நவம்பர் 26, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

சரஸ்வதி என்பது சரஸ்வதிதானா?

தேமொழி

May 9, 2020

சரஸ்வதி ஆறு குறித்த செய்திகளாக அகழாய்வுகள் அறிவியல் அடிப்படையில் முன்வைக்கும் தரவுகள் யாவும், தொன்ம இலக்கியங்கள் (அதாவது சமஸ்கிருத மொழியில் இயற்றப்பட்ட ரிக் வேதம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள்) சொல்லும் சரஸ்வதி ஆறு குறித்த செய்திகளுடன் முரண்படுவதாக இருக்கிறது.

கீழடியின் தொல்லியல் தடயங்களை தமிழின் சங்க இலக்கியத் தரவுகளுடன் இணைத்துக் காட்ட முடிவது போல சரஸ்வதி ஆறு பற்றிய இலக்கியங்கள் தரும் வாழ்வியல் குறிப்புகளைக் கொண்டு 3300 -1300 கி. மு. காலத்திற்குரியதாக அறுதியிட்டுக் கூறப்படும் சிந்துவெளி பண்பாடு என்பது வேதகாலத் தொடர்புடையது என்று கூறவே இயலாது என்பதை ஆய்வாளர்கள் விளக்கமாக எடுத்துரைத்து விட்டனர். காலத்தால் முற்பட்ட சிந்து சமவெளிப்பகுதியில் அமைந்திருந்த இரும்பு காலத்திற்கும் முற்பட்ட நகர அமைப்புகள், குறியீடுகள் கொண்ட அக்கால மொழி, கருப்பு சிவப்பு பானை ஓட்டுச் சில்லுகள், குதிரை குறித்த தரவுகள் அப்பகுதியில் கிடைக்காமை போன்றன சிந்துவெளிப்பண்பாட்டின் தனிச்சிறப்பு கொண்ட அடையாள முத்திரைகள்.

காலத்தால் பிற்பட்ட (1500 கி. மு.) வேதகால இலக்கியங்கள் நகர வாழ்வியலைப் பற்றிக் குறிப்பிடாதவை, இரும்பு ஆயுதங்கள் குறித்து கூறுபவை, குதிரைகள் பற்றிய செய்திகள் தருபவை, வண்ணச்சுடுமண் பாண்டங்களைப் பயன்படுத்திய மக்களைக்குறிப்பவை, அத்துடன் அவை எழுதாக் கிளவி என்றும் எழுத்தில்லாத மொழி என்றும் குறிப்பிடப்படும் மொழியின் தனிச் சொத்து. ஆகவே இந்த உண்மை புரிந்தவுடன் சிந்து சமவெளி நாகரிகம் என்பது சரஸ்வதி ஆறு நாகரிகம் என்று கூறுவதை ஒரு கட்டுக்கதை என்று உணர்ந்து தவிர்த்துவிடுவது அறிவுடைமையாக இருக்க வேண்டும்.

ஆனால், இந்தியாவின் பண்பாட்டின் தவக்கம் வேதகால நாகரிகம் என்று நம்புவோருக்கு இந்த உண்மை உகப்பாக இருப்பதில்லை. அவர்கள் ஆரிய-வேத பண்பாடு இந்தியாவிற்கு வெளியிலிருந்து உள்நுழைந்ததது என்பதை ஏற்க விரும்பாதவர்கள். இந்துத்துவா ஆதரவில் உள்ளவர்கள் இந்தியாவின் மத்திய அரசு ஆட்சியை அமைக்கும் பொழுதெல்லாம் நேர்முகமாகவோ, அல்லது மறைமுகமாகவோ சிந்து-சரஸ்வதி கதைக்குப் புத்துயிர் அளிக்க விரும்புவார்கள். வேத கால வாழ்வியலுக்கு அறிவியல் அடிப்படை காட்டுவதாகக் கூறும் வைதீக இந்துசமய சார்பாளர்கள் அவர்கள் ஆட்சிக் காலத்தில் அதிகரிப்பார்கள். போலிச்சான்றுகள் அல்லது அறிவியல் ஏற்காத சான்றுகள் மூலம் சிந்துவெளி நாகரிகத்தை சரஸ்வதி ஆறு நாகரிகம் என்று குறிப்பிடும் நடவடிக்கைகள் அரசின் ஆதரவுடன் நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்கிறது என்பதை வரலாற்றைக் கூர்ந்து கவனிப்பவர் அறிவர். சரஸ்வதி குறித்த விரிவான செய்திகள் அறிந்தாலே தரவுகளைச் சரியாக எடைபோட முடியும் என்பதால் இக்கட்டுரை சரஸ்வதி ஆறு குறித்து அறியப்படும் சில முக்கியமான கருத்துகளை முன்வைக்கிறது.

