ஏப்ரல் 10, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

சமூக நீதி – கடந்து வந்த பாதை

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Feb 2, 2019

siragu social justice1

சமூகநீதி என்பது 2000 ஆண்டுகளாக சமூகத்தில் நசுக்கப்பட்டவர்களுக்காக கல்வி நீரோடை பெறச் செய்யும் ஒரு உரிமை பெறும் ஏற்பாடு. அது சலுகை அல்ல உரிமை என்ற புரிதல் இந்த தலைமுறையினருக்கு இல்லை என்பதே வேதனை. நாம் கடந்து வந்த பாதை கற்களாலும், முட்களாலும் நிறைந்திருந்தன. அதனை செப்பனிட்டு இன்றைய நம் சமூகத்தை ஓரளவிற்கு கல்வியில் நிறைவடையச் செய்த பெருமை நீதிக்கட்சி மற்றும் திராவிட இயக்க தலைவர்களுக்கு உண்டு. நாம் கடந்து வந்த வரலாற்றை சற்றே நினைவுபடுத்திக்கொள்ள இக்கட்டுரை.

1915 ஆம் ஆண்டு சென்னை மாநிலத்தில் (அன்று தமிழ்நாடு இல்லை, ஒன்றிணைந்த மெட்ராஸ் மாகாணம்) பார்ப்பனர் ஆதிக்கம் இருந்த நிலையை பார்க்கலாம்.

கல்வி இலாகாவில் மொத்தம் இருந்த உத்தியோகங்கள் 518. இதில் பார்ப்பனர்கள் 399 பேர். கிறித்துவரும், ஆங்கிலோ இந்தியரும் 73 பேர், முகமதியர்கள் 28 பேர், பார்ப்பனரல்லாத இந்துக்கள் 18 பேர் – ஆதி திராவிடர் உட்பட.

வகுப்புரிமை போராட்டம் குறித்த நூலில் பக்கம் எண் 18 இல் இந்த தகவல் உள்ளது. இன்னும் சொல்லப் போனால், 100 க்கு 84 பேர்களாக அப்போதிருந்த பார்ப்பனரல்லாதாராகிய இந்துக்களுக்கு 18 மட்டுமே. 100 க்கு 3 பேர் உள்ள பார்ப்பனருக்கு 518 இல் 399. இதுதான் அன்றைய காலத்து நிலை.

கல்வி துறை மட்டுமல்ல நீதி துறை, நிர்வாகத் துறை என்று அனைத்து நிலைகளிலும் பார்ப்பனர்கள் தங்கள் மக்கள் தொகையை விட அதிகமான இடங்களை ஆதிக்கத்தின் மூலம் பெற்றிருந்தனர். இந்த நிலையில் தான் பார்ப்பன இருளால் விழுங்கப்பட்ட தென்னகத்தில் தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் (south indian liberal federation) விடிவெள்ளியாகத் தோன்றியது. தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தார் justice என்ற பெயரில் ஆங்கிலத்திலும், திராவிடன் என்ற பெயரில் தமிழிலும் நாளிதழ்களை நடத்தினர். இந்த justice என்ற பெயரால் நீதிக்கட்சியும் தொடங்கப்பட்டது. இந்த நலவுரிமைச் சங்கத்தாரின் கோரிக்கையை அன்றைய ஆங்கிலேய அரசு ஏற்று இனி அலுவலர்களை Revenue Department இல் (வருவாய்த் துறை) நியமிக்கும்போது எல்லோருக்கும் இடமளிக்க வேண்டும் என்ற நிலையான ஆணை ஒன்றை (No .128(2) Board Standing Order) பிறப்பித்தனர். ஆனால் ஏட்டளவில் மட்டுமே இது இருந்தது.

