நவம்பர் 26, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

சமயப் பின்புலத்தில் மக்கள் வாழ்க்கைமுறை (பாகம்-2)

முனைவர் மு.பழனியப்பன்

Apr 3, 2021

siragu manimegalai2பசி போக்கும் அறம்

பௌத்த சமயப் பின்புலத்தில் மணிமேகலை அமுதசுரபிப் பாத்திரம் ஏந்திப் பசி போக்கும் அறத்தைச் செய்கிறாள். புத்த பாத பீடிகை உள்ள இடத்தில் தொழுத அமுதசுரபிப் பாத்திரத்தை மணிமேகலை பெறுகிறாள். அறங்களில் தலையாய அறமாக பசி போக்கும் அறம் விளங்குகிறது. அதனை மணிமேகலை செய்கிறாள். பசியால் ஏற்படும் தீமைகளை மணிமேகலைக் காப்பியம் பட்டியல் இடுகின்றது.

‘‘குடிப்பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும்
பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்
நாண்அணி களையும் மாண்எழில் சிதைக்கும்
பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பசிப்பிணி என்னும் பாவிஅது தீர்த்தோர்
இசைச்சொல் அளவைக்கு என்நா நிமிராது
புல்மரம் புகையப் புகைஅழல் பொங்கி
மன்உயிர் மடிய மழைவளம் கரத்தலின்
அரசுதலை நீங்கிய அருமறை அந்தணன்
இருநில மருங்கின் யாங்கணும் திரிவோன்
அரும்பசி களைய ஆற்றுவது காணான்
திருந்தா நாய்ஊன் தின்னுதல் உறுவோன்
இந்திர சிறப்புச் செய்வோன் முன்னர்
வந்து தோன்றிய வானவர் பெருந்தகை
மழைவளம் தருதலின் மன்உயிர் ஓங்கிப்
பிழையா விளையுளும் பெருகியது அன்றோ
ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்
ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்
உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை
மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே”

என்று பசிப்பிணி போக்கும் அறம் பற்றி அறிவிக்கிறது மணிமேகலை. பசியின் காரணமாக குடிபிறப்பின் சிறப்பு அழியும். சிறப்பு, கல்வி, நாண், அழகு கெடும். மனைவியொடும் பிறர்வாயிலில் பி்ச்சை எடுக்க வைத்துவிடும். இத்தகைய பசியின் கொடுமையைத் தீர்ப்பவர்களின் புகழ் சொல்லில் அடங்காது.

விசுவாமித்திர முனிவன் கூட ஒரு முறை பசியின் காரணமாக செய்யக் கூடாத செயலைச் செய்துவிடுகிறான். பசிப்பிணியைப் போக்கிக் கொள்ளும் திறம் பெற்றவர்களுக்கு உணவிடுதல் என்பது அறத்தை விலை கூறி விற்பது போன்றது. பசி போக்கத் திறம் அற்றவர்களுக்கே வழங்கவேண்டும். அப்படிப்பட்டவர்களுக்கு உணவிட்டவர்கள் உயிர் கொடுத்தோர் ஆகின்றனர்.

இத்தகைய பசி போக்கும் அறத்தை முதன்மையான அறமாக மணிமேகலைக் காப்பியம் முன்வைக்கிறது. பௌத்த நிலைப்பாட்டில் அல்லல் படும் மக்களுக்கு உதவும் அறமே சிறந்த அறமாகின்றது.

இதனையே மற்றொரு இடத்தில் ‘அறம் எனப்படுவது யாது எனக் கேட்பின் மறவாது இது கேள் மன் உயிர்க்கு எல்லாம் உண்டியும் உறையுளும் அல்லது கண்டது இல்” என்று குறிக்கிறது மணிமேகலைக் காப்பியம். இவ்வகையில் குறிக்கத்தக்க அறமாக துன்பமின்றி உயிர்களைக் காத்தல் என்பது கொள்ளப்படுகின்றது.

காமம், கொலை, களவு துறப்பு

கொலை, களவு, காமம் என்ற மூன்றும் உடல்வழியாகத் தோன்றும் தீவினைகள் ஆகும். இம்மூன்றையும் விலக்குகிறாள் மணிமேகலை.

“கற்புத் தான் இலள் நல் தவ உணர்வு இலள்
வருணக் காப்பு இலள் பொருள் விலையாட்டி” என்று
இகழ்ந்தனன் ஆகி நயந்தோன் என்னாது
புதுவோன் பின்றைப் போனது என் நெஞ்சம்
இதுவோ அன்னாய்! காமத்து இயற்கை?
‘இதுவே ஆயின் கெடுக தன் திறம்!’”

