இவ்வமயத்தில் நினைவுக்கு வருகிறது. அப்பாடலின் முதல் இரண்டு வரிகள் என்னை மிகவும் கவர்ந்தன.

“எவ்வத்தின் உதி காண நீயாற்றும் யாவும் எவ்வாறு இங்கே பிழை?
பவ்வத்தின் துளிமொண்டு மாகஞ்செய்யாது அவ்வானில் ஏது மழை?”

பௌவம் என்பது கடல். புறநானூற்றில் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைக் காரிகிழார் பாடிய பாடலில் ”குடாஅது தொன்றுமுதிர் பெளவத்தின் குடக்கும்” புறம் 6/4 என்று பாடுகிறார். மேற்கில் உள்ள அரபிக் கடல் மிகப் பழைய கடல் எனக் குறிப்பிடுவது காலநிலை பற்றிய அரியதோர் குறிப்பல்லவா ?

இடிமழை பற்றிய தெளிவான வருணனைகள் சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படுகின்றன. இடிமழை நேரத்தில் வெப்பநிலை திடீரெனக் குறையும் பெருந்துளி மழை பொழியும் ஆகிய செய்திகள் காணக்கிடைக்கின்றன. பாம்பு இடியோசை கேட்டு அஞ்சியது எனச் சங்க காலப் புலவர்கள் குறிப்பிட்டுள்ளது சரியானது. தற்கால அறிவியலாளர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. பல்வேறு மழைகள் பற்றிய குறிப்புகள் சங்கப் பாடல்களில் காணப்படுகின்றன.

இடிமழைக்கு ஆலம்பேரி சாத்தனாரின் அகநானூற்றுப் பாடலை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். பிரிவினால் வாடும் தலைவி தோழிக்குத் தலைவன் தன் கைபற்றிச் சூளுரைத்து வருவதாகச் சொல்லிச் சென்ற பருவம் வந்துவிட்டது.ஆயினும் தலைவன் இன்னமும் வரவில்லையே என்று கூறும் பாடலான,

கால்இயல் நெடுந்தேர்க் கைவண் செழியன்
ஆலங் கானத்து அமர்கடந்து உயர்த்த
வேலினும் பல்ஊழ் மின்னி, முரசுஎன
மாஇரு விசும்பில் கடிஇடி பயிற்றி,
நேர்கதிர் நிரைத்த நேமிஅம் செல்வன்
போர்அடங்கு அகலம் பொருந்திய தார்போல்
திருவில் தேஎத்துக் குலைஇ உருகெழு
மண்பயம் பூப்ப பாஅய்,
தண்பெயல் எழிலி தாழ்ந்த போழ்தே ? அகம் 175/0-18

பாண்டியனின் வாள் போல மின்னி, அவன் வெற்றி முரசு போல் இடித்து, திருமால் மார்பில் அணியும் மாலை போல் வானவில்லைத் தோற்றுவித்த குளிர் மழை என ஆலம்பேரி சாத்தானார் இடிமழை பற்றி அழகாகப் பாடியுள்ளார்.
மேகங்கள், காலநிலை

siragu vaanilai3

மேகங்கள் தொடர்பாகவும் சங்க இலக்கியங்களில் பல அறிவியற் செய்திகள் காணக்கிடைக்கின்றன. மேகமற்ற வானம், புகை, பஞ்சு, யானை போன்ற மேகங்கள், தொங்கும் பைகளுடைய மேகங்கள், பருவகால மேகங்கள் ஆகியன பற்றி சங்க காலப் புலவர்கள் அறிந்திருந்தனர்.

காலநிலையியல் செய்திகள் பற்றி நோக்குகையில் கோடைக்குப் பின்னர் கார் காலம் வருதல், கார்காலத்திற்குப் பின் கூதிர், முன்பனிக் காலங்கள் வருதல், கார்காலத்தில் வழக்கமாகப் பெய்யும் மழை, இளமழை, பழமழை காலவரிசையில் இளவேனிற்காலம், ஆகியவை பற்றி சங்க இலக்கியப் பாடல்கள் எடுத்துரைக்கின்றன. முதுவேனிற் காலத்தின் கோடை வெப்பம், அக்காலத்தில் இலையுதிர் காடுகளின் நிலை, மிருகங்களின் நீர்வேட்கை, முதுவேனிற் காலம் நீண்டது பற்றிய குறிப்புகள், கோடையில் இயற்கயில் ஏற்படும் நிகழ்ச்சிகள், கோடை மழை, காட்டுத்தீ, வெப்பத்தால் புழுதி பரவுதல், கானல் நீர் ஆகியன பற்றிய செய்திகள் இக்காலத்திய நிகழ்ச்சிகளோடு ஒப்பிடத்தக்க வகையில் உள்ளன. மேலும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல். பாலை ஆகிய ஐந்திணை நிலப்பாகுபாடு கொப்பனின் காலநிலை மண்டலங்களின் வகைப்பாடோடு ஒப்பிடத்தக்க வகையில் உள்ளது.

முடிவுரை:

எனவே பண்டைத் தமிழர் வானிலை பற்றிய அறிவு கொண்டவராய் இருந்தனர் என்பது அக்கால இலக்கியங்களில் இருந்து அறிய முடிகிறது. சங்க இலக்கியங்களில் காணப்படும் இச்செய்திகள் இக்காலத்து வானிலை இயல் கருத்துக்களுடன் ஒப்பிடத்தக்க வகையில் உள்ளன.


முனைவர் பாலசுப்பிரமணியன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சங்க இலக்கியத்தில் வானிலையியல்”

அதிகம் படித்தது