மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சுயநலம் சரணம் கச்சாமி!

வேம்பையன் தொல்காப்பியன்

Jan 15, 2013

‘ஒட்டி’யும் ‘வெட்டி’யும் கட்டிப் புரளுகின்றார்கள், சண்டைக்கும் ச(ம)ரசத்திற்கும்.

ஒட்டி: புத்தம் சரணம் கச்சாமி….!

தர்மம் சரணம் கச்சாமி….!

சங்கம் சரணம் கச்சாமி…!

வெட்டி: சுயநலம் சரணம் கச்சாமி…!

ஒட்டி: டேய், வெட்டி. ஊரோட ஒட்டி வர மாட்டியே. கிண்டலா பண்றே?

வெட்டி: ஓய் ஒட்டி. உண்மையச் சொன்னாக் குத்துதாக்கும். ஒட்டிக்கிட்டே போனா தலையில மொளகா அரைச்சுடுவானுங்க. வெட்டிக்கிட்டு வாய்யா? கிளர்ச்சி பண்ணு. அப்ப தானய்யா நம்ம தனி மனுசன். இல்லாட்டி மந்தை ஆடு தான்.

ஒட்டி: வெட்டிக்கிட்டு வெட்டுக்கிட்டுப் போனா நீ பிழைக்க மாட்டே. மந்தையில இருந்தா தான் பாதுகாப்பு, தெரிஞ்சுக்கோ. தனியா ஓடுனா வேட்டை நாய்க்கோ வேங்கைப் புலிக்கோ நீ பலி! எனக்காவது மொளகா அரைச்சதோட போகும். உன்னையெல்லாம் ஒழிச்சுடுவானுங்க. ஜாக்கிரதை!

வெட்டி: மந்தையில ஒருத்தரை ஒருத்தர் ஏய்ச்சுக்கிட்டு இருந்தாலும் இருப்பீங்க, ஒருத்தன தப்பிக்க விட மாட்டீங்களே!

ஒட்டி: நீ மட்டும் தப்பிக்கலாமுன்னு பார்த்தா எப்படி, விடுவோமா?

வெட்டி: அப்ப சொல்றதக் கேளு.

ஒட்டி: வெட்டியோ ஒட்டியோ நம்ம இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் கட்டிக் கிட்டுத்தான் வாழ்ந்து ஆகனும். சரி சொல்லித் தொலை.

வெட்டி: சுயநலம் ஜீவ சுபாவம். அதனால…

ஒட்டி: பொது நலமும் ஜீவ சுபாவம் தானே.

வெட்டி: பொது நலம் என்ற பெயரில் நாம் செய்வது எல்லாம் நம் சுயநலத்துக்குத் தான்.

ஒட்டி: அதனால?

வெட்டி: நாம சுயநலத்த நல்லாப் புரிஞ்சுக் கிட்டு செயல் பட்டாலே போதும்.

ஒட்டி: அதுக்குத் தான் ‘சுயநலம் சரணம் கச்சாமி’ன்னு சொன்னியாக்கும். ஆனா, இந்த காலத்துல மனிதனுக்குச் சுயநலம் அதிகமாப் போயிடுச்சுன்னுல்ல சொல்றாங்க.

வெட்டி: ஒரு வகையில் அது உண்மைதான். ஆனா, நம்முடைய சுயநலமுன்னு நாம நினைச்சுகிட்டு இருக்கிறது – நம்மள அப்படி நினைக்க வைக்கிறதுன்னும் சொல்லலாம் – நடப்புல பார்த்தா அது அடுத்தவன் சுயநலமா இருக்கு. அதுவும் நம்மள ஏய்க்கிறவன் சுயநலமா இருக்கு.

ஒட்டி: அதாவது நம்ம சுயநலத்த அடுத்தவன் சுயநலமா ஹைஜாக் பண்ணிட்டாங்கன்னு சொல்றே.

வெட்டி: ஆமா, ஒட்டுண்ணின்னு சொல்லாறங்களே, அது மாதிரி.

ஒட்டி: ஒட்டி வாழ்றதத் தப்புன்னு சொல்றியா?

