மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 13

ஆச்சாரி

Jun 14, 2014

subaash13-1ஆஸ்திரியா, அயர்லாந்து, பிரான்ஸ் என்று பல நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். செக்கஸ்லோவாக்கியா, போலந்து போன்ற புதிய நாடுகளை ஆர்வமுடன் கண்டு கொண்டார். புதிதாக மலர்ந்த ஒரு நாடு எப்படி இயங்குகிறது என்பதைத் தெரிந்துகொள்ள அவருக்கு அதிக ஆர்வம் இருந்தது. அயர்லாந்து மீது போசிற்குத் தனிப்பட்ட பிரியம் இருந்தது. பிரிட்டனை எதிர்த்து நின்று வெற்றி பெற்ற நாடு என்றால் சும்மாவா?. இன்னொரு அயர்லாந்தாக இந்தியாவால் மாறமுடிந்தால் எத்தனை சுகமாக இருந்திருக்கும்?. நான்கு நாடுகளை அவர் குறித்து வைத்துக்கொண்டார், சோவியத் ரஷ்யா, ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான். இந்தியாவிற்கு உதவ ஏதாவதொரு அந்நிய சக்தி தேவை என்னும் பட்சத்தில் இந்த நான்கு நாடுகளில் ஒன்றால் மட்டுமே அது சாத்தியம் என்று அவருக்குத் தோன்றியது. போசு ஜெர்மனி வந்து சேர்வதற்கு முன்னால் அவரைப் பற்றிய ஒரு குறிப்பை கல்கத்தாவிலுள்ள ஜெர்மன் கவுன்சில் அனுப்பி வைத்திருந்தது. இவர் ஒரு மதிப்பு வாய்ந்த இந்தியத் தலைவர், மருத்துவ வசதி பெற வியன்னாவிலிருந்து ஜெர்மனி வர விரும்புகிறார். வார்சாவிலிருந்து பெர்லினுக்கு ரயிலில் வந்து சேர்ந்தார் போசு. ஜெர்மனி போராட்டக்களமாக காட்சியளித்தது.

subaash13-6ஹிட்லரைப் பற்றி போசு முழுவதுமாக அப்போது அறிந்திருக்கவில்லை. ஹிட்லரின் mein kampft புத்தகத்திலிருந்து அவரைப் பற்றிய ஒரு மதிப்பீட்டை போசு உருவாக்கி வைத்திருந்தார். அந்த மதிப்பீடு நல்லபடியாகவே இருந்தது. ஐரோப்பாவில் இந்தியாவைப் பற்றியும், இந்தியர்களைப் பற்றியும் பிரிட்டன் பல தவறான கருத்துக்களை பரப்பி குறைகூறி வைத்திருக்கும், அவற்றைச் சரிசெய்து விடலாம் என்று போசு நம்பினார். முதன்முதலில் சனவரி 1935ல் ரோமில் வைத்து முசோலினியைச் சந்தித்தார் போசு. லோதர் பிராங் (lothar Frank) என்பவர் இந்தச் சந்திப்புப் பற்றி எழுதியிருக்கிறார்.

இந்தியா விரைவில் சுதந்திரம் அடையும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? என்றார் முசோலினி

subaash13-2போசு: நிச்சயமாக

முசோலினி: இந்திய சுதந்திரத்திற்கான போராட்டம் தொடங்கிவிட்டதா?

போசு: ஆமாம்

முசோலினி: நீங்கள் அறவழிப் போராட்டத்தைச் சார்ந்தவரா அல்லது புரட்சிகர இயக்கத்தைச் சார்ந்தவரா?

போசு: புரட்சிகர இயக்கத்தை நம்புபவன்.

முசோலினி: ஓ அப்படியானால் உங்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்.

போசு: நன்றி.

1936 தொடக்கத்தில் போசு பரிபூரணமாகக் குணம் அடைந்தார். உடனே இந்தியா திரும்பவேண்டும் என்பது அவருடைய விருப்பம். ஆனால் பிரிட்டன் அனுமதி அளிக்க மறுத்தது. மீறி இந்தியாவிற்குள் காலடி எடுத்துவைத்தால் சிறை உறுதி என்று ஒரு மிரட்டல் கடிதம் வேறு அனுப்பினர். பிரிட்டனின் எச்சரிக்கையை மீறி மார்ச் மாதம் பம்பாய் வந்து இறங்கினார் போசு. துறைமுகத்தில் கால் பதித்ததுதான் தாமதம், கையோடு பிடித்து சிறையில் அடைத்தனர். பிறகு அங்கிருந்து அவரை அழைத்துச் சென்று டார்ஜீலிங்கில் உள்ள குர்சியோங் (kurseong) என்னும் பகுதியில் உள்ள சரத் சந்திராவின் வீட்டில் காவல் வைத்தனர். முன்னரே விடுதலையாகியிருந்த சரத் சந்திரா அப்போது பெங்கால் காங்கிரசு தலைவராக இருந்தார். வீட்டுக்காவலிலிருக்கும் போசை உடனடியாக வெளியில் விடவேண்டும் என்று மக்கள் போராடத் தொடங்கினார்கள். மே மாதம் இந்தியா முழுவதும் முழுநேர வேலை நிறுத்தம் மேற்கொண்டனர். போசு விடுதலை செய்யப்பட்டார்.