சரஸ்வதி ஆறு எது, அது எங்கு பாய்ந்தது – சில கருத்துகள்:

தொன்ம இலக்கியங்கள் சரஸ்வதி ஆறு பற்றிக் கூறுவதென்ன என்று ஒரு மீள்பார்வை செய்வது சில அடிப்படை செய்திகளை அறிய உதவும். சரஸ்வதி ஆறுதான் வேத சுலோகங்களில் மிகவும் புகழப்பட்டும், அதிக முறை கூறப்படும் ஆறு ஆகும். கங்கை கூட அந்த அளவு சிறப்புப் பெற்றது அல்ல. சரஸ்வதி ஆற்றின் கரையில்தான் வேத பாடல்கள் யாவும் சேகரிக்கப்பட்டு வியாசமுனிவரால் நான்கு வேதங்களாகத் தொகுக்கப்பட்டன என்பதும் வைதீகர்களின் நம்பிக்கை. இந்த ஆறு ரிக் வேதத்தில் மிகப் பெரிய ஆறாகவும் விவரிக்கப்பட்டுள்ளது. அதில் 45 சுலோகங்களில், 72 முறை சரஸ்வதி ஆற்றின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, அதில் 3 சுலோகங்கள் முற்றிலும் சரஸ்வதி ஆற்றுக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது (கங்கை இருமுறையும், யமுனை மூன்று முறையும் மட்டுமே ரிக்வேதத்தில் கூறப்பட்டுள்ளது). வேதகால ‘புரு’ வம்சத்தினர் சரஸ்வதி ஆற்றின் இருகரைகளிலும் உள்ள புல் வெளிகளில் வசித்ததாகக் கூறப்படுகிறது. ரிக் வேதத்தின் ‘நதி ஸ்துதிசூக்தம்’ (10.75.5-6) என்று ஆறுகளை வாழ்த்திப் பாடும் பாடல் முறையே கங்கை, யமுனை, சரஸ்வதி, சுதுத்ரி(சட்லெஜ்), விபாஷ்(பீயாஸ்), பருஷ்ணீய(ராவி), அசிக்ஞ்யா(செனாப்), விதஸ்தா (ஜீலம்), சிந்து, கூபா (காபூல்) என்று இந்திய வடபுல ஆறுகளைக் கிழக்கிலிருந்து மேற்காக வரிசைப்படுத்தும் பொழுது சரஸ்வதியைக் குறிப்பிடுகிறது. ஆக, சரஸ்வதி இன்றைய யமுனை ஆற்றுக்கு மேற்காகவும், சட்லெஜ் ஆற்றுக்குக் கிழக்காகவும், சட்லெஜ்-யமுனை ஆறுகளுக்கு இடையில் ஓடிய ஒரு ஆறாகக் கூறப்படுகிறது, மேலும் சரஸ்வதி மலையில் தோன்றி கடலில் மறைவதாகவும் கூறப்படுகிறது [1]. ரிக் வேதம் தவிர்த்து உபநிடதங்கள், பிரமாணங்கள், மகாபாரதத்திலும் சரஸ்வதி ஆறு பற்றிய குறிப்புகள் உள்ளன.

தலைக்காவிரி என நாம் காவிரியின் தோற்றத்தைக் குறிப்பிடும் ஒரு சிறு சுனை போல, ஹரியானாவின் ஷிவாலிக் மலையில் ‘கட்காத்’ (காத்கட்) என்ற இடத்தில் சரஸ்வதி உற்பத்தியாகும் புனித இடமாகக் கருதப்படும் ‘ஆதிபத்திரி குண்டம்’ (புவியிடக் குறிப்பு: 30.458713, 77.341191) என்ற இடம் குறித்து மக்களிடையே வாய்மொழிக் கதைகள் வழிவழியாக இருப்பதை தொல்லியல் ஆய்வாளர் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் 1800களில் பதிவு செய்துள்ளார். ‘சர்சுதி’ என்று இக்காலத்தில் அறியப்படும் சிற்றாறு தோன்றும் பகுதிதான் இது [2]. இது தானேஸ்வரத்திற்கு அருகில் குருசேத்திரத்தைக் கடந்து சென்றதாக இதிகாசம் கூறுகிறது.

மேலும், ஒன்றுக்கும் மேற்பட்ட ஆறுகளுக்கு இந்திய மண்ணில் சரஸ்வதி என்ற பெயர் உள்ளது. அவற்றில் வேத கால சரஸ்வதி ஆற்றுடன் தொடர்புடையனவாக கருதப்படுபவை 4 ஆறுகள். ஷிவாலிக் மலைத்தொடர், புஷ்கர், ஆரவல்லி, கீர் மலை என்று மொத்தம் 4 வெவ்வேறு இடங்களில் தோன்றும் ஆறுகள் சரஸ்வதி என்ற பெயரில் அடையாளம் காட்டப்படுகிறது. குஜராத்தில் சோமாநாத் அருகில் ஹிரண், கபிலஆறுகளுடன் ஓர் சரஸ்வதி அங்குள்ள திரிவேணிமகாசங்கம் என்ற கழிமுகத்தில் (புவியிடக் குறிப்பு: 20.883170, 70.414078) கலப்பதாக 11 ஆம் நூற்றாண்டு இஸ்லாமிய அறிஞர் அல்பரூனி பதிவு செய்த குறிப்புள்ளது, இது அப்பகுதியில் உள்ள கீர் மலையில் தோன்றி, அருகேயே கடலில் கலந்துவிடும் ஒரு சிற்றாறு.

