மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 21

கி.ஆறுமுகம்

Aug 9, 2014

subash-21-3நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளில் காந்தியின் ஆதரவாளர் பட்டாபி சீத்தாராமையாவை, மௌலானா அபுல்கலாம் ஆசாத், வல்லபாய் பட்டேல், ஜவஹர்லால் நேரு, ராஜாஜி, ராஜேந்திர பிரசாத், ஜே.பி. கிருபளானி, பண்டித வல்லபபந்த் போன்ற நாடறிந்த தலைவர்கள் ஆதரித்தும் அவர் தோற்று, போசு வெற்றி பெற்றதை மக்கள் கொண்டாடினார்கள். நாடறிந்த பழம்பெரும் காங்கிரசு தலைவர்கள் அனைவரும் ஓரணியில் நின்றும் போசின் வெற்றியை தடுக்கமுடியவில்லை. எனவே காந்தி இது பட்டாபியின் தோல்வி அல்ல என் தோல்வி என்று அறிக்கைவிட்டார். இதை அனைத்தையும் பார்த்த பிரிட்டிசு அரசாங்கம் அஞ்சி நடுங்கிற்று. இதுவரை காங்கிரசு தலைவர்கள், காங்கிரசு உறுப்பினர்கள், காங்கிரசு கட்சி அனைவரும் வலதுசாரிகள் என்று எண்ணிய அரசுக்கு செல்வாக்கு படைத்த அனைத்து தலைவர்களையும் பின்னுக்கு தள்ளிவிட்டு, மக்கள் கூட்டம் அனைத்தும் ஏகாதிபத்தியத்தைக் கூண்டோடு கருவறுக்க சபதம் பூண்டுள்ள இந்த இளம் தலைவரின் பின் நிற்பது நாட்டுமக்களின் எண்ணப்போக்கு, எந்த திசையில் பிரதிபலிப்பதாக இருக்கின்றது என்று எண்ணி பிரிட்டிசு ஏகாதிபத்திய வாதிகள் புரிந்து கொண்டு அஞ்சினர். போசு வெற்றியைக் கண்டதும் அதன் மகிழ்ச்சியில் மூழ்கவும் இல்லை, தோற்றவரை தூற்றவும் இல்லை.

அவர், நாட்டு மக்களுக்கு இந்தத் தேர்தல் முடிவுக்குப் பின் அவர்கள் செயல்பட வேண்டிய திட்டத்தையும், காங்கிரசு உறுப்பினர்கள் செயல்படவேண்டிய செயல்திட்டத்தையும் திட்டம் தீட்ட ஆரம்பித்தார். இந்த வெற்றி தோல்வியை முன்வைத்து யாரும் காங்கிரசு கட்சிக்குள் பிளவு ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட வேண்டாம். நமக்கு, நாட்டுக்கு செய்ய வேண்டிய வேலைகள் ஏராளம் உள்ளது. அதில் கவனத்தை செலுத்த வேண்டும். தேர்தலோடு கருத்து வேற்றுமைகள் அனைத்தும் புதைக்கப்பட்டு விட்டதாகவும், அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று பொறுப்புணர்வோடும், பெருந்தன்மையாகவும் ஓர் அறிக்கையை விட்டார் போசு. பின் போசு, நான் பலமுறை காந்தியின் கருத்துக்கு மாறுபட்ட கருத்துகளைப் பகிரங்கமாகச் சொல்லியிருக்கிறேன். ஆதனால் அவர் மீது நான் கொண்டுள்ள மரியாதை எள்ளளவும் குறையவில்லை மற்றும் காந்தி என்னைப் பற்றி எப்படிப்பட்ட எண்ணம் கொண்டிருக்கிறார் என்பது எனக்குத் தெரியவில்லை. அவர், என்ன நினைத்துக் கொண்டிருந்தாலும் சரி என்னைப் பொறுத்தவரை நான் அவரின் முழுநம்பிக்கையை பெறுவதற்காக இடைவிடாது முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். ஏனெனில் நம் நாட்டு மக்கள் அனைவரின் நம்பிக்கையையும் பெறுவதில், வெற்றி பெற்ற ஒரு மகத்தான தலைவர் காந்தி எனவே நான் எத்தனை வெற்றி பெற்றாலும் அது காந்தியின் நம்பிக்கைக்குரியவன் என்று அவரிடம் நான் பெறுவதே எனக்கு சிறந்த வெற்றி பின் காந்தியும் மற்ற காங்கிரசு தலைவர்களும் நடந்ததை மறந்துவிட்டு நம்மை எதிர் நோக்கியுள்ள தேசப் பணியில் என்னோடு பூரணமாக ஒத்துழைக்கும்படி அனைவரையும் பணிவோடு கேட்டுக் கொள்கிறேன் என்றார் போசு.

