சிறு காப்பியத் தமிழ்
முனைவர் மு.பத்மாJan 11, 2020
தமிழ்க் காப்பியங்களை, ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுங்காப்பியங்கள் என்று இரு நிலைகளில் பிரிக்கமுடிகின்றது. இவற்றில் பெருங்காப்பியங்கள் பெருங்காப்பிய இலக்கணம் பொருந்தி நிற்பனவாகும். இவற்றில் சற்று குறைந்தவை சிறு காப்பியங்கள் ஆகின்றன. இச்சிறு காப்பியங்களின் கதை நெறியும் சற்று முரண்பாடு உடைய காரணத்தினாலும் இவை சிறு காப்பியங்கள் என்று வகைமை செய்யப்பட்டுள்ளன.
ஐஞ்சிறு காப்பியங்களின் கதை பொதுமரபு, ஒழுங்கு சார்ந்தனவாக இல்லை. உதயண குமார காவியம் பெருங்கதை என்ற நூலைத் தழுவிய கதை அமைப்பினை உடையது. இதனுள் இரு கதைத்தலைவர்கள் அமைகின்றனர். நாக குமார காவியம் என்பதும் நாக பஞ்சமி என்ற வழிபாட்டு முறையை முன் நிறுத்துவது. சமண சமயத்தாருக்குமட்டும் இது சிறப்பானது என்ற நிலையில் இதுவும் சிறு காப்பியமாக்கப்பட்டுவிட்டது. சூளாமணியும் இரு கதைத் தலைவர்களை உடையது. நீலகேசி என்பது குண்டலகேசியின் மறுப்பு நூல். யசோதர காவியம் நம்ப முடியாத அளவில் உயிர் பிறப்பு, மறு பிறவி போன்ற செய்திகளைக் கொண்டுள்ளது. மேலும் இக்காப்பியத்தின் கதை சற்று முரண்போக்கு உடையது. கணவனை விட்டுவிட்டு, யானைப்பாகனுடன் நேசம் கொள்ளும் மனைவி பற்றிய கதை இதுவாகும்.
இவ்வாறு ஐஞ்சிறு காப்பியங்களின் கதைகள் பொது நியதி, பொது அறம் சாராத முரண் போக்குடையனவாக விளங்குகின்றன. பெரும்பாலும் இவை வடமொழி சாயல்பெற்றவை. இதன் காரணமாக தமிழ் மரபு இவற்றில் காணக் கூடியதாக இல்லை. ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ் மரபு பின்தள்ளப்பெற்ற காரணத்தால் இவை சிறு காப்பியங்களாயின.
பெருங்காப்பியங்களின் பொதுநோக்கு, பொது அறம் சார்ந்தது போல சிறுகாப்பியங்களின் இயல்புகள் அமையாத காரணத்தினால் இவை சிறுகாப்பியங்கள் என்ற நிலையில் சற்று மதிப்பு குறைத்து வகைமை செய்யப்பெற்றுள்ளன. இவற்றுள் யசோர காவியத்தின் தலைமை மாந்தர்கள் படைப்பினைப் பற்றி இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.
யசோதர காவியம்
வடமொழியில் யசோதரன் பற்றிய கதைகள் உள்ளன. சோமதேவ சூரி, வாதிராஜ சூரி, பூர்ண தேவர் ஆகியோர் யசோதரன் பற்றிய கதைகளை வடமொழியில் செய்தவராக அறியப்பெறுகின்றனர். இவ்வடமொழிக் கதைகளை ஒட்டியே தமிழில் யசோதர காவியம் செய்யப்பெற்றிருக்க வேண்டும். தமிழில் யசோதர காவியத்தை எழுதியவர் எவர் எனத் தெரியாத நிலையில் வடமொழியில் இக்காவியம் எழுதிய வாதிராஜ சூரியர்என்பவரே இதனைப் படைத்திருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர். வெண்ணாவல் வள்ளல் வேள் என்பவர் இதனை எழுதியிரக்கலாம் என்று மற்றொரு கருத்தும் உண்டு. (தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தளம் தந்துள்ள குறிப்புகளின் அடிப்படையில் இக்கருத்துகள் இங்கு இடம்பெறச் செய்யப்பெற்றுள்ளன.
