செப்டம்பர் 18, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

தொகுப்பு கவிதை (சிறகிழந்த சிட்டு, இதுதானா பார்த்து சொல்லுங்க?)

குமரகுரு அன்பு

Oct 10, 2020

சிறகிழந்த சிட்டு

siragu sittuசிறிது சிறிதாய்

சிறகிழந்த ஒரு சிட்டு

மெல்ல நகர்ந்து

நீர் தேடி செல்கிறது

தேங்கிய நீர் சகதிக்குள்

அலகால் கொந்தியுறிஞ்சி

அண்ணாந்து விழுங்கையில்

அதற்கு தெரிந்த தூரத்து வானம்

நேற்றும் அங்குதான் இருந்ததை

எண்ணி மீண்டுமொரு

மொடக்கு நீரை உறிந்தது…

***************************************************

இதுதானா பார்த்து  சொல்லுங்க?

 

siragu idhu dhaana1

பிணவறையின் வாயிலில் இருந்து
மெல்ல நகர்கிறாள்
கடிகாரத்தின் சிறு முள்ளாக

அவள் கணவனையும் அங்குதான்
அடையாளம் காட்டினாள்

அவள் நம்பினாள்
உள்ளே மகள் இல்லை என

வாதைகளால் வரும் இறப்புகளைப்
போலில்லை இவ்விபத்திறப்புகள்

5 நாட்களாக காணாமல் போன
அவளைத் தேடி துவண்ட கண்கள்
இன்னும் சுரக்க காத்திருக்க

நெடிய பாதையில் நசுங்கிய நாயின்
இரத்தத்தை ஏற்றி பரப்பி செல்லும்
சக்கரம் தானே விதி

மெல்ல நகர்கிற அவள் கால்களில்
சத்து இல்லை
இத்தனை வருடங்களாக யாருமின்றி
சுயமாக நின்றவள்
போரூர் கட்டட இடுக்கிலிருந்து பிழைத்து வந்து
புருசனை அடக்கம் செய்த மறுநாள்
காலையில் செங்கல்களின் வரிசையில் நின்றவள்…

பெண் போன்ற கல்லும் இல்லை
பஞ்சும் இல்லைதானே

இதோ முந்தானையால் மூக்கை மூடியபடி மெல்ல உற்று பார்க்கிறாள்
அவள் பெற்ற மகளின் நசுங்கிய முகத்தை

“இதுதானா பார்த்து  சொல்லுங்க?”

——————————————————–

siragu iyarkaiமனம் பிறழ்ந்த நிலையில்
மலர் உதிர்த்த
மகரந்தம் உரசி பறக்கும் காற்றின்
சுழற்சி மடிப்பில் சிக்கிய சருகின்
சல்லடை துளைகள் வழி பொழியும்
ஒளிப் பெருகி தூரல்களாகி
நீர் சேலை உரசி பரவி
தெளித்து சருகை மேலெழுப்பி
பெருவனத்தின் தனிமையில்
ஒரு பறவை
அடை காக்கும் நேரம்
கிர்ர்ர்க்க் என நொறுக்க
பறவை குனிந்து
முட்டையைப்
பார்த்ததாம்

——————————————————–
வற்றா கடலுக்குள்ளிருந்து
துள்ளுகிற நதி மேல்
மிதக்கிறது
வானம்

——————————————————-
எங்கூரு அடிபைப்புல
தலகீழா தொங்கிகினு
தண்ணீ குடிக்கிற மைனா
கூட்டத்தில நானும் ஒருத்தி

 

 

 


குமரகுரு அன்பு

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தொகுப்பு கவிதை (சிறகிழந்த சிட்டு, இதுதானா பார்த்து சொல்லுங்க?)”

அதிகம் படித்தது