என்ற நிலையில் காமத்தினை விலக்குகிறாள் மணிமேகலை

மணிமேகலை மீது சுமத்தப்பட்ட கொலைப்பழியும் நீங்குவதாக கதைப் போக்கு அமைகிறது. உதய குமாரனின் தாயான அரச மாதேவி மணிமேகலைக்குப் பல்வகைகளில் துன்பம் தருகிறாள். அத்துன்பங்களை ஏற்று அரசமாதேவியையும் நல்வழிப்படுத்துகிறாள் மணிமேகலை. அவளுக்குக் காமக்கீழ்மை, கொலைக்கொடுமை, கள் மயக்கம், பொய்த்துன்பம், களவுத் தீமை போன்றவற்றை எடுத்துரைக்கிறாள். இதன் காரணமாக சித்ராபதி மணிமேகலை அழைத்துச் செல்ல வந்தபோது அரசமாதேவி ஐவகைக்குற்றங்களிலும் கீழான பரத்தமையைச் செய்ய மணிமேகலையை உன்னுடன் அனுப்ப மாட்டேன் என்று உரைக்கிறாள். இவற்றோடு அறவாணர் வழிகாட்டலின்படி மணிமேகலை பல இடங்களுக்குச் சென்று பௌத்தசமயக் கருத்துகளைப் பரப்ப முனைகிறாள்.

மணிமேகலைக் காப்பியம் காட்டும் அறங்களின் மொத்த வடிவமாக மணிமேகலைப் பாத்திரம் படைக்கப்பெற்றுள்ளது. உயிர் மெல்ல மெல்ல நன்மை பெற்ற சமய அடிப்படையில் மேன்மை நிலை அடைய முயல்கிற முயற்சியே மணிமேகலைக்காப்பியம் ஆகும்.

சமயக் கண்ணோட்டத்தில் ஆபுத்திரன்

மணிமேகலைக் காப்பியத்தில் மணிமேகலை ஒரு குறிப்பிடத்தக்கப் பாத்திரம் என்றால் ஆபுத்திரனும் அதற்கு இணையாக அமையும் பாத்திரமாகும். இப்பாத்திரம் வேத மரபுகளை கேள்விக்கு உள்ளாக்குகிறது. ஆகம அளவையாகக் கருதப்படும் வேதநூல் ஒழுக்கத்தைக் கடிகிறது. வேள்வியில் உயிர்களைப் பலியிடலைத் தவிர்க்க முனைகிறது. ஆகுதியில் இட வைத்திருந்த பசுவை மீட்டவன் ஆபுத்திரன். அவனைப் பின்வருமாறு அந்தணர்கள் குறை சொல்லுகின்றனர்.

‘‘பொன் அணி நேமி வலம் கொள் சக்கரக் கை
மன் உயிர் முதல்வன் மகன் எமக்கு அருளிய
அரு மறை நல் நூல் அறியாது இகழ்ந்தனை
தெருமரல் உள்ளத்துச் சிறியை நீ”
என்று விலக்கி வைக்கின்றனர். இதில் வைணவக் கடவுளான திருமால் மகனான பிரம்மா என்ற குறிப்பு வேதவாதத்தின் சார்பினைக் காட்டுவது. அந்தணர்கள் வேதவாதத்தின்படி இயங்குபவர்கள். அவர்களின் வேதவாதம் சரியன்று ஆபுத்திரன் முரண்படுகிறான்.

இதன்காரணமாக ஆபுத்திரன் விலக்கி வைக்கப்படுகிறான். மேலும் அவன் மதுரையை நோக்கிப் பயணிக்கிறான். அவனின் அறத்தால் நடுங்கிய இந்திரன் பல இடையூறுகளைச் செய்ய மனம் வெறுத்து இறப்பினை நாடுகிறான். இருப்பினும் அவன் தான் செய்த நல்வினை காரணமாக சாவக நாட்டின் அரசன் ஆனான் என்று குறிப்பிடுகிறது மணிமேகலை. இதன் காரணமாக முன் செய்த நல்வினை பின்பிறப்பில் நன்மை தருகிறது என்ற கருத்து மெய்ப்படுதலை காணமுடிகின்றது.

”மண் ஆள் வேந்தன் மண்முகன் என்னும்
புண்ணிய முதல்வன் திருந்து அடி வணங்கி
“மக்களை இல்லேன் மாதவன் அருளால்
பெற்றேன் புதல்வனை” என்று அவன் வளர்ப்ப
அரைசு ஆள் செல்வம் அவன்பால் உண்மையின்
நிரை தார் வேந்தன் ஆயினன் அவன் தான்”
என்ற பகுதியில் ஆபுத்திரன் அந்தணர்களால் மறுக்கப்பட்டாலும் அடுத்த பிறவியில் அவன் அரசகதி பெற்றதாகக் காட்டப்படுவது வேத மறுப்பின் வெளிப்பாடு என்றே கொள்ளப்படவேண்டும்.

தொகுப்புரை

இவ்வகையில் மணிமேகலைக் காப்பியத்தின் வழி சமயச் சார்புடன் வாழும் வாழ்க்கை நெறிப்பட்ட வாழ்க்கை என்பதும் இவ்வாழ்வின் காரணமாக உயர்வுகளைப் பெற முடியும் என்பதையும் உணரமுடிகின்றது.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சமயப் பின்புலத்தில் மக்கள் வாழ்க்கைமுறை (பாகம்-2)”

அதிகம் படித்தது