ஏப்ரல் 10, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

சிறந்த உணவுமுறை எது?

தேமொழி

Apr 9, 2016

diet1பொன்னகை அணிந்த மாளிகைகள்

புன்னகை மறந்த மண்குடிசை

பசி வர அங்கே மாத்திரைகள்

பட்டினியால் இங்கு யாத்திரைகள்

என்று இருவேறுபட்ட உணவு உண்ணும் நிலைமை உலகில் உள்ளதைக் கவிஞர் கண்ணதாசன் சுட்டிக் காட்டியிருப்பார்.

ஆனால், மற்றொரு மாறுபட்ட கோணமும் நம்மிடம் உண்டு. நன்கு வகைவகையாக சமைத்துச் சாப்பிட வேண்டும் என்று சமையற்குறிப்புகளைத் தேடி அலைவது ஒரு பக்கம் என்றால், சாப்பிட்ட உணவு உடற்பருமனையும், அதன் மூலம் பிற வகையில் உடல் ஆரோக்கியத்தை சீர்குலைக்கக் கூடாது என்ற நோக்கில், ஆரோக்கியமான உணவுமுறை எது என்றும் மறுபக்கம் நாமே தேடிக் கொண்டிருப்போம். உணவு பற்றிய கட்டுரை என்பதால் “You can’t eat your cake, and have it too” என்ற ஆங்கிலப் பழமொழியையோ, “கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை” என்ற தமிழ்ப்பழமொழியையோ நினைவு கூரலாம். “The irony of life” என்று இது ஆங்கிலத்தில் சொல்லப்படுவது போல எதிரெதிர் பலன்களையும் அடைய விரும்பும் மனநிலை நம்மிடம் இருப்பதுதான் நடைமுறை.

இதனை ஒருமுறை நேரடியாக அலுவலகப்பணியில் எதிர்கொள்ள நேர்ந்தது. பணியில் உடன்பணியாற்றும் ஊழியர்கள் சந்தித்து கலந்துரையாட வேண்டிய நிலையில், திட்டமிடப்படாத அக்கூட்டத்தில் பலர் கலந்து கொள்ள விருப்பத்துடன் அறைக்கு வந்துவிட நேர்ந்தது. இருக்கைகள் குறைவாகப் போன நிலையில் அலுவலகத்தில் இதற்கென ஒதுக்கப்படும் கூட்ட அறைகளில் ஒன்றில் கூடுவோம் என்று அப்பகுதிக்குச் சென்றோம். முன்பதிவு செய்யாத நிலையில் அந்த அறைகள் கிடைப்பதும் சிரமம், அன்றும் அவ்வாறான நிலையே. இருந்த இரு அறைகளிலும் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. வரப்போகும் கிறிஸ்துமஸ் விழாவிற்கு என்னென்ன உணவு சமைத்து கொண்டாடலாம் என்று ஒரு பிரிவு ஒரு அறையில் தீவிர ஆலோசனையில் இருந்தார்கள். மறு அறையில் நிறுவனத்தின் மனித வளத்துறை பிரிவு தங்களது ஊழியர்களின் உடல்நலம் பேணும் பொருட்டு ஏற்பாடு செய்திருந்த “எடை குறைக்கும் உணவுமுறை” பற்றிய கலந்துரையாடல் நடந்து கொண்டிருந்தது. இதுதான் உலகம். குறளில் வள்ளுவர் மருந்து என்ற அதிகாரத்தில் “உணவே மருந்து” என்ற கோட்பாட்டை வலியுறத்த அதில் உணவு கட்டுப்பாடு பற்றித்தான் பலகுறள்களை எழுதி வைத்துள்ளார். அதன் அடிப்படையில், எத்தகைய உணவுமுறைப் பழக்கத்தைக் கடைப்பிடித்தால் நோயின்றி வாழலாம் என்பதைத் திட்டமிட்டு அதனை நடைமுறையில் நாமும் பின்பற்றலாம்.

