சனவரி 28, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சிவப்பிரகாசரின் நன்னெறியில் திருக்குறள் ஆளுமை

முனைவர் மு.பழனியப்பன்

May 20, 2017

Siragu sivaprakaasar

துறைமங்கலம் சிவப்பிரகாசர் சிறந்த பக்தியாளர். கற்பனைக் களஞ்சியம் என்று புகழப்படுபவர். முருகன் மீதும் தன் குருவான சிவஞான பாலய சுவாமிகள் மீதும் பல பனுவல்களைப் பாடியவர். இவரின் பாடல்களில் கற்பனை வளம் மிகுந்து காணப்படும். இவர் பாடியனவாகத் தற்போது முப்பத்து நான்கு நூல்கள் கிடைக்கின்றன. புராணங்கள், சிற்றிலக்கியங்கள் பாடுவதில் வல்லவரான இவர் பாடிய நீதி நூல் நன்னெறி என்பதாகும். நாற்பது பாடல்களை உடைய இந்நூல் ஒவ்வொரு பாடலிலும் ஒரு நற்கருத்தை விளக்குகிறது. அதற்கு ஏற்ற உவமையைக் காட்டி மேலும் பொருள் விளக்கம் செய்கிறது. நாற்பது பாடல்கள், நாற்பது உவமைகள், நாற்பது கருத்துகள் என்ற நிலையில் படைக்கப்பெற்ற நூல் நன்னெறியாகும்.

இந்நன்னெறி நூல் பொம்மையபுரம் என்ற கடற்கரைப் பகுதியில் இவரால் முதலில் மணலில் எழுதப்பெற்றது. பின்பு இதனை இவரின் சீடர் ஏட்டில் எழுதிக் கொண்டுவந்து நிலைப்படுத்தினர் என்ற கருத்து நிலவுகிறது. இது உண்மை எனக் கருதும் நிலையில் பல பாடல்களில் கடல், கடல் சார்ந்த கருத்துகள் பயன்படுத்தப்பெற்றுள்ளன.

இவரின் நன்னெறியில் நீதி நெறிகளை வகுக்கும் நிலையிலும், உவமைகளை வழங்கும் நிலையில் திருக்குறளின் தாக்கம் காணப்பெறுகிறது. திருக்குறள் கருத்துகளை உள்வாங்கிக்கொண்டுப் படிப்போர்க்குப் புரியும் வண்ணம் அக்கருத்தினை உவமை கொண்டு விளக்கும் படைப்புப் பாங்கு உடையது நன்னெறி நூல்.

நன்னெறியில் பயின்றுவரும் திருக்குறள் கருத்துகள்

பிறவி தொடராது காப்பது அறம்

Siragu sivaprakaasar2

திருக்குறள் அறத்தை வலியுறுத்தும் நூல் ஆகும். அறன் வலியுறுத்தல் என்ற அதிகாரம் கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை என்ற முதல் மூன்று அதிகாரங்களுக்கு அடுத்ததாக வைக்கப்பெற்றுள்ளது. இதன்வழி வள்ளுவர் அறத்திற்குத் தந்துள்ள இடம் முக்கியமானது என்பது புலனாகின்றது.

‘‘ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும் வாயெல்லாம் செயல்” (திருக்குறள் 33)

என்று செல்லுமிடமெல்லாம் அறத்தைச் செய்ய வற்புறுத்துகிறார் வள்ளுவர். இதனை நன்னெறி பின்வருமாறு வழி மொழிகின்றது.

‘‘கொள்ளும் கொடுங்கூற்றம் கொல்வான் குறுகுதன்முன்
உள்ளங் கனிந்தறஞ்செய்து உய்கவே- வௌ்ளம்
வருவதற்கு முன்னர் அணைகோலி வையார்
பெருகுதற்கண் என் செய்வார் பேசு” (நன்னெறி 30)

என்ற நன்னெறிப்பாடல் எமன் வந்து வாழ்நாளை அழிப்பதற்கு முன்பே அறஞ் செய்து உய்க என்கிறது. நன்னெறிப்பாடலில் எமன் என்ற குறியீடு வாழ்நாள் முடிவினைக் குறிப்பதாக உள்ளது. திருக்குறளில் இக்கருத்து எமன் என்ற குறியீடு இல்லாது நேரடியாகவே மொழியப்பெற்றுள்ளது.

