மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சி.மணியின் -’யாப்புடைத்த” கவிதைகள்

இல. பிரகாசம்

Jun 23, 2018

 siragu c.mani2தமிழில் புதுக்கவிதையின் காலத்தை மூன்று பிரிவுகளில் வகைசெய்யலாம். பரிசோதனைக் காலம்(1934-1947), மறுமலர்ச்சிக் காலம் (1959-1969), செல்வாக்கு காலம் (1970க்கு மேல்). என்று புதுக்கவிதையின் வளர்ச்சியை அப்துல் ரகுமான் இவ்வாறு குறிப்பிடுக் காட்டுகிறார். இது மறுமலர்ச்சிக் கால கவிஞர்களின் செயற்பாட்டைஅறிந்து கொள்ள உதவுகிறது.

தமிழுக்குப் புதுக்கவிதையை அறிமுகம் செய்து பரிசோதித்தது என்பது மணிக்கொடிக் காலம் என்றாலும், அதன் வளர்ச்சிக்கும் அதனுடைய சமூக அங்கீராத்தை உறுதி செய்து கொள்வதற்கும், மறுமலர்ச்சி காலம் மிகத் தீவிரமாக பணியாற்றியது. எனினும், மறுமலர்ச்சிக்குப் பின் சிலகாலம் அதாவது எழுத்து காலத்திற்கு பின் தொய்வு ஏற்பட்டது என்பதை மறுக்க முடியாது.

மறுமலர்ச்சிக் காலகட்டத்தில் தோன்றிய கவிஞர்கள் பலரும் பலவித வகைகளில் கவிதைகளை மேற்கொண்டு வெற்றி கண்டனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் சி.மணி. எழுத்து இதழில் ந.பி-யின் கவிதையை விமர்சித்த சி.சு.செ அதற்கு பின் பலருடைய கவிதைகளை அவ்வளவாக பொருட்படுத்தவில்லை. ந.பி-க்கு பின் அவர் கொண்டாடியது சி.மணியின் கவிதைகளைத்தான்.

சி.சு.செல்லப்பா மீது அன்றைய காலத்தில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு விமர்சனக்காரர் என்று. உண்மைதான், அவர் படைப்புகளை வெளியிடுகிறபோது விமர்சன கண்கொண்டுதான் வெளியிட்டார். அதன் விளைவு புதுக்கவிதை எனும் அன்றைய புதிய செடியானது மிகக் கவனமாக பிறவற்றின்தாக்கங்களுக்கு இறையாகாமல் வளர்க்கப்பட்டு இன்று பெரிய துறையாக வளர்ந்துள்ளது.

அதற்கு ஒரு உதாரணம் எனக் கொள்ளத்தக்க வகையில் சி.மணியின் படைப்புகளை எடுத்துக்காட்டாக குறிப்பிட்டுச் சொல்லலாம்.

சி.மணியின் கவிதையின் தன்மை:

எழுத்துக் காலக் கவிதைகளில் பலவித முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவைவடிவ அமைப்பாலும், வெளிப்படுத்தும் சொல் முறையினாலும், பொருள் கருத்தினாலும் பெரிதும் மாற்றத்தை கொண்டு வரப்பட்டன. அதற்கு செயலூக்கம் அளித்தவர்களுள் சி.மணியும் ஒருவர்.

சங்ககால இலக்கியங்களில் கையாளப்பட்ட கருத்துக்களை புதுக்கவிஞர்கள் பெருமளவில்புறந்தள்ளவே செய்தனர். இது மேலைநாடுகிளில் கூட பரவலாக காணப்பட்டிருந்தது. இந்நிலையில்டி.எஸ்.இலியட்-ன் ‘பாழ்நிலம்” மாற்றி அதன் கருப்பொருளையும், மரபு வழக்குகளையும் தற்காலக்கவிதை சூழலுக்கு ஏற்ப வடிவத்தை அளித்தல். இதன் பொருள் கவிதையை இறுக்கமடையச் செய்தல். இதன் மூலம் கவிதை இடைநிலைத் தன்மையோடு பழமையின் சாரத்தை ஏற்றுப் சொல்லும் பொருள் உத்தியில் புதியமணம் பரப்பியது.

