சனவரி 13 , 2018 இதழ்
தமிழ் வார இதழ்

சிறுவர் வாய்மொழிப் பாடல்களின் கட்டமைப்பும் வகைகளும் – பகுதி – 2

முனைவர் மு.பழனியப்பன்

Nov 26, 2016

சிறுவர் பாடல்கள் பொது வரையறை

siragu-siruvar-vaaimozhi2

குழந்தைகளுக்காக எழுதப்பெறும் பாடல்கள், குழந்தைகள் தமக்குத் தாமே எழுதிக்கொள்ளும் பாடல்கள் ஆகிய இரு நிலைகளில் சிறுவர் பாடல்கள் அடிப்படையில் அமைகின்றன. சிறுவர்களுக்காக எழுதப்படும் மூத்தோரின் பாடல்களின் தன்மையைப் பின்வரும் கருத்துகள் எடுத்துக்காட்டுகின்றன.

சிறுவர் இலக்கியம் என்ற தொடரானது ‘Children literature‘ என்ற சொல்லின் மொழிப் பெயர்ப்பாக அமைகிறது. ‘Child’ என்பது சின்னஞ்சிறு குழந்தையைக் குறிப்பதால், குழந்தை எனும் சொல்லுக்குப் பதிலாக, சிறுவர் என்னும் சொல்லைக் கொண்டு இவ்வியலக்கியத்தைச் சிறுவர் இலக்கியம் என்று அழைத்தனர். சிறுமியர் என்ற சொல்லையும் உள்ளடக்கியதாகச் சிறுவர் இலக்கியம் கருதப்பட்டாலும் இது ஆண்பாலையே முதன்மைப்படுத்துவதாக அமைவதால் சிறுவர் இலக்கியம் எனும் தொடரை விடுத்துக் குழந்தை இலக்கியம் என்று குறிப்பதும் உண்டுஎன்று சிறுவர் இலக்கியம் என்பதற்கான பெயர்ப் பொருத்தத்தை ஆராய்கின்றனர் அறிஞர்கள்.

3 வயது முதல் சுமார் 16 வயது வரையிலான குழந்தைகளுக்காகப் படைக்கப்பெறுவது சிறுவர் இலக்கியம். அதாவது பள்ளிக்கல்வி முடியும் வரையிலான பருவத்தினருக்குரியது எனலாம்என்று சிறுவர் இலக்கியத்திற்கான வயது வரையை உறுதி செய்கின்றனர் ஆய்வாளர்கள்.

இக்கருத்துகளின் வழியாக சிறுவர் இலக்கியம் என்பது பள்ளிப் படிப்பை முடிக்கும் எல்லை வரையான காலத்தில் உள்ள சிறுவர் சிறுமியருக்காக எழுதப்பெறும் இலக்கியம் என்பதும், அவ்விலக்கியம் சிறுவர் சிறுமியருக்கு நன்னோக்கத்தை அளிப்பது என்பதும் தெரியவருகின்றன.

சிறுவர் இலக்கியம் என்பது குழந்தைகள் புரிந்து கொள்ளும் வகையில் அவர்களது மனநிலைக்கும் வயதுக்கும் பொருந்தும் வகையில் கவிதை, கட்டுரை, நாடகம் முதலியவற்றைப் படைத்துத் தருவது. எளிமை, இனிமை, தெளிவு ஆகிய மூன்றும் கலந்த நடையில் அது அமையவேண்டும். சொற்களில் எளிமை, வாக்கியங்களில் இனிமை, பொருள் விளக்கத்தில் குழப்பம் ஏற்படுத்தாத தெளிவு இருக்க வேண்டும். இந்த மூன்றைக் காட்டிலும் மிக மிக இன்றியமையாத ஒன்று, குழந்தை மனதை மாசுறுத்தும் எதுவும் எள்ளளவும் இல்லாமல் இருத்தலாம்என்பது குழந்தை இலக்கியப் படைப்பாளி டாக்டர் பூவண்ணன் தரும் வரையறையாகும்என்ற கருத்து சிறுவர் இலக்கியத்தை உயர்ந்த நோக்கத்தை அறிவிப்பதாகும்.

இக்கருத்தினால் குழந்தை இலக்கியம் படைக்கின்றபோது குழந்தை மனதை நேர்வழியில் செலுத்தும் கருத்துகளை மட்டுமே எடுத்துரைக்க வேண்டும் என்பது மிக நுண்ணிய வேறுபாடாக மற்ற இலக்கியங்களுக்கு இல்லாததாக இருப்பது அறியத்தக்கது.

சிறுவர் இலக்கியத்தின் தன்மைகளைப் பின்வரும் கருத்துகள் எடுத்துக்காட்டுகின்றன.

குழந்தைப் பாடல்களின் பாடற்பொருள் தெரிந்த பொருளாக இருக்கும். எளிய நடையில் மன நிலைக்கும், வயதிற்கேற்பவும் அமையும். சந்த நயத்தோடு குழந்தைகள் தாமே பாடி மகிழ்வனவாக இருக்கும். விரும்பும் பொருட்களை, காட்சிகளை, விளையாட்டைப் பற்றி இருப்பதோடு அறிவுக்கு ஏற்ற சொற்களையும், கருத்துக்களையும் சந்தங்களையும் பெற்றிருக்கும் என்பார் பூவண்ணன்.

எளிய சொற்கள், இனிய சந்தம், தெளிவான பொருள், நல்ல கற்பனை, சிறந்த உணர்ச்சி, உயர்ந்த விளக்கம் இவற்றைக் குழந்தைப் பாடல்களின் இலக்கணம் எனலாம்என்கிறார் ஸ்ரீகுமார்.

இக்கருத்துகள் வழியாகச் சிறுவர் இலக்கியம் என்பதன் பொதுத்தன்மைகள், வடிவ வரையறைகள் போன்றனவற்றை அறிந்து கொள்ள முடிகின்றது.

சிறுவர் இலக்கியத்தின் தேவை என்பது பற்றிய பூவண்ணன் பின்வரும் கருத்தும் சிறுவர் இலக்கியத்தின் தன்மையைச் சுட்டுவதாக உள்ளது.

