சூன் 23, 2018 இதழ்
தமிழ் வார இதழ்

சிறகுகளின் இலக்கிய மேடை(கவிதை)

இல. பிரகாசம்

Apr 1, 2017

tamil mozhi fi

 

 

பொற்கனகக் கோட்டுக் கதிர்மழைச் சாரல்

பொழியும் காலைப் பொழுதில் எங்கள்

இன்னிசை கானம் காற்றினில் பிறக்கும்

இசையருவி பொழியும்; ராகம் இசைத்

தாளம் மெட்டுச் சந்தம் விருத்தம்

தரவு வண்ணம் “பா”வினம் துறைகள்

இவையா வையும் நாங்கள் கற்கவில்லை

இலக்கணம் போற்றும் மோனை எதுகை

இயைபு முற்று தொடை யாவுமெங்கள்

இலக்கிய சுவைக்குத் தடையேது மில்லை

 

வண்ணக் கூத்தாடும் சோலையும் தென்றல்

வீசுங் கானகமும் எங்கள் இலக்கிய

அரங்கேற்ற மேடை; எங்கள் இலக்கிய

ஆய்வு வரையறை யற்றது; அதன்மொழி

பன்மைத் துவமுடைத்து; புதுமையை வரவேற்றுப்

போற்றும் தன்மையது; உலக மொழிச்

சொற்களின் வேர்ச்சொல் எங்கள் இசையே!

சீவன் பெற்ற உயிரினங்க ழெழுப்பும்

இரைச்சலும் மொழியின் ஓரங்கமே! எங்கள்

இலக்கியம் ஆதியில் பிறந்த இலக்கியம்

 

உலகமொழிச் சொற்களுக்கு எங்கள் மொழி

உலகப் பொதுமை; எங்கள் மொழி

தென்றலோ டிசைந்து பாடவல்ல அழகுக்

கொச்சை மொழி; உவமை உருவகம்

புனைய ஏற்றஇசை வண்ணம் எங்கள் மொழி

வண்ணக் காட்சியும் இசையும் பாட்டும்

வனப்பு கொள்ளும் நாடக மொழி!

புதுமைப் புனைவிற்கு வித்தான மொழி

கதிர்வீச்சின் சிறகைக் கொண்டு வானில்

காட்டிலக்கியம் புனையுமொழி எங்கள் மொழி!


இல. பிரகாசம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சிறகுகளின் இலக்கிய மேடை(கவிதை)”

அதிகம் படித்தது