ஏப்ரல் 10, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

சட்டமுத்து என்னும் குஞ்சம்மாள் எழுதிய வாருணி சரித்திர கும்மியில் பெண் எழுத்து அடையாளங்கள்

முனைவர் மு.பழனியப்பன்

Apr 3, 2021

siragu pen-ezhuthalargal1

பெண் எழுத்து என்பது தனித்துவம் மிக்கது. பெண் எழுத்துக்கென சிறந்த அடையாளங்கள் உண்டு. ஒருபெண் இலக்கியம் படைக்க வருவது என்பதே அரிதினும் அரிது. அதனை அவள் வெளியிடுவது என்பது இன்னமும் அரிதினும் அரிது. பெண்ணிலக்கியமாக விளங்குகிற தாலாட்டு, ஒப்பாரி, கும்மி போன்ற நாட்டுப்புற கலை வடிவங்கள் பெண்களின் வாழ்க்கைச் சூழலை அவர்களின் எண்ணங்களை எடுத்துரைக்கும் களமாக விளங்குகின்றன. கும்மிப் பாடல்கள் பெண்களுக்கு உரியன என்றாலும் ஆண்கள் பாடும் கும்மி ஒயில் எனப்படுகிறது. சிவகங்கை சரித்திர கும்மி போன்ற கும்மிப் பாடல்கள் ஆண்களால் எழுதப்பெற்று உயர் நிலையில் நிற்கும் நிலையில் பெண்கள் எழுதிய கும்மிப் பாடல்களின் வெளிப்பாட்டை, அவற்றின் தரத்தை அறிவதன் வாயிலாக சிறந்த பெண்ணிலக்கியத்தை அறியும் வாய்ப்பு ஏற்படுகிறது.

இராமநாதபுர மாவட்டத்தில் அமைந்துள்ள திருவாடானை திருத்தலத்தின் மீது ஒரு கும்மியைச் சட்டமுத்து என்ற குஞ்சம்மாள் பாடியுள்ளார். அக்கும்மி பெண் அடையாளங்களைக் கொண்டுள்ளது. அவ்வடையாளங்களை எடுத்துரைத்துப் பெண்ணிலக்கியத்தின் தனித்த கூறுகளை எடுத்துரைப்பதாக இக்கட்டுரை விளங்குகிறது.

வாருணி சரித்திர கும்மிப் பாடல் –அறிமுகம்

வாருணி சரித்திர கும்மியைப் பாடியவர் சட்டமுத்து என்ற என். குஞ்சம்மாள் ஆவார். இவரின் பிறந்த ஊர் அரும்பூர் ஆகும். இவரின் தந்தையார் பெயர் நல்லசாமி குருக்கள் என்பவர் ஆவார். இப்பெண் திருவாடானையில் வாழ்ந்த ஆபத் நாராயண குருக்குள் என்பவரைத் திருமணம்செய்ததன் காரணமாகத் திருவாடனைக்கு வந்து சேர்கிறார். இவருக்குப் படிப்பறிவு, கேள்வி ஞானம் போன்றன இருந்துள்ளன. இதன் காரணமாக இவர் திருவாரூர் சாமிநாத தேசிகர் எழுதிய திருவாடானை தல மான்மியம் என்ற நூலில் அமைந்துள்ள வாருணி சாபமடைந்த சருக்கம், வாருணி சாப விமோசனச் சருக்கம் ஆகிய பகுதிகளை அடிப்படையாக வைத்து வாருணி சரித்திர கும்மி என்பதைப் படைத்துள்ளார்.
வாருணி சரித்திர கும்மி பதினெட்டு கட்டங்களை உடையதாக எழுதப்பெற்றுள்ளது. கும்மிப் பாடல்கள் இவர் வாழ்ந்த காலத்தில் மிகப் பிரபலமாக இருந்த இசைப் பாடல்களை அடியொற்றி எழுதப்பெற்றுள்ளது.

இதனை வெளியிட உதவியவர் இவரின் மாமா முறையினரான டி. முத்துசாமி குருக்கள் என்பவரால் 1935 ஆம் ஆண்டு வெளியிடப்பெற்றுள்ளது. இதனை சென்னையில் உள்ள சத்திய நேசன் என்ற அச்சகம் அச்சடித்து வெளியிட்டுள்ளது.