subash10-1இந்த அறிக்கையைக் கண்டபிறகும் காந்தி மற்றும் காந்தி ஆதரவாளர்களிடம் மற்றும் ஜனநாயகவாதிகள் என்று கூறிக் கொள்ளும் காங்கிரசு தலைவர்களிடமும் எந்தவித மாற்றத்தையும் காணமுடியவில்லை. மற்றும் காந்தி, காங்கிரசு உறுப்பினர்கள் மற்றும் பலர் போசின் பெரும்பான்மை வெற்றிக்கு உறுதுணையாக நின்றவர்கள் அனைவரும் செயல்படும் திட்டத்தோடு சிறுபான்மையோர் ஒத்துப்போக முடியாவிட்டால் அவர்கள் காங்கிரசை விட்டு வெளியேறிவிட வேண்டும் அல்லது முடிந்தால் பெரும்பான்மையோடு சேர்ந்து மேலும் பலத்தை அதிகரித்து செயல்பட வேண்டும். அவ்வாறு ஒத்துழைக்க முடியாத போது அவர்கள் ஒதுங்கி இருப்பதே நல்லது. காங்கிரசு கட்சிக்கு இருப்பதை தர்மசங்கடமாக கருதுகிறவர்கள், எந்தவித விரோத மனப்பான்மையும் இல்லாமல் காங்கிரசை விட்டு வெளியேறி விடலாம். ஆனால் போசுக்கு எதிர்பாக அல்லாமல் கட்சிக்கு வெளியே இருந்து திறமையாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அவர்கள் வெளியேற வேண்டும் என்றார்.

1939 மார்ச் மாதம் திரிபுராவில் 52-வது காங்கிரசு மகாசபை கூட வேண்டியிருந்தது. இந்த நேரத்தில் போசுக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டது. தனக்கு வந்த நோய் என்னவென்று மருத்துவர்கள் கண்டுபிடிக்கமுடியவில்லை திடீரென்று காய்ச்சல் உயர்வதும் பின் சில மணிநேரத்தில் குறைவதும் பின் உயர்வதும் தன்னால் கரத்தை உயர்த்த கூட முடியாத நிலையில் தான் இருந்ததாகவும், கல்கத்தாவிலிருந்து வெளிவரும் மாடர்ன் ரெவ்யூ பத்திரிகையில் 1939 ஏப்ரலில் (My Strange Illness) “என்னுடைய விசித்திர வியாதி” என்ற தலைப்பில் போசு எழுதிய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

subaash13-5இந்த உடல் நலம் குன்றிய நிலையிலும் எப்படியாவது காங்கிரசு காரிய கமிட்டி கூட்டத்தில் பங்கு கொள்ளவேண்டும் என்று ஒரு தனி விமானத்தை சில நண்பர்களின் மூலம் ஏற்பாடு செய்தனர். இருந்தும் போசிற்கு அதிகமாக உடல் நோய்வாய்ப்பட்டதினால் கூட்டத்தை ஒத்தி வைக்குமாறு காந்திக்கு தந்தி கொடுத்தார். ஏனென்றால் நடக்கவிருக்கும் திரிபுரா காங்கிரசு மாநாட்டிற்குத் தேவையான பல தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட இருந்தது. காரியகமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் காந்தியின் ஆதரவாளர்கள், பழைய காரியகமிட்டி உறுப்பினர்கள் தானும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை எனில் அவர்கள் எடுத்த தீர்மானத்தைதான் மாநாட்டில் முன்மொழிய வேண்டிருக்கும். இது தன்னை தேர்ந்தெடுத்த இடதுசாரிகளுக்கு பிடிக்காமல் போய்விட்டால் பெரிய குழப்பங்கள் ஏற்படும் என்று எண்ணிய போசு காரியகமிட்டி கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் போசின் வெற்றியில் விருப்பம் இல்லாமல் இருந்தவர்கள் அவரை பழிவாங்க நேரம் பார்த்தவர்கள், போசு காரியகமிட்டி உறுப்பினர்களை நம்பாமல் கூட்டத்தை தடுக்கத்தான் இவ்வாறு செயல்படுகிறார் என்று குற்றம்சாட்டி காரியகமிட்டி உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்தனர்கள். அவர்கள்

