சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 15
ஆச்சாரிJun 28, 2014
இந்திய தேசிய காங்கிரசு தலைவராக 41 வயதில், இதற்கு முன் தலைவராக இருந்த நேருவிடம் இருந்து தலைமையை, குசராத் மாநிலத்தில் தபதி நதிக்கரையில் அமைந்திருந்த அரிபுரா மாநாட்டில் போசு ஆற்றிய தலைமை உரையினை சிறிது காண்போம்.
மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே! தோழர்களே இந்த ஆண்டு இந்திய தேசிய காங்கிரசு மகாசபைக்கு என்னைத் தலைவராகத் தேர்ந்தெடுத்ததன் மூலம் நீங்கள் அளித்துள்ள பதவியை நான் நன்றியோடு ஏற்றுக்கொள்கிறேன். இந்திய நாட்டின் பெருமைக்குரிய தலைவர்களால் அலங்கரிக்கப்பட்ட இந்தப் பதவியை, மிகுந்த அச்சத்தோடும், பொறுப்புணர்வோடும்தான் நான் பெற்றுக்கொள்கிறேன். மனித குல வரலாற்றை ஒரு முறை பார்த்தோமேயானால் ஏகாதிபத்தியர்களின் எழுச்சியும், வீழ்ச்சியும் தான் முதலில் நம் கவனத்தைக் கவரும். கிழக்கிலும் மேற்கிலும் பல பேரரசுகள் வேகமாக விரிவுபடுத்தப்பட்டு, பின்னர் அதே வேகத்தில் சுருங்கியும், அழிந்தும் போயிருக்கின்றன. அதுதான் இயற்கையின் விதி. பண்டைக் காலத்தின் ரோம பேரரசாகட்டும், நவீன காலத்தின் துருக்கி, ஆஸ்டிரியா பேரரசு ஆகட்டும், இந்த இயற்கை விதியின் குறிப்பிடத்தக்க உதாரணங்களாகும். இந்திய தேசத்தின் மௌரிய பேரரசும், குப்த பேரரசும், மொகாலய பேரரசும் கூட அதற்கு விதி விலக்கல்ல. சரித்திரத்தின் தவிர்க்க முடியாத விதி காட்டுகிற இந்த உண்மைகளைப் பார்த்த பின்னரும், பிரிட்டிசு சாம்ராச்சியத்திற்கு மட்டும் வேறு வகையான முடிவு காத்திருப்பதாக யாராவது சொல்ல முடியுமா.
எதிர்காலத்தில் நாம் எப்படி செயல்பட வேண்டும் என்பதை இப்போதே விரிவாகச் சொல்வதும், தேசப் புனருத்தாரணத்தை சொல்லுவதும், சற்று அதிகப்பிரசங்கத்தனமாகக் கருதப்படலாம் என்றாலும் விடுதலைப்பெற்ற இந்தியாவின் புனர்நிர்மாணப் பணிகள் எந்த அடிப்படையில் நடைபெறும் என்பதைக் கோடிட்டுக் காட்டுவது அவசியம் என்றே எனக்குத் தோன்றுகிறது. நம்மை எதிர்நோக்கியுள்ள முக்கியமான தேசியப்பிரச்சனைகளான வறுமையையும், கல்வியறிவின்மையையும், பிணிகளையும் ஒழித்துக் கட்டுவதற்கு உற்பத்தியையும், விநியோகத்தையும் விஞ்ஞான ரீதியில் நவீனப்படுத்தி சோசலிச வழியில் நெறிப்படுத்துவதுதான் மார்க்கம் என்பதில் எனக்குச் சிறிதும் சந்தேகமில்லை. நம்முடைய தேசிய அரசாங்கத்தின் முதல் பெரும் பணி ஒரு திட்டக்குழுவை நியமித்துப் புனர்நிர்மாணத்திற்குத் தேவையான ஒரு முழுமையான திட்டத்தை வகுக்கச் செய்வது தான். அந்தத் திட்டம் இரண்டு பகுதிகளாக இருக்க வேண்டும். முதல் பகுதி உடனடியாக மேற்கொள்ள வேண்டிய அவசர காரியங்களையும், இரண்டாவது பகுதி தொடர்ச்சியாக நிறைவேற்ற வேண்டிய நீண்ட கால திட்டங்களையும் கொண்டதாக இருக்கும்.
பொதுவான ஒரு கல்வித் திட்டத்தின் மூலம் நாடு முழுவதையும் தேசிய உணர்ச்சியின் அடிப்படையில் நெருங்கிவரச் செய்ய வேண்டும். பொருளாதாரப் பிரச்சனைகளைத் தீர்க்க விவசாய முன்னேற்றம் மட்டும் போதாது ஒருங்கிணைக்கப்பட்டத் தொழில் வளர்ச்சித் திட்டங்களும் அவசியமாகும். புதிய தொழில் திட்டம் அரசாங்கத்திற்குச் சொந்தமாகவும், கட்டுப்பட்டதாகும் இருப்பது அவசியமாகும். கிராமத் தொழில்கள் ஏற்கனவே நலிந்து கிடக்கின்றன, அவற்றில் எதையெல்லாம் புதுப்பிக்க முடியும், நவீன தொழில் திட்டங்களை எங்கெல்லாம் புகுத்த முடியும் என்பதையும் தொழில் புரட்சிக்குப் பிந்திய கால வளர்ச்சியை நம் நாட்டிற்குப் பொருத்தமான முறையில் எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதையும் நம்முடைய திட்டக்குழு மிகக் கவனமாக ஆராய்ந்து திட்டம் வகுக்க வேண்டும் என்று கூறினார் நேதாஜி.
