மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும்- பகுதி – 45

கி.ஆறுமுகம்

Jan 24, 2015

subaash newபோசு பாங்காக் நகரில் இருந்த பொழுது மே மாதம் ஜெர்மனி, நேசநாடுகளிடம் சரணடைந்த செய்தி கிடைத்தது. ஜப்பான் இன்னும் எத்தனை நாட்கள் தாக்கு பிடிக்க முடியும் என்ற கேள்வியும் எழுந்தது. பர்மாவை பிரிட்டிசார் பிடித்துவிட்டனர். இதற்கு இடையில் பசிபிக் பகுதியில் ஜப்பானின் இராணுவத்தை அமெரிக்க இராணுவம் வெற்றிபெற்றுக் கொண்டிருந்தது. நேசநாடுகளின் படைகள் ஜப்பான் நாட்டிற்குள் செல்வதற்கு சில மாதங்கள் ஆகும். ஆனால் இப்போது உடனடி ஆபத்து மலேசியாவுக்குத்தான், எனவே மலேசியாவைக் காப்பாற்ற அங்கிருந்த இந்திய தேசிய இராணுவ வீரர்கள் எந்த நேரத்திலும் போரை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும், வேண்டுமென்றால் இங்குள்ள 11,300 இந்திய தேசிய இராணுவ வீரர்களும் மலேசியாவைக் காக்க செல்ல வேண்டும். ஜப்பான் ஜாவாத்தீவில் ஒரு சிறு படையை நிறுத்திவிட்டு, சீன எல்லையிலும் ஜப்பான் எல்லையிலும் அதிகமான வீரர்களை நிறுத்த வேண்டும் என்றார் போசு. இந்த இறுதிப் போர் சூழலில் போசின் ஒரே நம்பிக்கை சோவியத் யூனியன் நாடாக இருந்தது.

இந்தப் போர் ஒப்பந்தம் எல்லாம் சில காலம்தான், எந்த நேரத்திலும் சூழ்நிலை மாறலாம் என்று போசு நம்பிக்கைக் கொண்டிருந்த போது சோவியத் யூனியன் ஜப்பானின் மீது போர் பிரகடனம் செய்தது. கிழக்காசிய நாடுகளில் சோவியத் யூனியனின் செல்வாக்கு பரவுவதை ஜப்பான் விரும்பவில்லை. போசு சோவியத் யூனியனோடு தொடர்பு கொள்ள முயன்ற போதெல்லாம் முட்டுக்கட்டையாக ஜப்பானின் அதிகாரிகள் செயல்பட்டனர். ஜப்பானின் இராணுவ அதிகாரியான டெராச்சி தனது இராணுவ தலைமையை மணிலாவில் இருந்து சைகோனுக்கு அருகில் இருந்த டலாத் என்ற இடத்திற்குக் மாற்றினார். தன்னோடு வந்துவிடும்படி போசிடம் கூறினார். போசு தனக்கு அதிகமான வேலைகள் உள்ளது, நான் பிறகு வருகிறேன் என்று தெரிவித்துவிட்டார்.

subaash1தாய்லாந்திலிருந்து சிங்கப்பூருக்கு செல்வதற்கு முன் சுதந்திர இந்திய அரசின் மற்றும் இந்திய தேசிய இராணுவத்தின் நிதிநிலைமையை சரிசெய்ய தனது நண்பர்கள் அனைவரையும் கையில் இருந்த பணத்துடன் வரும்படி செய்து, இந்திய தேசிய இராணுவ வீரர்கள் அனைவருக்கும் ஊதியம் கொடுத்துவிட்டு மீதி இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு சில வேலைகளை முடிப்பதற்கு சிங்கப்பூர் பயணத்தைத் திட்டம் செய்து புறப்படுவதற்கு முன் பாங்காக் வானொலியின் மூலம் சோவியத்யூனியன் நாடுகளிடம் போசு என்ன எதிர்ப்பார்க்கிறார் என்பதை மறைமுகமாக எடுத்துரைத்தார். பின்னர் டில்லி சலோ என்பது நமது முழக்கம், நாம் டில்லிக்கு இம்பால் வழியாகத்தான் போகவேண்டும் என்பதல்ல, இன்னும் பல வழிகள் இருக்கின்றது என்று இந்திய தேசிய மக்களின் உற்சாகம் குறையாமல் இருக்க வேண்டும் என்று சிந்தித்து உரை நிகழ்த்தினார் போசு. ஜப்பான் சரணடைந்தாலும், ஜெர்மனி சரணடைந்தாலும் இந்திய தேசிய இராணுவம் ஒருபோதும் சரணடையாது. இந்திய விடுதலைப் போராட்டம் ஒருபோதும் தோல்வியடையாது என்று பேசினார்.