வெட்டி: ஒட்டி (ஒத்து) வாழ்வது தப்பில்ல. ஒட்டாமல் (ஒத்துப் போகாமல்) வாழ முடியாது. திருவள்ளுவர் கூட ‘ஒத்ததறிவான் உயிர் வாழ்வான்’னு(1) சொல்லியிருக்கார். நம்ம மேல பிறர் ஒட்டுண்ணியா வாழறதுக்கு நாம் பலி கடா ஆவதான்னு கேட்டுக்கனும்.

ஒட்டி: ஆனா சமுதாயமா வாழும் போது நம்ம சுயநலமுன்னு தனியா வெட்டிக்க முடியுமா? என்னோட சுயநலத்துல மத்தவங்க சுயநலமும் கலந்து இருக்கத் தானே செய்யும்? என் உழைப்பாலே ஒருவன் பலன் அடையும் போது தானே நானும் பலன் அடைய வழி உள்ளது?

வெட்டி: நீ சொல்றது சரி தான். நமக்கு என்று சுவாசிக்கத் தனியாக் காற்று இல்லை. நாம் சுவாசிப்பதும் பிறர் சுவாசிப்பதும் கலந்து தான் இருக்கு. அது போல் சுயநலங்களும் இருக்க வேணும். ஆனா, நடப்புல அப்படி இருக்குதா? பலன்கள் நூல் பிடித்துப் பார்க்கும் சமத்துவத்தில் இருக்க வேண்டியதில்லை. ஆனால் ஆரோக்கியமான பங்கீட்டில் இருக்குதா? அங்கு தான் சிக்கல்.

ஒட்டி: அதுக்கு என்ன காரணம்?

வெட்டி: நாம நம்ம சுயநலத்த சரியாப் புரிஞ்சுக்காதது தான். அதில் தெளிவா இல்லாதது தான்.

ஒட்டி: அதுக்கு என்ன காரணம்?

வெட்டி: நம்ம மனசுக்குள்ள என்ன போகுதுன்னு நாம கன்ட்ரோல் பண்ணல்லேன்னா அடுத்தவன் கையில அந்த கன்ட்ரோல் போயிடுது.

ஒட்டி: அது எப்படி?

வெட்டி: எடுத்துக்காட்டா, இந்த விண்ணப்பத்துல கையொப்பம் போடுங்க போதும், உங்க கவலையெல்லாம் நாங்க பார்த்துக்குறோம்ன்னு சொன்னா நீ போடுவியா?

ஒட்டி: தூக்கக் கலக்கத்துல இருந்தாக் கூடப் போட மாட்டேன்.

வெட்டி: அப்படின்னா, எனக்கு வாக்களிங்க, உங்க சிக்கலையெல்லாம் நான் தீர்த்து வைக்கிறேன் சொன்னா என்ன செய்வே?

ஒட்டி: கண்ணத் தெறந்து கிட்டே ஏமாறுவேன்.

வெட்டி: ஒரு முறை ஏமாறலாம். அடுத்த முறை?

ஒட்டி: ஒவ்வொரு முறையும் சொல்லி வைச்சது போல ஏமாறுவேன்.

வெட்டி: ஏன்?

ஒட்டி: அதைத் தவிர எனக்கு வேற வழி தெரியல்லே.

வெட்டி: வழியே இல்லையா? அப்படின்னு நம்மள நினைக்க வைச்சுட்டாங்களா?

ஒட்டி: தெரியலையே.

வெட்டி: ஏன் தெரியலை?

ஒட்டி: ஏன் தெரியலைன்னும் தெரியலையே.

வெட்டி: ஏன்னா நமக்கு சிந்திக்கிறது எப்படின்னு தெரியல.

ஒட்டி: சிந்திக்காமலா நாம வாழ்ந்து கிட்டு இருக்கோம்?

வெட்டி: நாம சிந்திக்கிறோம். ஆனா நாம் எப்படிச் சிந்திக்கிறோம் என்பது பற்றிச் சிந்திக்கல.