கும்மிப்பாடலின் முன்பகுதியில் விநாயகர், முருகன், நாமகள் ஆகிய கடவுளர்களின் வணக்கங்கள் பாடப்பெற்றுள்ளன. இதன்பிறகு சவுனக முனிவர் வாருணி சாபம் பெற்ற கதையைக் கேட்க சூத முனிவர் கதையைச் சொல்வதாக இக்கும்மி பாடப்பெற்றுள்ளது.

இதனுள் சூரியன், வருணன், வருணனின் மனைவி, வாருணி, பிருகு முனிவர், துர்வாச முனிவர், தேவர்கள், முனிவர்கள், அருள்மிகு ஆதி ரத்தினேஸ்வரர், அருள்மிகு சிநேக வல்லி போன்றோர் பாத்திரங்களாக இடம்பெறுகின்றனர்.

வாருணி என்ற வருணனின் மகன் சிவபெருமானைத் தரிசித்துவிட்டுத் திரும்பும் நிலையில் அவன் தன் படைகளுடன் துர்வாசர் முனிவர் தம் வனத்தில் தங்கிவிடுகிறான். அவ்வனம் மலர்கள், காய்கள், கனிகள் நிரம்பிக் கிடந்த வனமாகும். அவ்வனத்தில் நுழைந்த வாருணியின் படைகள் அவற்றைப் பறித்தும் அழித்தும் தேய்த்தும் நாசம் செய்ய அதனைத் துர்வாச முனிவர் தடுக்க வருகிறார். அவரிடம் வாருணி பணிவாக நடக்காமல் ஆணவத்துடன் நடக்க அவர் பதினான்கு ஆண்டுகாலம் ஆடு, யானை ஆகிய உருவக் கலப்பாக நீ பிறப்பாய் என்று சாபம் தருகிறார்.

இதனால் ஆட்டுத் தலையும், யானை உடலும் பெற்று வாருணி காண்பவர் சிரிக்கும் நிலைக்குத் தள்ளப்பெற்றான். இவன் சாபம் நீங்க திருவாடானை தலத்து இறைவனை வழிபடவேண்டும் என்று துர்வாசரும், அகத்தியரும் குறிப்பிட அவ்வழி இவன் திருவாடானை வந்து தவம் செய்து அருள்மிகு ஆதிரத்தினேஸ்வரரை, சிநேக வல்லித் தாயருடன் காளை வாகனத்தில் தரிசித்துத் தன் முன்வினைப் பயனைத் தீர்த்து நல்லுருவம் பெறுகிறான். இதன் காரணமாக சென்ற கால தீவினைகள் அழிக்கும் இறைவனாகத் திருவாடானை ஆதி ரத்தினேஸ்வரர் விளங்குகிறார் என்ற செய்தி தெரியவருகிறது.

இதன்பின்பு வாருணி வாருணி தீர்த்தம் ஒன்றை ஏற்படுத்தி அதன் அருகே சிவலிங்கத்தை உருவாக்கி வழிபட்டு நற்கதி பெறுகிறான். தேவர்கள் மலர் மழை பொழிகிறார்கள். இதுவே வாருணி சாபம் பெற்ற கதையும் நீங்கிய கதையும் ஆகும். இதனைக் கும்மியாக வடித்துள்ளார் குஞ்சம்மாள்.

பெண் எழுத்துக் கூறுகள்.

இவர் எடுத்துக் கொண்ட பாடுபொருள் சுவாமி நாத தேசிகர் என்ற ஆண்பாலினராக இருந்தாலும் அப்புராணத்தின் கதைப் பகுதியை உள்வாங்கிக் கொண்டு பெண் எழுத்து நடையில் வாருணி சரித்திர கும்மியை சட்டமுத்து என்ற குஞ்சம்மாள் படைத்துள்ளார். இவரின் தொடக்க மற்றும் நிறைவுச் செய்யுள்களில் இது ஒரு பெண்ணால் எழுதப்பெற்றது என்பதற்கான அடையாளங்கள் உள்ளன.
விநாயகர் துதி விருத்தம் என்ற தலைப்பின் கீழ் அமைந்துள்ள கும்மிப் பாடல் பின்வருமாறு.

