மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி2

ஆச்சாரி

Mar 29, 2014

ஒருமுறை விடுமுறைக்காக கட்டாக் வந்திருந்த போசிற்கு, அருகில் உள்ள கிராமப்புறங்களுக்குச் செல்ல சந்தர்ப்பம் நேர்ந்தது. முன்னரே பழக்கமான கிராமப்பகுதிகள்தான் என்றாலும் அங்கு போசு கண்ட காட்சிகள் அவர் மனதை நோகச்செய்துவிட்டன. ஊர் முழுக்க காலரா பரவி இருந்தது.

படிப்பறிவில்லாத மக்கள், எலும்பும் தோலுமாக உள்ள குழந்தைகள், இருக்கும் இடம், சுவாசிக்கும் காற்று எதிலும் தூய்மை இல்லை, நோய்வாய்ப்பட்ட மக்கள், வைத்தியம் செய்துகொள்ளும் அளவிற்கு வசதியுடன் இல்லை. யாரோ ஓங்கி முகத்தில் அறைந்தாற்போல் ஒரு வலி போசின் நெஞ்சில். ஏழ்மையை முதன்முறையாக உணர்ந்துகொண்டார் போசு. அந்த கிராமத்து வறுமை அவர் மனதை விட்டு அகல நீண்டகாலமாகியது.

1914-ம் ஆண்டு விடுமுறைக்காக தன் வீட்டிற்குத் திரும்பினார் போசு. அப்பொழுது அவருக்கு 16 வயது. ஒரு நாள் திடீரென்று வீட்டில் அவரைக் காணவில்லை. எல்லா இடங்களையும் தேடிப்பார்த்துவிட்டார்கள். தேடுதலுக்கு ஆட்களை அனுப்பி வைத்தார் தந்தை ஜானகிநாத். எனினும் ஒரு தகவலும் இல்லை.

இப்பொழுதுதான் கல்கத்தாவிலிருந்து திரும்பியிருக்கிறார் பிறகு எங்கு போயிருப்பார்?.

கால்போன போக்கில் ஆழ்ந்த சிந்தனையுடன் நடந்துகொண்டிருந்தார். போசு எங்கே?.

அவருக்குத் தெரியவில்லை ஆனால் காடுகளை நோக்கித்தான் தனது பயணம் இருக்க வேண்டும் என்பது மட்டும் சந்தேகத்திற்கு இடமின்றித் தெரியவந்தது. காட்டில் என்ன கிடைக்கும்?, எதைத் தேடி இந்தப் பயணம்? தெரியாது.

“தேடல்தான் வாழ்க்கை, தேடிப்பார் கிடைக்கும்” என்றன அவர் படித்த புத்தகங்கள் எனவே கிளம்பிவிட்டார்.

விவேகானந்தருக்கு ஒரு ராமகிருஷ்ணர் கிடைத்ததைப்போல் தனக்கும் ஒரு குரு கிடைத்தால் தன்னுடையத் தேடல் முற்றுப் பெறும் என்பது போசின் கணிப்பு.

இப்போது அவருடைய தேடல் ஒரு நல்ல குருவிற்காக.

இந்தத் தேடலுக்கு முன்பே போசு வேறு சில ஆயத்தங்களையும் செய்துவிட்டார். “ஞானத்தை நிரப்பிக்கொள்ள வேண்டுமானால் ஏற்கனவே நிரப்பிக் கொண்டதைக் கீழே கொட்டியாக வேண்டும். பற்றுதலைத் துண்டித்துக்கொள்ள வேண்டும். உடைமைகள் என்று எதுவும் இருக்கத் தேவையில்லை”. அவர் வாசித்த நூலில் காணப்பட்ட வாசகங்கள் இவை. அவ்வாறே செய்தார் போசு.

முதலில் உடைமைகளைத் துறந்தார். பிறகு பொருட்களை சேமிக்கும் வழக்கத்தைத் தொலைத்தார். ருசி பார்த்து சாப்பிடுவதை நிறுத்திக்கொண்டார். கேளிக்கை,விளையாட்டுகளில் சிறுவயதில் இருந்தே நாட்டம் இருந்ததில்லை என்பதால் பிரச்சனையில்லை.