ஒட்டி: என்ன சொல்றே? நான் நடக்கிறேன். எப்படி நடக்கிறேன்னு கேட்டா என்ன சொல்வேன்? கால்களை மாத்தி மாத்தித் தூக்கி நகர்த்தி வைச்சு நடக்கிறேன் சொல்வேன். அது போல, சிந்திப்பதைப் பற்றி என்ன சொல்றது, எப்படிச் சொல்றது?

வெட்டி: நல்ல உதாரணம் சொன்னே. நடக்க எப்படிக் கத்துக்கிட்டோம்?

ஒட்டி: அம்மா, அப்பா கையப் பிடிச்சுக்கிட்டு. ஏதாவது பொருள்களைப் பிடிச்சுக்கிட்டு.

வெட்டி: நடக்கக் கத்துக்கிட்ட பிறகு, கையப் பிடிச்சுக்க வேணுமா?

ஒட்டி: வேணாம். ஆனால் தடுமாறுவது போல் இருந்தால் பக்கத்தில் உள்ளவரையோ பொருளையோ பிடிக்கத் தான் வேணும்.

வெட்டி: சிந்திப்பதும் இதே போல தான். ஆனா கொஞ்சம் வேறுபாடும் உள்ளது.

ஒட்டி: எப்படி?

வெட்டி: நடக்கச் சொல்லித் தருவது போல, நமக்குச் சிந்திக்கச் சொல்லித் தருவதில்லை. நாம் பிறரைப் பார்த்தும் படிக்கும் கேட்கும் நிகழ்ச்சிகளைக் கொண்டும் திட்டமில்லாமல் ஒழுங்கு முறை இல்லாமல் சிந்திப்பதைப் பற்றி மறைமுகமாக, அதாவது நம் அறிவுணர்வில்லாமல், கற்காமல் கற்கிறோம். கணிதம் சொல்லித் தருவது போல் சிந்திப்பதைக் கற்க என்று ஒரு வகுப்போ, பாடமோ இல்லை.

ஒட்டி: நீ சொல்வதைப் பார்த்தால் நாம் சிந்திப்பதை மந்தைச் சிந்தனை என்று சொல்லலாம் போலிருக்கிறது.

வெட்டி: அப்படியும் சொல்லலாம். அதை விட, மந்தையாக நாம் சிந்திப்பதே (thinking) இல்லை, நமக்கு அனிச்சை செயல் போல் தானியக்கமாக அந்தந்த சூழ்நிலையின் தூண்டுதல்களால் ரெடிமேடாக அந்தந்த ‘சிந்தனைகள்’ (thoughts) வருகின்றன என்று சொல்ல வேண்டும். நமக்குச் சிந்தனை, எண்ணம் வருகின்றது என்பது வேறு. நாம் சிந்திக்கின்றோம் என்பது வேறு.

ஒட்டி: இப்ப எனக்கு வர அடுத்த கேள்விய நான் கேட்கிறனா, அதுவா வருதான்னு சந்தேகம் வருது! உன்னப் பேச விட்டாலே ஆபத்து தான். இருந்தாலும் கேட்டே ஆகனும்; கதைய பாதியில நிறுத்த முடியாது! மேல சொல்லு.

வெட்டி: சிறு பிள்ளையா நாம் நடக்கக் கத்துக் கொண்ட பிறகு, சாலைக் கடப்பது போன்றதைத் தனியாகக் கத்துக் கொள்றோம். பெற்றோர்கள், பெரியவர்கள் பிள்ளைகளுக்குச் சொல்லித் தர்றாங்க. ஆனா சிந்திப்பதில் இப்படி இடம், பொருள், சூழ்நிலை, சிக்கலைப் பொறுத்து எப்படிச் செய்ய வேண்டும் என்று நமக்கு யாரும் சொல்லித் தருவதில்லை.

ஒட்டி: உம்….

வெட்டி: நடக்குறத்துக்குக் கால் வேணும். காலல்ல சக்தி வேணும். நடக்கப் பாதை வேணும். பாதையைப் பார்க்கக் கண் வேணும். பாதைக்குத் தகுந்த காலணி வேணும்.

ஒட்டி: ஒரேடியா நம்ம கால வார்றியே. இது யாருக்குத் தான் தெரியாது?

வெட்டி: சரி சரி. அது போல் சிந்திக்க என்ன வேணும்?