பெரிய பெரிய இலக்கியங்களை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு முதலியவற்றைப் பிள்ளைகள் பெரியவரான பிறகு கற்கலாம். தொட்டில் குழந்தையாய் இருக்கும் காலம் தொடங்கி தொண்டு கிழவரான பிறகும் படிக்கலாம். இவற்றைப் படிக்கும் உணர்வு தொடர வேண்டுமானால் தம் வயதிற்கேற்ற நல்ல நல்ல நூல்களைப் பிள்ளைப் பருவத்திலேயே தொடங்கவேண்டும். சிறுவர் படிக்கத் தொடங்கும் முன்பே, படங்கள் நிறைந்த பாலர் நூல்களைப் பார்க்கவும், பிறகு படிக்கவும் வேண்டும்? அதற்காகவே சிறுவர் இலக்கியத்தை ஒவ்வொரு பொற்றோரும் அறிய வேண்டும், ஆதரிக்க வேண்டும். ஏன் ஆக்கவேண்டும்! தாமே உருவாக்கவும் வேண்டும் என்ற இக்கருத்துச் சிறுவர் இலக்கியத்தின் தன்மையையும், அதன் தேவையையும் அதனைப் பெருக்க பெற்றோர்கள் எடுக்க வேண்டிய முயற்சியையும் எடுத்துரைப்பதாக உள்ளது.

சிறுவர் இலக்கியத் தொன்மை

siragu-siruvar-vaaimozhi5

சிறுவர் இலக்கியத் தொன்மை நலம் வாய்ந்தது. தொல்காப்பியர் காலந்தொட்டே இது வளரத் தொடங்கிவிட்டது. பிசி, பொருள் மரபில்லா பொய்ம்மொழி ஆகிய இரண்டும் தொல்காப்பியம் காட்டும் குழந்தை இலக்கிய வகையாகும். பிசி என்பது விடுகதையே, பொருள் மரபில்லா பொய்ம்மொழி என்பது கதையேஎன்று இரண்டிற்கும் விளக்கம் தருகிறார் பூவண்ணன்.

தொல்காப்பியத்தில் விதைக்கப்பட்ட சிறுவர் பாடல்களின் விதை என்பது மெல்ல சங்க இலக்கியக் காலத்தில் வளர்ந்தது. பாரி மகளிர் பாடிய பாடல்கள் தந்தையைப் பற்றிய மகள்களின் மதிப்பீடாக விளங்குகின்றன. ‘குறு குறு நடந்து’என்று தொடங்கும் பாண்டியன் அறிவுடைநம்பியின் பாடல் குழந்தை பற்றிய மன்னனால் படைக்கப்பெற்ற சிறுவர் பாடலாகின்றது.

தொடர்ந்து ஒளவையார், பாரதியார் போன்றோர் சிறுவர்க்கான பாடல்களைப் படைத்தளித்தார்கள் என்றாலும் சிறுவர்களால் சிறுவர்க்கு அளிக்கப்பெற்ற இலக்கியம் என்பது இல்லாத நிலை என்றே கொள்ளலாம். இருப்பினும் நாட்டுப்புற வழக்கில் வழங்கும் சிறுவர் பாடல்களே உண்மையான சிறுவர் இலக்கியமாகும். சிறுவர்கள் தம் மன எழுச்சிக்கு ஏற்பப் பாடிய பாடல்கள் இவையாகும். இப்பாடல்கள் யாரால் எழுதப்பெற்றன என்பது அறியப்படாமலே சிறுவர்பாடல்களாக விளங்கி வருகின்றன.

தமிழகத்தின் பல பகுதிகளில் இப்பாடல்கள் கிடைத்து வருகின்றன. இவற்றைத் தமிழகம் அளவில் தொகுக்கும் முயற்சி நடைபெற்றால் அது மிகப்பெரிய நாட்டுப்புற சிறுவர் இலக்கியக் களஞ்சியமாக உருவெடுக்கும். அம்முயற்சியின் ஒரு பகுதியாக இவ்வாய்வேடும் அமைகின்றது.

தேவகோட்டை சார்ந்த பகுதிகளில் சிறுவர் பாடல்கள்

தேவகோட்டை வட்டாரம் என்பது சிவகங்கை மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். சிவகங்கை மாவட்டம் என்பது பழைய இராமநாதபுர மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்தைந்தாம் ஆண்டில் பழைய இராமநாதபுர மாவட்டத்தை சிவகங்கை மாவட்டம், விருதுநகர் மாவட்டம், இராமநாதபுர மாவட்டம் என மூன்றாகப் பிரிக்கப்பட்டது. இம்மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் மாவட்டம் எனவும், தேவர் திருமகன் மாவட்டம் எனவும் வழங்கப்பெற்றுத் தற்போது சிவகங்கை மாவட்டம் என அழைக்கப்பெற்று வருகின்றது.

இம்மாவட்டம் சிவகங்கை, தேவகோட்டை என்ற இரு வருவாய்க் கோட்டங்களைக் கொண்டுள்ளது.

 1. சிவகங்கை
 2. இளையான்குடி
 3. மானாமதுரை
 4. திருப்பத்தூர்
 5. காரைக்குடி
 6. தேவகோட்டை
 7. காளையார்கோயில்

ஆகிய வட்டங்களைக் கொண்டுள்ளது. இதில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றியங்கள் பன்னிரண்டு ஆகும். அவை,

 1. சிவகங்கை
 2. காளையார்கோயில்
 3. இளையான்குடி
 4. மானாமதுரை
 5. திருப்புவனம்
 6. எஸ். புதூர்
 7. சிங்கம்புணரி
 8. திருப்பத்தூர்
 9. கல்லல்
 10. சாக்கோட்டை
 11. தேவகோட்டை
 12. கண்ணங்குடி

ஆகியனவாகும்.

இம்மாவட்டத்தில் மூன்று நகராட்சிகள் உள்ளன. அவை பின்வருமாறு.

1. காரைக்குடி

2. சிவகங்கை நகராட்சி,

3. தேவகோட்டை நகராட்சி

ஆகியன அவையாகும்.