சிறந்த உணவுமுறை எது?

diet2சிறந்த உணவுமுறை எது, என்று வழக்கத்தில் இருக்கும் பல உணவுமுறைகளை நாம் ஒப்பிட்டு அறிய விரும்பினால், நாம் அத்துறையில் ஆய்ந்து அறிந்த அறிஞர்கள் கூறும் தகவல்களைப் பின்பற்றுவதுதான் அறிவுடைய செயல் என்பதைச் சொல்லத் தேவையில்லை. குறிப்பாக அமெரிக்கர்களுக்கு ‘யூஎஸ்நியூஸ்’ (usnews.com) நிறுவனம் இந்த உதவியைச் செய்ய முன் வந்திருக்கிறது. யூஎஸ்நியூஸ் செய்தி நிறுவனம் ‘சிறந்த பல்கலைக்கழகம்’, ‘சிறந்த கல்லூரி’, ‘சிறந்த மருத்துவ வசதி கொண்ட மருத்துவமனை’, ‘வாழ்வதற்குச் சிறந்த ஊர்’, ‘ஓய்வு பெற்ற முதியோர் வாழச் சிறந்த ஊர்’ போன்று பல வகைகளில் சிறந்து விளங்குவனவற்றைத் தரவரிசைப்படுத்தி பயனர்களுக்கு உதவியான தகவல்களை தொடர்ந்து அளித்து வருகின்றது. அவ்வாறு தரவரிசைப்படுத்த என்னென்ன காரணிகள் அடிப்படையாகக் கொள்ளப்பட்டன என்ற அவர்களது ஆய்வுமுறையைப் பற்றிய விரிவான தகவலையும் அவர்கள் கொடுத்து வழங்குவது அத்தகவலைப் பயன்படுத்துவோருக்கு உதவியாகவும் இருந்து வருகிறது.   இதுபோன்ற தரவரிசைப்படுத்தும் முறையில் “ஆரோக்கிய வாழ்விற்குச் சிறந்த உணவுமுறை” (Best Diets Overall) என்று அமெரிக்காவில் பரவலாக அறியப்படும் 38 உணவு முறைகளையும் தரவரிசைப்படுத்தி பட்டியிலிட்டுள்ளது இந்த நிறுவனம் (http://health.usnews.com/best-diet/best-overall-diets).

ஆரோக்கிய வாழ்வுக்கு வழிகாட்டும் வல்லுநர்கள் அடங்கிய ஆய்வுக்குழு ஒன்றின் உதவியுடன் 38 உணவுமுறைகளை ஆய்வுக்குட்படுத்திய பொழுது, ஒரு உணவுமுறை சிறந்த உணவுமுறை (top-rated) என்ற தகுதியைப் பெற அதுஎளிதில் பின்பற்றக் கூடிய உணவுமுறையாகவும் (relatively easy to follow), ஊட்டச்சத்து மிக்க சமச்சீர் உணவாகவும் (nutritious), பாதுகாப்பானதாகவும் (safe), உடலெடையைக் குறைப்பதற்கும் (effective for weight loss), நீரிழிவு/சர்க்கரை நோய் மற்றும் மாரடைப்பு/இதயநோய் ஆகியவற்றைத் தவிர்ப்பதற்கு (protective against diabetes and heart disease) உதவும் உணவுமுறையாக இருப்பது முக்கியமான பண்புகளாக எடுத்துக் கொள்ளப்பட்டன.

diet

இது போன்ற வரையறைகளை நிறைவு செய்ததன் அடிப்படையில் 38 உணவுமுறைகளுக்கும் மதிப்பெண்கள் அளிக்கப்பட்ட பின்னர் அவை தரவரிசைப்படுத்தப்பட்டன. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தப் பரிந்துரைக்கப்படும் ‘டேஷ் டயட்’ (Dietary Approaches to Stop Hypertension – DASH) உணவுமுறை மிகச் சிறந்த உணவு முறையாக முதலிடத்தைப் பிடித்தது. இதன் மற்றொரு சிறப்பு என்னவெனில், ஆய்வுகளின் அடிப்படையில் அரசும் ‘டேஷ் டயட்’ டைப் பரிந்துரைத்துள்ளது. கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 38 உணவுமுறைகளின் தரவரிசைப் பற்றியும் அறியலாம். சில உணவுமுறைகள் ஒரே மதிப்பெண்கள் பெற்றதால் வரிசையில் ஒரே இடத்தையும் பகிர்ந்து கொள்கின்றன. குறிப்பாக இரண்டாம் இடத்தை இரு உணவுமுறைகள் பிடித்துள்ளன (குறிப்பு: பட்டியலில் * நட்சத்திரக் குறியுடன் காட்டப்பட்டுள்ள “17″ உணவுமுறைகள் ‘வணிகமுறையில் சந்தைப்படுத்தப்படும் உணவுமுறைகள்’).

