மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 11

ஆச்சாரி

May 31, 2014

neta9-9பம்பாய் சென்று காந்தியை நேரில் சந்திக்கவும் செய்தார். இர்வினுடன் செய்துகொண்ட உடன்படிக்கையில் பல முக்கிய அம்சங்களைக் காந்தி விவாதிக்கவில்லை என்ற ஆதங்கத்தைத் தெரியப்படுத்தினார் போசு. காந்தி அமைதியுடன் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டார்.
நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை, நான் ஏற்றுக்கொள்கிறேன்.
குறிப்பாக கைதிகள் குறித்து நீங்கள் அதிகம் விவாதித்ததாகத் தெரியவில்லை. ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டவர்கள் தவிர வேறு பல கைதிகளும் பல சிறைச்சாலைகளில் அடைந்து கிடக்கிறார்கள். அவர்கள் மீது பல பொய் குற்றச்சாட்டுகள் பதிவாகி இருக்கின்றன. அவர்களை விடுவிக்க வேண்டியது அவசியம். அடுத்த சந்திப்பில் நிச்சயம் இது பற்றி விவாதிப்போம், நன்றி என்றார் காந்தி.
இருவரும் பம்பாயிலிருந்து கிளம்பி டெல்லிக்குச் சென்றனர். பிரயாணம் முழுவதும் இருவரும் நீண்ட நேரம் விவாதித்தனர். போசு முன்வைத்த அத்தனை யோசனைகளையும் ஏற்றுக்கொள்வதாகக் காந்தி உறுதியளித்தார். போசுக்குப் பரமதிருப்தி.
டெல்லிக்குச் சென்ற இருவருக்கும் ஓர் அதிர்ச்சியான செய்தி காத்திருந்தது. 23 வயதுடைய பகத்சிங் மற்றும் ராஜகுரு, சுகதேவ் மூவருக்கும் சதி வழக்குக்காக 1931, மார்ச் 23-ம் தேதி மூவரும் லாகூரில் தூக்கிலிடப்பட்டனர். ஒருவருக்கும் தெரியாமல் ரகசியமாக இத்தண்டனை நிறைவேற்றியது ஆங்கிலேய அரசு. இந்த மூவரின் தூக்குத்தண்டனையில் ஆங்கிலேய அரசு விரைந்து செயல்படுத்தியது மற்றும் குற்றவாளிகள் என்று கைது செய்தவர்களை நீதிமன்றத்தில் வைத்து விசாரணையும் செய்யாமல் 450 சாட்சிகள் குறுக்கு விசாரணை செய்ய வாய்ப்பு அளிக்காமல் தூக்கு தண்டனை நிறைவேற்றியதற்கு காரணம் அனார்கலி போலீஸ் நிலைய அதிகாரி ஒருவர் நேரில் பார்த்து புகார் அளித்ததின்பேரில் 1928-ம் ஆண்டு டிசம்பர் 17-ந்தேதி மாலை 4.30 மணிக்கு அந்த முதல் தகவல் அறிக்கை (FIR) உருது மொழியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் துப்பாக்கி ஏந்திய அடையாளம் தெரியாத 2பேருக்கு எதிராக என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. பகத்சிங் உள்பட 3 பேரில் யாருடைய பெயரும் குறிப்பிடப்படவில்லை. இந்தத் தகவல் பகத்சிங் தூக்கிலிடப்பட்டு 83 ஆண்டுகளுக்குப் பிறகு பகத்சிங் நினைவு அறக்கட்டளை தலைவர் இம்தியாஸ் ரசித் குரேசி, பகத்சிங் குற்றமற்றவர் என்று நிரூபிப்பதற்காக எடுத்த முயற்சியில் கிடைத்தத் தகவல் ஆகும். மேலும் பகத்சிங் வழக்கை மீண்டும் விசாரணை நடத்த லாகூர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