‘‘வீழ்நாள் படாஅமை நன்று ஆற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்” (திருக்குறள் 38)

என்ற குறட்பாவில் ஒருவன் வாழ்நாள்களில் எல்லாம் அறம் செய்து கொண்டு வந்தால் அவனுக்குப் பிறவி என்ற தொடர்ச்சி இல்லாமல் போகும். அத்தொடர்ச்சியை அடைக்கும் கல்லாக அறம் நிற்கும் என்கிறார்.

சிவப்பிரகாசர் எமன், வெள்ளம் என்ற குறியீடுகளைப் பயன்படுத்தி இக்கருத்தை இன்னமும் அழகாக்கியுள்ளார். வெள்ளத்தை அடைக்கும் நிலை இப்பாடலில் உவமையாகப் பயன்படுத்தப்பெற்றுள்ளது, வாழ்நாளை அடைக்கும் கல்லைப் பற்றி வள்ளுவர் குறிப்பிடுகிறார். வீழ்நாள் என்று வள்ளுவர் குறிக்கிறார். இதனை எமன் வரும் நாள் என்று சிவப்பிரகாசர் குறிக்கிறார். இவ்வகையில் அறம் என்ற திருக்குறளின் உயிர்க்கருத்தை உள்வாங்கி அதனை மேலும் செழுமையாக்கி உரைக்கிறார் சிவப்பிரகாசர்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

மனித குலத்தில் உயர்வு, தாழ்வு என்ற ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்கிறார் வள்ளுவர்.

‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்” (திருக்குறள் 972)

இந்தச் செய்தியை அப்படியே ஏற்று மொழிகிறது நன்னெறி.

‘‘ஆக்கும் அறிவினால் அலது பிறப்பினால்
மீக்கொள் உயர்வு இழிவு வேண்டற்க – நீக்கு
பவரார் அரவின் பருமணிகண்டு என்றும்
கவரார் கடலின் கடு’’ (நன்னெறி 22)

இப்பாடலில் இரு உவமைகள் எடுத்தாளப்பெற்றுள்ளன.
பாம்பு நஞ்சுடையது. ஆனால் அதனில் பெறப்படுவதாகக் கருதப்படும் நாகமணி அனைவராலும் விரும்பி அணியத்தக்கது. எனவே அதன் பிறந்த இடத்தை வைத்துத் தீயது என்று ஒதுக்கக் கூடாது என்பது ஒரு உவமை.

பாற்கடல் பெரியது. அதனை அனைவரும் விரும்புவர். ஆனால் அதனுள் எழுந்த நஞ்சினை யாராவது உண்ணுவார்களா? எனவே நல்லதில் தீயது விளையலாம். தீயதில் நல்லது விளையலாம். எனவே பிறந்த இடம் கருதி யாரையும் ஏற்றத்தாழ்வு பார்கக்கக் கூடாது என்கிறார் சிவப்பிரகாசர்.

பிறப்பினால் மீக்கொள் உயர்வு இழிவு வேண்டற்க என்ற சிவப்பிரகாசரின் கருத்து, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற குறளின் எதிரொலிப்பு ஆகும்.

உருவு கண்டு எள்ளாமை

ஒருவரை மதிப்பிடும்போது அவரின் உருவம் கொண்டுச் சிறியவர், பெரியவர் என்று மதிப்பிட்டுவிடக் கூடாது. அது பிழையானதாகிவிடும்.

‘‘உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து” (திருக்குறள் 667)

என்ற குறளில் ஒருவரை உருவம் கொண்டு மதிப்பிட வேண்டும். அச்சாணியானது சிறியது என்றாலும் அதன் பணி பெரியது என்று உவமை காட்டி வினைத்திட்பம் அதிகாரத்தில் மொழிகிறார் வள்ளுவர்.