தமிழில் இத்தகைய சோதனையை செய்வதற்கு டி.எஸ்.இலியட் தேவைப்பட்டார். அதன் தாக்கம் ஆளுமை சி.மணி தமிழுக்கு ஏற்படுத்தித் தந்தார். இது வெற்றிபெற்றது புதுக்கவிதையின் வரலாற்றில் குறிப்பிடப் பதிவாக ‘நரகம்” அமைந்தது. இம்முறையை தொடர்ந்து ‘வரும் போகும்” கவிதையிலும் காணமுடிகிறது.

யாப்புடைத்த கவிதை:

புதுக்கவிதைக்கு பலவிதமான விளக்கங்கள் கொடுக்கப்பட்டாலும் அது தொடர்பான விவாதம் நேர்கிறபோது பாமரனுக்கும் புரிகிற விதத்தில் சி.மணியின் வரி எப்போதும் குறிக்கப்பட்டு வந்திருக்கிறது.

                ‘யாப்புடைத்த கவிதை

                அணையுடைத்த காவிரி.

                யாப்பற்ற கவிதை

                இயற்கையெழில் இருக்க

                செயற்கையணி எதற்கென்று

                உடையுடன் ஒப்பனையும்

                நீக்கிவிட்ட கன்னி”

                                                (எழுத்து-1964)

புதுக்கவிதையின் எழிலை இக்கவிதை பறைசாற்றுகிறது.

பழந்தமிழ் மொழியாட்சி:

பண்ணெடுங்காலமாக தமிழ் மரபினை இலக்கியத்தின் கூறுகள் வாயிலாக மற்றொரு தலைமுறை கடந்து அதற்கடுத்து வருகிற புதிய தலைமுறையினர்க்கும் கடத்தப்பட்டன. அவை அழியாது வழக்கதில் தொடர்ந்து வந்திருக்கின்றன.

பிற்காலத்தில் ஏற்பட்ட கலாச்சார ரீதியில் கலப்பு, வேகமாக ஆங்கிலத்தை மோகிக்கத் தூண்டியது. இதனால் பின்னர் வளர்பருவத்தில் இருந்த இளைய தலைமுறை மொழியின் அருமையை அறியாது போகக்கூடிய சூழல் உருவானது. இது புதுக்கவிதையிலும் புகுவதற்கு ஏற்ற எல்லா வசதியும் இருந்தன. அத்தகை நிலையில் சி.மணி தனக்கிருந்த பழந்தமிழ் இலக்கிய பயிற்சியின் விளைவாக அவற்றின் கருப்பொருளையும் அல்லது தேவையேற்படின் அதனை நேரடியாகவும் சொல்லத் தவறவில்லை. அதை தன் கவிதைகளில் வெளிப்படையாகவும், மறைத்தும் சில குறியீடு மூலமாகவும் வெளிப்படுத்த கவிதையை அதற்காக குழைவாக வனப்படுத்தி வளப்படுத்தியிருப்பது அவரது செயல்பாடுகளில் தெரிகிறது.

அதற்கு உதாரணமாக, சில கவிதை வரிகளைப் பார்ப்போம்:

                ‘முக்காலம் தொடர்பில்லா முக்கூடு”

                                                (நடை ~முக்கோணம்|-1959)

                ‘ஆடிக் காட்டு வதில்லை@சதையை

                ஆட்டிக் காட்டு கிறார்கள்@ கவர்ச்சியை

                உடுத்துக் காட்டு வதில்லை@ உடையை

                எடுத்துக் காட்டு கிறார்கள்@”

                                                (ஞானரதம் ~நிறைகுறை| -1970)

                ‘அன்று மயிற்பொறி மற்றும் அணுவைக்

                கண்டு பிடித்து”

                                                (நடை ~கண்டுபிடிப்பு|-1969)

                ‘வெட்டுண்ட புண்ணென விம்மிய”

                                                (எழுத்து ~நரகம்|-1962)

                ‘பொய்யோவெனும் இடையோடு

                ஐயோவெனும் அரும்பினர்” (எழுத்து ~நரகம்|-1962

மேற்கண்ட வரிகளில் பழந்தமிழ் இலக்கியங்களில் ஆளப்பட்ட சொற்கள் அல்லது கருப்பொருள்கள் வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ கையாளப்பட்டுள்ளது தெளிவு.

