செப்டம்பர் 19, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

சிட்டுக்ககுருவியும் பருந்தும் (சிறுவர் சிறுகதை)

மா.பிரபாகரன்

Nov 7, 2015

vilayaadaadhe paappaa5மாணவர்களிடையே போட்டி இருப்பது சகஜம்தான், அது படிப்பு விடயம் என்றால் பரவாயில்லை ஏற்றுக்கொள்ளலாம், அதுவும் ஆரோக்கியமான போட்டியாக இருக்க வேண்டும்; ஆனால் அந்தப் பதினோராம் வகுப்பு மாணவிகளிடையே தேவையற்ற காரணங்களுக்காக போட்டி என்ற பெயரில் பொறாமை பூசல் இருந்தது. மாநிறமான மாணவி சிவப்பான மாணவியைப் பார்த்து உள்ளுக்குள் பொறுமினாள்; குட்டையான முடிகொண்ட மாணவி நீளமான கூந்தல் கொண்ட பெண்ணைப் பார்த்து பொறாமைப்பட்டாள். குண்டான மாணவி ஒல்லியான உடல்வாகு கொண்ட பெண்ணிடம் காரணமே இல்லாமல் காழ்ப்புணர்ச்சி காட்டினாள். இப்படி அற்ப காரணங்களுக்காக மாணவியர் தங்களுக்குள் நட்பு பாராட்டாமல் வேண்டாத விரோதத்தை வளர்த்துக் கொண்டிருந்தனர். இதனால் படிப்பின்மீது அவர்களுக்கு நாட்டம் குறைந்ததை அவர்களின் வகுப்பாசிரியை உணர்ந்து கொண்டார். இவர்களை எப்படி நல் வழிப்படுத்துவது? வளர்ந்த பிள்ளைகளிடம் நேரிடையாக அறிவுரை சொன்னால் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ரொம்பவே யோசித்து காலம்காலமாய் இருந்து வரும் கதை சொல்லும் உத்தியையே அவர் தேர்வுசெய்தார்.

ஒருநாள் காலை வகுப்பறைக்கு வந்தவர் “நான் உங்களுக்கு ஒருகதை சொல்லப்போறேன்!”- என்றபோது மாணவியர் அனைவரும் ஆச்சரியத்தில் நிமிர்ந்தனர். அவர்கள் கதைகேட்க ஆயுத்தமாயினர்.“ ஒரு ஊர்ல குருவி ஒன்னு இருந்துச்சு! ஒரு நாள் அதுக்கு தான் பருந்து மாதிரி உசரத்துல பறக்கனும்னு ஆசை வந்துச்சு! பருந்தா மாறனும்னா குண்டாகனும்! அதுனால கண்டபடி தின்னு குண்டாச்சு! அப்புறம் வானத்துல உசரத்துல போயி பருந்து மாதிரி பறக்க முயற்சி செஞ்சுச்சு! அதோட உடம்பு வளர்ந்த அளவுக்கு இறக்கை வளரல! அதால பருந்து மாதிரி பறக்கமுடியல! ரொம்ப கஷ்டப்பட்டு முயற்சி செஞ்சதுல இறக்கை உடைஞ்சு போயி தொப்புன்னு தரைல விழுந்து அடிபட்டுக்குச்சு! இப்படியே கிடந்தா யாராவது எதிரிகிட்ட அகப்பட்டுருவோம்னு பயந்து நொண்டி நொண்டிப் போயி ஒருமரத்தோட கிளைல ஏறி உக்காந்துக்கிச்சு!”

