சிறுகதை மன்னன் எஸ். எஸ். தென்னரசு
முனைவர் மு.பழனியப்பன்Apr 28, 2018
இருபதாம் நூற்றாண்டின் இலக்கியப் பங்களிப்பிற்குத் திராவிட இயக்கம் சார்ந்த இலக்கிய வாணர்கள் குறிக்கத்தக்க பணிகளை ஆற்றியுள்ளனர். தந்தைப் பெரியார், அறிஞர் அண்ணா போன்றவர்களை முன்னவர்களாகக் கொண்டு தமிழ் இனத்தின் முன்னேற்றத்திற்கான ஆக்கப்பணிகளை இதழ்கள் வாயிலாகவும், படைப்புகள் வாயிலாகவும், ஆய்வுகள் வாயிலாகவும் திராவிட இலக்கிய வாணர்கள் திறம்பட செய்தனர். இவர்களுக்கு குறிப்பிடத்தக்க படைப்பாளர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சார்ந்த எஸ். எஸ். தென்னரசு ஆவார். இவரின் வாழ்வினை எடுத்துரைத்து இவர் படைத்த சேதுநாட்டுச் செல்லக்கிளி என்ற நாவலை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
எஸ். எஸ். தென்னரசு பிறந்த ஊர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஆகும். இவர் திராவிட முன்னேற்ற கழகத்தின் தொண்டராக விளங்கியவர். அறிஞர் அண்ணாவின் அரவணைப்பினைப் பெற்றவர். கலைஞர் மு. கருணாநிதியுடன் இவர் இலக்கியத் தோழமை பெற்றிருந்தார். சிறுகதை மன்னன் என்று போற்றப்பெறும் அளவிற்கு சிறுகதைப் படைப்புகளை அளித்தவர்.
திராவிட முன்னேற்ற கழகத்தின் திருப்பத்தூர் கிளைச் செயலராக ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்தொன்பதில் இணைந்தவர். தொடர்ந்து கட்சிப் பணியாற்றியவர். வட்டச் செயலர், மாவட்டச் செயலர் போன்ற பொறுப்புகளை வகித்தவர். அமைப்புச் செயலாளர் என்ற நிலை வரை கட்சிப் பணி ஆற்றியவர்.
ஒருங்கிணைந்த் இராமநாதபுர மாவட்டத்தின் செயலராக இவர் பதினைந்து ஆண்டுகள் பணிபுரிந்தவர். கட்சியின் வழிகாட்டலின்படி பல போராட்டங்களில் கலந்து கொண்டவர். போராட்டங்கள் காரணமாக சிறைக்கும் சென்றவர். இருபத்தாறு முறை இவர் போராட்டங்கள் கருதி சிறைக்குச் சென்றுள்ளார். இவர் மிசா சட்டத்தின் பிடியில் சிக்கிச் சிறைவாசம் பெற்றவர். இவர் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்குகொண்டு ஒருவருடம் கடுங்காவல் தண்டனை பெற்றவர்.
அரசியல் பதவிகள்:
இவர் தமிழகத்தின் சட்டப் பேரவை உறுப்பினராக ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்தொன்பதாம் ஆண்டு தேர்வு பெற்றார். திருப்பத்தூர் தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினராக இவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பெற்றார். அது மட்டுமின்றி இவர் தமிழகச் சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் விளங்கினார்.
விருது
இவர் ஆயிரத்துத் தொள்ளாயிரமாவது ஆண்டில் இவர் அண்ணா விருது பெற்றார். இவர் தமிழக அரசின் கலைமாமணி விருதும் பெற்றவர் ஆவார்.
படைப்புகள்
இவர் படைத்த படைப்புகளில் குறிக்கத்தக்கன பின்வருமாறு.
- கோபுர கலசம்
- சந்தனத்தேவன்
- செம்மாதுளை
- சேது நாட்டு செல்லக்கிளி
- துங்கபத்திரை
- தைமூரின் காதலி
- அவள் ஒரு கர்நாடகம்
- செம்மாதுளை
- பாடகி
இவரின் படைப்புகள் நாட்டுடமை ஆக்கப்பெற்றுள்ளன. இவர் திராவிட இயக்கம் சார்ந்த படைப்பாளர்களில் குறிக்கத்தக்கவர் ஆவார். இவரின் படைப்பாற்றலைப் பின்வருமாறு வியக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.