bosu1ஒட்டு மொத்த இந்தியாவையும் உலுக்கியது இந்தச் செய்தி, போசு துடிதுடித்துப்போனார்.
கராச்சி காங்கிரசில் கலந்து கொள்வதற்காக வந்து சேர்ந்த காந்தி, படேல் இருவருக்கும் கருப்புக் கொடிகள் காட்டப்பட்டன. கராச்சி பற்றி எரிந்து கொண்டிருந்தது. தன் வாழ்நாளில் இப்படி ஒரு எதிர்ப்பைக் காந்தி கண்டதில்லை. இதுவரை கருப்புமாலைகளை அவர் இதுவரை சந்தித்ததே கிடையாது. மாநாடு தொடங்கியது.
போசு வெடித்தார், காந்தியும் வைசிராயும் செய்து கொண்டிருக்கும் ஒப்பந்தத்தைக் கிழித்துதான் எறிய வேண்டும். காங்கிரசு எவ்வளவு தூரத்திற்கு மிதவாதிகள் கையில் அகப்பட்டுள்ளது என்பதை இந்த ஒப்பந்தம் காட்டுகிறது.
காந்தியின் கண்களை அவர் நேரடியாகச் சந்திக்கவில்லை, கோபம் கோபமாக வந்தது. மேடையிலேயே வெடித்துவிட்டார்.
தனிப்பட்ட நபரான காந்திஜியிடம் காங்கிரசு சிக்கியிருப்பதைக் கண்டு நான் பரிதாபப்படுகிறேன். வாலிபர்கள் அனைவரும் காங்கிரசின் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தாக வேண்டும். ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தியது முட்டாள்தனத்தோடு கூடிய அசட்டுத்தனம் என்பதையும் தெளிவுபடுத்தியாக வேண்டும். காங்கிரசு கட்சிக்குத் திட்டங்கள் கிடையாது, திட்டங்கள் போராட்ட அடிப்படையிலும் இல்லை, மாறாக காலத்துக்கு ஏற்றாற்போல் மாற்றி அமைக்கப்படுகின்றன.
மிகக் கடுமையான பதங்களை உபயோகிக்கவும் அவர் தயங்கவில்லை.
29-ம் தேதி மாநாடு மீண்டும் கூடியது. இறந்தவர்களுக்குத் துக்கம் அனுசரிப்பது என்று முடிவானது. நேரு அறிக்கையை வாசிக்கத் தொடங்கினார்.
bosu5தண்டிக்கப்பட்டவர்களின் செய்கையைக் காங்கிரசு ஏற்காவிட்டாலும் அவர்களின் தேசபக்தியைக் காங்கிரசு பாராட்டுகிறது. அவர்கள் தூக்கிலிடப்பட்டதற்கு வருந்துகிறோம்.
விருட்டென்று எழுந்தார் போசு. காங்கிரசு ஏற்காவிட்டாலும் என்று சொல்வது முறையல்ல இந்தப் பதத்தை உடனடியாக நீக்க வேண்டியது அவசியம். போசின் யோசனை நிராகரிப்பட்டது. அதற்குக் காரணம் காந்தி என்று போசுக்கு நன்றாகவே தெரியும். ஒரு வார்த்தையும் பேசாமல் மாநாட்டை விட்டு வெளியேறினார் போசு.
கூட்டத்தில் சொல்லமுடியாத விடயங்களைத் தன் மனதிற்குள் போட்டுக் குழம்பிக்கொண்டு விம்மினார் போசு.
காந்தியின் அகிம்சை கொள்கை வறட்டுத்தனமானது. ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்ட பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் மூவரும் தூய்மையான தேசபக்த வீரர்கள், அவர்கள் தண்டிக்கப்பட்டது நம் நாட்டுக்கு ஏற்பட்ட பெரும் இழப்பு. தண்டனையை ரத்து செய்கிறோம், தாமதப்படுத்துகிறோம் என்று சொல்லிக்கொண்டு ஒருவருக்கும் தெரியப்படுத்தாமல் இவர்களை தூக்கிலிட்டிருப்பது நம்பிக்கை துரோகத்தின் உச்சகட்டம். காந்தி வேண்டுமானால் அகிம்சைக் கொள்கையைத் தூக்கிப்பிடித்துக் கொண்டாடலாம். ஆனால் அதற்காக பகத்சிங் போன்ற இளைஞர்களை அவர் குறைத்து மதிப்பிடக்கூடாது.