sittukkuruviyum3“இது பண்றதை யெல்லாம் பாத்துக்கிட்டுருந்த பருந்து ஒன்னு குருவி பக்கத்துல வந்து உக்காந்துச்சு! நீ என்ன பண்ணக்கிட்டிருக்கேன்னு நான் தெரிஞ்சுக்கலாமா குருவியேன்னு கேட்டுச்சு! நான் உன்னை மாதிரி பறக்கனும்னு ஆசைப்பட்டேன்! முடியாமப்போச்சு! வலி தாங்க முடியாம முக்கி முணங்கிக்கிட்டே குருவி சொல்லுச்சு! நீ எதுக்கு என்னை மாதிரி பறக்கனும்னு ஆசைப்பட்ட? பருந்துகேட்டுச்சு! பருந்தோட இந்தக்கேள்விக்கு குருவியால உடனே பதில் சொல்ல முடியல! அது கொஞ்ச நேரம் திருதிருன்னு முழிச்சுச்சு! அப்புறமா சொல்லுச்சு! நீ உசரத்துல பறக்குற! உன்னைக் கண்டா மத்த பறவைங்க எல்லாம் பயந்து ஒதுங்குதுங்க! நீ கிட்டத்தட்ட பறவைகளுக்கெல்லாம் ராஜா மாதிரி இருக்க! உன்னை எல்லாரும் அண்ணாந்துதான் பார்க்கவேண்டியிருக்கு! உன்னைமாதிரி உசரத்துல பறந்தாத்தான் மதிப்போன்னு தோணுச்சசு! அதான் ஆசைப்பட்டேன் அப்படீன்னுச்சு!”

“இதுதான் உன் பிரச்சனையா? நீ என்னைப்பாத்து ஆசைப்படுற! ஆனா நான் உன்னைப்பாத்து ஏங்குறது தெரியுமா உனக்கு? பருந்து கேட்டுச்சு! என்னது நீ என்னைப்பாத்து ஏங்குறியா? ஆச்சரியத்தோட கேட்டுச்சு அந்த முட்டாள் குருவி! அதுக்கு பருந்து சொல்லுச்சு! அந்தரங்கத்துல பறக்குறோம்! யாருமே நம்ம கூட சேர மாட்டேங்குறாங்க! நம்மளைக் கண்டாலே ஏதோ துஷ்டனைக் கண்டமாதிரி விலகிப் போயிர்றாங்க! ஆனா இந்தக்குருவி தாழ்வாப் பறக்குது! மனுஷங்களோட நெருக்கமா இருக்கு! எல்லாரும் இதைக் குருவி குருவின்னு கொஞ்சுறாங்க! நீ நினைச்சா மனுஷங்க வசிக்குற வீட்டுக்குள்ளயே கூடு கட்டமுடியும்! ஆனா ஒரு பருந்து அப்படி கட்டுறத நினைச்சுப் பாக்கமுடியுமா? சொல்லு குருவியே அப்படீன்னுச்சு!

“பருந்து அப்படிச் சொன்ன பின்னாடிதான் தான்கிட்டயும் நாலு நல்லவிடயம் இருக்குறது குருவிக்கேத் தெரியவந்துச்சு! தேவையில்லாம பருந்துமேல பொறாமைப்பட்டுட்டோமேன்னு அதுக்குவெட்கம் வந்துச்சு! அது ஒன்னுமே பேசாம மவுனமா இருந்துச்சு! அப்பப்பருந்து சொல்லுச்சு! நீ நீயா இரு! நான் நானா இருக்கேன்! யாரும் யாரை மாதிரியும் மாறவேண்டாம்! உசரத்துல பறக்குறதுனால நான் உசந்தவனும் கிடையாது! தாழப்பறக்குறதுனால நீ தாழ்ந்தவனும் கிடையாது! நான் ஒருவிதத்துல மகிழ்ச்சியா இருக்கேன்னா நீ ஒருவிதத்துல மகிழ்ச்சியா இருக்க! நீ ஒருவிதத்துல கஷ்டப்படுறேனா நான் ஒரு விதத்துல கஷ்டப்படுறேன்! பாக்குறதுக்கு வேறவேறயா தெரிஞ்சாலும்  நம்ம எல்லோருடைய வாழ்க்கையும் அடிப்படைல ஒன்னுதான்! உடம்பைப் பாத்துக்கோ குருவியே! நான் வர்றேன்னு சொல்லிட்டு பருந்து போயிருச்சு!”