“திராவிட எழுத்தாளர்கள் என்று சொல்லும்போது இன்று திராவிட இயக்கத்தின் அனுதாபிகளைக்கூட சேர்த்துவிடும் ஒரு போக்கு இருக்கிறது. ஆனால் திராவிட இயக்க எழுத்தாளர் என்று வரையறுக்கும்போது திராவிட இயக்கக் கொள்கைகளை முற்றிலும் ஏற்றுக் கொண்டு, அவர்களின் மொழி மற்றும் அரசியலை தங்கள் அடையாளமாக கொண்டு, அவர்களின் இதழ்களில் எழுதிய எழுத்தாளர்களைக் குறிப்பிட வேண்டும். அவ்வகையில் எஸ்.எஸ்.தென்னரசு தான் அவர்களின் முதன்மையான படைப்பாளி என்று எனக்குத் தோன்றுகிறது. அவருடைய சில சிறுகதைகளும் கோபுர கலசம் என்ற நாவலும் முக்கியமானவை” என்ற கருத்து இங்கு உற்று நோக்கத்தக்கது.
இவ்வாறு எஸ். எஸ். தென்னரசு மிகச் சிறந்த திராவிட இலக்கிய ஆளுமையாக விளங்கியுள்ளார். இவரின் நாவல்களில் ஒன்று சேது நாட்டுச் செல்லக்கிளி என்பதாகும். அதனைப் பற்றிய அறிமுகம் பின்வருமாறு.
சேதுநாட்டுச் செல்லக்கிளி
சேதுநாட்டுச் செல்லக்கிளி என்ற நாவல் செல்லக்கிளி என்ற பெண்ணை மையமாக வைத்து எழுதப்பெற்ற கதையாகும். இராமநாதபுர மாவட்டத்தின் பின்னணியில் இந்நாவல் எழுதப்பெற்றுள்ளது. இந்நாவல் ஆனந்தவிகடன் இதழில் ஆயிரத்துத்தொள்ளாயிரத்துத் தொன்னூறாம் ஆண்டில் தொடராக வெளிவந்துள்ளது. இந்நாவலின் கதைக்களம் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறார் எஸ். எஸ். தென்னரசு.
“பரதம் பயின்ற ஒரு பாவையின் வாழ்க்கைப் பயணமாக இந்தக் கதை. ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நயினார் கோயில் என்று வழங்கப்படும் சிற்றூரைச் சூழலாகக் கொண்டது” என்று இந்நாவல் நிகழ்ந்த களம் பற்றி எடுத்துரைக்கிறார் எஸ். எஸ். தென்னரசு. நயினார் கோயில் உள்ள ஊர் மருதூர் என்று நாவலில் வழங்கப்படுகிறது. தற்போது இது நயினார் கோயில் என்று அழைக்கப்பெற்றாலும் சேதுநாட்டு மருதூர் என்பதே இதன் பெயராகும். இவ்வகையில் மருதூர் என்றே இவ்வூரைக் குறிப்பிடுகிறார் எஸ். எஸ். தென்னரசு.
இக்கோயில் இராமநாதபுர சமஸ்தானத்திற்கு உட்பட்ட கோயிலாக விளங்கிவருகிறது. இந்நாவல் இராமநாத புர சமஸ்தானத்தைக் கிழவன் சேதுபதி ஆண்ட காலப்பகுதியைப் பின்புலமாக வைத்து எழுதப்பெற்றுள்ளது. “கிழவன் சேதுபதி (1674-1710) ராமநாதபுரம் மறவர் சீமையை ஆண்ட காலத்தில் நடந்த கதை இது. ஆனால் இது ராஜகுடும்பத்தின் கதையல்ல. சிலப்பதிகாரத்தைப் போல் மன்னர் காலத்தில் நடந்த ஒரு குடும்பச் சித்திரம்” என்று இதன் ஆசிரியர் குறிப்பிடுவதன் வாயிலாக இந்நாவலின் காலப் பின்னணியை அறிந்துகொள்ள முடிகின்றது.
நாவலின் நிறைவுப்பகுதியில் “மாதவிக்கு இணையாக வாழ்ந்துகாட்டிய செல்லக்கிளியை இன்றும் அந்தப் பகுதி மக்கள் மறக்கவில்லை” என்று குறிப்பிடுவதன் வாயிலாக சிலப்பதிகாரச் சாயல் இந்நாவலில் இடம் பெற்றுள்ளது என்பதை உணரமுடிகின்றது. திராவிட இலக்கியவாணர்கள் சிலப்பதிகாரத்தைத் தன்னிகரற்ற இலக்கியமாக முன்மொழிந்த நிலையில் இவர் அதனைப் பின்பற்றியிருப்பது குறிக்கத்தக்கது.