போசிடம் இருந்தது ஒரு வேட்டி, ஒரு சட்டை மட்டுமே. அதை  வைத்துக்கொண்டே வாழ்வின் எல்லை வரைச் சென்று பார்த்துவிட முடியும். பிறகு அங்கிருந்து மற்றொரு உலகம் தன்னை வரவேற்கும் என்று நினைத்தார். அதை அடைவதற்கு ஒரு குரு போசிற்கு தேவைப்பட்டார்.

நாட்கள், வாரங்கள், மாதங்கள் வேகமாகச் சென்றது. படிப்பு, பெற்றோர் எல்லாமே மறந்துவிட்டது. தான் வாழ்ந்துகொண்டிருந்த உலகத்தை விட்டு வெகு தொலைவு வந்துவிட்டோம் என்ற உணர்வே போசுக்கு மகிழ்ச்சியை அளித்தது.

ஏகாந்த வாழ்க்கை இனித்தது. நிறைய திரிந்தார், ஏதாவது ஒரு மரத்தின் அடியில் சுருண்டு படுத்துக்கொண்டார்.

காசி, ஹரித்துவார், பிருந்தாவனம் என்று புண்ணியப்பகுதிகளை வலம் வந்தார். தன்னைப்போலவே அங்கு பலர் திரிந்ததைப் பார்த்து போசிற்கு திருப்தியாக இருந்தது. அதே சமயம் மற்றொரு கேள்வியும் முளைத்தது. இவ்வளவு அடர்ந்த தாடியுடன் இத்தனை பெரிய வயதில் பிச்சைப் பாத்திரத்தைச் சுமந்து கொண்டு அலைகிறார்களே! இன்னமுமா இவர்களுடைய தேடல் முற்றுப்பெறவில்லை?, தேடல் அத்தனைக் கடினமானதா?, இவர்களுடைய குரு யார்?, விசாரித்தபோது இமயமலையைச் சுட்டிகாட்டினார்கள். சாதுக்கள், சந்நியாசிகளின் கூடாரம் இமயம் என்றும் தெரிந்துகொண்டார்.

அங்கும் சென்றார் முன்பு பார்த்ததைவிட மிக நீளமான பஞ்சுதாடியுடன் பலர் கூட்டம் கூட்டமாக அலைந்து கொண்டிருந்தனர். போசு தயங்கி நின்றார்.

இதுதான் சந்நியாசிகளின் உலகமா?,

இவர்கள் பரம்பொருளைக் கண்டுவிட்டவர்களா?, காணப்போகிறவர்களா?

இவர்களில் ஒருவரைத்தான் குருவாக ஏற்றுக்கொள்ள     வேண்டுமா? புரியவில்லை.

அவர்களுடன் பேசிப்பார்த்தார், அவர்களது பேச்சில் எந்தவித சித்தாந்தமும் இல்லை. சிலருடன் சேர்ந்து சிலகாலம் சுற்றினார், அவர்களுடன் தங்கினார், சாப்பிட்டார், அவர்களுடைய அன்றாட நிகழ்வுகளைக் கவனித்தார்.

ஒருமுறை ஹரித்துவாரிலுள்ள சத்திரத்திற்குச் சாப்பிட வரிசையாக நின்றுகொண்டிருந்த சாதுக்களுடன் போசும் நின்றார். இவருடைய முறை வந்தது, சாப்பாடு பரிமாறிக்கொண்டிருந்தவர் போசைப் பார்த்தார்.

யார் நீ?

நானும் ஒரு சந்நியாசிதான் ஏன்?

உன்னைப் பார்த்தால் வங்காளியைப்போல் இருக்கிறதே?

நான் ஒரு வங்காளியன்தான்.

அப்படியானால் உனக்கு உணவு கிடையாது.

அதிர்ச்சியுடன் அவரை ஏறிட்டுப்பார்த்தார் போசு.

ஏன்?

வங்காளியர்களுக்கு நாங்கள் உணவு அளிப்பதில்லை.