1920 ஆம் ஆண்டு நீதிக்கட்சி தேர்தலில் வெற்றி பெற்று சட்டசபைக்கு வந்தனர். இதன் பயனாக பனகல் அரசரின் தலைமையில் மந்திரிசபை அமைந்தது. தியாகராயரின் தளராத முயற்சியாலும், பனகல் அரசரின் அறிவித்த திறனாலும் 1921 ஆம் ஆண்டில் டாக்டர் நாயர் தம்முடைய இறுதி மூச்சு வரை வற்புறுத்தி வந்த வகுப்பு விகிதாச்சார உரிமை கொள்கை தீர்மானமாகக் கொண்டு வந்து, சட்டமன்ற மேலவையில் (Legislative Council) நிறைவேற்றப்பட்டது. ஆனால் மற்ற துறைகளில் இதனை விரிவுபடுத்த பார்ப்பனர்கள் அனுமதிக்கவில்லை. மீண்டும் 1928 இல் டாக்டர். சுப்ராயன் தலைமையில் சுயேச்சை மந்திரிசபை அமைந்தது. அந்த அமைச்சரவையில் இரண்டாவது மந்திரியாக இருந்த அறிஞர் S.முத்தையா இருந்தார்.

siragu social justice2

இந்திய டொமினியனின் செயலாளர் (Secretary of state of india) சென்னை அரசாங்கத்தை – மாகாண அரசாங்க அலுவலர்களின் அலுவல் விதிகளை, படைத்துறை சாரத அரசு அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட விதிகளின் கீழ்க்கொண்டு வருமாறு கேட்டுக்கொண்டார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி பார்ப்பனர் ஆதிக்கத்தில் சிக்கியுள்ள அரசாங்க அலுவல் அமைப்புகளின் வாயில்களைத் திறந்து வைத்து எல்லா வகுப்பாருக்கும் சமவாய்ப்புக் கிடைக்கும் வகையிலும் சமூக நீதியை நடைமுறையில் நிலைநாட்டத்தக்க வழியிலும் அமைத்தாக வேண்டும் என்ற முடிவிற்கு வந்து, வகுப்புரிமைக் கொள்கையினை அரசாங்க ஆணை ஆக்கினார். கவர்னர் ஆட்சி குழுவில் இருந்த சிலர் இதனை ஒத்துக்கொள்ளவில்லை. அதனால் தன்னுடைய ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஆவணப் பதிப்புப்பிரிவில் மட்டும் நடைமுறையில் கொண்டு வந்தார்.

பின் 1928 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 27 ஆம் நாள் இது தொடர்பாக சட்டமன்ற மேலவையில் சாமி. வெங்கடசலம் ஓர் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து எதிர்ப்பு ஏதும் இன்றி விவாதம் செய்ததோடு வாக்கெடுப்புக்கு விடாமலே நிறைவேறியது. இதன் பிறகு தான் வகுப்புரிமைக் கொள்கை சென்னை அரசாங்கத்தின் ஆணையாக ஆயிற்று.

இந்த ஆணையின்படி அரசாங்கத்தில் 12 அலுவலர்களை நியமிக்க வேண்டும் என்றால், பின்வருமாறு கணக்கிட்டு நியமிக்க வேண்டும்.
இந்து பார்பனரல்லாதோருக்கு – 5
பார்ப்பனர்க்கு  – 2
முகமதியர்க்கு  – 2
கிறித்துவர்,
ஆங்கிலோ இந்தியர் உட்பட – 2
மற்றவர்க்கு
ஆதிதிராவிடர் உட்பட  – 1

ஆகமொத்தம்  – 12

1921 முதல் முயன்று 1927 வரை பார்ப்பன ஆதிக்கத்தை தகர்க்க முடியாமல் இருந்த நிலையில், இந்த ஆணை தென்னாட்டு அரசியல் வரலாற்றில் பெரிய சாதனையாக அமைந்தது. இதனைக் கொண்டு வந்த முத்தையா அவர்கள் பிற்படுத்தப்பட்டவர் அல்லர். முன்னேறிய வகுப்பைச் சேர்ந்தவர். ஆனால் மிகக் கடினப்பட்டு தன்னலம் இல்லாது இந்த ஆணையைக் கொண்டு வந்தார். தந்தை பெரியார் குடியரசில் முத்தையா வாழ்க இன்று தலைப்பிட்டு பாராட்டினார்.

