நவம்பர் 26, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 34

கி.ஆறுமுகம்

Nov 8, 2014

bosu19-2போசு ஜெர்மனியில் இருந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் செல்லத் திட்டம் தொடங்கியதும், ஜெர்மன், இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளின் உயர் அதிகாரிகள் ஒரு கூட்டத்தினை நடத்தினர். அதில் போசை எந்த வழியில் ஜெர்மனியிலிருந்து ஒரு ஆபத்தும் இல்லாமல் ஜப்பானுக்கு அனுப்புவது என்று ஆலோசனை நடைபெற்றது. விமானத்தின் மூலம் அனுப்பலாம், இது போர் காலம், இந்த காலகட்டத்தில் இத்தாலியின் புதிய ரக விமானம் ஒன்று இத்தாலியிலிருந்து புறப்பட்டு இடையில் எங்கேயும் நிற்காமல் தென்கிழக்கு ஆசியாவிற்கு சென்றிருந்தது. ஆனால் எதிரியின் தாக்குதலினால் விமான விபத்து ஏற்படலாம். மாற்று வழி என்றால் கடல் பயணம். இதிலும் எதிரியின் போர் கப்பல், நமது கப்பலைத் தாக்கலாம். வேறு ஏதாவது மாற்று வழி உள்ளதா என்று ஆலோசனை தீவிரமாக நடைபெற்றது. ஜெர்மனியின் இராணுவ அதிகாரிகள் போசை கடலுக்கு அடியில் செல்லும் நீர் மூழ்கிக் கப்பலில் போசை அனுப்பிவைக்கலாம் என்றனர். உடனே போசு நான் சாதாரனமான கப்பலில் செல்லுவதற்குக் கூடத் தயாராக உள்ளேன் என்றார். இறுதியில் ஜெர்மனியின் அதிகாரிகள் கூறிய ஆலோசனையை இத்தாலி, ஜப்பான் அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர். இது போர் காலம் என்பதினால் நீர் மூழ்கிக் கப்பல் பயணம் என்பதினாலும் போசு, தன்னுடன் ஒரே ஒரு உதவியாளரை மட்டும் அழைத்துச் செல்லலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

உடனே கடல் வழி பாதையும் திட்டம் தீட்டப்பட்டது. ஜெர்மனியிலிருந்து நீர் மூழ்கி கப்பல் புறப்பட்டு இங்கிலீஷ்கால்வாய் வழியாக பிஎஸ்கே வளைகுடாவை அடைந்து, அட்லாண்டிக் கடல் வழியாகச் சென்று மேற்கு ஆப்பிரிக்கா ஓரமாகப் பயணம் செய்து இந்து மகா சமுத்திரத்தில் நுழைந்து தென்னாப்பிரிக்கா வழியாகத் தொடர்ந்து பயணம் செய்து இறுதியாக மடகாஸ்கர் தீவின் தென்பகுதியை அடைய வேண்டும். அங்கிருந்து ஜப்பானின் நீர்மூழ்கிக்கப்பலுக்கு போசும் அவரது உதவியாளரும் மாற வேண்டும், பின் ஜப்பான் நீர்மூழ்கிக் கப்பல் போசை பத்திரமாக அழைத்துச் செல்ல வேண்டும் என்று பயணத்தின் திட்டங்கள் முடிவானது. ஏனென்றால் நீர் மூழ்கிக் கப்பல் பயணம் என்று முடிவானதும் மூன்று நாட்டில் எந்த நாட்டின் நீர்மூழ்கிக் கப்பலை பயன்படுத்துவது என்று ஆலோசனை எழுந்தது. எனவே ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல் பாதி தொலைவு பின் ஜப்பான் நீர்மூழ்கிக்கப்பல் மீதி தொலைவு என்றும் முடிவு செய்யப்பட்டது.