முக்கியமாக, திரிவேணி சங்கமம் பற்றிய குறிப்பு வேதத்தில் இல்லை. சரஸ்வதி ஆறு மறைந்து, தரையின் கீழ் ஓடி, கங்கை யமுனையுடன் திரிவேணி சங்கமமாகப் பிரயாகையில் கலக்கிறது என்ற புராணக்கதை அல்லது நம்பிக்கையின் அடிப்படையில் இந்தியாவில் எவரும் சரஸ்வதி ஆற்றின் பாதை குறித்து அறிய அக்கறையோ ஆர்வமோ கொண்டிருக்கவில்லை. அத்துடன் அவர்கள் திரிவேணி சங்கமத்தில் தொடர்ந்து ‘கும்பமேளா’ கொண்டாடவும் தவறவில்லை. ஆனால், பிற்காலத்தில் ஆங்கிலேயர் ஆட்சியில் சமஸ்கிருத ரிக்வேதம் கூறும் சரஸ்வதி ஆறு ஓடிய பாதையை அறிய அவர்கள் அதிக ஆர்வம் காட்டினர். ஆங்கிலேயத் தொல்லியல் ஆய்வாளர்களால் சரஸ்வதி ஆறு தேடும் படலம் துவங்கப்பட்டது. அப்பொழுது சிந்து சமவெளி நாகரிகம் வெளிச்சத்திற்கு வந்திருக்கவில்லை. சிந்துவெளி இன்றிலிருந்து ஒரு நூறாண்டுகளுக்கு முன்னர் 1920களில்தான் அறியப்பட்டது.

சர்சுதி (ஹரியானாவின் கத்தியால் மாவட்டம் – பஞ்சாபின் பட்டியாலா மாவட்டம் ஆகியவற்றுக்கு இடையில் பாய்ந்தோடும் ஒரு சிற்றாறு) என்ற ஆறு, ஆங்கிலேயர் காலத்து 1800களின் இந்திய நில வரைபடங்களில் ‘சரஸ்வதி நதி’ என்று குறிக்கப்பட்டுள்ளது. கக்கர் ஆற்றின் தொடக்கம் இந்த சர்சுதி என்ற சிற்றாறு எனக்கருதப்படுவதாக 1885 இல்வெளியிடப்பட்ட ‘இம்பீரியல் கெசட்டியர் ஆஃப் இந்தியா’ நூல் [3] குறிப்பிடுகிறது.

தடம் மாறும் ஆறுகள்:

கங்கை சமவெளிப் பகுதி சமதளமாக இருப்பதும், நில அரிப்புகள் உருவாதலும், புவியதிர்ச்சி போன்றவையும் அப்பகுதியின் நிலவியல் சார்ந்த இயல்பு. அதனால் ஆறுகளும் அப்பகுதிகளில் பாதைகளை மாற்றி ஓடுவதும் வழக்கம் என்பது புவியியலாளர்கள் கருத்து. 1800களின் துவக்கத்தில் பிரம்மபுத்ரா ஆறும் இவ்வாறு வழிமாறி ஓடியுள்ளது. ஆர். டி. ஒல்தாம் [4] சரஸ்வதி ஆறு மறையவில்லை, அது சட்லெஜ் என்று வழி மாறி, பின்னர் பியாஸ் ஆறுடன் சென்று இணைந்து விட்டது என்று கருதினார். சரஸ்வதி ஓடியதாகக் கூறப்படும் பகுதியிலிருந்த ஆறுகள் சிந்து சமவெளி நாகரீக காலத்திற்கு முன்னரே மறைந்துவிட்டவை, அப்பகுதியில் இருக்கும் படுகை மணல் யமுனையுடன் ஒத்துப்போகிறது என்பது மேரி ஆக்னஸ் கர்ட்டி (Marie-Agnès Courty) என்ற பிரெஞ்சு நிலவியல் ஆய்வாளரின் ஆய்வின் முடிவு. அவ்வாறே பண்டைய கால புவியதிர்ச்சிக்குப் பிறகு அப்பகுதியில் நிலமட்டம் உயர்ந்து யமுனை இன்று ஓடும் பாதைக்குத் திசை மாறியது என்பதும் வால்தியா (K.S. Valdiya) அவர்களின் கருத்து. அண்மையில் (சென்ற அக்டோபர் 2019) வால்தியா தலைமையில் இந்தியா அரசால்கூட்டப்பட்ட ஆய்வுக் குழுவின் ஆய்வாளர்கள் கங்கைக்கும் யமுனைக்கும் இடையில் ஒரு பண்டைய ஆற்றின் வழித்தடத்தைக் கண்டறிந்தார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது [5]. செயற்கைக்கோள் படங்களும் எண்ணற்ற பழங்கால நீர்த்தடங்களைத்தான் வடஇந்திய ஆற்றுப்படுக்கைகள் பகுதியில் காட்டுகின்றன. இதனால் பலமுறை வடஇந்தியப் பகுதியின் ஆறுகள் பாதை மாறி ஓடியதை செயற்கைக்கோள் படங்கள் அறிவியல் அடிப்படையில் உறுதி செய்கின்றன எனலாம்.