 1. சர்தார் வல்லபாய் பட்டேல்
 2. மௌலானா அபுல் கலாம் ஆசாத்
 3. பாபு ராஜேந்திர பிரசாத்
 4. திருமதி. சரோஜினி நாயுடு
 5. புலாபாய் தேசாய்
 6. பட்டாபி சீத்தாராமையா
 7. ஹரிகிருஷ்ண மெஹதாப்
 8. ஜே.பி. கிருபளானி
 9. கான் அப்துல் கபார்கான்
 10. ஜெயராம் தாஸ் தௌலத்ராம்
 11. ஜம்னாலால் பஜாஜ்
 12. பண்டித கோவிந்த வல்லபபந்த்

இந்தக் காரியகமிட்டியில் மொத்தம் 15 பேர்கள் கொண்ட கமிட்டி. இதில் 12 உறுப்பினர்கள் ராஜினாமா செய்துவிட்டனர்கள். மீதி மூன்று பேர் போசு, அவரது சகோதரர் சரத் சந்திரபோசு மற்றும் நேரு. ஆனால் ஜவஹர்லால் நேரு ராஜினாமா செய்யாமல் தாம் புதிய காரியகமிட்டியில் அங்கம் வகிக்க விரும்பவில்லை என்று போசுக்கு தனிப்பட்ட கடிதம் எழுதினார். திரிபுரா காங்கிரசு ஒரு சிறப்பு கூட்டத்தை கூட்டி அதில் போசு, காந்தியின் அனுமதியுடன் அவர் நியமிக்கும் காரியக்கமிட்டியை காங்கிரசு தலைவர் போசு ஏற்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. அதை வங்காள காங்கிரசு கடுமையாக எதிர்த்து பின் போசுக்கும் காந்திக்கும் சமரசம் செய்ய வேண்டும் என்று நேருவிடம் கேட்டுக் கொண்டார்கள். அதற்கு இணங்க நேருவும் பலமுறை காந்தியையும் போசையும் சந்தித்தார். ஆனால் காந்தியின் பதிலை அவரது தேர்தல் வேட்பாளரான பட்டாபி சீத்தாராமையாவே இவ்வாறு கூறுகிறார். “காந்தி ஒரு வழியாக போசை இந்திய அரசியலை விட்டே ஒதுக்கிவிட வேண்டும் என்று தீர்மானித்திருந்த மாதிரி இருந்தது. காந்தியின் பிடிவாதத்தால் சமரசம் ஏற்படாமல் போயிற்று”. போசிற்கு காரியகமிட்டி உறுப்பினர்கள் ராஜினாமாவை ஏற்பதை தவிர்க்க முடியாத சூழல் அமைந்தது.

subash-21-41939-மார்ச் 11ம் தேதி அன்று திரிபுராவில் மகாசபை கூட்டம் கூடுவதாக இருந்த நேரத்தில் மார்ச் 3-ம் தேதி காந்தி ராஜ்கோட் சமஸ்தான போராட்டம் சம்பந்தமாக உண்ணாவிரதத்தை ஆரம்பித்துவிட்டதால் மார்ச் 5ல் படுத்தபடுக்கையில் இருந்து கொண்டு போசு மகாசபை கூட்டத்திற்கு கல்கத்தாவில் இருந்து இரயிலில் புறப்பட்டுவிட்டர். செத்தாலும் திரிபுரா காங்கிரசு மேடையில் என் உயிர் போகட்டும் என்று வந்தார் போசு. இரயிலில் இருந்து ஆம்புலன்ஸ் வண்டியில் திரிபுராவிற்கு கூட்டிச்சென்றனர். உடன் அவரது அன்னை, அண்ணன் மற்றும் மருத்துவர்கள் வந்தனர். திரிபுராவில் 52வது காங்கிரசு மாநாடு என்பதற்காக 52 யானைகள் பூட்டிய அலங்கார தேரில் போசை ஊர்வலமாக வர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அவரது உடல்நிலை கருதி அவரது புகைப்படம் வைத்து ஊர்வலம் நடத்தப்பட்டது.

-தொடரும்


கி.ஆறுமுகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 21”

அதிகம் படித்தது