இதனை அடியொற்றிச் சிவப்பிரகாசர்,

‘‘உடலின் சிறுமைகண்டு ஒண்புலவர் கல்விக்
கடலின் பெருமை கடவார்- மடவரால்
கண்ணளவாய் நின்றதோ காணுங் கதிரொளிதான்
விண்ணளவா யிற்றே விளம்பு” (நன்னெறி 26)

கற்றவர்களை உருவத்தை வைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது. மிகச் சிறியதாக உள்ள கண் வானத்தைப் பார்க்கிறது. சூரியனின் ஒளியால் பொருள்களைப் பார்க்கிறது. கண் சிறியதா, வான் பெரியதா என்றால் உருவம் கொண்டு எதனையும் மதிப்பிட்டுவிடக் கூடாது என்ற கருத்தே பெரிதாகின்றது.

Siragu tamilagaththin saadhi2

இன்சொல் தரும் மகிழ்ச்சி

இனிய சொற்கள் சொல்பவருக்கும் இனிக்கின்றன. கேட்பவருக்கும் இனிக்கின்றன. வன்சொற்கள் கொடுமை செய்கின்றன. இதனை அறிந்தும் மானிடர்கள் வன்சொற்களைப் பயன்படுத்துவது ஏன் என்று படைப்பாளர்கள் கவலைப்படுகிறார்கள். இக்கவலை திருவள்ளுவர், சிவப்பிரகாசர் இருவருக்குமே உள்ளது.

‘‘இன்சொலால் அன்றி இருநீர் வியன்உலகம்
வன்சொலால் என்றும் மகிழாதே- பொன்செய்
கதிர்வளையாய் பொங்காது அழற்கதிரால் தண்ணென்
கதிர்வரவால் பொங்கும் கடல்” (நன்னெறி 18)

என்பது சிவப்பிரகாசரின் கவலை. வெம்மையான கதிர் சூட்டால் பொங்காது கடல். சந்திரனின் தண்ணொளியால் மட்டுமே கடல் பொங்கும். அதுபோல இவ்வுலகில் இனிமையான சொற்களைப் பேசினால் மகிழ்ச்சி. வன்சொற்களால் துன்பம் ஏற்படும். ஆகவே அதனைப் பேசவேண்டாம் என்கிறார் சிவப்பிரகாசர்.

இதனையே வள்ளுவர்,

‘‘சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்” (திருக்குறள் 98)
‘‘இன்சொல் இனிதுஈன்றல் காண்பான் எவன்கொல்லோ
வன்சொல் வழங்கு வது” (திருக்குறள் 99)

என்று இரு குறள்களில் எடுத்துரைக்கிறார். மனித குலம் நிலைபெற இன்சொல் இனியது என்பதை இரு படைப்பாளர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

உடம்பின் நிலை

உயிருக்கும் உடம்புக்குமான தொடர்பினைப் பற்றி வள்ளுவர் சிந்தித்துள்ளார். உயிருக்கும் உடம்பிற்கும் உள்ள தொடர்பானது முட்டைக்குள் இருக்கும் குஞ்சு போன்றது என்கிறார் வள்ளுவர். உரிய காலம் வரும்போது முட்டையை உடைத்துக் கொண்ட சிறிய பறவையானது வெளிப்படுவதுபோல உயிரானது சென்று விடும் என்கிறார் வள்ளுவர். (338). மேலும் உயிரானது தற்காலிகமாகத் தங்கியுள்ள வீடு உடல் என்பதும் வள்ளுவரின் கருத்தாகும்.

‘‘புக்கில் அமைத்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு” (திருக்குறள் 340)

என்ற குறளின் கருத்து இதுவாகும். இதனை அடியொற்றிச் சிவப்பிரகாசர்.

‘‘வருந்தும் உயிர்ஒன்பான் வாயில்உடம்பிற்
பொருந்துதல் தானே புதுமை- திருந்திழாய்
சீதநீர் பொள்ளல் சிறுகுடத்து நில்லாது
வீதலோ நிற்றல் வியப்பு” (நன்னெறி 12)

ஓட்டைக்குடத்தில் நீர் நிற்பதில்லை. ஆனால் ஒன்பது ஓட்டைகளை உடைய உடல் என்னும் பாத்திரத்தில் உயிர் தங்கியிருப்பது அதிசயம்தான் என்கிறார் சிவப்பிரகாசர். வள்ளுவருக்கு முட்டையும் சிறுபறவையுமாகத் தெரிந்த உயிர் நிலையாமை, இவருக்குப் பானையும் நீருமாகத் தெரிகிறது.