வரும் போகும்:

நெருக்கடியான நகரவாழ்வு இன்று எல்லாருடைய வாழ்விலும் மிக எளிதாக நுழைந்து மற்றவர்களையும், நம்மையும் ஏதோவொரு காரணத்திற்காக ஒருவிதத்தில் துன்பப்பட வைக்கிறது. அது காலமாற்றத்தினால் ஏற்படுகிற பாதிப்புகளான நடை, உடை, மொழி, பார்வை என இப்படி பலவற்றிலும் அதிதீவிரமாக இழுக்துக் கொள்கிறது. அதிலிருந்து முழுவதும் மீள முடிவதில்லை. ஆனால் அதன் பாதிப்பில் இருந்து சற்று ஆற்றுப்படுத்திக் கொள்ள முடியும்.

அத்தகைய நிலையை சி.மணியின் “வரும் போகும்” நீண்ட கவிதையில் காணமுடிகிறது. அதில் ஒரு ஆற்றாமை தொடர்ந்து வருகிறது. அது இக்கவிதையில் எப்படி நிகழ்கிறது என்பதிலே தான் சிறப்பாக பாராட்டப்படுகிறது.

                ‘புதிய நட்பு வலைவீசும்

                நட்பில்லா மனிதர்களோ

                செவிதீட்டி நெருங்கிநிற்பர்

                செவிக்குணவு மட்டுமின்றி

                விழிக்குணவும் இருக்குமெங்கும்”

இக்கவிதை நடுத்தர மக்கள் அன்றாடம் அனுபவிக்கின்ற மனவோட்டத்தை படம் பிடித்துக் காட்டுகிறது.

நரகம்:

சி.சு.செல்லப்பா-வினால் மிக அதிகம் பேசப்பட்ட முயற்சிக் கவிதை இது. ‘எக்ஸ்பெரிமென்டல் என்கிறோமே- உத்திரீதியாக ஒரு சிறந்த சோதனை முயற்சி.” என்று பாராட்டி விமர்சித்திருக்கிறார் சி.சு.செ.

“நரகம்” கவிதைக்கு ஆதாரமாக டி.எஸ்.இலியட்டின் ‘பாழ்நிலம்” சி.மணிக்கு அமைந்திருப்பதை அவரே பலமுறை ஒப்புக்கொண்டிருக்கிறார். அது அவருக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.

“நரகம்” கவிதையின் வெற்றிக்கு காரணம் அதன் வடிவமோ அல்லது சொல்லும் முறையோ அன்று. அதன் பழமை மற்றும் புதுமையும் கலந்து செய்நேர்த்தி மற்றும் கவிதையை இறுக்கமடையச் செய்வதில் மேற்கொண்ட மெனக்கெடல் ஆகியவையே அதன் வெற்றிக்கு காரணமெனப்படுகிறது.

                ‘கலைந்த மழையுளமறைந்த பூஉள

                தாங்கிய செங்கை தலைக்கண் மேலுள

                ஒலித்த வளையுளஓய்ந்த விரலுள

                சரிந்த தலைப்பால் தெரிந்த மலருள

இவ்வரிகள் பழமையின் நீட்சியை புதுக்கவிதையில் அளித்திருப்பதை உணரமுடிகிறது. ஆனால் இது பழமை அல்ல என்பதில் மிக கவனம் கொள்ள வேண்டியுள்ளது. மேலும் பயன்படுத்திய பழைய இலக்கிய கருத்துக்கள் தக்கபடி அமைக்பட்பட்டுள்ளன. அதனை, ‘பொய்யோவெனும் இடையோடு ஐயோவெனம் அரும்பினர்” என்ற வரி திருக்குறளின்

                அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு

                நல்ல படாஅ பறை

என்ற குறளின் பொருளைக் கொண்டுள்ளதை உணரமுடிகிறது.

