நவம்பர் 26, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 35

கி.ஆறுமுகம்

Nov 15, 2014

subaash1போசின் இந்த நீர்மூழ்கிக்கப்பல் பயணம் குறித்து அவருடன் பயணம் செய்த அபித்ஹூசைன், அவர் எழுதிய நூலில் தான் போசுடன் நீர்மூழ்கிக்கப்பலில் பயணம் செய்ததை குறிப்பிடுகிறார். போசு தன் சுதந்திர இந்தியா அமைப்பதற்கானத் திட்டங்களைப் பற்றி விபரமான குறிப்புகளை சொல்லிக்கொண்டிருந்தார், நான் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது திடீரென்று அந்த நீர்மூழ்கிக் கப்பலின் தளபதி ஒலிப்பெருக்கியில், கவனம் தவறுதலாக நாம் எதிரிகளின் நடுவே சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்று அறிவித்தார். கீழே கீழே கீழே என்று தளபதி உரத்த குரலில் ஆணையிட்டார். தண்ணீருக்கு மேல்மட்டத்திற்கு வந்தபிறகு திடீரென்று மூழ்கிச் செல்வது அவ்வளவு சுலபமானது அல்ல. அதற்கு சில நிமிடங்கள் பிடிக்கும். ஆனால் அந்த சில நிமிடங்களில் சாவை நாங்கள் நெருங்கி விட்டதாகவே எல்லோரும் அஞ்சினோம். என்னுடன் இருந்த பலர் முகங்களிலும் சாவைப் பற்றிய பயம் படிந்திருப்பதை நான் பார்த்தேன். ஆனால் போசின் முகத்தில் எத்தகைய அச்சமும் தென்படவில்லை. என்னை நோக்கி அவர் ஹூசைன் நான் இருமுறை சொல்லியும் கூட நீங்கள் அதை குறிப்பெடுக்கவில்லை, உங்கள் கவனம் வேறு எங்கோ இருக்கிறது என்று கூறினார். இதைக்கேட்டு நான் மிகவும் வெட்கம் அடைந்தேன். நடுங்கும் கரங்களுடன் அவர் கூறியதை எழுதத் தொடங்கினேன். ஆனால் அவரோ அமைதியாக தன்னுடைய திட்டத்தைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். திடீரென்று எங்களுக்கு மேலாக பயங்கரமான சத்தத்துடன் எதிரிகளில் போர்கப்பல் ஒன்று சென்றது. இதன் விளைவாக ஏற்பட்ட அதிர்ச்சி எங்களுடைய நீர்மூழ்கியை ஒரு பக்கமாக சாய்த்தது எங்கள் நீர்மூழ்கியின் மீது ஏதேனும் குண்டு பாய்ந்து விட்டதா அல்லது மூழ்கிக் கொண்டிருக்கிறதா என்பது புரியாமல் நாங்கள் திகைத்தோம். அந்த கணங்கள் சில யுகங்களாகக் கடந்தன. நல்ல வேளையாக எதிரியின் போர் கப்பல் எங்கள் நீர் மூழ்கியின் மேல்மட்டத்தை உரசிக்கொண்டு மட்டும்தான் சென்றது என்பதை அறிந்து நிம்மதி பெருமூச்சு விட்டோம். இந்த அபாயத்திலிருந்து நாங்கள் தப்பிய பிறகு எங்கள் நீர்மூழ்கியின் தளபதி அனைவரிடமும் கூறினார். அபாயகாலகட்டத்தில் கூட நமது விருந்தாளியான போசு எத்தகைய அச்சமும் கலக்கமும் இல்லாமல் இருந்தார் என்பதை ஒவ்வொருவரும் முன்மாதிரியாகக் கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டார். சாவின் விளிம்பில் வந்து நின்ற போதிலும் கூட சித்தம் கலங்காமல் நின்ற போசை அவர் மிகவும் பாராட்டினார். ஆனால் இந்நிகழ்ச்சியின் போது நடுங்கிய வண்ணம் இருந்த என்னையும் போசோடு சேர்த்து அவர் பாராட்டினார். மகத்தான தலைவர் போசின் நிழலில் நானும் நின்றால் என்னுடைய பலவீனம் மறைக்கப்பட்டு நானும் பாராட்டுக்குரியவனானேன் என்கிறார் அபித் ஹூசைன்.