subash2போசின் பயணம் தொடங்குவதற்கு முன்பே ஜப்பானிலிருந்து ராஷ்பிகாரி போசு என்பவர் போசுக்கு ஓர் அழைப்பை விடுத்தார். தனக்கு வயதாகிவிட்டதால் இங்குள்ள இந்திய தேசிய இராணுவத்தின் (INA) தலைமையை போசு வந்து ஏற்றுக்கொள்ளுமாறு செய்தியை அனுப்பியிருந்தார். இந்த ராஷ்பிகாரி போசு, 1911-ல் லார்ட் ஹார்டிங் என்பவரைக் கொல்ல வெடிகுண்டு வீசிய குற்றத்துக்காக இந்தியாவில் தேடப்பட்டு வரும் ஒரு இந்திய சுதந்திர தாகம் கொண்ட குற்றவாளி. இவர் அப்பொழுது இந்தியாவிலிருந்து ஜப்பான் தப்பிச் சென்று அடைக்கலம் பெற்றிருந்தார். அங்கு இவரின் தலைமையில் மோகன்சிங் என்பவரும் ஃப்யுஜிவாரா என்னும் ஜப்பானியரும் இணைந்து உருவாக்கியதே இந்த இந்திய தேசிய இராணுவம் (INA). போசு ஜெர்மனியில் இருந்து புறப்படுவதற்கு முன் அங்கு அவர் தொடங்கிய பணிகள் அனைத்தும் தொடர்ந்து நடைபெறுவதற்கு, இராணுவப் பயிற்சி பெற்ற இந்திய இராணுவ வீரர்களைக் கண்டு, இந்திய விடுதலை ஒன்றுக்குத்தான் நீங்கள் போராட வேண்டும், வேறு யாரைக் கண்டும் நீங்கள் அஞ்ச வேண்டாம். யாராவது மற்ற நாட்டின் மீது போர் தொடுக்க தங்களுக்குக் கட்டளை பிறப்பித்தாலும் நீங்கள் அடிபணிய வேண்டாம். நீங்கள் அனைவரும் முழு சுதந்திரமாக உங்கள் பணியை தொடர வேண்டும். நமது எண்ணம் முழுவதும் இந்திய விடுதலை ஒன்று மட்டும்தான். நீங்கள் இந்திய இராணுவ வீரர்கள், கூலிப்படை அல்ல. ஜெர்மன் இராணுவ அதிகாரிகள் யாரும் உங்களுக்குக் கட்டளையிட முடியாது, இட்டாலும் துணிந்து சொல்லுங்கள் நாங்கள் இந்திய இராணுவம் உங்கள் தலைமையை ஏற்கமுடியாது என்று ஜெர்மனியில் இந்தியர்களுக்கு அறிவுறுத்தினார். ஜெர்மனியில் போசு செய்த பணிகள் அனைத்தும் தொடர்ந்து தடையின்றி செயல்பட ஆட்களை நியமித்தார். சுதந்திர இந்திய மையத்தின் பொறுப்பை ஏற்க இருந்த ஏ.ஸி.என்.நம்பியாரிடம் தேவையான ஆலோசனைகளையும் குறிப்புகளையும் ஒப்படைத்தார்.

subash1போசின் பயணம் மிகவும் இரகசியமாக பாதுகாக்கப்பட்டது அது போர்க்காலம் என்பதினால் போசின் பயணம் தொடங்கும் சமயத்தில் ஜப்பானின் கடற்படைத் தலைவர் தளபதி ஒரு ஆட்சேபனையை எழுப்பினார். இராணுவ நீர் மூழ்கிக்கப்பலில் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள்தான் பயணம் செய்ய வேண்டும். சிவிலியன்கள் எவரும் பயணம் செய்யக் கூடாது என்பது ஜப்பானிய சட்ட விதியாகும். போசு ஓர் அரசியல் தலைவர். அவர் இராணுவ நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்வது எப்படி என்பதுதான் அவரது ஆட்சேபணை. இதற்கு உடனே பதிலை ஆடம் வான்டிராட் ஜப்பானிய கப்பற்படைத் தளபதிக்குத் தெரிவித்தார் “போசு அரசியல் தலைவர் மட்டுமல்ல இந்திய விடுதலைப் படையின் தலைமைத் தளபதியும் ஆவார். இதனை ஜெர்மன் அரசாங்கமும் அங்கீகரித்துள்ளது” என்று தெரிவித்தார். உடனே ஜப்பான் கடற்படைத் தளபதியின் ஆட்சேபணை தானாகவே மறைந்தது. 1943-சனவரி 26ம் தேதி இந்திய சுதந்திர தினம் ஜெர்மனியில் கொண்டாடப்பட்டது. (இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சனவரி 26ம் தேதியை சுதந்திர தினமமாகக் கொண்டாட வேண்டும் என்று இந்திய தேசிய காங்கிரசு 1929ல் டிசம்பர் மாதம் அறிவித்தது. 1930 சனவரி 26 தேதியிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் சனவரி 26ஐ சுதந்திர தினமாக இந்தியா கொண்டாடுவது வழக்கமாக இருந்தது) இந்த சுதந்திர தினவிழாவில் போசு கலந்து கொண்ட பின், ஒரு சிலரிடம் மட்டும் போசின் தென்கிழக்கு ஆசியா பயணம் தெரிவிக்கப்பட்டது. பின் போசின் குரலில் அவரது பேச்சுகள் வெவ்வேறு நாட்களில் ‘ஆஸாத் ஹிந்த்’ வானொலியில் போசு பேசுவது போன்று குரல் பதிவு செய்யப்பட்டது. அது அவரது பயணத்தின் போது ஒளிபரப்புவதற்காக ஏற்படுத்தப்பட்டது. போசு இன்னும் ஜெர்மனியில் தான் தங்கியுள்ளார் என்று எதிரிகளை நம்பவைப்பதற்கான ஏற்பாடுகள் இது அனைத்தும் போசின் ஆலோசனை திட்டத்தின் வழிகாட்டினாலும் செய்யப்பட்டது. அப்போது போர் மிகத் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்ததினால் இந்த முன்னேற்பாடுகள்.