1945 சூன் மாதம் சிங்கப்பூர் வந்தார் போசு. அங்கும் வானொலியில் சிறப்பாக உரையாற்றினார். சோவியத் யூனியன் திடீரென்று ஜப்பான் மீது போர் பிரகடனம் செய்த செய்தி இந்திய தேசிய இராணுவ வீரர்களை அதிர்ச்சியடையச் செய்தது. இந்த செய்தியை அறிந்தும் போசு சற்றும் கலக்கம் அடையாமல் அடுத்து என்ன செய்யலாம் என்று திட்டமிட்டார் போசு. சிங்கப்பூரில் இருந்து செரம்பாளிக்குச் சென்று அங்கிருந்த இந்திய தேசிய இராணுவ வீரர்களை சந்தித்துவிட்டு, அன்று இரவு உணவை முடித்து தனது சகாக்களுடன் பேசிவிட்டு படுக்கும் போது ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது.அதில் மலாக்காவில் இருந்து சிங்கப்பூர் இந்திய சுதந்திர லீக் பொதுச் செயலாளரான டாக்டர் லட்சுமய்யாவும், விளம்பரத்துறைப் பொறுப்பாளர் கணபதியும் புறப்பட்டு உடனடியாக ஒரு அவசரமான செய்தியுடன் போசை சந்திக்க வருகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. போசு எஸ்.ஏ.ஐயரிடம் அவர்கள் வந்ததும் என்னை எழுப்புங்கள் என்று கூறிவிட்டு உறங்கச் சென்றார். ஆனால் அப்போது இரவு 1 மணி ஆகியிருந்தது. 2 மணி அளவில் ஒரு கார் வேகமாக வந்து நின்றது. அதிலிருந்து இறங்கியவர்களை எஸ்.ஏ.ஐயர், போசின் அறைக்கு வேகமாக அழைத்துச் சென்றார். அவர்கள் போசை பார்த்ததும் டாக்டர் லட்சமய்யா போசிடம், “ஜப்பானும் சரணடைந்து விட்டது ஐயா” என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது தான் எவ்வாறு இருந்தேன் என்பதை பின் நாட்களில் எஸ்.ஏ.ஐயர் நினைவுறுத்தும் போது “நான் அப்படியே இடிந்து போய் விட்டேன், என் தலை சுற்றியது, இது மிகப் பெரிய தோல்வி” என்ற எண்ணத்துடன் தலை சுற்றிக்கொண்டு போசை உற்றுப் பார்த்தேன். அவர் சற்றும் தளராமல் இடியே தலையின் மீது விழுந்தாலும் நிலை தடுமாறாத மாவீரன். இவர் அவருக்கே உள்ள முறையில் “உம் அப்படியா செய்தி” என்று சர்வசாதாரணமாகக் கேட்டுவிட்டு, “அடுத்தது என்ன” என்று கேட்டார், அது ஒரு போர் வீரனின் பேச்சு. அடுத்த முயற்சி என்ன, எப்படிப் போராட்டத்தைத் தொடர்வது என்ற சிந்தனையை அவர் தொடங்கிவிட்டர் போசு. ஜப்பானின் சரணாகதி இந்தியாவின் போராட்டத்தினையும், இந்திய சுதந்திரத்தினையும் எப்படி தடுத்து நிறுத்த முடியும் என்பது அவருடைய எண்ணம். பின் அவர் எங்களைப் பார்த்து சிறு புன்னகையுடன் “இந்தப் போர் சூழலில் இன்று நாம் மட்டும் தான் சரணடையவில்லையா!” என்று கேட்டுவிட்டு சிரித்தார்.

பின்னர் சோவியத் யூனியன் ஜப்பான் மீது தொடுத்த போர் பற்றி கலந்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் எஸ்.ஏ.ஐயரிடம் சில குறிப்புகளைத் தெரிவித்துவிட்டு அதனை உடனே செயல்படுத்தும் படி ஆணையிட்டார் போசு. எஸ்.ஏ.ஐயரிடம் பெனாங்நகரில் இருக்கும் ராகவனும், சுவாமியும், ஈப்போவில் இருக்கும் திவியும் மிக விரைவில் சிங்கப்பூருக்கு வரவேண்டும் என்று அவர்களுக்கு செய்தி அனுப்புங்கள், நாமும் சிங்கப்பூருக்குப் புறப்படுவோம், நாம் அங்கு செல்லும் போது இவர்கள் அங்கிருக்க வேண்டும் என்றார் என்றார் போசு. இரவு முழுவதும் உறங்காமல் இருந்துவிட்டு புறப்படுவதற்குத் தயார் நிலையில் இருந்து கொண்டு, களைப்பில் உறங்கிப்போன எஸ்.ஏ.ஐயரை போசு வந்து எழுப்பிவிட்டு புறப்படுங்கள் என்றார். எஸ்.ஏ.ஐயர் போசைப் பார்க்கும் போது அவரிடம் தூக்கம் இன்மையால் ஏற்படும் களைப்பு எதுவும் தெரியவில்லையே மிகவும் சுறுசுறுப்பாக உள்ளாரே என்று எஸ்.ஏ.ஐயர் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதுபோசு, “நீங்கள் உடனடியாகத் தயாராகுங்கள் நாம் காரில் செல்லும் போது மற்ற செய்திகளைப் பற்றி பேசிக் கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.