இவற்றுள் தேவகோட்டை வட்டாரம் தொன்னூற்றோரு சிற்றூர்களை அடக்கியுள்ளது. அவை பின்வருமாறு

 1. அனுமந்தக்குடி
 1. ஆந்தகுடி
 2. ஆறாவயல்
 3. இடைக்குடி
 4. இரவுச்சேரி
 5. இரும்புவயல்
 6. இருவனிவயல்
 7. இலக்கணிவயல்
 8. ஈகரை கோட்டைவயல்
 9. உஞ்சனை
 10. உடையாச்சி
 11. உருவாட்டி
 12. எழுவன்கோட்டை
 13. என் மணக்குடி
 14. ஒரசூர்
 15. ஒருமணியாந்தல்
 16. கடகம்பட்டி
 17. கண்டதேவி
 18. கண்டியூர்
 19. கண்ணன் கோட்டை
 20. கப்பலூர்
 21. கரை
 22. கலபன்குடி
 23. கள்ளன்குடி
 24. களத்தூர்
 25. கற்களத்தூர்
 26. கன்னங்குடி
 27. கிழமலை
 28. குமனி
 29. குரத்தனக்கோட்டை
 30. குரவராஜபாளையம்
 31. கொடிக்குளம்
 32. கோடகுடி
 33. கோடிக் கோட்டை
 34. சக்கந்தி
 35. சடைய மங்கலம்
 36. சத்திக் கோட்டை
 37. சருவனந்தல்
 38. சித்தனூர்
 39. சிறுகனூர்
 40. சிறுநல்லூர்
 41. சிறுமருதூர்
 42. சிறுவாத்தி
 43. சீரணி
 44. செலுகை
 45. செலுவத்தி
 46. தங்கன்குடி
 47. தச்சவயல்
 48. தளக்காவயல்
 49. தளையூர்
 50. தாளனேந்தல்
 51. திடக்கோட்டை
 52. திரளப்பூர்
 53. திருப்பாக்கோட்டை
 54. திருமணவயல்
 55. திருவேகம்பத்து
 56. தென்னீர் வயல்
 57. நல்லன்குடி
 58. நாக மங்களம்
 59. நாகமடை
 60. நாச்சங்குளம்
 61. நாரண மங்கலம்
 62. நீடோடை
 63. நெடுங்குளம்
 64. பூலாங்குடி
 65. பட்டூரணி
 66. பறையநந்தல்
 67. பனங்குளம்
 68. பாகையானி பிரண்டனி
 69. பிரட்டுக்கோட்டை
 70. புசல்குடி
 71. புதுக்கோட்டை
 72. பொற்குடி
 73. பொன்னைக் கோட்டை
 74. மஞ்ஞனி
 75. மதகோட்டை
 76. மறனி
 77. சருகனி
 78. மாவிடுதிக்கோட்டை
 79. மின்னாத்தன்குடி
 80. முப்பையூர்
 81. மேலசெம்பான்மாரி
 82. வசந்தானி
 83. வதிநன்னியூர்
 84. வாகைக்குடி
 85. விரிசூர்
 86. விளிமார்
 87. விஜயபுரம்
 88. வெங்களுர்
 89. வெள்ளிக்கட்டி
 90. வேட்டை ஆலங்குளம்

இந்தச் சிற்றூர்களில் குறிக்கத்தக்க ஒன்பது ஊர்களில் இருந்து திரட்டப்பெற்ற சிறுவர் பாடல்கள் இங்கு ஆய்விற்குக் கொள்ளப்படுகின்றன.

சிறுவர் பாடல்களின் கட்டமைப்பு

சிறுவர் நாட்டுப்புறப் பாடல்களுக்கென்று தனித்த கட்டமைப்புகள் என்று சில முக்கிய அமைப்புகளைக் குறிக்க இயலும். அவை பற்றிய அறிஞர்களின் கருத்துகள் பின்வருமாறு.

siragu-siruvar-vaaimozhi3

குழந்தைப் பாடல்களுக்கென்று சில அமைப்புகள் உள. அவை, உருவினில் ஒரு தாலாட்டையும், ஒப்பாரியையும், தெம்மாங்கையும்விட வேறுபட்டுத் தோன்றுகின்றன. பாடலைப் பார்த்ததும்- படித்ததும்- இது குழந்தைப் பாடல்களே என்று சொல்லும் வகையில் இனிய – எளிய அமைப்பினை அல்லது யாப்பினைக் கொண்டு விளங்குகின்றன. இக்குழந்தைப் பாடல்கள் கல்லில் வார்த்த அடைகள் அல்ல. ஒரே அளவாக ஒரே நிறமாக இருக்க வேண்டும் என்று அடம் பிடிக்க. வானில் பூத்த மலர்கள். காற்றில் மிதக்கும் கனிகள். இவை செய்யப்பட்டவை அல்ல. சிதறப்பட்டவைஎன்று இவற்றின் அமைப்பு பற்றிக் கருத்துரைக்கிறார் சண்முகசுந்தரம்.

குழந்தைப் பாடல்களுக்குப் பதவுரை, நயவுரை என்று சொல்லிக் கொண்டிருக்க முடியாது. பெரும்பாலான குழந்தைப் பாடல்களில் பொருளுள்ள பாடல்களைக் காணமுடியாது. ஓசை நிறைவுள்ள பாடல்களே அதிகம் காணப்படும். இப்பாடல்களை எளிதாகப் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் எளிமையும் இனிமையும் இருக்கும். வட்டார வழக்குச் சொற்களையும் ஆங்கிலச் சொற்களையும் அதிகம் காணலாம்என்ற சக்திவேலின் கருத்து குறிக்கத்தக்கது.

குழந்தைப் பாடல்களின் பொருளமைவு என்பது முக்கியமானது. அதன் பொருளமைவு பற்றியும் அறிஞர்கள் கருத்துரைத்துள்ளனர். இந்தப் பொருளைத் தான் பாடவேண்டும் என்ற கட்டாய நிலை குழந்தைப் பாடல்களில் இல்லை. அவர்கள் எதையெல்லாம் காண்கிறார்களோ, கேட்கின்றார்களோ, உணர்கிறார்களோ அதையெல்லாம் பாடற் பொருளாக ஆக்கிவிடுகின்றனர். இயற்கைப் பொருட்களும், செயற்கைப் பொருள்களும், விளையாட்டும், வேடிக்கையும் அவர்களின் சிறப்பான பாடற் பொருள்களாகின்றனஎன்று குழந்தைப்பாடல்களின் பொருளமைதி குறித்துக் கருத்துரைக்கிறார் சண்முக சுந்தரம்.

இக்கருத்துகள் வழியாகச் சிறுவர் பாடல்கள் என்பதன் தன்மைகளாகப் பின்வருவனற்றைக் குறிக்கலாம்.