“இனிமே நாம யாரைப்பாத்தும் பொறாமைப் படக்கூடாது! அப்படிப் பொறாமைப்பட்டா இருக்குற பொழைப்பும் கெட்டுப்போயிரும்! நம்ம வாழ்க்கையை நாம வாழனும்! ஒரு குருவி என்ன செய்யுமா அதுமாதிரி சிர்ப்சிர்ப்புன்னு பாடிக்கிட்டு உற்சாகமா அங்கேயும் இங்கேயும் சிறகடிச்சுப் பறந்துக்கிட்டுத் திரியனும் அப்படீன்னு குருவி தீர்மானம் பண்ணுச்சு!”- என்று சொல்லி ஆசிரியர் கதையை முடித்தார்.

மாணவர்கள் அமைதியாக இருந்தனர்; அவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர்; ஆசிரியையே தொடந்து பேசினார். “நாம யாரும் முழுமையானவங்க கிடையாது! நம்ம எல்லார் கிட்டயும் குறையும் உண்டு நிறையும் உண்டு! மகிழ்ச்சியா இருக்கனும்னா நம்மகிட்ட இருக்குற குறைகளைப் பொருட்படுத்தாம நிறைகளை மட்டுமே எடுத்துக்கனும்! ஆனா துர்அதிர்ஷ்டவசமா நம்ம வகுப்புல சிலபேரு எப்பப்பாத்தாலும் தங்களோட குறைகளையே பெருசா நினைச்சுக்கிட்டு இருக்காங்க! இது தவறான சிந்தனை! சதாகாலமும் நம்மளோட குறைகளையே நினைச்சுக்கிட்டிருக்குறது நம்மள மேலும் பலவீனப்படுத்திரும்! சோர்வடைய வைச்சிரும்! மாநிறமா இருக்குற பொண்ணு தன்னோட நிறத்தைப்பத்தியே யோசிச்சிட்டிருக்கக் கூடாது! படிப்புல கூடுதல் கவனம் செலுத்துனா அவ எடுக்குற மதிப்பெண்கள்தான் பேசுமே ஒழிய நிறம் பேசாது! குட்டையான முடி இருக்குற பொண்ணு நீளமானமுடி இருக்குற பொண்ணைப்பாத்து பொறாமைப்படனும்ங்குற அவசியம் இல்ல! ஒருவேளை அவளோட குரல்வளம் நல்லா இருந்தா அதை வைச்சு அவ ஊரையே வசீகரீக்கலாம்! சுமாராபடிக்குற பொண்ணு நல்லாபடிக்குற பொண்ணைப் பார்த்து காயனும்ங்குற அவசியமில்லை! அவளுக்கு சிறப்பான உடற்தகுதி இருந்துச்சுனா அவ தன்னோட விளையாட்டுத் திறனை மேம்படுத்தலாம்!”- என்றவர் சட்டென்று“ சரி! அடுத்த வகுப்புல பார்ககலாம்!”- என்று சொல்லி வகுப்பறையை விட்டு வெளியேறிவிட்டார்.

யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை; ஆனால் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போன்று யார்யார் மனத்தில் தைக்க வேண்டுமோ அவர்கள் மனத்தில் தைத்து விட்டார். பிறரை குற்றம் காணக்கூடாது; குறைசொல்லவும் கூடாது; நம்முடைய திறமைகளை நாம் மேம்படுத்திக் கொள்ளவேண்டும்; அப்படி மேம்படுத்திக் கொண்டால் உற்சாகமும் மகிழ்ச்சியும் ததும்பும் வாழ்க்கை நம்வசமாகும்; இதை உணர்த்தத்தான் இந்த குருவி-பருந்து கதை என்பதை மாணவியர் நன்றாகவே புரிந்து கொண்டனர். அவர்கள் கதை சொன்ன ஆசிரியைக்கு நன்றி சொல்லும் விதமாகக் கரவொலி எழுப்பினர். அந்தக் கரவொலி நடந்துசென்று கொண்டிருந்த ஆசிரியையின் காதில் தேனாக வந்துப் பாய்ந்தது.


மா.பிரபாகரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சிட்டுக்ககுருவியும் பருந்தும் (சிறுவர் சிறுகதை)”

அதிகம் படித்தது