யசோதர காவியம் ஐந்து சருக்கங்களை உடையது. இது முன்னூற்று முப்பது பாடல்களைக் கெர்ணடது. அபயருசி என்ற ஒளதய நாட்டு மன்னன் மாரி தத்தனுக்குத் தன் பழம் பிறப்பு வரலாற்றை உணர்த்துவதே இக்காப்பியத்தின் கதைக்கருவாகும்.
இக்காப்பியத்தின் நாயகியாக விளங்குபவள் அமிர்தமதி ஆவாள். நாயகன் யசோதரன் ஆவான். யசோதரனின் துறவே இக்காப்பியத்தின் முக்கியமான திருப்புமுனையாகும். இக்காப்பிய மாந்தர் திறம் பின்வருமாறு.
அமிர்தமதி:
இக்காப்பியத்தின் தலைவி அமிர்தமதி. கணவனைத் தவிர பிற ஆணை விரும்பும் பாத்திரமாக இவள் படைக்கப்பெற்றுள்ளாள். பெண் மனதாலும் உடலாலும் மாறுபாடுடைய சேர்க்கையை விரும்புபவள் என்ற நிலையில் இப்பாத்திரப்படைப்பு மிகச் சிக்கல் வாய்ந்ததாக உள்ளது. இவளின் கணவன் யசோதரன். அரச பதவியில் இருக்கும் இவனை விட்டுவிட்டுப் பாடுவதில் வல்லவனான அட்டபங்கன் என்ற யானைப் பாகனை அமிர்தமதி கூடுகிறாள்.
“மாளவ பஞ்சமப்பண் மகிழ்ந்தவன் அமுதவாயில்
கேளலனாயினாமுங் கேளலமாதுமாவி
நாளவமாகி மின்னே நடந்திடு நடுவொன்றில்லை
வாளளவுண்கண் மாதே மறுத்துரைமொழியினென்றாள்” (பா. 102)
என்ற இந்தப்பாடலில் பிற ஆடவன் மேல் அமிர்தமதி கொண்டுள்ள ஆசை தெற்றென எடுத்துக்காட்டப்பெறுகின்றது.
மேலும் இவ்யானைப் பாகனைக் கூடிட ஒருநாள் குறிக்கப்படுகிறது. அந்நாளில் சற்று காலதாமதமாக வந்ததால் அமிர்தமதியை உதைக்கிறான் யானைப்பாகன். இதனால் மயக்க முறுகிறாள் அமிர்தமதி. இருப்பினும் காலம் தாழ்த்து வந்ததற்கான காரணம் சொல்லி இனி இதுபோல் நடக்காது எனவும் அவள் குறிப்பிடுகிறாள்.
“பொற்பகங்கழுமி யாவும் புரந்தினி தரந்தை தீர்க்குங்
கற்பகங் கரந்து கண்டார் கையகன்றிடுதலுண்டோ
எற்பகங் கொண்ட காதலெனக்கினி நின்னின் வேறோர்
சொற்பகர்ந் தருளு காளை துணைவரா பவருமுண்டோ” (பா. 118)
என்ற பாடலில் கற்பக மரமாக யானைப்பாகனை நினைக்கிறாள் அமிர்தமதி. கற்பக மரத்தை மறைந்து இருந்து கண்டவர்கள் அதனை எவ்வாறு மறக்கமுடியும்? என்று கற்பக மரமாக யானைப்பாகனை எண்ணுகிறாள் அமிர்தமதி. என் எலும்புகளை உருக்கும் காதலைத் தந்துள்ள உன்னைவிட நல்ல துணைவர் இனி எனக்கு உண்டோ என்று காமத்தின் உச்சத்தில் நின்று இப்பெண் பேசுகின்றாள்.
மேலும் தன் தவறான ஒழுக்கம் தன் கணவனுக்கும், தன் மாமியாருக்கும் தெரிந்துவிட்டது என்ற அறிந்த அமிர்தமதி அவர்களுக்கு நஞ்சு கலந்த லட்டுகளைத் தந்து அவர்களைக் கொல்கிறாள். நஞ்சு கலக்காத லட்டுகளைத் தானும் பிறரும் உண்ணத் தருகின்றாள்.