 1. சிறுவர்கள் வயதிற்கு ஏற்ற வகையில் அவர்களின் வட்டாரச் சொற்கள், ஆங்கிலச் சொற்கள் ஆகியன கலந்து பாடப்படுவன சிறுவர் பாடல்கள்.
 2. சிறுவர்கள் கேட்டல், பார்த்தல், உணர்தல் போன்ற பல நிலைகளில் அறிந்த பொருள்கள் அனைத்தும் பாடலாகப் புனையும் பொருளமைதி சிறுவர் பாடல்களில் இருக்கும்.
 3. வெற்றுச் சொற்கள், பொருளற்ற சொற்கள் எதுகை மோனைக்காகச் சேர்க்கப்பெறும்.
 4. எளிமையான சொற்கள், இனிமையான ஓசை இவற்றோடு சிறுவர் பாடல்கள் பாடப்பெற்றிருக்கும்.
 5. சிறுவர் பாடல்களுக்கென்று தனித்த யாப்புநலம் உண்டு.
 6. சிறுவர் பாடல்கள் எளிமையானவையாக இருக்கும்.

இத்தன்மைகள் சிறுவர் பாடல்களின் பொதுத்தன்மைகள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

சிறுவர் பாடல்களின் வகைகள்

சிறுவர் பாடல்களை பல நிலைகளில் பகுக்கின்றனர் ஆய்வாளர்கள். முன்னர் காட்டிய கருத்தின்படி ஆறு. இராமநாதன் குழந்தை வளர் நிலைப் பாடல்கள், விளையாட்டுப் பாடல்கள் என்று இருவகைப்படுத்தலாம்.

சு. சக்திவேல் சிறுவர் பாடல்களை நாப்பயிற்சிப்பாடல்கள், எண்ணுப் பயிற்சிப் பாடல்கள், அறிவு வளர்ச்சிப் பாடல்கள், நீதிப்பாடல்கள், பக்திப்பாடல்கள், பறவை மிருகங்களைப் பற்றிய பாடல்கள், விழாக்காலப் பாடல்கள், வேடிக்கைப்பாடல்கள், வினாவிடைப் பாடல்கள், விளையாட்டுப்பாடல்கள் எனப் பத்துவகையாகப்பிரிக்கின்றார்.

முன்னவரை விட இவரின் பகுப்பு இவ்வாய்விற்குப் பொருத்தமானதாக விளங்குகின்றது. ஆய்வுக்களத்தில் கிடைத்த பாடல்களின் தன்மைகளைக் கொண்டு இவ்வாறு முடிய முடிகின்றது.

இனி ஆய்வுக்களத்தில் கிடைத்த பாடல்களைக் கொண்டு அவற்றின் கட்டமைப்பு அமைந்துள்ள தன்மை பின்வருமாறு எடுத்துரைக்கப்பெறுகின்றது.

சொல் அழகு

siragu-siruvar-vaaimozhi1சிறுவர் பாடல்கள் சொல்லளவில் எளிமையும், இசைத்தன்மையும் கொண்டு விளங்கும் என்பது பொதுவான வரையறை. மேலும் பொருளுள்ள சொற்கள், பொருளற்ற சொற்கள், ஆங்கிலச் சொற்கள், வட்டாரச் சொற்கள் ஆகிய கலந்துச் சிறுவர் பாடல்கள் பாடப்பெற்றிருக்கும்என்பதும் இப்போது வரையறைக்குள் அடங்கும்.

சொல் எளிமை

                ஒரே ஒரு தோப்பிலே

                ஒரு கொத்து பாவக்கா

                ஒரு கொத்து புளியங்கா

                கசக்குமோ புளிக்குமோ

                கலந்து கொட்டுங்க சக்கரைய

                கலக்கி விடுங்க உப்பையே

என்ற பாடலில் ஒரே, ஒரு, கொத்து, பாவக்கா, புளியங்கா, கசக்குமோ, புளியங்கா, சக்கரை, உப்பு, கலக்கி கொட்டுங்க போன்ற எளிமையான சொற்கள் இடம்பெற்றிருப்பதைக் காணமுடிகின்றது.

                சிட்டுக் குருவி சிட்டுக்குருவி

                சேட்ட பண்ணாத

                அறுவாமனை கீழிருக்கு

                அறுத்துக் கிடாதே

                குண்டாஞ் சட்டி மேலிருக்கு

                மோதிக்கிடாதே

                ஐயா வந்துப் பாத்துப்பிட்டா

                பந்தடிப்பாரே

என்ற இந்தப் பாடலில் எளிமையான வினைச்சொற்கள், பெயர்ச்சொற்கள் இடம்பெற்றிருப்பதைக் காணமுடிகின்றது.

ஐயா என்பது தேவகோட்டைப் பகுதியில் இருக்கும் தாத்தாவைக் குறிக்கும் வழக்காகும். அறுவாமனை என்பது காய்கறி அறுக்க உதவும் கருவியாகும். சேட்டை என்பது தேவகோட்டைப்பகுதியில் அடம் செய்யும் குழந்தையைச் சேட்டை செய்யும் குழந்தை என்பார்கள். இந்த அளவில் எளிமையான பெயர் சொற்கள், வினைச்சொற்கள் கலந்து இப்பாடல் பாடப்பெற்றிருப்பதை உணரமுடிகின்றது.

                மாமரத்து வண்டே

                மாமியாரும் மருமகளும் சண்ட

                மனசு வச்சு தாழ்ந்துபோனா

                ஏன் வருது சண்ட

என்ற பாடலில் உள்ள எளிமையான சொற்கள் பெரியவர்களுக்கு அறிவுரை சொல்வதாக அமைந்திருக்கிறது. பெரியவர் ஒருவர் சின்னப்பிள்ளைகளுக்குச் சொல்லித்தரும் பெரியவருக்கான அறிவுரைப் பாடலாக இது அமைந்திருக்கின்றது.

ஆங்கிலச்சொற்கள் கலப்பு

தற்காலக் கல்வி முறையில் ஆங்கில மொழியின் தேவை அதிகமாக இருப்பதைக் காணமுடிகின்றது. இதன் காரணமாக பல ஆங்கிலச்சொற்கள் சிறுவர் பாடல்களில் கலந்து காணப்படுகின்றன.