முதல் ஐந்து இடங்களுக்குள் வரும் உணவுமுறைகளை சற்று விரிவாகக் காணலாம் (இவற்றுள், உலகில் பல பகுதிகளில் வசிப்பவர்களுக்குக் கிடைப்பதற்கு வழியில்லை என்ற காரணத்தால், வணிகமுறையில் சந்தைப்படுத்தப்படும் உணவுமுறைகள் பற்றி நாம் இங்கு பொருட்படுத்தத் தேவையில்லை).

(1) டேஷ் டயட்

(2) மைண்ட் டயட்

(3) டி எல் சி டயட்

(4) மெடிட்டரேனியன் டயட்

(5) தி ஃபெர்டிலிட்டி டயட்

(1) டேஷ் டயட்:

diet6இரத்த அழுத்தத்தைக் குறைக்க, அல்லது வருவதைத் தடுக்க உதவும் வகையில் உள்ள உணவுகளை அடிப்படையாகக் கொண்ட உணவுமுறை டேஷ் டயட். இது, உடல் ஆரோக்கியத்திற்குப் பரிந்துரைக்கப்படும் உணவு சரிவிகித உணவாக, தேவையான அளவு மாவுச்சத்து, புரதம், கொழுப்பு ஆகியவை கொண்ட உணவு முறை.

(2) மைண்ட் டயட்:

diet7அறிவியல் அடிப்படையில் சிறந்த உணவுமுறைகளாக நிரூபிக்கப்பட்டுள்ள மேற்கூறிய டேஷ் டயட்டையும், மெடிட்டரேனியன் டயட்டையும் இணைத்து, அவற்றில் மூளைக்கு, சிந்திக்கும் திறனுக்கு உதவும் உணவுவகைகளை அதிகப்படுத்தி உருவாக்கப்பட்டது மைண்ட் டயட். இந்த உணவுமுறையின் அடிப்படை நோக்கம் ‘அல்சைமர்’ (Alzheimer’s disease) போன்ற மறதி நோய்கள் வருவதைத் தடுப்பது.

(3) டி எல் சி டயட்:

diet8இதய ஆரோக்கியத்திற்காக, ‘தி நேஷனல் இன்ஸ்டிடியுட்ஸ் ஆஃப் ஹெல்த்’ என்ற நிறுவனம், இரத்தத்தில் கொலெஸ்டிரால் அளவைக் குறைக்க உதவும் வகையில் தேசிய அளவில் விழிப்புணர்வு பிரசாரத்தில் (the National Institutes of Health’s National Cholesterol Education Program) பயன்படுத்த ‘டி எல் சி டயட்’ (Therapeutic Lifestyle Changes Diet – TLC) என்ற உணவுமுறையை உருவாக்கியது. அமெரிக்காவின் ‘அமெரிக்கன் ஹார்ட் அசோஸியேஷன்’ (American Heart Association) நிறுவனமும் பரிந்துரை செய்துள்ள உணவுமுறை இது. இரத்தத்தில் கொலெஸ்டிரால் அளவைக் குறைப்பது இந்த உணவுமுறையின் நோக்கம். ஆறு வாரங்களில் 8 இல் இருந்து 10 விழுக்காடு வரை இரத்தத்தின் கொலெஸ்டிரால் அளவை இந்த உணவுமுறை குறைக்க உதவுவதாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படை அதிகக் கொழுப்புள்ள உணவை அறவே தவிர்ப்பது. சிவப்பிறைச்சி, முழுமையான பால், எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகள் தவிர்க்கப்பட வேண்டியவை.

(4) மெடிட்டரேனியன் டயட்:

diet10மெடிட்டரேனியன் டயட் என்பது மத்தியதரைக்கடலைச் சுற்றியுள்ள நாடுகளில் வசிக்கும் மக்கள் காலம் காலமாகப் பின்பற்றும் உணவு முறை. இது தாவர உணவு முறையை முதன்மையாகக் கொண்டது. இந்த உணவு முறையில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், அவரை, மொச்சை, பயறு, பருப்பு, கொட்டை வகைகள், மூலிகைகள், மீன், கடல் உணவு மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆகியன நிறைந்திருக்கும். முட்டை, பால், தயிர், பாலாடைக் கட்டி, பறவைக்கறி ஆகியவை மிகக் குறைவாக உட்கொள்ளப்படும். சிவப்பிறைச்சி, அதிகக் கொழுப்பு, உப்பு நிறைந்த உணவுகள் தவிர்க்கப்படும். (மேலும் விரிவான தகவலுக்குப் பார்க்க, சிறகு கட்டுரை: http://siragu.com/?p=20170),

(5) தி ஃபெர்டிலிட்டி டயட்:

diet11குழந்தைப் பேற்றிற்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்ட உணவுமுறை இது. இதனால் கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகப்படுத்தலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. உணவுமுறையை மாற்றி, உடற்பயிற்சியை அதிகரித்து, உடல் எடையைக் குறைப்பதன் மூலம் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும் என்பது இந்த உணவுமுறையின் அடிப்படை. இந்த உணவுமுறை சர்க்கரை நோயையும் கட்டுப்படுத்துவதிலும் முதன்மையாக விளங்குகின்றது.