தாமஸ் பரோ (Thomas Burrow) ராஜஸ்தானில் இருக்கும் கக்கர்-ஹக்ரா ஆற்றுப்படுகை அக்காலத்து சரஸ்வதி ஆறாக இருந்திருக்கலாம் எனக் கருதினார்[6]. ஆனாலும், வாய்மொழி வழக்கில் மக்களிடம் உள்ள ராஜஸ்தானின் நாடோடிப்பாடல்கள் கக்கர் நதியைக் குறிப்பிட்டாலும் அது காணாமல் போன சரஸ்வதி என்ற கருத்தாக்கம் அப்பாடல்களில் இடம் பெறவில்லை என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.

கக்கர்-ஹக்ரா பகுதி தொல்லியல் தடயங்கள்:

Siragu Painted_Grey_Ware_Culture_(1200-600_BCE)

கக்கர்-ஹக்ரா பகுதியில் தொல்லியல் அகழாய்வு கண்டெடுத்த இடங்களில் கிடைத்தவை பெரும்பான்மையும் வரலாற்றுக் காலக்கோட்டில் சிந்துவெளிக்கும் பிற்பட்ட காலத்துத்தடயங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. காலத்தால் பிற்பட்ட தொல்லியல் தடயங்களான ‘வண்ணச்சுடுமண் காலகட்டம்’ (Painted Grey Ware (PGW) 1300-300 கிமு) தடயங்கள் இரும்பு காலகட்டப்பகுதியைச் சேர்ந்தவை என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய குறிப்பு. இது நகர நாகரிகம் அல்ல, கிராம நாகரிகம். வெண்கல காலத்தைச் சேர்ந்த சிந்து சமவெளியின் ‘கருப்பு சிவப்பு பானை ஓட்டுக் காலகட்டம்’ (Black and red ware culture – BRW) காலத்திற்கும் பிற்பட்ட காலத்தவை இந்த கக்கர்-ஹக்ரா பகுதி என்பது தொல்லியல் தரவுகள் கூறும் அறிவியல் முடிவு. கருப்பு, சிவப்பு மட்பாண்ட பண்பாட்டிற்குரிய பகுதிகளாக இந்தியாவின் சிந்துவெளி மற்றும் பிற பகுதிகள் அறியப்படுகிறது. ஆனால், மேற்கு கங்கை சமவெளிப்பகுதியின் வண்ணச்சுடுமண் பாண்டங்கள் காலவரிசையில் பிற்காலத்தவை. இப்பகுதி பஞ்சாபிற்கும் உதிரப்பிரதேசத்திற்கும் இடைப்பட்ட பகுதி.

Siragu Black and red ware - Painted Grey Ware

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக தொல்லியல் பேராசிரியர் ஷெரீன் ரட்னாகார் (Shereen Ratnagar) கக்கர்-ஹக்ரா நதிப்படுகை வாழ்விடங்கள் பெரும்பான்மையும் காலத்தால் பிந்திய நாகரிகத்தைச் சேர்ந்தது என்று உறுதிப்படக் கூறுபவர்[7]. சிந்துவெளிநாகரீக வாழிடங்கள் போன்ற குடியிருப்புகள் யமுனை கங்கை பகுதியில் கிடைக்கவில்லை என்பது வி. என். மிஸ்ரா (V.N.Misra) கொண்டிருக்கும் கருத்து [8]. ஆகவே, பானை ஓடுகள் தரும் தொல்லியல் தரவுகளும் கக்கர்-ஹக்ரா ஆற்றுப்படுகை (அல்லது சரஸ்வதி என்று இன்று உரிமை கோரப்படும்) பண்பாட்டுக் காலம் என்பது சிந்துசமவெளி காலத்திற்கும் பிற்பட்டது என்பதைத்தான் மீண்டும் நிறுவியுள்ளது.

சரஸ்வதி ஆறாக மாற்றப்படும் பண்டைய சட்லெஜ் ஆறு:

சிந்து சமவெளி நாகரிகம் உள்ள பகுதிதான் சரஸ்வதி நாகரிகம் என்று சொல்ல விரும்பினால் மறைந்து போனதாகக் கூறப்படும் சரஸ்வதி எது என்பது முதலில் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இன்னமும் எங்கே எங்கே என்று தேடிக் கொண்டிருக்கும் ஒரு ஆற்றின் கரையில் உள்ள நாகரிகம் எனக் குறிப்பிடுவது ஒரு நகைமுரண். உண்மையில் சுமார் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வறண்டுவிட்ட கக்கர்-ஹக்ரா ஆற்றுப்படுகைதான் சரஸ்வதி என்பது ஆங்கிலேயர் காலத்திற்குப் பிறகு வந்த கருத்தாக்கம் என்பதை நாம் மீண்டும் நினைவில் கொள்ள வேண்டும். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், குறிப்பாக 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி தொடங்கி, ஜெனரல் மேசஸ் ரென்னல், கர்னல் ஜேம்ஸ் டாட், மேஜர் எஃப்.மெக்கீசன், ஃபிரெஞ்ச் ஆய்வாளர் லூயி விவியன் தெஸான், ஆர்.டி.ஓல்டாம், ஜார்ஜ் ராவர்டி, மார்க் ஆரல் ஸ்யீன் போன்றவர்கள்தான் ரிக்வேத சரஸ்வதியைத் தேடத் துவங்கிய ஆய்வாளர்கள் எனப்பட்டியலிடுகிறார் மிஷல் தனினோ(Michel Danino, 2010). நம்மவர்களைப் பொருத்தவரையில் சரஸ்வதி ஆறு நிலத்தின் கீழ் மறைந்து, பிறகு திரிவேணி சங்கமத்தில் இணைந்து வங்கக்கடலுக்குப் போய்விடுகிறது.

இமயத்தில் தொடங்கி சிந்துவுக்கு இணையாக ஓடி அரபிக் கடலில் கட்ச் பகுதியில் கலந்த கக்கர்-ஹக்ராதான் சரஸ்வதி என்ற ஒரு கருத்தாக்கம் சில நூற்றாண்டுகளுக்கு முன் வரை இந்தியரிடம் இருந்ததாகத் தெரியவில்லை. வாய்மொழி வழியாகக் கடத்தப்படும் நாடோடிப் பாடல்களிலும் கக்கர்-ஹக்ராதான் சரஸ்வதி என்றக் குறிப்புமில்லை என்பதையும் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
சிந்து சமவெளி நாகரிகம் இந்தியப் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தான் பகுதியாக மாறிவிட, பிரிட்டிஷ் இந்தியா காலத்து ஆய்வாளர்கள் ஆய்வு செய்து கொண்டிருந்த கக்கர்-ஹக்ராதான் சரஸ்வதி என்பது இந்தியர்கள் கருத்தைக் கவர்ந்திருக்கக்கூடும். வரலாற்றுக் காலத்திற்கு முன்னரே வற்றிப் போன கக்கர்-ஹக்ரா ஆற்றுப்படுகையைக் காட்டும், லேண்ட்சாட் செயற்கைக்கோள் (LANDSAT) படத்தினை 1980இல் யஷ்பால் ஆய்வுக் குழுவினர் வெளியிட்டனர். இதுதான் மறைந்து போன சரஸ்வதி ஆறு என்றும், அதற்கு அறிவியல் சான்று கிடைத்துவிட்டது என்றும் சரஸ்வதி ஆறு என்ற கருத்தாக்கத்தைக் கொண்டவர் நம்பினர்.

இந்த நூற்றாண்டில் நிலவியல் பேராசிரியர் வால்தியா தலைமையில் இந்தியா அரசால் அமைக்கப்பட்ட சரஸ்வதியைத் தேடும் குழு, 2016 இல் சரஸ்வதி இமயத்தில் தொடங்கி சட்லெஜ் ஆற்றுடன் இணைந்து, சிந்து ஆற்றுக்கு இணையாக ஓடி, அதன் மூன்றின் ஒரு பகுதி பாகிஸ்தானின் வழியே பாய்ந்து, பிறகு கட்ச் வளைகுடாவில் கலப்பதாக அறிவித்தது [9]. இது ‘சர்சுதி-கக்கர்-ஹக்ரா’ என்ற ஆறுகளின் வழித்தடம். புவியதிர்ச்சி காரணமாக நீர் வரத்தின்றி நிலத்தடியில் மறைந்து போன சரஸ்வதி ஆறு கிடைத்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு சிந்து-சரஸ்வதி நாகரீகம் என்ற கோட்பாட்டுக்கு மறுவாழ்வு கொடுக்கப்பட்டது. சிந்து-சரஸ்வதி நாகரீகம் என்று 1989 இல் முதலில் குறிப்பிட்டவர் எஸ். பி. குப்தா என்ற அகழ்வாராய்ச்சியாளர்.

அவ்வாறானால், அரபிக் கடலில் கலப்பதாகக் காட்டப்படும் கக்கர்-ஹக்ரா என்பதற்கு மாறாக, சரஸ்வதி கங்கை யமுனையுடன் பிரயாகையில் கலக்கிறது என்று இதுநாள் வரை கூறிவருவதற்கு இது முற்றிலும் முரணானது. பிரயாகையில் கலக்க அது ஓடும் திசையோவேறு என்பதை உணர்ந்து அந்த கருத்தாக்கத்தையாவது மறுக்க வேண்டும் என்பதும் ஒரு கட்டாயம். எனவே, திரிவேணி சங்கமம் எனக் கூறப்படுவது பிழையானதாகிறது. எது எப்படியோ, அடுத்த கும்பமேளா விழா அடுத்த ஆண்டு வழக்கம் போலக்கொண்டாடப்படும் பொழுது (ஜனவரி 2021), இங்கே பிரயாகையில் சரஸ்வதியும் கலக்கிறதா என்று ஐயம் எழுப்புவோர் எவரும் அங்கிருக்கப்போவதில்லை என்பது மட்டும் உறுதி.