bosu1ஜெர்மனிலிருந்து தகவல் வந்ததும் 1943 ஏப்ரல் 20ம் தேதி மலேசியாவிலுள்ள பெனாங்கிலிருந்து ஐ-29 ரக ஜப்பானிய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று சத்தம் இல்லாமல் கடல் பயணத்தைத் தொடங்கியது. அது வழக்கமான கடல் ரோந்துபணிக்காக செல்கிறது என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அங்கு இருந்த இந்தியர்கள் சிலர், கப்பல் எப்பொழுதும் செல்லும் ரோந்துப் பணிக்கு, நீர்மூழ்கிக்கப்பல் பிரிவின் தலைவரான கேப்டன் மசாவா டொரோகா பயணம் செய்வது ஏன்? மற்றும் கப்பலில் இந்திய உணவு தயாரிப்பதற்குத் தேவையான பொருட்களை சில தினங்களுக்கு முன் சேகரித்தது ஏன்? போசு இங்கு வரப்போகிறார் போலும் என்று பேச ஆரம்பித்தனர். ஜப்பான் நீர் மூழ்கிக் கப்பல் ஊழியர்களுக்குக் கூட கப்பல் எதற்காக புறப்படுகிறது என்ற தகவலைத் தெரிவிக்கவில்லை. போசு மீண்டும் மிகப் பெரிய ஆபத்தை எதிர் நோக்கவேண்டியிருந்தது. அது நடுக்கடலில் ஒரு நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து மற்றொரு நீர்மூழ்கிக் கப்பலுக்கு மாற வேண்டும்.

subaash4ஜப்பான், ஜெர்மன் இரண்டு நாட்டு நீர்மூழ்கிக் கப்பல்களும் குறிப்பிட்ட இலக்கை அடைந்ததும், ஜப்பான் ஜெர்மனி கப்பலையும், ஜெர்மனி ஜப்பான் நீர்மூழ்கிக் கப்பலையும் கண்டுபிடித்து விட்டது. தகவல் ரேடியோவில் பரிமாற்றிக் கொள்ளலாம் என்றால் அந்தத் தகவல்களை எதிரி நாட்டுக் கப்பல்கள் கண்டுபிடித்துவிடும். மற்றொரு பெரிய பிரச்சனை அப்போது கடல் கொந்தளிப்பு அதிகமாக இருந்தது. இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களும் அருகில் நெருங்க முடியவில்லை எவ்வாறு போசையும், அவரது உதவியாளரையும் ஜெர்மனின் நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஜப்பான் நீர்மூழ்கிக் கப்பலுக்கு மாற்றுவது, பகலில் கப்பல் இரண்டும் மேலே வந்தால் எதிரி கப்பல்கள் கண்டு பிடித்துவிடும். இரவு என்றால் வெளிச்சம் இருக்காது. போதாத குறைக்கு கடல் அலை கொந்தளிப்பு வேறு என்று இரண்டு கப்பல் தளபதியும் கை செய்கையின் மூலம் ஒருவருக்கு ஒருவர் தகவல் பரிமாற்றிக் கொண்டிருந்தனர். சிறிது நேரம் கப்பல் கடலில் சுற்றிக் கொண்டிருந்தது. அப்பொழுது ஜெர்மனின் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து இரண்டு நபர்கள் கடலில் குதித்தார்கள். அவர்கள் கடல் கொந்தளிப்பு அலைகள் அல்லது கடல் சுறா மீன்கள் என்று அச்சம் கொள்ளாமல் குதித்து நீந்தினார்கள். அபீத்ஹூசைன் போசின் கைபிடித்துக் கொண்டு நீங்கள் ஜாக்கிரதையாக வரமுடியுமா? என்றார். உடனே போசு கையை உதறிவிட்டு நீங்கள் முதலில் பத்திரமாக செல்லுங்கள் என்றார். இருவரும் பத்திரமாக நீந்தி ஜப்பான் நீர்மூழ்கிக் கப்பலுக்கு வந்தார்கள். அதில் இருந்த கயிற்றை பிடித்துக் கொண்டு ஏறி கப்பலை அடைந்தார்கள். அந்த போர் சூழலில் ஒரு நீர்மூழ்கிக்கப்பலில் இருந்து மற்றொரு நீர்மூழ்கிக் கப்பலுக்கு கடலில் இதுபோன்று எவரும் சென்றது இல்லை என்பது அப்போது போசுக்கு தெரியாது. அன்றிலிருந்து இன்று வரை கூட எவரும் நடுக்கடலில் ஒரு நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து மற்றொரு நீர்மூழ்கிக் கப்பலுக்கு இது போன்று நீந்தி சென்றது இல்லை. இதுபோன்ற சாகச நிகழ்ச்சியை திரையில் செய்பவர்களை நாம் பெரிய கதாநாயகனாகப் (Hero) பார்த்து மகிழ்கிறோம். நிஜத்தில் செய்து காட்டியவரை மறந்து போனோம். போசும் அவரது உதவியாளர் அபித்ஹூசைனும் ஜப்பான் நீர்மூழ்கிக் கப்பலை அடைந்ததும் ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல் திரும்பி சென்றது. இது போன்ற நீண்ட பயணத்தை செய்து அதே பாதையில் திரும்பும் ஜெர்மனின் எந்த நீர்மூழ்கிக் கப்பலும் வெற்றி பெற்றது கிடையாது. போசை ஏற்றிச் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் மட்டும் ஜெர்மனிக்கு திரும்பிச் சென்று வெற்றி பெற்றது.