அதுதான் ஏன்?

வங்காளியர்கள் கிறிஸ்தவர்களைப்போல சுத்தமாக இருக்க மாட்டார்கள். உங்களைப் போன்றவர்களுக்கு உணவளிப்பது அசுத்தமான செயல்.

போசால் அதிர்ச்சியிலிருந்து மீளவே முடியவில்லை. எல்லாவற்றையும் துறந்த சாமியார்கள் கூட இப்படி நடந்து கொள்கிறார்களே? வங்காளியர்களுக்கு உணவளிப்பது அசுத்தமான செயல் என்று எந்த வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது?

புத்த கயா சென்றார் போசு. அங்கும் கிட்டத்தட்ட இதே வரவேற்புதான்.

“தனியாகத் தட்டு கொண்டுவா! எங்களது தட்டில் நீ சாப்பிடக்கூடாது” என்றதும் வெறுத்துப்போனது போசிற்கு.

இவர்கள்தான் முற்றும் துறந்த சாமியார்களா? இதற்குப் பெயர்தான் சந்நியாசமா?

போசிற்கு இவர்களினால் புரியத்துவங்கியது.

இவர்கள் சந்நியாசிகள் என்று தங்களை அழைத்துக் கொண்டாலும் அடிப்படையில் அவர்கள் அனைவரும் சோம்பேறிகள். உணவு கிடைத்தால் போதும் என்ற எண்ணம் கொண்ட கூட்டம், அவர்களிடம் எந்தவொரு தேடலும் இல்லை. புத்தரைப்போல் எல்லாவற்றையும் துறந்து காட்டுக்குப் போகவில்லை இதுதான் உண்மை. இவர்களை ஏழைகள் என்று  கூட சொல்லமுடியாது. அவர்கள் உழைப்பாளிகள். போதுமான கூலி கிடைக்காததால் அல்லல்படுபவர்கள் ஏழைகள். இவர்கள் உழைக்கத் தயங்குகிற சோம்பேறிகள்.

போசு ஒரு முடிவுக்கு வந்தார். அது ஞானத்தைத் தேடும் கூட்டம் அல்ல வெறும் அன்னக்காவடி கூட்டம் இவர்களுக்கு தத்துவம் தெரியாது, ராமகிருஷ்ணரைத் தெரியாது, கீதை தெரியாது.

கடைசியாக ஒருமுறை காசிக்குச் சென்று பார்த்துவிடலாம் என்று கிளம்பினார் போசு. காசியில் உள்ள ராமகிருஷ்ணா மடத்துக்குச் சென்றார்.

உணவு சாப்பிடும் நேரம் வந்தது. நீண்ட வரிசையின் காலியாக இருந்த இடத்தில் சென்று அமர்ந்துகொண்டார் போசு. அப்போது திடீரென்று ஒருவர் அவசர அவசரமாக ஓடி வந்தார் “நீ இதில் உட்கார வேண்டாம், உனக்கு வேறு இடம் இருக்கிறது. இங்கே பிராமணர்கள் மட்டுமே உட்காரலாம்”.

எழுந்த போசு நேராக மடத்தின் தலைவரிடம் சென்றார். “ராமகிருஷ்ணரின் உபதேசங்களைப் பற்றி பேசுகிறீர்கள் ஆனால் இப்படித் தனித்தனி வரிசை அமைத்து உணவு அளிப்பது சரியானதுதானா?, மனிதர்களுக்கு இடையே எந்த வேற்றுமையையும் பார்க்கக்கூடாது என்றுதானே அவர் சொல்லியிருக்கிறார்.

ஆமாம் ஆனால்…

அவரது பதிலுக்குக் காத்திராமல் அங்கிருந்து வெளியேறினார் போசு.

பின் வீடு திரும்பினார் தன் தாய் பிரபாவதியைப் பார்த்து அழத் தொடங்கினார் நடந்த சம்பவங்களை மனதில் நினைத்து.

It may take a little time to android phone locator get used to the tracker, but once you do, you’ll have the knowledge you need to make better decisions about your child’s use of technology

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி2”

அதிகம் படித்தது