பகத்சிங்கை “காங்கிரசு ஏற்காவிட்டாலும்” என்று எதற்காக அவர் சொல்ல வேண்டும்?
இதேபோல்தான் ஜாதின்தாஸ் மரணமும் காந்தியால் புறக்கணிக்கப்பட்டது.
வங்காளத்தைச் சேர்ந்தவர் ஜாதின்தாஸ் அரசியல் கைதிகளைக் குற்றவாளிகளைப் போல் நடத்தக் கூடாது. அவர்களுக்கான மரியாதையைக் கொடுக்க வேண்டும் என்று முறையிட்டு தனது உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் ஜாதின்தாஸ் 63 நாட்கள் வரை இந்த உண்ணாவிரதம் தொடர்ந்தது எந்தவித சமரசமும் செய்யாத சூழலில் 1929 செப்டம்பர் 13-ம் தேதி ஜாதின்தாஸ் இறந்துபோனார்.
காந்தி இவரைக் கண்டுகொள்ளவேயில்லை. தனது யங் இந்தியா பத்திரிகையில் ஒரு வரி கூட எழுதவில்லை. ஏன் என்று கேட்கப்பட்டபோது அவர் அளித்த பதில் இதுதான்.
நான் எழுதியிருந்தாலும் தாசின் மரணத்தைப் பற்றிக் குறைவாக மதிப்பிட்டுத்தான் எழுதியிருப்பேன். எனவே யங் இந்தியாவில் இதைப் பற்றி எழுதவே இல்லை.
போசு எதிர்பார்த்தபடியே காந்தி-இர்வின் ஒப்பந்தத்தை சுக்குநூறாகக் கிழிந்து குப்பைத் தொட்டியில் போட்டது அரசு லார்ட் இர்வின் புறப்பட்டு போயே போய்விட்டார். வெலிங்டன் வைசிராய் ஆனார், கைதிகளுக்கு விடுதலை மறுக்கப்பட்டது, அரசியல் கைதிகளும் பிற கைதிகளும் ஒன்றுபோலவே நடத்தப்பட்டனர்.
subaash pagudhi6-1-5இருதயமே வெடித்துவிடும்போல் இருந்தது போசிற்கு அடுத்தடுத்து நடந்த பல மாற்றங்கள் அவரைத் தளரச் செய்தன. இப்படியெல்லாம் கூட விசித்திரங்கள் நடக்குமா?. இரண்டாம் வட்ட மேசைமாநட்டுக்கு வாருங்கள் என்று பிரிட்டன் அழைத்தது சரி வருகிறேன் என்று காந்தியும் ஒப்புக்கொண்டார். செப்டம்பர் 7-1931 அன்று லண்டனில் இரண்டாம் வட்ட மேசை தொடங்கியது. பரிபூரண சுதந்திரம்வேண்டும் என்றார் காந்தி, ஒப்புக் கொள்ள முடியாது என்றது பிரிட்டன். எந்தவித உடன்படிக்கையும் ஏற்படாததால் டிசம்பர் 1 அன்று மாநாட்டை முடித்துக்கொண்டனர். காந்தி மீண்டும் சட்டமறுப்பு இயக்கத்தைத் தொடங்கினார். வழக்கம் போல் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். போசிற்குக் கண்கள் இருட்டிக்கொண்டு வந்தன. சுபாசு அடுத்து என்ன செய்வதாக உத்தேசம்? என்றனர் நண்பர்கள். போசு தெளிவற்ற குரலில் பேசினார் எந்த வழியில் இனி என் போக்கு போகும் என்று எனக்கே தெரியவில்லை. எப்படி இருந்தாலும் அதைக் குறித்து நான் கவலைப்படப்போவதில்லை. 1932– சனவரியில் முதல் வாரத்தில் போசு கைதுசெய்யப்பட்டார்.

-தொடரும்

In the https://www.eduessayhelper.org s, teachers were trained in this way to use copyright national academy of sciences

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 11”

அதிகம் படித்தது