2008 இல்வெளியான வசந்த் ஷிண்டே ஆய்வு அறிக்கையின் படி கக்கர்-ஹக்ரா வறண்டுவிட்ட காலம் என்பது ஹரப்பா பண்பாடு தோன்றுவதற்கும் முன்னரே நிகழ்ந்துவிட்டது. கக்கர்-ஹக்ரா ஆறு ரிக் வேதம் சொல்லும் விவரிப்புகளுடன் பொருந்தவில்லை, இது வேதம் கூறும் வற்றாத ஆறு அல்ல, பருவகால மழை நீரோட்டத்தை அடிப்படையாகக் கொண்டது[10]. அவ்வாறே, ரொமிலா தாப்பர் (2004) ரிக் வேத கால சரஸ்வதிதான் கக்கர்-ஹக்ரா என்பது சர்ச்சைக்குரிய கருத்து என்று குறிப்பிடுகிறார்[11]. அதிலும், அதிதிகிருஷ்ண தேவ் (Aditi Krishna Dave,2018) இமயத்திலிருந்து பனி உருகி வற்றாதஆறாக ஓடுவது என்பது ஹரப்பா பகுதியில் சிந்துவெளி நாகரீகம் தோன்றுவதற்கும் சுமார் 24,000 – 45,000 ஆண்டுகளுக்கும் முன்னரே நின்றுவிட்டதாகத் தனது ஆய்வின்முடிவாகத் தெரிவிக்கிறார். லூசியானா ஸ்டேட் யூனிவர்சிட்டி நிலவியல் பேராசிரியர் பீட்டர் கிலிஃப்ட் (Peter Clift-2012) இதே கருத்தை உறுதிப்படுத்துகிறார். ராஜீவ் சின்ஹா மற்றும் அஜீத் சிங் (Rajiv Sinha and Ajit Singh-2017) போன்ற இந்திய ஐஐடி கான்பூர் ஆய்வாளர்களின் கக்கர்-ஹக்ரா நிலவியல் ஆய்வறிக்கையின்படி கக்கர்-ஹக்ரா என்பது சட்லெஜ் ஆற்றின் பகுதி, சிந்து சமவெளி பண்பாடு தோன்றுவதற்கும் முன்னரே, தொன்மையான காலத்தில் சட்லெஜ் பாயும் தடத்தைமாற்றிக் கொண்டது என்று குறிப்பிடுகிறார்கள்[12].

இந்த ஆய்வுக் குழுவில் பங்கு பெற்ற மற்றொரு ஆய்வாளரான சஞ்சீவ் குப்தா என்ற லண்டன் இம்பீரியல் காலேஜ் நிலவியல் ஆய்வாளர் நடத்திய அறிவியல் ஆய்வுகளின் முடிவின்படி, ஹரப்பா குடியிருப்புகள், குறிப்பாக ராஜஸ்தானின் கலிபாங்கன் (Kalibangan) பகுதி நகர நாகரிகக் குடியிருப்புகள் நாம் நினைத்திருந்தது போல வற்றாத ஆற்றினை அடிப்படையாகக் கொண்டு உருவானவையல்ல. மாறாக, அவை பருவகால மழைநீரைக் கொண்ட ஆற்றுப்படுகையில் அமைந்தவை. இந்த ஆய்வுக் குழுவினரால், வறண்ட கக்கர்-ஹக்ரா ஆற்றின் கரைகளில்40 மீட்டர் ஆழத்திற்குத் துளைகள் இடப்பட்டு வண்டல் மற்றும் படிவுகளின் மண் மாதிரிகள் எடுத்து, அவை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. ஆய்வின் முடிவாக கக்கர்-ஹக்ரா இமயமலைப் பகுதியில் உருவான ஆறுதான் என்பது உறுதியானது. ஆனால், மண்ணில் உள்ள மைக்கா மற்றும் சிர்க்கான் (mica and zircon) அளவின் படியும், அது காலக்கணக்கிற்கு உட்படுத்தப்பட்ட ஆய்வின் படியும் முடிவுகள் அது சட்லெஜ் நதியுடன் மட்டுமே ஒத்துப் போகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே அறிவியல் ஆய்வின்படி கக்கர்-ஹக்ரா தடம் மாறிய சட்லெஜ் ஆறு.