”வருணனின் புதல்வனானவாருணிசரிதம்சொல்ல
கருணையாம் ஆதிரத்னக் கடவுளின்சேயனென்னும்
பிரணவப்பொருளேநாதா!பேதை நான்கும்மிபாடத்
தருணம் வந்து உதவிசெய்வாய்தந்திமாமுகனேபோற்றி”
என்ற இந்தப் பாடலில் பேதை நான் கும்மி பாட என்ற தொடர் ஒரு பெண்ணுக்குச் சமுதாயம் தந்தள்ள நிலைப்பாடு பேதை என்பதாகும். மேலும் பெண் எழுத்து என்பது தன்மை இடம் சார்ந்து காணப்படும். அவ்வகையில் இத்தொடர் பெண் எழுத்து சார்ந்து என்பதைத் தெளிவுபடுத்துகின்றது.

அடுத்து அமையும் முருகன் துதி முதற் கட்டமாக நூல் கட்டமைக்கப்பெற்றுள்ளது. இது பாளை வாய்க் கமுகில் என்ற பாடலின் மெட்டினை அடியொற்றியது என்ற குறிப்பு உள்ளது.
”சூரனாம் கெஜமுகனைக் கூறதாகவே வதைத்த
நாரணன் மருகனே முன்வந்தருள் -பரி
பூரணா கிருபை எனக்குத் தந்தருள்
வாருணிசரித்திரத்தை மானிலத்தில் கும்மியாக
மாது பாட வந்து என்னை ஆளுமே –உந்தன்பாதமே
கெதியெனக்கு என்னாளுமே
சுருதிமுடி, வானசீலா தோகைசி னேக வல்லி பாலா
தொண்டர்கள் மனத்தில் உறைவேதனே- பேதை
கொண்ட எண்ணம் நிறைவேற்றும் நாதனே!
என்ற இந்தப்பாடலிலும் வாருணி சரித்திரத்தை மானிலத்தில் கும்மியாக மாது பாட வந்த என்னை ஆளுமே என்ற தொடர் மாது என்ற குறிப்பினை வெளிப்படுத்துவதால் இது பெண்ணால் செய்யப்பட்ட இலக்கியம் என்பதைத் தெளிவாக உணர இயலும்.

மேலும் பேதை கொண்ட எண்ணம் நிறைவேற்றும் நாதனே என்பது முன்பாடலின் தொடர்ச்சியாகத் தன்னைப் பேதை என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் முறைமையாகும். அடுத்து இடம்பெறும் நாமகள் காப்பிலும் இதே பேதை என்ற நிலை காட்டப்பெற்றுள்ளது.
சள்ளைபடமால் என்னை, தற்காத்தருள் மேவியே(நாவில்)
தூர்வாசர் சாபமதால் சோர்வடைந்த வாருணி
சீர்மிகும் சரித்திரத்தை செப்பிட அருள்காரணி(நாவில்)
பேதைமதியால் சொன்ன பிழைகளெல்லாம் பொறுப்பாய்
சாதகமாய் மனதில் தாயே குடியிருப்பாய்
என்ற இரண்டாம் கட்டப் பாடலில் பேதை என்றே தன்னை இவர் அழைத்துக் கொள்கிறார். பேதை என்பதே பதினெட்டாம் நூற்றாண்டில் பெண்களுக்கான நிலை என்பதை இதன்வழி உணரமுடிகின்றது. மேலும் நாமகளைத் தாய் என்று விளிப்பது பெண்ணெழுத்து அடையாளமாகும்.

இம்மூன்று தொடக்கப்பாடல்களிலும், பேதை என்ற சொல் பயன்படுத்தப்பெற்றிருப்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
நிறைவுக் கட்டமான பதினெட்டாம் கட்டத்தில்
தாரணியில் கேட்டிடும் தையலர்க்கும் மங்களம்,
பற்பல ஸ்தலங்களில் மிக்கக் கீர்த்தி வாய்ந்ததாம்
அற்புத ஆடானைவாழ் அன்பருக்கு மங்களம்,
பக்தன் பிருகுகதை தனைப் பாடிடும் என் குஞ்சம்மாள் புத்திரன் குலத்துடன்
புவியிலென்றும் வாழ்கவே.
என்று முத்திரை வாசகத்தை வைத்துத் தன் படைப்பினை முடித்துள்ளார் சட்டமுத்து என்ற குஞ்சம்மாள். இதில் தரணியில் கேட்டிடும் தையலர்க்கு மங்களம் என்ற பகுதி பெண்களைச் சுட்டும் பகுதியாகும். ஆண்கள் இதனை இவ்வகையில் பாடியிருக்கமாட்டார்கள். மேலும் இதனைப் பாடியவரான குஞ்சம்மாளின் பெயரும் இடம்பெற்று மங்களம் சொல்லப்பெற்றுள்ளது. இவ்வகையில் தொடக்கத்திலும், முடிப்பிலும் பெண் எழுத்தின் தனித்த அடையாளங்கள் வெளிப்படுத்தப்பெற்றுள்ளன.