முதல் ஐந்து இடங்களுக்குள் வந்த மேலே குறிப்பிடப்பட்ட உணவுமுறைகள் யாவற்றிலும் மெடிட்டரேனியன் டயட் உணவுமுறையைத் தவிர மற்றவை இரத்த அழுத்தத்தைக் குறைக்க, மூளையின் செயல்திறனை மேம்படுத்த, இதயத்திற்கு உதவ, மகப்பேற்றுக்கு உதவ என்ற ஒரு குறிப்பிட்ட உடல்நலனுக்கென உருவாக்கப்பட்டவை. ஆனால், அவையாவுமே சமச்சீர் ஊட்டச்சத்து கொண்ட ஆரோக்கிய உணவாக இருப்பதுடன், எடையைக் குறைக்கவும் உதவுவதால் அவை உடல் எடையைக் குறைப்பதற்கும் பரிந்துரைக்கப்படுகின்றன. மெடிட்டரேனியன் டயட் மட்டும் ஆரோக்கிய வாழ்வு முறைக்கு அடிப்படையாக, எடையைக் குறைத்து தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வாழ்க்கை முறையாக அமைந்திருப்பதைக் காணலாம்.

பொதுவாக மிகச் சிறந்த உணவுமுறை என்று தரவரிசைப்படுத்தியபிறகு, மேலும் சில சிறப்புப் பிரிவுகளிலும் உணவுமுறைகள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன அவை:

1. வணிகமுறையில் சந்தைப்படுத்தப்படுவதில் சிறந்த உணவுமுறை (Best Commercial Diet Plans)

2. உடல் எடையைக் குறைக்க உதவும் சிறந்த உணவுமுறை (Best Weight-Loss Diets)

3. மிக விரைவில் உடலெடையைக் குறைக்க உதவும் சிறந்த உணவுமுறை (Best Fast Weight-Loss Diets)

4. சர்க்கரை நோயாளிகளுக்கு உதவும் சிறந்த உணவுமுறை (Best Diabetes Diets)

5. இதயநலத்திற்கு உதவும் சிறந்த உணவுமுறை (Best Heart-Healthy Diets)

6. ஆரோக்கிய உடல் நலத்திற்கான சிறந்த உணவுமுறை (Best Diets for Healthy Eating)

7. தாவர உணவு உண்பவர்களுக்கான சிறந்த உணவுமுறை (Best Plant-Based Diets)

8. எளிதில் பின்பற்றக்கூடிய சிறந்த உணவுமுறை (Easiest Diets to Follow)

என்ற பிரிவுகளில் தனிப்பட்டத் தேவை கொண்டோருக்காகவும், உணவுமுறைகளை தரவரிசைப்படுத்தியுள்ளது ‘யூஎஸ்நியூஸ்’ நிறுவனம்.

வணிகமுறையில் சந்தைப்படுத்தப்படும் உணவுமுறைகள்:

diet13தரவரிசைப்படுத்தபட்ட 38 உணவுமுறைகளில், சற்றொப்ப பாதி உணவுமுறைகள், அதாவது சரியாக 17 உணவுமுறைகள் வணிகமுறையில் சந்தைப்படுத்தப்படும் உணவுமுறைகளாக அமைந்துள்ளது. இது உடல் எடையைக் குறைக்க மக்கள் காட்டும் ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது. வணிகமுறையில் சந்தைப்படுத்தப்படும் உணவுமுறைகளில் கலோரிகளை கணக்கிடுவது, அவர்கள் பரிந்துரைக்கும் உணவை மட்டுமே உண்பது, அல்லது அவர்களே தயாரித்து அளிக்கும் உணவுமுறைகளை மட்டுமே உண்பது, பரிந்துரைக்கப்படும் உடற்பயிற்சி முறைகளை மேற்கொள்வது என்று பலவிதக் கட்டுப்பாடுகள் இருக்கும். அவற்றில் சிலவற்றிற்கு உறுப்பினர் கட்டணமும் இருக்கலாம். அத்துடன், அவர்கள் தயாரித்து விற்கும் உணவுகளை உண்பதும் என்ற கட்டுப்பாடுகளும் இருக்கும் என்பதால் அமெரிக்காவில் வசிப்பவர்கள் தவிர பிற நாடுகளில் வசிப்பவர்கள் விரும்பினாலும் அவர்களுக்குக் கிடைக்க வழியில்லாது இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. மேலும், உணவுத்திட்டம் அமெரிக்க கலாச்சார அடிப்படையில் உள்ள உணவாக இருந்தால் தாவர உணவைக் கடைப்பிடிப்பவர்களுக்கோ, அமெரிக்க வகை உணவுகளும் பானங்களும் கிடைக்க வழியில்லாத நாடுகளில் வசிப்பவர்க்கும் இவை நடைமுறைப்படுத்த உதவாமல் போகலாம். அப்படியே கிடைக்க வழியுள்ளது என்றாலும் உறுப்பினர் கட்டணங்களும், உணவுக்காகச் செலவழிக்க வேண்டிய பணமும் அமெரிக்க டாலரில் கட்டுப்படியாகாமலும் போகலாம். எனவே இத்தகைய கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு நாமும் அவற்றை மேற்கொண்டு ஆராயாமல் ஒதுக்கிவிடலாம்.

உடல் எடையைக் குறைக்க உதவும் உணவுமுறைகள்:

diet15தற்கால வாழ்க்கை முறையினால், பணிபுரியும் இடத்தில் கணினியிலும், அலுவலக மேசையடியிலும் நாள் முழுவதும் வேலை செய்யும் நிலை,

ஓய்வு நேரத்திலோ தொலைக்காட்சி முன்னரும், வீடியோ கேம் விளையாடுவது, இணையத்தில் பொழுதுபோக்குவது என்ற வாழ்க்கைமுறை,

நேரமில்லை என்று காரணம் கூறி எப்பொழுதும் கார், பேருந்து என்று ஊர்திகளைப் பயன்படுத்துவது போன்ற உடற்பயிற்சியற்ற தினசரி நடவடிக்கைகள்,

அதிக கலோரி தரும் கார்போஹைட்ரேட், கொழுப்பு வகைகளை அடிப்படையாகக் கொண்ட உணவுப் பழக்கத்திற்கு அடிமையானதால்,

மிட்டாய், கேக், ஐஸ்கிரீம், எண்ணெயில் பொறித்த ஆயத்த உணவுகள் போன்ற நொறுக்குத் தீனிகளும், சோடா, பெப்சி, கோக் போன்ற சர்க்கரைப் பானங்கள் பருகுவதும்,

சமைக்க நேரமில்லாது போனால் உணவுவிடுதி உணவுகள், பீட்சா, பர்கர் முதலிய விரைவுணவுகளை உண்பது என்ற வாழ்க்கை முறைக்கு மாறிவிட்டவர்களுக்கு உடல் எடை அதிகரிப்பதும் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.

அதனால் பெரும்பாலோரின் கவலை உடல் எடையைக் குறைப்பதாகவே இருக்கிறது.

diet5ஆரோக்கியமான உணவுமுறையையும், வாழ்க்கை முறையையும் கடைப்பிடிப்போம் என்பதைவிட விரைவில் உடல் எடையைக் குறைக்க என்ன வழி, அதற்கேற்ற உணவு என்ன என்பதில்தான் நம்மில் பலருக்கு அக்கறை வருகிறது. வாழ்வில் ஒருமுறை வரும் மறக்கமுடியாத நிகழ்வுகளான பட்டமளிப்பு, திருமணம் போன்றவற்றிற்காகவாவது, நிரந்தரமாக அமைந்துவிடும் படத்தில் சிறப்பாகத் தெரிய வேண்டும் என்ற எண்ணத்தில் அதிவிரைவில் ஓரிரு மாதங்களுக்குள் உடலெடையைக் குறைக்க விரும்பும் இளைஞர்களும் பலர். இந்த உணவுமுறைகள் விரைவில் உடல் எடையைக் குறைக்க உதவினாலும், தொடர்ந்து கடைப்பிடிக்கத் தவறினால் மீண்டும் உடல் எடை முன்னர் இருந்ததைவிடவும் அதிகரித்துவிடுவதைப் பலர் எதிர்கொண்டுள்ளனர். தொடர்ந்து கடைப்பிடிக்க முடியாமல் போவதன் காரணமும் எளிது. இந்த உணவுமுறைகள் குறைந்த கொழுப்பு, குறைந்த கார்போஹைட்ரேட், அதிகப் புரதம் என்ற ஏதோ ஒரு அடிப்படையை மையப்படுத்தி உருவாக்கப்படுவதால், தினம் தினம் ஒரே வகையாகச் சுவையற்ற உணவை உண்ணும் முறையில் அமைந்துவிடுகிறது. அதனால் தொடர்ந்து கடைப்பிடிக்கவும் இயலாது போகிறது.