நேதாஜியின் 1938ல் அரிபுரா மாநாட்டில், பிறகு மாநில காங்கிரசு, அன்றைய அரசுகள் சேர்ந்து தந்த 50,000 ரூபாயுடன் தேசியதிட்டக் குழு ஒன்று நேரு தலைமையில் அமைக்கப்பட்டது. 1940 மார்ச்சு மாதத்திற்குள் அக்குழு இந்திய தேசிய பொருளாதார நிலையை ஆராய்ந்து ஒரு திட்டத்தை வகுத்துத் தர வேண்டும் என்று அந்தக்குழு கோரப்பட்டது.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, நாட்டின் வளர்ச்சிக்காக 1950ம் ஆண்டில் திட்டக்குழு உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக பிரதமர் நேருவும், உறுப்பினர்களாக மாநில முதல்வர்களும் நியமிக்கப்பட்டனர். இது இன்று வரை வெற்றிகரமாக இந்தியாவில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்புக்கு 1938ல் ஹரிபுராவில் அடித்தளம் அமைத்தவர் நேதாஜி.
கல்வி, சுகாதாரம், சிறைச்சாலை சீர்திருத்தங்கள், தொழில், நீர்ப்பாசனம், தொழிலாளர் நலன், நிலச் சீர்திருத்தங்கள், மதுவிலக்கு போன்ற திட்டங்களை வகுத்து அமல்படுத்த முயற்சிக்க வேண்டும். முடிந்தவரை அந்தத் திட்டங்களை அனைத்தும் இந்தியா முழுவதற்கும் ஒரே மாதிரியாக இருக்கும்படிப் பார்த்துக் கொள்வதும் அவசியமாகும் என்றார்.
தனிப்பட்ட மனிதர்களின் தொடர்புகளும், பத்திரிக்கை, திரைப்படங்கள், பொருட்காட்சிகள் ஆகியவற்றின் மூலம் செய்யும் பிரச்சாரங்களும் நமக்கு பெருமளவிற்கு உதவக்கூடும். அயல் நாடுகளில் படிக்கச் செல்லும் மாணவர்களும் இந்தப் பணிக்கு உதவக்கூடும். அவர்களோடு இந்திய தேசிய காங்கிரசு நெருங்கிய தொடர்பு கொண்டு அவர்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்திய மாணவர்களும், அயல் நாடுகளில் வாழும் இந்தியர்களும் இந்தியாவின் அதிகாரப் பூர்வமற்ற தூதுவர்களாகச் செயல்பட முடியும். இன்றைய நிலைமையும் அப்படிப்பட்டதுதான். வெளிநாடுகளில் நம்பிக்கைக்கு உகந்த நண்பர்களை இந்திய தேசிய காங்கிரசு தன் பிரதிநிதிகளாக வைத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் மூலம் சகல துறைகளிலும் ஒத்துழைப்பும், அனுதாபமும் திரள வழி வகுக்க வேண்டும். அயல்நாட்டு இந்தியர்களின் பிரச்சனைகளையும், சிரமங்களையும் தீர்ப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். நமது அண்டை நாடான ஈரான், ஆப்கானிஸ்தான், நேபாளம், சீனா, பர்மா, சயாம், மலேயா, இலங்கை, கிழக்கிந்தியத் தீவுகள் ஆகியவற்றோடு நெருக்கமான கலாச்சாரத் தொடர்புகளை வகுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக பர்மாவோடும், இலங்கையோடும் மிக நெருங்கிய தொடர்பையும், கலாச்சாரத்தையும் நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
நேதாஜி போன்று ஒரு முற்போக்குத் தலைவர் இந்தியாவில் அவருக்குப் பின் தோன்றவில்லை, இனியும் தோன்றுவார்களா? என்பதும் சந்தேகமே?. அப்போதே நமது அண்டை நாடுகளுடன் நாம் இணக்கமான உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், குறிப்பாக இலங்கையுடன் உறவை நேதாஜி கூறியதைப்போல் அவருக்குப் பின் தோன்றிய தலைவர்கள் சிந்தித்திருந்தால் ஒரு சிறு நாடு சீனாவுடன் உறவு கொண்டு இன்று நம்மை மிரட்ட இயலாது. நம் இனம் அழிவைக் கண்டு நம் கையாலாகாதத்தனமாக ஐ.நாவின் தீர்மானத்தை ஆதரிக்காமல் வெட்கப்படும் நாடாக நாம் இன்று இருந்திருக்க மாட்டோம். மீனவர்கள் பிரச்சனையும் இருந்திருக்காது.
நம்முடைய போராட்டம் பிரிட்டிசு ஏகாதிபத்தியத்தை எதிர்த்தது மட்டும் அல்ல, உலக ஏகாதிபத்தியத்தையே எதிர்ப்பது ஆகும். உலக ஏகாதிபத்தியத்தின் அடிக்கல் பிரிட்டிசு ஏகாதிபத்தியம் ஆகவே நாம் இந்தியாவுக்காக மட்டும் போராடவில்லை, மனிதகுல முழுமைக்கும் சேர்த்தே போராடுகிறோம். இந்தியா விடுதலை பெற்றால், மனிதகுலம் முழுவதும் காப்பாற்றப்பட்டதாக அர்த்தம் வந்தே மாதரம்.
-தொடரும்
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 15”