                ஐஸ் ஐஸ் ஐஸ்

                அஞ்சு பைசா ஐஸ்

                ஜுஸ் ஜுஸ் ஜுஸ்

                ஆப்பிள் பழ ஜுஸ்

                லூஸ் லூஸ் லூஸ்

                நீ சரியான லூஸ்

என்ற பாடலில் வரிக்கு வரி ஆங்கிலச் சொற்கள் கலந்து வந்திருப்பதைக் காணமுடிகின்றது. மேலும் இச்சொற்கள் இயைபாக வந்திருப்பதும் கருதத்தக்கது. மற்றொரு பாடலில் இயைபிற்காகவே தேவையற்ற பொருள் சேர்க்கை நடந்துள்ளதைக் காணமுடிகின்றது.

                பக்கத்து வீட்டு நிர்மலா

                உனக்கு என்ன நிர்மலா

               வாங்கித்தாரேன் விக்ஸ் – உன்

                கதவு நம்பர் சிக்ஸ்

என்ற இப்பாடலில் விக்ஸ், சிக்ஸ் ஆகியன பொருள் தொடர்பற்ற நிலையில் சேர்க்கப்பெற்ற சொல் சேர்க்கைகள் ஆகும். ஆனாலும் இதைப் பாடிய சிறுவனுக்கு விக்ஸ் சாப்பிடவேண்டிய அவசியம் யாதெனத் தெரிந்திருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.

இன்னும் பல பாடல்கள் இவ்வகையில் அமைந்துள்ளன.

அதோ பார் மைனா

                                ஆஸ்பத்திரிக்கு போனா

                                பாக்கெட் ஆச்சு பிளைனா

                                நான் போறேன் சைனா

என்ற இந்தப் பாடலில் கேரம் என்ற விளையாட்டின் தன்மை வெளிப்பட்டுள்ளது. பாக்கெட் ஆச்சுப் பிளைனா என்ற தொடரில் கேரம் போர்டில் பிளைனாக (நேராக) பாக்கெட், பைக்குள் விழுந்தது என்பது தேவையற்ற பொருள் சேர்க்கையாக ஆஸ்பத்திரியோடு இணைக்கப்பெற்றுள்ளது. அது போல் மைனா என்பது இங்கு மைனாவைக் குறிக்காமல், ஒரு பெண்ணைக் குறிப்பதாகக் கொள்ளவேண்டும். இது போன்ற உருவகங்களும் பாடலுக்கு அழகு சேர்ப்பன.

                                கோபத்திலே இடிச்சது நெஞ்சத்தான்

                                நெங்சுக்குள்ளே ஹார்ட் தான்

                                ஹார்ட் ரொம்ப வீக்குதான்

                                எம் பாடு போக்குதான்

இப்பாடலிலும் ஹார்ட், வீக் போன்ற சொற்கள் ஆங்கில மொழிச் சொற்கள் ஆகும்.

இவ்வாறு பல பாடல்களில் ஆங்கிலச் சொற்களின் தாக்கம் இடம்பெற்றுள்ளதைக் காணமுடிகின்றது. அதே நேரத்தில் ஆங்கிலச் சொற்கள் ஒரு ஓசையமைதி கருதி இணைக்கப்பெற்றுள்ளன என்பதையும் எண்ணிப் பார்க்கவேண்டியுள்ளது.

ஓசைநயம்

சிறுவர்பாடல்களில் பயின்று வரும் ஓசை நயமே பாடலை நினைவில் கொள்வதற்கு ஏதுவாக உள்ளது.

                                வெள்ளரிக்கா பிஞ்சு

                                பிள்ளையின் நெஞ்சு

                                புலியக் கண்டு அஞ்சு

                                பாட்டி தலை பஞ்சு

                                பாம்பு பல்லு நஞ்சு

                                ஆள் அறிந்து கொஞ்சு

என்பதில் இயைபுத் தொடை வந்து ஓசைநயம் பெருக்குவதாக உள்ளது.

சில பாடல்கள் பாடலமைப்பில் அமைந்து ஓசைநயம், இசை நயம் உடையனவாக உள்ளன.

                                பூப்பறிக்க வருகிறோம்    வருகிறோம்

                                இந்த மாதத்தில்

                                எந்தப் பூக்கள் வேண்டுமோ? வேண்டுமோ?

                                இந்த மாதத்தில்!

                                கவிதா பூக்கள் வேண்டுமே வேண்டுமே

                              இந்த மாதத்தில்!

என்ற இந்தப்பாடலில் ஓசைநயம் பொருந்த வந்திருப்பதைக் காண முடிகின்றது.

                                யானைக்குப் பெரிய வயிறுண்டு

                                நீண்ட தும்பிக்கை ஒன்றுண்டு

                                குத்தும் கொம்புகள் இரண்டுண்டு

                                தடித்த காலுகள் நாலுண்டு

                                கம்பும் ஏந்தி நடப்பதற்கு

                                ஆனைப் பாகன் கூட உண்டு

என்ற பாடலில் உண்டு என்பது ஒவ்வொரு அடியின் நிறைவிலும் வந்து ஓசைநயம் கூட்டுகின்றது. இவ்வோசை நயம் பாடலை நினைவு கொள்ளவும், மற்றவர்களிடத்தில் பரவவும் ஏதுவாக அமைகின்றது.

சில பாடல்களில் ஓசைக்குறிப்புகளும் இடம்பெறுகின்றன. அவற்றிற்குப் பின்வரும் பாடல்கள் சான்றுகளாகும்.

                                வாவோ வாவாவோ

                                வாவோ வாவாவோ

                                தேனோ பாலலோ- நீ

                                தெவிட்டாத தெள்ளமுதோ

                                பாலோ பழமோ- நீ

                                பழுத்து வந்த கனிரசமோ

                                ஆம்பல் பூ போல நீ

                                அடிக்கடி வாய் திறந்து

                                தேம்பி அழாதே நீ

                              தெய்வம் தம்பி கண்ணுறங்கு

என்ற பாடலில் தாலாட்டுப் பாடலுக்கான இசையை வாவோ வாவாவோ, வாவோ வாவாவோ என்ற அசைகள் காட்டுகின்றன. இவ்வசை ஓசைகளின் வழியே பாடலும் நடைபெற்றுச் செல்லுகின்றது.

ஓசையமைதியைக் கொண்டே அசைகளைப் பகுத்து ஒரு யாப்பு வடிவத்தையும் கட்டமைக்க இயலும்.

பெரும்பாலும் ஆய்வுக்களத்தில் கிடைத்த பாடல்களின ஈரசைச் சொற்கள் இரண்டோ மூன்றோ இணைந்து வருவதாக பாடலடிகள்பாடப்பெற்றுள்ளன. இதன் காரணமாக எளிய பாடல் வடிவம் சிறுவர்களுக்குக் கிடைத்துவிடுகின்றது.