“நஞ்சோடு கலந்த தேனினறுஞ்சுவை பெரியவாக
எஞ்சலில் லட்டு கங்களிவரும் அருந்து கென்றே
வஞ்சனை வலித்துமாமி தன்னுடன் வரனுக்கு ஈந்தாள்
நங்சொடு படாத தானும் பிறரொடு நயந்து கொண்டாள்” (பா. 146)
என்ற இப்பாடல் பெண்கள் வஞ்சத்தின் மொத்த உருவமாக விளங்கத்தக்கவர்கள் என்பதைக் காட்டுவதாக உள்ளது.
நிறைவில் நரகம் அடைகிறாள் அமிர்தமதி. இக்கதையில் யானைப்பாகன் என்ன ஆனான் என்ற குறிப்பே இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
யசோதரன்
யசோதரன் உஞ்ஞயினி மாநகர வேந்தன் ஆவான். தன் மனைவி அமிர்தமதியின் தவறான ஒழுக்கத்தை மறைந்திருந்துப் பார்த்திருந்தும் அவளின் நடத்தையைப் பொறுத்தாற்றியவன் இவனாவான்.
“….மன்னன் எரியெழ விழித்துச் சீறி
கொன்றிவர் தம்ஐம வாள்வாய் கூற்றுண விடுவலென்றே
யொன்றின னுணர்ந்த துள்ளத் துணர்ந்தது கரத்து வாளும்
சென்றிடை விலக்கி நின்றோர் தெறிந்துணர் வழுந்ததன்றே”(பா. 117)
என்ற பாடலில் ஒரு நல்லுணர்வு எழுந்து முறை பிறழ்ந்த மனைவியையும் அவனின் கள்ளக்காதலனையும் கொல்லாது விடுகிறான் யசோதரன் என்ற செய்தி தரப்பெற்றுள்ளது.
இம்முறை தவறலுக்கு யாது காரணம் எனத் தன் தாயை வினவியபோது அவள் சண்டமாரி தெய்வத்திற்குக் கோழிப் பலியிட்டால் எல்லாம் சரியாகும் என்று குறிப்பிடுகிறாள். இதனைக் கேட்டு எல்லா உயிர்களையும் காக்கவேண்டிய நான் உயிர்களைக் கொல்லலாமா, கூடாது என்கிறான்.
“என்னுயிர் நீத்த தேனும் யானுயிர்க் குறுதிசூழா
தென்யுர் கரண நாடி யானுயிர் கிறுதி செய்யின்
என்னை இவ்வுலகுகாலெனக்கினி இறைவி கூறாய்
மன்னுயிர்க் கரணமண்மேல்மன்னவரல்லரோதான்.”(பா. 133)
என்னுயிர் தந்தாவது என்னால் காக்கப்படும் உயிர்களைக் காப்பதுதான் மன்னனின் கடமை. நானே எவ்வாறு உயிர்ப்பலி தருவது என்று உயிர்ப்பலியைத் தடுத்து அனைத்து உயிர்களும் வாழ இவன் வழி செய்கிறான்.
இதன் காரணமாக மாவுக் கோழி ஒன்று உருவாக்கப்பட்டு அதனைப் பலியிட அதுவும் உயிருள்ளதாக மாற அவ்வுயிர்ப்பலி செய்த செயலால் கொடிய பாவம் இவ்வரசனையும், இவ்வரசனின் தாயையும் பற்றிவிடுகின்றது. இதற்காக பல விலங்கு, பறவைப் பிறவிகளை இவர்கள் பெறுகின்றனர்.
இவ்வாறு மிக வேறுபட்ட நிலையில் யசோதர குமார காவியம் பெண்களைச் சித்தரிக்கின்றது. ஆண்களை மிக நல்லவர்களாகப் படைத்துக்காட்டுகின்றது. ஆண், பெண் என்ற இரு கதைத்தலைமை இணைகளை மிகச் சரியான முரண்களாக இக்காப்பியம் காட்டியுள்ளது.
முனைவர் மு.பத்மா
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “சிறு காப்பியத் தமிழ்”