பின் 1950 இல் அமலுக்கு வந்த இந்திய அரசமைப்புச் சட்டப்படி இவ்வாணை “சமத்துவத்திற்கு எதிரானது” என்று கூறி சென்னை உய்ரநீதிமன்றத்தில் உயர்சாதியினர் போட்ட வழக்கில் நீதிபதிகள் அமர்வு மற்றும் உச்சநீதிமன்றம் அதனை உறுதி செய்தது. இதனை எதிர்த்து தான் தந்தை பெரியார் மிகப் பெரிய மக்கள் கிளர்ச்சியினை நடத்தினார். அந்தக் கிளர்ச்சியின் காரணமாக இந்திய அரசமைப்புச் சட்டம் முதல் சட்ட திருத்தத்தை பெற்றது (1951).

இந்த திருத்தத்தின் மூலம் சமூக நீதி, உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற, தீர்ப்புகளால் ஏற்பட்ட ஆபத்தில் இருந்து காப்பாற்றப்பட்டது. இதில் சென்னை மாகாணத்தில் அவ்வப்போது வகுப்புவாரி உரிமை ஆணையில் பற்பல மாற்றங்கள் ஏற்பட்டு படிப்படியாக வளர்ச்சியாக உருவெடுத்தன.

எடுத்துக்காட்டாக ஓமந்தூர் ஓ.பி ராமசாமி ரெட்டியார் முதலைமைச்சராக இருந்த காலத்தில் அதற்கு முன் இல்லாத பிற்படுத்தப்பட்ட என்ற சொல் அவ்வாணையில் இடம் பெற்றது. சட்டத் தேவையை ஒட்டி அது கல்வி வள்ளல் காமராஜர் காலத்தில், “தாழ்த்தப்பட்டவர்” இணைந்து மலைவாழ் மக்கள், என்ற பிரிவுகளின் கீழ் முறையே 16 விழுக்காடு, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 25 விழுக்காடு, என 41 விழுக்காடு இடஒதுக்கீடு என்ற ஆணை செயற்பாட்டிற்கு வந்தது.

பின் 1967 இல் அறிஞர் அண்ணா ஆட்சி அமைத்து, பிற்படுத்தப்பட்ட நலக்குழு தந்தை பெரியார் வற்புறுத்துதலால் போடப்பட்டு அந்தக் குழு தன் பரிந்துரையை கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்த காலத்தில் அளித்தது. அதனை ஏற்று கலைஞர் அரசு அவ்வாணையை தாழ்த்தப்பட்டோர் மலைவாழ் மக்கள் ஆகியோருக்கு இருந்த 16 சதவிகிதத்தை 18 ஆக உயர்த்தியது. பிற்படுத்தப்பட்டோருக்கு 25 ஆக இருந்ததை 31 ஆக உயர்த்தியது. எஞ்சிய 51 விழுக்காட்டில் முன்னேறிய வகுப்பினர் உட்பட அனைவரும் போட்டியிடும் பொதுப்போட்டிக்கானது.

Siragu ida odhukkeedu1

பின் 1979 இல் அன்றைய முதலமைச்சர் எம்ஜிஆர், ஆண்டு வருமானம் 9000 ஆக இருந்தால் பிற்படுத்தப்பட்டவர் இல்லை என்ற வருமான வரம்பு ஆணையைக் கொண்டு வந்தார். (இப்போது பிஜேபி அரசு கொண்டு வந்துள்ள 10% பொருளாதார இடஒதுக்கீடு போன்று) இதனை எதிர்த்து திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், ஜனதாதளத்தில் சில தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அப்போது நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அரசை படுதோல்வி அடையச்செய்தனர்.

இந்த தோல்வியால் எம்ஜிஆர் அரசு, வருமான வரம்பு ஆணையை தடை செய்ததோடு பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கிய 31%, 50% உயர்த்தியது. மொத்தம் இடஒதுக்கீடு இப்போது 68% உயர்த்தப்பட்டது. மலைவாழ் மக்களுக்கு தனி ஒதுக்கீடு பிறகு வந்த உயர்நீதிமன்ற தீர்ப்பால் திமுக ஆட்சியில் 1% ஒதுக்கப்பட்டு, மொத்த இடஒதுக்கீடு 69% ஆனது.