வாருணி ஆடு, ஆனை வடிவம் பெற்றதும் தந்தையான வருணன் மிகக் கலங்குகிறான். அவன் கலங்கியது மட்டும் அல்லாமல் அவனின் மனைவி அதாவது வாருணியின் தாய் பட்ட துயரத்தைப்,
”பத்துத்திங்கள்சென்று உன்னைப் பெற்றெடுத்த தாயானவன்
மெத்தவும் மனங்கலங்கி மெய்தளர்ந்து வாடுகிறான்”
என்று மகனின் துயத்தைக் கண்டு உருகும் ஒரு தாயின் உள்ளத்தைக் குஞ்சம்மாள் கவியாக வடித்துள்ளார். தாய்மையின் பாசம் குஞ்சம்மாளின் பெண் எழுத்துச் சிறப்பாக இங்கு நிற்கிறது.

மேலும் இறைவன் ஆதி ரத்தினேஸ்வரருடன் திருவாடனைத் தலத்திற்குச் சிநேக வல்லியும் எழுந்தருளும் நிலையை ‘பாதிமதி கங்கை கூடி பாரினல் வந்தார் சோதி சிநேக வல்லியுடன் தெரிசனம் தந்தார்” என்று காட்டும் நிலையிலும் அம்பிகைக்கான இடத்தைச் சரிசமமாகத் தர குஞ்சம்மாள் எண்ணியிருக்கிறார் என்பதை உணர முடிகின்றது.

இவற்றின் வழியே பெண் எழுதும் நிலையில் தன்னை உளப்படுத்திப் படைப்பினைப் படைக்கும் நிலை, சமுதாயத்தில் தன் நிலையை உரைக்கும் நிலை, பெண்களுக்கு இடம் கொடுக்கும் நிலை போன்றவற்றை பெண் எழுத்தின் அடையாளங்களாகக் கொள்ளமுடிகின்றது. இவ்வடையாளங்கள் சட்டமுத்து என்ற என். குஞ்சம்மாள் எழுதிய வாருணி சரித்திர கும்மியிலும் காணத்தக்கனவாக உள்ளன. பெண் எழுதினாலும் அதனை வெளியிடுவதற்கு ஓர் ஆணின் துணை தேவை என்பதை அவரின் மாமன் முறையுடையவர் வெளியிட்ட நிலையில் இருந்து தெரியவருகிறது. இருப்பினும் விடுதலைக்கு முன்புத் திருவாடானை என்ற சிறிய கிராமத்தில் ஒரு பெண் கும்மிப் பாடலைப் பாடி அதனை வெளியிடும் முயற்சி என்பது அரிய செயல் என்பதில் ஐயமில்லை.

ஆண்கள் பாடும் கும்மிப் பாடல்களில் இது போன்ற கட்டம் என்ற பகுப்பு அமைவதில்லை. ஆனால் கும்மிப் பாடல்களைப் பெண்கள் பாடும் நிலையில் கட்டம் என்ற அமைப்பினைப் பயன்படுத்துகிறார்கள். பெண்கள் படைப்பினைப் படைக்கும் நிலையில் அப்படைப்பின் வரையறைகளுக்கு உட்பட்டு மீறாமல் படைக்கும் தன்மையினர் என்பதும் இங்கு எண்ணத்தக்கது.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சட்டமுத்து என்னும் குஞ்சம்மாள் எழுதிய வாருணி சரித்திர கும்மியில் பெண் எழுத்து அடையாளங்கள்”

அதிகம் படித்தது