மேலும், லூமினசன்ஸ் ஆய்வு (luminescence – optically stimulated luminescence dating of sand grains) முடிவுகளின்படி சுமார் 8,000 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்னரே சட்லெஜ் ஆறு பாதை மாறி ஓடியுள்ளதும் தெரிய வந்துள்ளது. அதன் பிறகே, பிற்காலத்தில் மேலும் 3000 ஆண்டுகள் கழிந்த பின்னர் அப்பகுதியில் வாழத் துவங்கிய ஹரப்பா குடியிருப்பு பகுதியினைச் சார்ந்த மக்கள் இந்த ஆறு விட்டுச் சென்ற வளமான நிலத்தடிநீரையும், பருவகால மழையையும் பயன்படுத்தி வாழ்ந்துள்ளார்கள். சரஸ்வதி என்று ஒரு ஆறு இருந்திருந்தால் அது ஹரப்பா காலத்தில் அப்பகுதியில் பாய்ந்திருக்க வாய்ப்பில்லை என்று அறிவித்த பிரெஞ்சு நிலவியல் ஆய்வாளரான மேரி ஆக்னஸ் கர்ட்டி அவர்களின் முடிவுடன் இந்த முடிவு ஒத்துப் போகிறது. ராஜீவ் சின்ஹா, அஜீத் சிங் மற்றும் சஞ்சீவ் குப்தா ஆகியோரின் இந்த ஆய்வு காட்டும் முடிவு, கக்கர்-ஹக்ராதான் சரஸ்வதி.., சரஸ்வதி மறைந்தது வேத காலம்.., அது பாய்ந்தோடிய பகுதி நாகரிகம் ஹரப்பாவின் சிந்து-சரஸ்வதி நாகரிகம்.., என்று முன்வைக்கப்பட்ட அனைத்து கருதுகோள்களையும் முறியடித்ததுடன், அவற்றுக்கு முடிவும் கட்டிய அண்மையில் வெளியிடப்பட்ட ஒரு முக்கியமான ஆய்வு முடிவு (https://doi.org/10.1038/s41467-017-01643-9).

Siragu iit-research data

ஆகவே அறிவியல் ஆய்வுகள் தரும் கக்கர்-ஹக்ரா ஆற்றின் விவரிப்பு வேதம் கூறும் சரஸ்வதியின் விவரிப்புடன் பொருந்தவில்லை என்பது தெளிவாகிறது. ஆனால், இவற்றைப் பொருட்படுத்தாமல் சரஸ்வதியை மீட்க வேண்டும் என்று இந்திய அரசு 50 கோடி ரூபாய் பொருட்செலவில் பாலைவனத்தில் சரஸ்வதி ஆற்றைத் தேடிக் கொண்டிருக்கிறது. நிலவியல், தட்பவெப்ப சூழலியல், தொல்லியல் தரவுகள் என்று எந்த ஒரு அறிவியல் தரவுகளைப் பொருட்படுத்தாத நிலை ஆன்மீகவாதிகளின் நம்பிக்கை சார்ந்த செயல் என்றால், நாம் அதை வேறு வழியின்றி அது அவர்களது நம்பிக்கை என்ற அளவில் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அதே நிலைப்பாடு அரசாலும் முன்னெடுக்கப்படுவது கவலை தரும் ஒரு பொறுப்பற்ற செயல். தடம் மாறிய சட்லெஜ் ஆற்றின் பழைய பாதையின் எச்சத்தைச் சரஸ்வதி என்று அழைக்க விரும்புகிறார்கள் சரஸ்வதி ஆற்றின் ஆர்வலர்கள். அத்துடன் அவர்கள் சிந்துவெளி நாகரிகத்திற்கும் உரிமை கோருகிறார்கள். இந்த மீட்பு முயற்சிக்குப் பின் உள்ள அரசியலை, போலி அறிவியலை, மூட நம்பிக்கையைக் கேள்விக்கு உட்படுத்த வேண்டியது அறிவியல் மற்றும் சமூகவியல் ஆய்வாளர்களின் கடமை. உண்மையில் சரஸ்வதி எங்குதான் ஓடியது, என்னதான் ஆனது என்பது எவருக்குமே ஆர்வமூட்டும் ஒரு கேள்விதான். அதை மறுக்க முடியாது. ஆனால் இதுவரை முன்வைக்கப்பட்ட தரவுகள் சிந்து சமவெளி நாகரிகத்தைச் சரஸ்வதி என்று மறுபெயர் சூட்டும் அளவிற்கு அறிவியல் அடிப்படையில் தரவுகள் எதையும் தரவில்லை என்பதுதான் இன்றைய நிலைமை.

மேற்கூறப்பட்டவை தவிர்த்து, இதுவரை இந்தியப் பகுதியில் சரஸ்வதி ஆற்றைத் தேடியது போக, இந்தியாவிற்கு வெளியிலும் சரஸ்வதி ஆறு இருப்பதாகக் காட்டப்படும் ஒரு செய்தியும் உள்ளது. இடம் பெயர்ந்து இந்தியப்பகுதிக்கு வந்த ஆரியர், இந்தியாவில் சரஸ்வதி என்று மற்றொரு ஆற்றுக்குப் பெயர் சூட்டியுள்ளார்கள் என்ற கருத்தும் உள்ளது. ஹரஹ்வதி (Harahvaiti/Helmand River) என்ற பெயரில் பண்டைய ஈரான் (“ஈரான்” என்னும் சொல் பாரசீக மொழியில் “ஆரியரின் நிலம்” எனப்பொருள்படும்) பகுதியில் பாய்ந்த நதிதான் சரஸ்வதியாக ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது என்ற ராஜேஷ் கோச்சார் (Rajesh Kochhar, 2000) போன்றவர்களின் ஒரு ஆய்வுக் கோணமும் உண்டு. மேலும், ரிக் வேத சரஸ்வதி சுலோகங்கள் சிந்து பற்றிய சுலோகங்களையும் விட காலத்தால் முற்பட்டது என்ற ஒரு கருத்தும் உண்டு என்பதையும்கவனத்தில் கொள்ளலாம்.