ஜப்பான் நீர்மூழ்கிக் கப்பல் போசையும் அபித்ஹூசைனையும் சுமத்ரா தீவுக்கு அருகில் உள்ள சபாங்கில் கொண்டுபோய் சேர்த்தது. அங்கு போசு சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டார். போசின் இந்த நீர்மூழ்கிக்கப்பல் பயணம் ஏறத்தாழ 3 மாதம் நடந்தது. போசு ஓய்வுக்குப் பின் 1943 மே மாதத்தில் டோக்கியோவுக்கு வந்து சேர்ந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அழிக்கப்பட்டது. போசு, ராஷ்பிகாரி போசு அவர்களை சந்தித்தார் இவர் ஜப்பான் தலைவர்கள்,அரசியல் சூழ்நிலைகள், ஜப்பானின் போர் சூழல்கள் என்று எல்லா விவரங்களையும் போசுக்கு தெளிவாகத் தெரிவித்தார். பின் இவர் வகித்த இந்திய தேசிய இராணுவத்தின் தலைமைப் பதவியை போசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். போசு அவரின் வேண்டுகோலுக்கு செவிசாய்த்து இந்திய தேசிய இராணுவத்தின் தலைமையை ஏற்றுக் கொண்டார்.

subaash3பின் போசு ஜப்பானின் பிரதமர் டோஜோ(Tojo)-வை சந்தித்தார். முதல் சந்திப்பு மரியாதை நிமித்தமாக போசு பேசிய பின் அவரின் சுதந்திர தாக பேச்சில் ஈர்க்கப்பட்ட டோஜோ போசை நாம் மீண்டும் நான்கு நாட்களுக்குப் பின் சந்திப்போம் என்றார். இந்த இரண்டாவது சந்திப்பில் போசு டோஜோவிடம் இந்தியா விடுதலை பெறுவதின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். அதை ஏற்றுக் கொண்ட டோஜோவிடம் எங்கள் INA உடன் ஜப்பான் இராணுவம் சேர்ந்து இந்தியா விடுதலைக்குப் போராட முடியுமா என்று கேட்டார். இதற்கு உடனே பதில் டோஜோவால் கூறமுடியவில்லை. இந்த செயல்பாட்டுக்குப் பல தந்திரம். பல அரசியல் பின்னணி இருப்பதை நீங்கள் தெளிவாக அறிவீர்கள் என்றார். போசு உடனே நன்கு அறிவேன் என்று தெரிவித்து மீண்டும் டோஜோவுக்கு தான் கூறியதில் அழுத்தம் குடுக்காமல் அவருக்கு சிந்திக்க இரண்டு நாட்கள் கொடுத்துவிட்டு புறப்பட்டார். பின் டோஜோ அங்கிருந்த இராணுவ தளபதி அமைச்சர்களைப் பார்த்து இவர் சாதாரணமான மனிதர் அல்ல வரலாற்றில் மிகவும் சிறப்பான இடம் பிடிக்கக் கூடியவர், இந்தியாவின் சிறந்த மனிதர். INA விற்கு ஒரு சிறந்த தலைவர் இவர் என்றார். பின் இரண்டு நாட்களுக்குப் பிறகு போசு ஜப்பானிய பாராளுமன்றத்திற்கு (டயட்) வருகை தருமாறு அழைக்கப்பட்டார். போசும் அதை ஏற்றுக் கொண்டு ஜப்பான் பாராளுமன்றத்திற்குச் சென்றார். அங்கு அவருக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தி காத்திருந்தது.

-தொடரும்


கி.ஆறுமுகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 35”

அதிகம் படித்தது