நகரம்- சாமனிய மனிதனின் உணர்வாக இல்லாது இச்சைகள் ஆசைகளை வெறுத்து ஒதுங்கும் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் தனிமுத்திரையை பதித்துள்ளது.

                ‘துருபிடித்த இதயத்தைத்

                துடைக்க வந்த நேரத்தில்

                துருவேற்றுவோர் எத்தனை?”

                ‘புணர்ச்சி மறத்தல் இன்றி

                புறவொழுக்கம் உயிரினும் ஓம்பி

                பேய்க்காற்று சீறும் போது

                மொய்குழல் தொங்கு மலராய்

                வீழ்ந்தொழிந்தாக வேண்டும்

                தேய்புரி பழங்கயிறு

                தாங்கவே தாங்காது.

மேற்கண்ட இவ்வரிகள் ஒருவன் இச்சைகளை வெறுத்து ஒதுக்க எண்ணும் மனவெழுச்சியின் சீற்றம் என்பதையும் தாண்டி வேறொன்றை ஏங்கி காத்திருக்கிறது.

பிற கவிதைகள்:

சி.மணியின் கவிதைகள் பொதுநிலை சார்பாக இருப்பினும் சமூகத்தை பிரதிபலிப்பவையாகவே இருந்து வந்துள்ளன.

                ‘ஏனிந்த வாழ்வென்னும்

                வளர் குழப்பம்

                முகமயிராய்க்

                கவலையின்றிக்

                கூட்டு வட்டிக்

                கடனாய் வளர் குழப்பம்?

                                                (எழுத்து-1964)

‘முடிவு” எனும் கவிதையில் வாழ்வின் இருப்பிற்கான வழி எது? என்று தேட முயற்சிக்கிறார்.

                ‘முடியாதா சாவைச்

                சுடுகாட்டில் எரித்துவிட?”

அவரது இருத்தலியலுக்கான வழியாக கண்டடைவது இலக்கியத்தை. அதை மட்டுமே அவர் நம்புகிறார். அதனை,

                ‘இலக்கிய வழியில் நிரந்தரம் கிடைக்கும்

                கலைகள் கொண்டு, அறிவினைக் கொண்டு,

                அறமும் அன்பும் கொண்டு, மனிதன்

                சாவைச் சுடுகாட்டில் எரித்துவிட முடியும்”

                                                                (நடை-1954)

என்று தீரமாக வாழ்வின் முழுக்காலத்திலும் நம்பினார் என்றும் கூட கூறலாம்.

‘அறை-வெளி” என்னும் கவிதையில் தன்னை சிறைபடுத்திக் கொண்டதன் துயரநிலையினை குறிப்பிடுகிறார்,

                ‘மேற்கே நடந்தேன் இடித்தது ஒரு சுவர்

                தெற்கே நடந்தேன் இடித்தது ஒரு சுவர்

                வடக்கே நடந்தேன் இடித்தது ஒரு சுவர்

                கிழக்கே நடந்தேன் இடித்தது ஒரு சுவர்”

                                                                (நடை-1969)

சி.மணி தன்காலத்தில் புதுக்கவிதையை தீவிரமாக வளர்தெடுத்தவர். அவரது கவிதைகள் நடையாவருக்கும் எளிதன்று மிக நுட்பமானது. ஆழ்ந்த பொருள் கொண்டது. தமிழ் இலக்கியத்தை புதுக்கவிதையின் வாயிலாக பரப்ப முயன்றார். அவர் எழுத்து இதழின் கவிதைக் குறியீடு. அவருடைய யாப்புடைத்த கவிதை அணையுடைத்த காவிரியாய் பாய்ந்து வளம் சேர்த்துள்ளது.


இல. பிரகாசம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சி.மணியின் -’யாப்புடைத்த” கவிதைகள்”

அதிகம் படித்தது