subash 15-3போசு பெர்லின் இரயில் நிலையத்திற்குச் சென்று 1943 பிப்ரவரி 8ம் தேதி அன்று தனது தென்கிழக்கு ஆசிய பயணத்தைத் தொடங்கினார். போசுடன் அவருக்கு மிக நெருக்கமான சிலர் சென்றனர், இரயில், கீல்(Kiel) என்ற துறைமுக நகரத்தை அடைந்தது. அங்கு போசுடன் அவரது உதவியாளராக செல்ல இருந்த அபித் ஹஸின் வந்து சேர்ந்தார். இவருக்கு, தான் போசுடன் செல்கிறோம் என்று மட்டும் தெரியும், எங்கு செல்கிறோம் என்று அவருக்குத் தெரியாது. போசுடன் இரயிலில் வந்தவர்கள் போசிடம் விடைபெற்றுக் கொண்டனர். போசும் அபித் ஹஸினும் அவர்களுக்காகப் புறப்படத் தயாராக இருந்த (TYPE IX) என்ற நீர் மூழ்கிக் கப்பல் கடலில் நீர்ப்பரப்பிற்கு மேலே பயணம் தொடங்குவதற்கு காத்துக் கொண்டிருந்தது. அது மிகவும் சிறிய கப்பல் உள்ளே அதன் கேப்டன் மற்றும் ஊழியர்கள் அவர்களுடன் இருவர் மட்டும் பயணம் செய்ய முடியும் என்ற அளவில் அது சிறிய நீர்மூழ்கிக் கப்பல். போசும் அவரின் உதவியாளர் அபித் ஹஸின், கப்பலை அடைந்தபின்பு பயணம் தொடங்கியது. இருவரும் கப்பலின் உள்பகுதி சென்றதும் கப்பல் மெதுவாக நீரில் மூழ்கியது எத்தனை நாள், எத்தனை மாதம் பயணம் என்று தெரியாமல் பயணம் தொடங்கியது. போசு கப்பலில் உள்ள தனது நாற்காலியில் அமர்ந்ததும் தான் ஜப்பான் சென்றதும் செய்ய வேண்டிய திட்டங்களையும் பணிகளையும் அபித் ஹஸினிடம் தெரிவிக்கத் தொடங்கினார். அவர் குறிப்பெடுக்க ஆரம்பித்தார். கப்பலின் உள்பகுதியில் முழுவதும் டீசலின் மணம், உண்ணும் உணவிலும் டீசலின் மணம், இரவு பகலாக பயணம். போசுக்கு விழிகள் மூடவே இல்லை, பயமும் இல்லை. மிகவும் கம்பீரமாக இருந்தார் இரவில் கப்பல் நீரின் மேல்பரப்பில் பயணம், பகலில் நீருக்கு அடியில் பயணம். இது போன்று மாறி மாறி கப்பல் சென்று கொண்டிருந்தது. அப்போது கப்பல் செல்லும் பல இடங்களில் போர் கப்பல்கள் சென்று கொண்டிருந்தது. ஒரே குண்டு வீச்சு சத்தம், அவையெல்லாம் கடந்து கப்பல் செல்ல வேண்டிருந்தது. கப்பலின் கேப்டன் போசிடம் நாங்கள் எவரும் உங்களுக்கும் உங்களின் உதவியாளரின் உயிருக்கும் உத்தரவாதம் தர முடியாது என்று தெரிவித்தார். போசின் முகத்தில் (வீரத்தின் முகத்தில்) சிறு புன்னகை மலர்ந்தது.

-தொடரும்


கி.ஆறுமுகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 34”

அதிகம் படித்தது