                                மழை வருதே மழை வருதே

                                பச்ச கண்ணாடி

                                பல்லில்லாத கிழவனுக்கு

                                டபுள் பொண்டாட்டி

என்ற பாடலில்

                                நிரை நேர்நேர் நிரை நேர்நேர்

                                நேர்நேர்நேர்நேர் நேர்

                                நேர்நேர் நேர்நேர் நிரைநிரைநேர்

               நிரைநேர் நேர்நேர்

என்ற நிலைப்பாட்டில் ஈரசைச் சீர் நிறைய வருவதைக் காணமுடிகின்றது.

                இன்ஸ்பெக்டர் வந்தாரு

                இஞ்சித் தண்ணிய குடிச்சாரு

                ஆலமரத்தில் ஏறினாரு

                அடிச்சுப் புடிச்சு விழுந்தாரு

இப்பாடலிலும்

நேர்நேர்நேர் நேர்நேர்நேர்

நேர்நேர் நேர்நேர் நிரைநேர்நேர்

நேர்நிரைநேர் நிரைநேர்நேர்

நிரைநேர் நிரைநேர் நிரைநேர்நேர்

என்ற பாடலில் மூவசைச் சீர்களும் ஈரைச் சீர்களும் கலந்து வந்துள்ளன.

இவ்வாறு மூவசைச்சீர்களும், ஈரசைச்சீர்களும் கலந்து எளிமையான பாடல்களாக சிறுவர் பாடல்கள் அமைந்து சிறக்கின்றன. ஒலிநயம் பற்றிப் பின்வரும் இயலிலும் விரித்துரைக்கப்பெற்றுள்ளது.

பொருளற்ற சொற்களை இணைத்தல்

பொருளில்லாத சொற்களையும் இணைத்துப் பாடல் புனையும் திறன் சிறுவர் பாடல்களில் காணப்படுகின்றது. இதுவும் அதன் வடிவ அழகுகளுள் ஒன்றாகும்.

                                ஆக் பாக் வெத்தில பாக்கு

                                டாம் டூம் கொய்யா

                               அஸ்த லக்கடி பால சுந்தரம்

                                எம்பெயர் சோமசுந்தரம்

என்ற பாடலில் ஆக், பாக், டாம், டூம், அஸ்த,லக்கடி போன்ற சொற்கள் பொருளற்ற வெற்றுச்சொற்கள். இருந்தாலும் இந்தப் பாடல்களை நீக்கிவிட்டால் இந்த பாடலில் உள்ள ஈர்ப்பு நீங்கிவிடும். ஆகவே இப்பாடலின் ஈர்ப்புத் தன்மைக்கு இந்தப் பொருளற்ற சொற்களே காரணமாக அமைகின்றன.

                இதே சாயலில் மற்றொரு பாடல்

                                டிஸ் டிஸ் டோனா

                                மாமி எங்கப் போனா

                                சாமி காணப் போனா

                                கப்பல் காரன் வந்தான்

                                காசு மாலைய போட்டான்

                                கடத்திக்கிட்டுப் போனான்

என்ற இந்தப்பாடலில் இடம்பெற்றுள்ள டிஸ், டிஸ், டோனா என்ற சொற்கள் பொருளற்ற சொற்கள். இருப்பினும் இவையே பாடலின் தொடக்கத்தில் அமைந்து பாடலை துவக்கி வைக்கின்றது. இவ்வடி இல்லாமல் இருந்தால் பாடலின் அழகும் குறைய ஆரம்பிக்கும்.

                                தக்தக்க பித்தக்க தவளக்குட்டி

                                தண்ணீல விழுந்தா பேத்தக்குட்டி

                                ஒன்,டூ,திரி

என்ற இந்தப்பாடலில் தத்தக்க பித்தக்க என்ற சொற்கள் தவளையின் நடையின் ஒலிக்குறிப்பாக அமைகின்றன. இந்த ஒலிக்குறிப்புகள் தவளையைக் கண்முன் சிறுவர்கள் முன் நிறுத்தும். அத்தவளைபோன்று நடிக்கவும் ஊக்கமூட்டும். இவ்வகையில் பொருளற்ற சொற்களும் சிறுவர் பாடல்களில் தவிர்க்கமுடியாத அங்கமாக விளங்குவதை உணரமுடிகின்றது.

வடிவ அழகு

நாட்டுப்புறச் சிறுவர் பாடல்கள் தனக்கென தனித்த வடிவ அமைதியைப் பெற்றுத் திகழ்கின்றன. குறிப்பாக அந்தாதி அமைப்பு முறை, வினா விடை அமைப்பு முறை, உரையாடல் அமைப்புமுறை ஆகியனவற்றைச் சிறுவர்பாடல்களின் வடிவச் சிறப்புகள் என்று கொள்ளலாம்.

அந்தாதித் தன்மை

அந்தமே ஆதியாக முடிவது அந்தாதி எனப்படும். ஓர் அடியின் இறுதிப் பகுதி அடுத்த அடியின் தொடக்கப்பகுதியாக அமைவது அந்தாதியாகும். இது செய்யுள் தொடைகளுள் ஒன்றாகக் கருதத்தக்கது.

                ஈறு முதலாத் தொடுப்பது அந்தாதியென்று

                ஓதினர் மாதோ உணர்ந்திசினோரே

என்று அந்தாதிக்கு இலக்கணம் உரைக்கும் யாப்பெருங்கலம். இவ்வழியில் இத்தொடை நலம் நாட்டுப்புறப்பாடல்களில் இடம்பெற்றுள்ளது.

                                பணம் பணம்

                                பணத்திற்கு இல்லை குணம்

                                குணத்திற்கு இல்லை மணம்

                                மணம் என்றால் பூ தானே

                                பூ என்றால் கட்டுவோமே

                                கட்டுவது என்றால் பசுதானே

                                பசு என்றால் கறப்போமே

                                கறப்பது என்றால் பால் தானே

                                பால் என்றால் புளிக்குமே

                                புளிக்கும் என்றால் புளிதானே

                                புளி என்றால் தொங்குமே

                                தொங்குவது என்றால் பாம்புதானே

                                பாம்பு என்றால் கொத்துமே

                                கொத்துவது என்றால் கோழி தானே

                                கோழி என்றால் கூவுமே

                                கூவும் என்றால் நரிதானே

                                நரி என்றால் அதோடு சரி

என்ற பாடல் அந்தாதித்தொடை வரப் பாடியமைக்கு நல்ல சான்றாக அமைகின்றது. முதலடியில் முடியும் பணம், குணம்,மணம், பூ, கட்டுதல், பசு, கறத்தல், பால், புளித்தல், புளி, தொங்கல், பாம்பு, கொத்துதல், கோழி, நரி. சரி என்று வரும் நிறைநிலைப் பகுதிகள் அடுத்த அடிக்குத் தொடக்கமாக அமைகின்றன. இதன் காரணமாக பாடல் அந்தாதியின் அழகினைப் பெறுகின்றது.