subash3சிங்கப்பூர் சென்றதும் அன்று இரவு முழுவதும் ஜப்பான் சரணடைந்தது பற்றியும், இனிமேல் சுதந்திர இந்திய அரசு மற்றும் இந்திய தேசிய இராணுவம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும் விவாதிக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில் சிங்கப்பூரில் இருந்த 23,000 இந்திய தேசிய இராணுவ வீரர்களுக்கும், ஜான்சிராணி வீரர்களுக்கும் ஆறுமாத ஊதியம் கொடுத்துவிட்டு படையை கலைத்து விடவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. இரவு முழுவதும் நடந்த ஆலோசனைக் கூட்டம் பகலிலும் சில நேரம் தொடர்ந்தது. பின் பிற வேலைகளை முடித்துக் கொண்டு மாலை சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டார் போசு. இரவு 7 மணிக்கு ஜான்சிராணிப் படையில் தலைவியாக இருந்த கேப்டன் திருமதி தேவர் அவர்கள் ஒரு திறந்தவெளியில் இந்திய தேசிய இராணுவத்தில் ஜான்சிராணியின் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக நடத்தி, அதனை போசு தலைமை தாங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் போசு கலந்து கொண்டார். இந்த விழாதான் போசு கடைசியாக கலந்து கொண்ட பொதுநிகழ்ச்சி.

பின்னர் ஆகஸ்டு 12ம் தேதி இரவு செரம்பானிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தார் போசு. பின் அமைச்சரவைக் கூட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் போசு மற்றும் அனைவரும் மனம் திறந்து வெளிப்படையாக ஆலோசனை நடத்தினார்கள். இந்தக் கூட்டத்தில் போசு மற்றும் வீரர்கள் அனைவரும் பிரிட்டிசு படைகளின் போர் குற்றவாளிகளாக பிடிபடவேண்டும் என்று விவாதிக்கப்பட்ட போதுகூடபோசு ஒரு மூன்றாவது மனிதர் பேசுவதை போலவே அவரும் கலந்து உரையாடினார். அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு அமைச்சர், “ஐயா நீங்கள் எங்களுடன் போர் குற்றவாளிகளாக பிரிட்டிசு படையிடம் பிடிபட்டால் உங்களைத் தூக்கில் போடுவார்கள், அவ்வாறு செய்தால் ஒட்டுமொத்த இந்தியாவும் உடனே விடுதலை அடையும். அவ்வாறு செய்யாமல் உங்களை விட்டு விட்டாலும் நீங்கள் மீண்டும் போராட்டம் செய்வீர்கள் அப்போதும் இந்தியா நிச்சயம் சுதந்திரம் அடையும். எதுவானதும் பிரிட்டனுக்குத்தான் பாதிப்பு எனவே நீங்கள் பிடிபட நினைப்பது பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள்” என்றார். இங்கு இந்த அமைச்சர் போசை பிரிட்டன் தூக்கில் போட்டால் உடனே இந்தியா விடுதலை அடையும் என்று தெரிவிப்பதிலிருந்தே போசை தலைவராக இந்திய மக்கள் கருதி எந்த உயர்வான இடத்தில் வைத்திருந்தனர் என்பது புரியும். ஒட்டு மொத்த இந்திய மக்களும் அன்று போசின் பின்னால் இருந்தனர் என்பது தெளிவாக விளங்கும். இந்தக் கூட்டத்தில் போசு, தான் போர் குற்றவாளியாக பிடிபடுவது என்ற சிந்தனையில் தீவிரமாக இருந்தார். அனைவரும் இவர் எண்ணத்தை மாற்ற பார்த்தும் தோல்வி அடைந்தனர். ஆனால் இந்தக் கூட்ட முடிவு தற்காலிகமானது இறுதிமுடிவு அல்ல என்ற தீர்மானத்துடன் அனைவரும் சற்று ஓய்வு எடுக்கச் சென்றனர். பின்னர் மீண்டும் கூட்டம் கூடி போசின் கருத்தை மாற்றி போசு சிங்கப்பூரை விட்டு வெளியேற வேண்டும் என்று ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது. அப்படி செல்லுவதாக இருந்தால் எந்த நாடு செல்வது என்று கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

-தொடரும்


கி.ஆறுமுகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும்- பகுதி – 45”

அதிகம் படித்தது