1937 இறுதியில் அகில இந்திய காங்கிரசு கமிட்டி கூட்டப்பட்டபோது போசுதான் அடுத்த காங்கிரசு தலைவர் என்று பலரும் பேசிக் கொண்டனர். இந்தியாவில் போசு இரண்டு தொல்லைகளை அவ்வப்போது எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஒன்று ஆங்கில அரசு சற்று பலமாக மூச்சுவிட்டால் கூட தீவிரவாதி என்று சொல்லி உள்ளே வைத்து விடுகிறார்கள், நான்கு பேருடன் நின்று பேசினால் தீவிரவாதம் வளர்க்கிறாய் என்கிறார்கள். இரண்டாவது தொல்லை நோய், குணமடைந்தது போல் இருக்கும் ஒரு சில மாதங்களில் மீண்டும் சுருண்டு படுக்க வைத்துவிடும், எழுந்திருக்கவே முடியாது. மருத்துவர்கள் வருவார்கள், பார்ப்பார்கள், மாத்திரை கொடுப்பார்கள் ஆனால் பலன் இருக்காது.

subaash13-5அனைத்து பரிசோதனைகளையும் செய்து முடித்த பிறகு கடந்த முறை சொன்ன அதே அறிவுரையை மீண்டும் சொன்னது மருத்துவகுழு நீங்க திரும்பவும் வியன்னா போவதுதான் சரி, வேறு வழியே இல்லை. திரும்பவும் வியன்னா சென்றார், இந்த முறை வியன்னா அவருக்கு மிகவும் பரீட்சயமாகிப்போன இடமாக மாறியிருந்தது, சொல்லி வைத்ததைப்போல் உடல்நிலை தேறியது, மனதுக்கு இதமளிக்கும் ரம்மியமான இடம் படுக்கையில் சாய்ந்தபடியே பல மாதங்களை இனிமையாகக் கழிக்கலாம் ஆனால் போசால் முடியவில்லை. சற்று தேவலை என்று மருத்துவர்கள் சொல்லி முடிப்பதற்கு முன்னால் துள்ளி எழுந்துவிட்டார். புத்தகக் கட்டுக்களைப் பிரிக்கத் தொடங்கிவிட்டார். வாசிப்பது, பல நாடுகளுக்குச் சென்று பார்வையிடுவது, அந்த நாடுகளில் உள்ள இந்தியர்களைச் சந்தித்து பேசுவது, போராட்டத்திற்கு அவர்களை தயார்படுத்துவது இவைதான் அவர் தனக்குத்தானே இட்டுக்கொண்ட பணிகள். பரபரவென்று வேலையைத் தொடங்கினார். பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, இத்தாலி என்று வளைய வந்தார். ரோமாபுரியில் பாசிஸ வாலிபப் படையின் அணிவகுப்புகளைப் பார்வையிட்டார். Pilgrim என்னும் தலைப்பில் பத்து நாள்களில் தனது சுயசரிதையை (முழுமையானது அல்ல) எழுதி முடித்தார். சனவரி 1938ல் லண்டன் சென்றார், அயர்லாந்து சென்றார். அவரது ஆஸ்தான நாயகரான டிவலேராவைச் சந்தித்தார். இந்தியாவின் பிரதிநிதியைப் போல் ஐரோப்பா முழுவதும் சுற்றிக் கொண்டிருந்த இந்த இளைஞனை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். மான்செஸ்டர் கார்டியன் தனது வியப்பை இப்படிப் பதிவு செய்தது, தன்னை சந்திக்கும் ஒவ்வொருவரையும் போசு நிமிடத்தில் கவர்ந்துவிடுகிறார். இந்தியா, இந்தியா, இந்தியா, இந்தியாவைத் தவிர வேறு எது பற்றியும் அவர்பேசுவதில்லை. அடுத்த காங்கிரசு தலைவர் இவர்தான் என்று ஐரோப்பிய பத்திரிகைகளும் எழுதத் தொடங்கின. இவரைப் பேட்டிகாண பல பத்திரிக்கையாளர்கள் ஓடி வந்தனர். அடுத்த காங்கிரசு தலைவர் நீங்கள்தான் என்று பேசிக்கொள்கிறார்கள் பார்ப்போம். இது மகத்தான கௌரவம். இதைப்பெற எனக்கு யோக்யதை உண்டு என்று நான் எண்ண மாட்டேன், தேசம் எனக்கு மனமுவந்து பெருமை அளித்திருக்கிறது. இந்திய தேசியப் போராட்டத்தின் முன்னணியில் நின்று போராடிய இந்திய வாலிபர்களைக் கவுரவிக்கும் செயல் இது.

தலைவர் ஆன பிறகு என்ன செய்ய உத்தேசித்திருக்கறீர்கள்?

மக்களை ஒன்று திரட்டி அவர்களது பலத்தைக் கூட்ட வேண்டிய முக்கிய பணி காங்கிரசுக்கு இருக்கிறது. பிரிட்டனுக்கு எதிராக ஒரு மாபெரும் சக்தியை உருவாக்க வேண்டும், விரைவில் இது நடக்கும்.

உங்களது உடனடி திட்டம் என்னவாக இருக்கும்?

என்னால் இப்போது உடனடியாகக் கூறமுடியாது. ஆனால் ஒரு விடயம் நிச்சயம் ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணியை முன்பைவிட அதிகமாகப் பலப்படுத்துவோம் என்பது நிச்சயம்.

பிரிட்டனை முறியடிக்க முடியும் என்று நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?

சர்வ நிச்சயமாக.

சுதந்திரத்திற்குப் பிறகு?

சோசலிசத்தை நோக்கி தேசத்தை நகர்த்திச் செல்வோம்.

-தொடரும்

Die fragestellung werfen Sie einen Blick auf diese Web-Seite des forschungsvorhabens wiedergibt

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 13”

அதிகம் படித்தது