                பாலாஜி பிரிஜ்

                பிரிஜ் குள்ள ஐஸ்

                ஐஸ் குள்ள தண்ணி

                தண்ணிக்குள்ள கப்பல்

                கப்பலுக் குள்ள ஆளு

                ஆளு பேரு துரை

                அவன் விட்டான் பாரு அறை

என்ற இந்தப்பாடலில் நிறையடியைத் தவிர மற்றஅடிகள் அந்தர்தியில் உள்ளன. நிறைவு வரி நகைச்சுவை கலப்பதற்காகச் சற்று மாற்றிப் பாடப்பெற்றுள்ளது.

மற்றொரு பாடலிலும் அந்தாதித்தொடை ஆங்கிலம்,தமிழ் எனக் கலந்து வருவதாக அமைந்துள்ளது.

                எங்கப்பா ஓட்டுவது காரு

                                காரு போவது ரோடு

                                ரோட்டு மேல காரு

                                காருக்குள்ள யாரு

                                நம்ம மாமா நேரு

                                நேரு என்ன தந்தாரு

                                ரோசாப் பூவுதான்

இந்தப் பாடலில் நிறைவு அடி வரை அந்தாதி பின்பற்றப்பெற்றுள்ளது. அந்தாதியாகப் பாடுவதால் அடி மாறாமல் நினைவிற்குப் பாடல்கள் வருகின்றன. ஆகவே அந்தாதி நயம் என்பது சிறுவர்களின் நினைவாற்றலையும் வளர்க்க உதவுகின்றது.

இவ்வாறு அந்தாதித்தொடை நயம் அமையப்பாடுவது என்பது நாட்டுப்புறப்பாடல்களுக்கு ஒருவகை வடிவ அழகைத் தருவதாக உள்ளது.

வினாவிடை அமைப்பு முறை

வினாவிடை அமைப்பு முறையிலும் சிறுவர் பாடல்கள் பெற்று அதற்கான வடிவழகைப் பெற்று விளங்குகின்றன. பின்வரும் பாடல்கள் வினா விடை அமைப்பு முறைக்குச் சான்றாவன.

                என்ன பிஸ்கட்

                ஜாம் பிஸ்கட்

                என்ன ஜாம்

                கோ ஜாம்

                என்ன கோ

                வீட்டுக் கோ

                என்ன வீடு

                மாடி வீடு

                என்ன மாடி

                மொட்ட மாடி

                என்ன மொட்ட

                திருப்பதி மொட்ட

                என்ன திருப்பதி

                வட திருப்பதி

                என்ன வட

                ஆம வட

                என்ன ஆம

                குளத்து ஆம

                என்ன குளம்

                திரி குளம்

                என்ன திரி

                விளக்குத் திரி

                என்ன விளக்கு

                குத்து விளக்கு

                என்ன குத்து

                கும்மா குத்து

இந்த நெடிய பாடல் வினாவிடை அமைப்பிலேயே பாடப்பெற்றுள்ளது. மிக நெடிய பாடல் என்றாலும் முதல் அடிக்கு அடுத்த அடி பதில் சொல்வதால் அக்கேள்வியும் மறப்பதில்லை. பதிலும் மறப்பதில்லை. இதில் சிறுவர்கள் காணும் எல்லாம் பொருள்களும் இடம்பெற்றிருப்பதைக் காண முடிகின்றது.

பால் பால்

                என்ன பால்

                ஆட்டுப் பால்

                என்ன ஆடு

                வேலி ஆடு

                என்ன வேலி

                திருநெல்வேலி

                என்ன திரு

                தேங்காய் திரு

                என்ன தேங்காய்

                நெய் தேங்காய்

                என்ன நெய்

                பாம்பு நெய்

                என்ன பாம்பு

                மல பாம்ப

                என்ன மல

                திருவண்ணாமல

மேற்கண்ட பாடலிலும் வினா விடை அமைப்பு முறையைக் காணமுடிகின்றது. இப்பாடலும் நெடிய பாடலாகும். இது ஒரு விளையாட்டுப் பாடல் என்பதும் நினைவில் கொள்ள வேண்டியதாகும். இருவர் விளையாடும் விளையாட்டுப்பாடல்களில் இத்தகைய வினா விடை உரையாடல் முறையைக் காணமுடிகின்றது.

                எங்கே போற

                ஊருக்குப் போறேன்

                எந்த ஊரு

                மயிலாப்பூரு

                என்ன மயிலு

                காட்டு மயிலு

                என்ன காடு

               ஆற்காடு

                என்ன ஆறு

                பாலாறு

                என்ன பாலு

                கள்ளிப் பாலு

                என்ன கள்ளி

                இலைக் கள்ளி

                என்ன இலை

                வாழை இலை

                என்ன வாழை

                கற்பூர வாழை

                என்ன கற்பூரம்

                ரச கற்பூரம்

                என்ன ரசம்

                மிளகு ரசம்

                என்ன மிளகு

                வால் மிளகு

                என்ன வால்

                நாய் வால்

                என்ன நாய்

                மர நாய்

                என்ன மரம்?

                பலா மரம்

                என்ன பலா

                வேர்ப்பலா

                என்ன வேர்

                வெட்டி வேர்

                என்ன வெட்டி

                பனை வெட்டி

                என்ன பனை

                தாளிப் பனை

                என்ன தாளி

                விருந்தாளி

                என்ன விருந்து

                மணவிருந்து

                என்ன மணம்

பூமணம்

என்ன பூ

மாம் பூ

என்ன மா

அம்மா

இதில் அம்மா என முடியும் நிறைவுப் பகுதிவரை வினா விடை அமைப்பினால் நிரம்பியுள்ளதைக் காணமுடிகின்றது.  இதே வினாவிடை அமைப்பில் அமைந்து மற்றொரு பாடலும் பின்வருமாறு

                                நாடா நாடா எங்கே போன

                                பாட்டு பாட நான் போனேன்

                                என்ன கிடைச்சுது?