உடல்நலத்திற்குத் தீங்கு நேராத வண்ணம், சீரான உடல் எடையை நிரந்தரமாகப் பெற தினசரி வாழ்க்கையில் அதற்கேற்ற பழக்கவழக்கங்களையும், உணவுமுறைகளையும் கடைப்பிடிப்பதே சிறந்தது. இக்கருத்தை உடலெடையைக் குறைக்கு உதவும் உணவுமுறைகளைத் தரவரிசைப்படுத்திய இருவேறு பகுதிகளிலும் ‘யூஎஸ்நியூஸ்’ நிறுவனம் வலியுறுத்துவதையும், பயனர்களின் கவனத்திற்கு அதைக் கொண்டு செல்வதையும் கீழ்காணும் வகையில் செய்துள்ளது.

While these diets enable quick weight loss for those with a short-term goal – there’s a strong chance you’ll drop significant weight within the first 12 months – keep in mind that this is markedly different from long-term weight loss, which is more important for your health. (http://health.usnews.com/best-diet/best-fast-weight-loss-diets & http://health.usnews.com/best-diet/best-weight-loss-diets)

விரைவில், அல்லது அதிவிரைவில் உடல் எடையைக் குறைக்க திட்டமிடப்பட்ட உணவுவகைகளில் பெரும்பான்மையானவை வணிகமுறையில் சந்தைப்படுத்தப்படும் உணவுமுறைகள்தான். எனவே நீடித்த வகையில் வாழ்க்கை முறையையே ஆரோக்கியமாக மாற்றியமைக்க உதவும் உணவுமுறைகளில் மட்டும் நாம் கவனம் செலுத்துவதே அறிவுடைமை.

‘யூஎஸ்நியூஸ்’ தரவரிசைப்பட்டியலில் இப்பொழுது பரவலாக பேசப்படும், கற்கால மனிதர்களின் உணவுமுறையை அடிப்படையாகக் கொண்டது எனக் கூறப்படும் ‘பேலியோ உணவுமுறை’, ‘யூஎஸ்நியூஸ்’ தரவரிசைப் பட்டியலில்- எளிதில் பின்பற்றக் கூடிய உணவுமுறை, ஆரோக்கியமான ஊட்டச்சத்து அடிப்படை, சர்க்கரை நோய் பாதிப்பு குறைக்க, இதயநோய் பாதிப்பு தடுக்க, ஆக மொத்தம் சிறந்த உணவுமுறை என்ற பலவகை வரிசைப்படுத்தியதிலும் பட்டியலின் இறுதி இடங்களில் மட்டுமே இடம்பிடித்துள்ளது. குறிப்பாக உடல் எடையைக் குறைக்க உதவுவதில் இறுதியில் இருப்பது பேலியோ உணவுமுறைதான் (http://health.usnews.com/best-diet/paleo-diet).

உணவு முறைகளை,மெடிட்டரேனியன் டயட் உணவு போன்று அமைந்துள்ள சமச்சீர் உணவுமுறை (Balanced), அதிகப் புரதம் (High-Protein), குறைந்த மாவுச்சத்து (Low-Calorie Carbohydrate), குறைந்த கொழுப்பு (Low- Fat) வெவ்வேறு அடிப்படைப் பண்புகளைக் கொண்டவாறு உருவாக்கப்பட்ட எடைக்குறைத்தலுக்கான பலவகை உணவுமுறையில், எந்த உணவுமுறை சிறந்தது, எது உடல் ஆரோக்கியத்திற்கு உதவுவது, எது கடைப்பிடிக்க எளிது என்று பற்பல வகைகளிலும் ஒப்பிட்டு மேலும் ஆய்வுகள் பல நடத்தப்பட்டும் வருகின்றன.

Reference:

U.S. News Best Diet Rankings – http://health.usnews.com/best-diet


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சிறந்த உணவுமுறை எது?”

அதிகம் படித்தது