நாவலின் இயல்பினைப் பின்வருமாறு சுட்டுகிறார் இதன் ஆசிரியர். “கதையில் வரும் சம்பவங்கள் பெருமளவு உண்மையாக இருந்தாலும் பாத்திரங்களின் பெயர்களில் பெரும்பகுதி கற்பனைதான். அவை யாரையும் குறிப்பிடுவன அல்ல. எலும்புக்கூடுபோல எனக்குக் கிடைத்த செவிவழிக் கதைக்குச் சதையும் உயிரும் கொடுத்திருக்கிறேன்” என்ற ஆசிரியரின் கூற்றுப்படி செவிவழிக் கதை நாவலாக மலர்ந்துள்ளது என்பதை உணரமுடிகின்றது.
இந்நாவலின் உண்மைத் தன்மை பற்றி இதன் படைப்பாளரே பின்வருமாறு அறிவிக்கிறார். “நமது விருப்பப்படி கற்பித்துக் கொள்ளும் நிகழ்ச்சிகளைவிட உண்மைச் சம்பவங்கள் மிகவும் வியப்புக்குறியனவாகவும் சுவை மிகுந்தவையாகவும் மைந்து விடுகின்றன. அப்படிப் பல சம்பவங்கள் இந்தக் கதையில் வருகின்றன” என்ற கருத்து இந்நாவல் உண்மையுடன் இணைந்து செல்லும் இயல்பினது என்பதைக் காட்டுகிறது.
நாவலின் நிறைவுப் பகுதியில் சில ஊர்ப்பெயர்களை ஆசிரியர் எடுத்துக்காட்டி, அவற்றின் பெயர்கள் இந்நாவலில் இடம்பெறும் பாத்திரங்களால் எழுந்தவை என்பதையும் காட்டி நிற்கிறார். இதன் காரணமாக உண்மைக்கு மிக நெருக்கமாக இந்நாவல் எழுதப்பெற்றுள்ளது என்பது தெரியவருகிறது.
“மூவரை வென்றான் என்ற பெயரால் எப்போதே அமைந்த ஊர், இன்றும் பாணடிய நாட்டின் ஒரு கிராமத்திற்குச் சூட்டப்பட்டிருக்கிறது. அதைப் போல தியாக மறவன் மும்முடி தரித்தான் என்கிற ஊரும் இன்றும் மும்முடிச் சாத்தான் என்று திரிந்து அழைக்கப்பெற்று வருகிறது” என்ற குறிப்புகளின்படி இந்நாவல் வரலாற்றுப் பின்னணியுடன் உண்மை கலந்து எழுதப்பெற்றது என்பதை உணரமுடிகின்றது.
சேதுநாட்டுச் செல்லக்கிளி என்ற நாவல் மொத்தம் இருபத்தேழு சிறுபகுதிகளை உடையதாக விளங்குகிறது. இவை எண்ணிடப்பெற்றுக் காட்டப்பெற்றுள்ளன. இந்நாவல் நூற்று அறுபது பக்கங்களை உடையதாக உள்ளது. இந்நாவலில் அதிக அளவில் உவமைகளைப் பயன்படுத்தியுள்ளார் எஸ். எஸ். தென்னரசு.
தொகுப்புரை
சேதுநாட்டுச் செல்லக்ககிளி என்ற நாவலின் ஆசிரியர் எஸ்.எஸ். தென்னரசு ஆவார். இவர் திராவிடப் பாரம்பரியத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். சிறுகதை மன்னன் என்றும் இவர் புகழப்பெறுகிறார். இவர் அண்ணாவிருது, கலைமாமணி விருது ஆகியன பெற்றுள்ளார். இவரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பெறும் அளவிற்குத் தகுதி பெற்று விளங்குகின்றன.
சேதுநாட்டுச் செல்லக்கிளி என்ற இந்த நாவல் வரலாற்றுப் பின்புலம் வாய்ந்தது. கிழவன் சேதுபதி மதுரை அரசிற்கு உதவிய ஒரு வரலாற்றுக் கருத்தை அடிப்படையாக வைத்து இந்நாவல் பின்னப்பெற்றுள்ளது.
சான்றுகள்
[1] http://www.jeyamohan.in/90998#.WUFXbuuGPIU
எஸ். எஸ். தென்னரசு, சேதுநாட்டுச் செல்லக்கிளி, முன்னுரை ப.3
எஸ். எஸ். தென்னரசு, சேதுநாட்டுச் செல்லக்கிளி, ப.3
எஸ். எஸ். தென்னரசு, சேதுநாட்டுச் செல்லக்கிளி, ப.160
எஸ். எஸ். தென்னரசு, சேதுநாட்டுச் செல்லக்கிளி, ப.3
எஸ். எஸ். தென்னரசு, சேதுநாட்டுச் செல்லக்கிளி, ப.3
எஸ். எஸ். தென்னரசு, சேதுநாட்டுச் செல்லக்கிளி, ப.160
முனைவர் மு.பழனியப்பன்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “சிறுகதை மன்னன் எஸ். எஸ். தென்னரசு”