                                அம்பும் வில்லும் கிடைச்சுது

                                அம்பையும் வில்லையும் என்ன செய்த

                                வேடனிட்ட கொடுத்தேன்

                                வேடன் என்ன தந்தான்

                                ஒரு பழக்குலை தந்தான்

                                பழக்குலையை என்ன செய்த

                                கடையிலே வித்தேன்

                                வித்தப்ப என்ன கிடைச்சுது

                                பணம் கிடைச்சுது

                                பணத்த என்ன செய்த

                                பத்தாயத்தில் போட்டேன்

                                பத்தாயம் என்ன தந்தது

                                பூட்டும் தார்க்கோலும் தந்தது

                                பூட்டையும் தார்க்கோலையும் என்ன செய்த

                                வீட்ட பூட்டி தார்க்கோல் எடுத்தேன்

                                தார்க்கோல் எங்கே

                                தொலைஞ்சு போச்சு

இவ்வகையில் நாட்டுப்புறம் சார்ந்த சிறுவர் பாடல்களில் விளையாட்டுப்பாடல்கள் வினாவிடை அமைப்பில் பாடப்படுவது ஒரு வடிவமாகக் கொள்ளத்தக்கது. இப்பாடல்களில் முதல் நான்கு பாடல்கள் என்ன ஒரு கேள்வி அமைப்பைக் கொண்டிருப்பதைக் காணமுடிகின்றது. கேள்விகளிலும் எளிமையை நாட்டுப்புறப்பாடல்கள் பெற்றுள்ளன என்பதையும் இதன்வழி அறிந்து கொள்ள முடிகின்றது.

உரையாடல் அமைப்பு முறை

ஒருவரோடு ஒருவர் உரையாடும் நாடகப் பாங்கில் சில பாடல்கள் அமைவது உண்டு. எதிராளியின் கூற்றுக்கு ஏற்ப உரையாடல் வளரும் அல்லது நிறைவு பெறும். இவ்வகையில் அமைந்த சில பாடல்கள் இங்குச் சான்றுகளாகக் காட்டப்பெறுகின்றன.

                                டிங் டிங்

                                யாரது

                                கள்ளன்

                                என்ன வேணும்

                                நகை வேணும்

                                என்ன நகை

                                கலர் நகை

                                என்ன கலர்

                                மஞ்சள்

என்ற இந்தப் பாடல் உரையாடல் சார்ந்து அமைந்த பாடலாகும். இருப்பினும் இவற்றிலும் வினாவிடை கலந்தும் வந்துள்ளது காணத்தக்கது.

                     ஆட்டுக் குட்டிய கண்டாயா?

                                ஆமா

                               எங்க

                                கூட்டுக்குள்ள

                                வரலாமா

                                வரக்கூடாது

                                மதில் எட்டிச் சாடுவேன்

                                கால முறிப்பேன்

                                இது என்ன சங்கிலி

                                தங்கச் சங்கிலி

                                இது என்ன சங்கிலி

                                வெள்ளிச் சங்கிலி

                                இது என்ன சங்கிலி

                                பித்தள சங்கிலி

                                இது என்ன சங்கிலி

                     இரும்புச் சங்கிலி

என்ற இந்தப் பாடலில் உரையாடல் போக்கு காணப்படுகின்றது. குழுப் பாடல்களாக விளையாட்டுப்பாடல்கள் அமைகின்றபோது உரையாடல்கலந்து வினாவிடைப் பாடல்கள் பாடப்பெற்றுள்ளன என்பது கவனிக்கத்தக்கது.

இவ்வகையில் சிறுவர் பாடல்கள் தனக்கென தனித்த கட்டமைப்பினைப் பெற்றுத் திகழ்கின்றன. இக்கட்டமைப்பு என்பது நெகிழ்வுத் தன்மை வாய்ந்தது. இவ்வாறுதான் சிறுவர் பாடல்கள் அமையவேண்டும் என்ற வரையறை இல்லை. இருந்தாலும் இவற்றின் பொதுத்தன்மை கருதி சில வரையறைகளை அமைத்துக்கொள்ள முடிகின்றது என்பது தெளிவு.

தொகுப்புரை

 1. நாட்டுப்புற இலக்கியம் என்பது நாட்டுப்புற மக்களின் இன்பம், மகிழ்ச்சி, இழப்பு போன்றனவற்றை அப்படியே வெளிப்படுத்தும் புனைவில்லா இலக்கியங்கள். இவ்விலக்கியங்களில் ஒரு வகை சிறுவர் பாடல்கள் என்பதாகும்.
 2. இச் சிறுவர் பாடல்கள் தனக்கென தனித்த வடிவத்தைக் கொண்டு விளங்குகின்றன.
 3. சிறுவர் பாடல்களின் பாடல் பொருள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இச்சிறுவர் பாடல்களில் சிறுவர்கள் தாம் கண்ட, கேட்ட, ரசித்த பல செய்திகளைக் கலந்து பாடும் விடுதலை உள்ளது.
 4. சிறுவர் பாடல்கள் என்பவை ஓரிடத்தின் பண்பாட்டை, மக்கள் வாழ்க்கை முறையை எடுத்துக்காட்டும் போக்கின. இவை சார்ந்தே இந்தப் பாடல்கள் பாடப்படுகின்றன.
 5. சொல்அழகு, சொல் எளிமை, ஓசை இனிமை, வெற்றுச் சொல் தொடுத்தல், ஆங்கில மொழிச் சொற்களை இணைத்தல், அந்தாதி அமைப்பு முறை, வினாவிடை அமைப்பு முறை, உரையாடல் அமைப்பு முறை ஆகியன இதன் வடிவம் சார்ந்த வரையறகளாக உள்ளன.
 6. இப்பாடல்களை யாப்பு வரையறைக்குள் அடக்கிவிட இயலும். ஈரசைச் சீர்கள் விரவி வருவதன் காரணமாக ஆசிரியப்பா யாப்பு பெரிதும் தழுவப்பட்டு வருகின்றது என்பதைக் கண்டுகொள்ள முடிகின்றது.

முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சிறுவர் வாய்மொழிப் பாடல்களின் கட்டமைப்பும் வகைகளும் – பகுதி – 2”

அதிகம் படித்தது