இதற்கிடையில் மத்திய அரசு கல்வி, உத்தியோகத்தில் பிற்படுத்தப்பட்டோர்க்கு இட ஒதுக்கீடு இல்லை என்றிருந்த நிலையில் அரசமைப்புச் சட்டப்படி அமைக்கப்பட்ட காகாகலேல்கர் முதல் குழுவின் பரிந்துரைகள் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படாமலே இருந்தது.

இரண்டாவது குழு பிபி மண்டல் தலைமையில் அமைக்கப்பட்டு (1980), அந்தக் கமிஷன் பரிந்துரை அளித்தது. திராவிடர் கழகம், திமுக மற்ற சமூக நீதி அமைப்புகள் சேர்ந்து அதனை செயல்படுத்த கிளர்ச்சிகள் நடத்தின. விபிசிங் பிரதமராக வந்த நிலையில் வேலை வாய்ப்பில் மட்டும் 27 % இடஒதுக்கீட்டினை அளித்து 1900 இல் ஆணை பிறப்பித்தார்.

இதனை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு 9 நீதிபதிகள் அமர்வு 1992 இல் தீர்ப்பளித்தது. மத்திய அரசில் முதல் முறையாக பிறப்படுத்தப்பவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றது.

உச்சநீதிமன்ற தீர்ப்புகளின்படி 50 விழுக்காட்டிற்கு மேல் இடஒதுக்கீடு போகக்கூடாது என்றும் கூறியது. தமிழ் நாட்டில் அமலில் இருந்த 69% இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து வாராமல் தடுக்க, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்களிடம், திராவிடர் கழகம் வெறும் ஆணையாக இருந்ததை, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமாக்கி, பின்னோக்கி சென்று அரசமைப்புச் சட்டத்தின் 9வது அட்டவணைப் பாதுகாப்புடன் வைக்க பரிந்துரை செய்து அதனை நிறைவேற்றியும் தந்தது. அன்றைய முதல்வரும் அனைத்துக் கட்சி கூட்டத்தையும், சட்டமன்றத்தையும் தனியே கூட்டி சட்டத்தை நிறைவேறச் செய்தார். இது தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 76 வது சட்டத்திருத்தம்.

ஏற்கனவே பிற்ப்படுத்தப்பட்டவருக்கு வழங்கப்பட்ட 50%, மிகவும் பிற்படுத்தப்பட்டவர் 20%ம், பிற்படுத்தப்பட்டவருக்கு 30% என்று பிரிக்கப்பட்டது. மேலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உள்ள இட ஒதுக்கீட்டில் இசுலாமியர்களுக்கு 3.5% வழங்கப்பட்டது.

அதேபோல தாழ்த்தப்பட்டவர்களுக்கு உள்ள பிரிவில், அருந்ததியினருக்கு 3% தனியே மாநில அரசில் ஒதுக்கீடு செய்தார். அதன் காரணமாக தாழ்த்தப்பட்டோருக்கு பரவலாக சமூக நீதி கிடைத்தது.

2005 ஆம் ஆண்டு மத்தியஅரசு கொண்டு வந்த 93வது அரசமைப்பு திருத்த சட்டத்தின்படி மத்திய கல்வி நிறுவனங்களில் (தனியார் உட்பட) ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது.

இந்த வரலாற்றை இன்றைய தலைமுறையினர் நன்கு அறிந்து கொண்டால் தான், இன்றைக்கு பிஜேபி அரசு கொண்டு வந்துள்ள பொருளாதார அடிப்படையிலான 10% இடஒதுக்கீடு (உயர்சாதியினருக்கு மட்டும்) ஏற்படுத்தப்போகும் ஆபத்துக்களை புரிந்து கொள்ள இயலும். திராவிடர் கழகம், திராவிட முனேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள் இந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு போட்டுள்ள நிலையில் அதன் தீர்ப்பை எதிர்நோக்கி சமுக நீதி ஆர்வலர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றோம்.

ஆதாரம்: தமிழ்நாட்டில் சமூகநீதி வரலாறு ஒரு பார்வை (கி. வீரமணி)
பெரியாரியல் பாடங்கள் (தொகுதி 2) பெரியார் பேருரையாளர் பேராசிரியர் ந .இராமநாதன்


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சமூக நீதி – கடந்து வந்த பாதை”

அதிகம் படித்தது