சரஸ்வதி என்பது ரிக் வேதத்தில் ஆறுகளைக் குறிக்கும் ஒரு பொதுப்பெயராகக் கொள்ளலாம், அதாவது ஒரு குறியீடு என்பது இர்ஃபான் ஹபீப் (Irfan Habib, 2000) முன்வைக்கும் கருத்து. அது மட்டுமன்றி, வைதீக சமய வேதாந்திகளும் பெரியோர்களும் “சரஸ்வதி என்பது மனிதனின் உள்ளார்ந்து ஓடும் ஞானத்தின் குறியீடு என்றும் அது வாக்கினில் வெளிப்படும் அந்தராத்மாவின் சூட்சுமம்” என்றும் சொல்கிறார்கள். ஆனால் இது ரிக் வேதப் பாடல் ‘மலைகளின் தலையாய் நிற்கும் முகடுகளில் அவள் தன் வலுவான வெள்ளி அலைகளை வெடித்துச் சிதற வைக்கிறாள்’ (ரிக் வேதத்தின் 6.61ம் பாடல்) என்று குறிப்பிடுவதற்கு முற்றிலும் மாறுபட்ட மற்றொரு கருத்து என்பதையும் போகிற போக்கில் ஒரு சில குறிப்புகளாகக் கவனத்தில் கொள்வது சரஸ்வதி நதி குறித்த பிற கருத்தாக்கங்களும் மக்களிடையே உள்ளன என்பதைக் கோடி காட்டும்.

இறுதியாக ஒரு கேள்வி:

சரஸ்வதி என்று சுட்டிக்காட்டும் ஒரு வறண்ட ஆற்றின் தடமே சரஸ்வதி அல்ல, அது ஹரப்பா பண்பாடு தோன்றுவதற்கும் பலநூறு ஆண்டுகளுக்கும் முன்னரே திசைமாறி ஓடிய சட்லெஜ் ஆறு என்று அறிவியல் ஆய்வுகள் உறுதியாகச் சான்று தந்து அறிவிக்கையில், அது சரஸ்வதி ஆறு என்றும், அங்கு இருந்த நாகரிகத்தைச் சிந்து-சரஸ்வதி நாகரிகம் என்றும் எவ்வாறு புதுப்பெயர் சூட்டி அழைக்க முடியும்?
____________________________________

References:
[1]
Michel Danino (2010), The Lost River: On The Trails of Saraswati, Chapter 2

[2]
Alexander Cunningham (1871), The Ancient Geography of India

[3]
W. W. Hunter (1885), The Imperial Gazetteer Of India V5: Ganjam To India, pp. 54

[4]
R. D. Oldham (1886), “On Probable Changes in the Geography of the Panjab and its Rivers: A Historical-Geographical Survey’, Journal of the Asiatic Society of Bengal, LV, 2, pp. 322–43

[5]
Jacob Koshy (2019), Scientists excavate ‘ancient river’ in Uttar Pradesh, OCTOBER 01, 2019, The Hindu.

https://www.thehindu.com/news/national/scientists-excavate-ancient-river-in-uttar-pradesh/article29560057.ece

[6]
Thomas Burrow (1963), “On the Significance of the term arma, armaka in Early Sanskrit Literature.” Journal of Indian History vol.41, pp. 162.

[7]
Shereen Ratnagar (2001), Understanding Harappa: Civilization in the greater Indus Valley.

[8]
Misra, V.N. (1994). Indus Civilization and the Rigvedic Saraswati, in South Asian Archaeology 1993 (AskoParpola and Petted Koskikallio Eds.), pp. 511-525. Helsinki: SuornaLalnenTiedeakatemia.

[9]
Government constituted expert committee finds Saraswati river did exist, Oct 15, 2016,Economic Times

https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/government-constituted-expert-committee-finds-saraswati-river-did-exist/articleshow/54870743.cms

[10]
Shinde, V. et al, (2008), Exploration in the Ghaggar Basin and excavations at Girawad, Farmana (Rohtak District) and Mitathal (Bhiwani District), Haryana, India.

[11]
Romila Thapar (2004), Early India: From the Origins to AD 1300.

[12]
Singh, A., Thomsen, K.J., Sinha, R. et al. Counter-intuitive influence of Himalayan river morphodynamics on Indus Civilisation urban settlements. Nat Commun8, 1617 (2017). https://doi.org/10.1038/s41467-017-01643-9


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சரஸ்வதி என்பது சரஸ்வதிதானா?”

அதிகம் படித்தது