இவ்வாறு பல்வேறு திருக்குறள் கருத்துகளை எடுத்தாண்டு திருக்குறள் உண்மைகளை விளக்கம் செய்யும் நிலையில் நன்னெறி நூலைப் படைத்துள்ளார் சிவப்பிரகாசர்.

உவமை கையாளல்

வள்ளுவர் எடுத்தாண்ட உவமையைக் கையாண்டும் சிவப்பிரகாசர் திருக்குறள் வழி நின்றுள்ளார்.

‘ இல்லானுக்கு அன்புஇங்கு இடம்பொருள் ஏவல்மற்று
எல்லாம் இருந்தும் அவற்குஎன் செய்யும்” (நன்னெறி 15)

என்பது சிவப்பிரகாசரின் கருத்து. அதாவது அன்பு இல்லாதவனுக்கு உள்ள இடம், பொருள், ஏவல் போன்றன இருந்தும் அவற்றால் என்ன பயன் விளைய முடியும் என்பது இப்பாடலின் பொருள்.

இதற்கு உவமை ஒன்றைக் காட்டுகிறார் சிவப்பிரகாசர். ‘‘மொழியிலார்க்கு ஏது முதுநூல்” (நன்னெறி 15) என்பதே அவ்வுவமை. அதாவது எடுத்து மொழியும் திறன் இல்லாதவர்கள் நூல் கற்று என்ன பயன் என்பது இவ்வடியின் பொருள்.
இந்த உவமை வள்ளுவத்தின் வழிப்பட்டதாகும்.

‘‘இணர்ஊழ்த்தும் நாறாமலர் அனையர் கற்றது
உணர விரித்து உரையாதார்” (திருக்குறள் 650)

மேற்குறட்பாவில் நாற்றம் இல்லாத மலர் போன்றவர்கள் கற்றதை விவரிக்கத் தெரியாதவர்கள் என வள்ளுவர் மொழிகிறார். வள்ளுவர் காட்டிய உவமானமாக ஆக்கியுள்ளார். மொழியிலார்க்கு முதுநூலால் பயனில்லா நிலை போல அன்பில்லார்க்கு இருக்கும் வசதிகளால் பயனில்லை என்பது சிவப்பிரகாசரின் கருத்து. இவ்வழியில் வள்ளுவரின் உவமையைக் கூட எடுத்தாளும் நிலை நன்னெறியில் காணப்படுகிறது.

தொகுப்புரை

திருக்குறளின் கருத்துகளை எடுத்து மொழிபவராகச் சிவப்பிரகாசரன் விளங்கியுள்ளார். தன் நன்னெறி நூலில் திருக்குறள் தரும் நீதிகளை, உவமையை எடுத்தாண்டுள்ளார். இதன்வழி திருக்குறளின் தாக்கத்தை உடையது நன்னெறி என்பது உறுதியாகின்றது.

திருக்குறளின் உயிர்ப்பொருளான அறத்தை நிலை நிறுத்த சிவப்பிரகாசரும் முன்வந்துள்ளார். பிறப்பால் உயர்வு தாழ்வு பார்க்கக் கூடாது என்ற சமுதாய சிந்தனையில் வள்ளுவரின் கருத்தை ஏற்பவராக சிவப்பிரகாசர் விளங்கியுள்ளார். எவரையும் உருவம் வைத்து மதிப்பிட்டு விட இயலாது, உடல் நிலையில்லாதது போன்ற கருத்துகளில் இருவரிடமும் ஒற்றுமை காணப்படுகிறது.

செய்திகளை ஏற்பதிலும் வள்ளுவர் பயன்படுத்திய உவமையைக் கைக்கொள்ளுவதிலும் தேர்ந்தவராகச் சிவப்பிரகாசர் விளங்குகிறார்.

படிக்க இனிமை தரும் நிலையில் உவமைகள் கலந்து நீதிக்கருத்துகளை வழங்கியுள்ள நன்னெறி தொடர்ந்து தமிழ் இளையர்களால் வாசிப்புப் பழக்கத்தில் இருந்து வந்துள்ளது. அம்முறை இன்னும் தொடரவேண்டும்.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சிவப்பிரகாசரின் நன்னெறியில் திருக்குறள் ஆளுமை”

அதிகம் படித்தது