ஒட்டி: மூளை வேணும். மூளையில்ல சக்தி வேணும். மூளை சிந்திக்க….. என்ன வேணும்?

வெட்டி: முக்கியமாகக் கருத்தும் (concepts) தரவும் (data) வேணும்.

ஒட்டி: இது இரண்டும் இல்லாமலா இவ்வளவு நாள் நாம சிந்திச்சுக் கிட்டு இருக்கோம்?

வெட்டி: இது இரண்டும் இல்லாம யாரலும் சிந்திக்க முடியாது. ஆனா, அதை தெரிந்து உணர்ந்து விழிப்பாக இருக்கிறோமா என்பது தான் நாம இப்ப சொல்ல வர்றது.

ஒட்டி: நீ என்ன சொல்ல வர்றேன்னு எனக்கு ஒரு மாதிரியா இப்ப புரியுது. அதாவது நம்ம மூளைக்குள் போகும் கருத்துகளையும் தரவுகளையும் அடுத்தவன் கன்ட்ரோல் பண்ணினா நம்ம சிந்தனை அவன் விருப்பப் படிப் போகும்.

வெட்டி: நெத்தி அடி. சரியாப் பிடிச்சுட்டே.

ஒட்டி: அப்படின்னா, என் சுயநலச் சிந்தனைன்னு நான் நினைச்சுக்கிட்டு இருக்கிறது அவன் சுயநலமாப் போய் விடும். ஐய்யய்யோ, சொல்லும் போதே பயமா இருக்கே.

வெட்டி: பயப்படாதே. இப்ப இந்தக் கருத்த உன்னிடம் விதைச்சுட்டேன். இனி நான் நினைக்கிற மாதிரி நீ சிந்திப்பே!

ஒட்டி: அடப் பாவி, இதுவும் அதே வேலை தானா? இப்ப நான் யார் சுயநலத்துக்குச் சிந்திக்கிறேன்னு என்பது தான் வித்தியாசம் போலிருக்கு! எப்படிப் பார்த்தாலும் என் சுயநலத்துக்குன்னு நான் சிந்திக்கவே முடியாதா?

வெட்டி: ஒரேடியாக் கவலைப் படாதே. நிலைமை அவ்வளவு மோசமில்லை.

ஒட்டி: அதாவது கொஞ்சம் கவலைப் படணும்ன்னு சொல்றே.

வெட்டி: ஆமா, கொஞ்சம் கவலை, அச்சம் வேணும். அப்ப தான் விழிப்பா இருப்போம்.

ஒட்டி: இருந்தாலும் நீ சொல்றது கொஞ்சம் கலக்கல் தருது.

வெட்டி: இந்த இடத்துல, நீ ‘நடப்பதை’ப் பற்றிச் சொல்லும் போது சொன்ன ஒன்னு முக்கியம்.

ஒட்டி: எது?

வெட்டி: பல ஆண்டுகளாக நடந்து கொண்டு இருந்தாலும், தடுமாறுவது போல் இருந்தால் பக்கத்தில் உள்ளவரையோ பொருளையோ பிடிக்கத் தான் வேணும்

ஒட்டி: அதே போலச் சிந்தனை தடுமாறும் போதும் உதவியை நாடணும், இல்லையா?

வெட்டி: அப்படித் தான். ஆனால் கால்கள் பலமா இருக்கத் தொடர்ந்து தினமும் உடற்பயிற்சி செய்வது போல், சிந்திப்பதற்கும் தொடர்ந்து கருத்துத் தேடல், பயிற்சி அடிக்கடி வேணும்.

ஒட்டி: ஆமா, நீ சொல்றது சரி தான். தடுமாறும் போதெல்லாம் பிடிச்சுக்கப் பக்கத்தில ஆளோ பொருளோ இருக்குமுன்னு சொல்ல முடியாதே. ஆனா, பலமான கால்கள் இருந்தால் நமக்கு நாமே சமாளித்துக் கொள்ள முடியுமே. விழுந்தாலும், பிறர் உதவிக்குக் காத்திராமல், நாமே உடனே எழுந்து விடவும் முடியுமே.

வெட்டி: அது போல, சிக்கல் வரும் போது போய்ச் சிந்திக்கக் கற்றுக் கொள்ள நேரம் இருக்காது. முன்கூட்டியே முறையாக, சிந்திக்கப் பல கருத்துக் கருவிகளைக் (thinking tools) கையாளத் (மூளையாளத்) தெரிந்து வைத்திருந்தால் சிக்கல் வரும் போது பயன்படும்.

ஒட்டி: இதெல்லாம் நீ எங்கேயிருந்து கத்துக் கிட்டே?

வெட்டி: திருக்குறள்ள தான்.

ஒட்டி: எந்தக் குறள்?

வெட்டி: இழுக்கல் உடையுழி ஊற்றுக் கோல் அற்றே

ஒழுக்கம் உடையார் வாய்ச் சொல் (திருக்குறள்: 415)

ஒட்டி: இந்த ஒன்னே முக்கால் அடியில நீ சொன்னதெல்லாம் இருக்கிற மாதிரி தெரியலையே.

வெட்டி: நானும் அப்படிச் சொல்லலையே.

ஒட்டி: அப்படின்னா?

வெட்டி: பல குறள்கள் உள்ளன. மேலும் வேறு பல நூல்களிலும் உள்ளன. கேட்கிறது, படிக்கிறதை வைச்சு நாமளா மேற்கொண்டு சிந்திச்சுக்க வேண்டியது தான்.

ஒட்டி: சரி நீ சொல்ற படி நம்ம மனதுக்குள் போகும் கருத்துகளையும் தரவுகளையும் எப்படிக் கண்காணிக்கிறது, புரிஞ்சுகிறது, வடிகட்டறது? அதக் கொஞ்சம் சொல்லு.

வெட்டி: அதுக்குத் தான் ‘சுயநலம் சரணம் கச்சாமி’ வேணும்.

ஒட்டி: அதாவது?

வெட்டி: எல்லோரும் அவரவர் சுயநலத்துக்குத் தான் இயங்குகிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொள்ள வேணும்.

ஒட்டி: இப்ப, நீ உன் சுயநலத்துக்குத் தான் இதெல்லாம் சொல்றியா?

வெட்டி: ஆமா.

ஒட்டி: எப்படி?

வெட்டி: நான் என்னோட சுயநலத்த நல்லப் புரிஞ்சுக்கிட்டதாலே, நான் வாழும் சமுதாயத்தில் பிறர் சிந்திப்பதும் செயல்படுவதும் என்னையும் பாதிக்கும் என்பதாலே, அவர்கள் நல்ல முறையில் சரியாச் சுயநலமாச் சிந்திப்பதில் என் சுயநலமும் அடங்கி இருக்கு. அதனாலே எனக்குப் புரிஞ்சதைப் பிறர்க்குப் பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டியது என் சுயநலம்.

ஒட்டி: ஓகோ, நீ அப்படி வர்றியாக்கும்.

வெட்டி: நான் எப்படி வருவேன்னு நீ நினைச்சே?

ஒட்டி: நீ தலைவன் ஆகறத்துக்கு ஆள் பிடிக்கிறியோன்னு நினைச்சேன்.

வெட்டி: அதுக்கு வேற மாதிரி பேசனும். அதுக்கு மயக்க மருந்து அல்லது எலும்புத் துண்டு கொடுக்கனும். ஆனா இப்ப நான் உனக்குக் கொடுக்கறது மயக்கக் தடுப்பு மருந்து.

ஒட்டி: எப்படி?

வெட்டி: முள்ளை முள்ளால் எடுப்பது போல், அம்மை, போலியோ நோய்களுக்கு அதே நோய்க் கிருமிகளைக் குறைந்த வீரியத்தில் உடம்பில் தடுப்பு மருந்தாகச் செலுத்துவது போல், கருத்து மயக்கங்களுக்கு மாற்று மருந்தும் கருத்து தான்.

ஒட்டி: சரி, நம்மிடம் வந்து சேரும் எப்படி கருத்துகளைக் கண்காணிக்கிறது, புரிஞ்சுகிறது, வடிகட்டறதுன்னு பார்ப்போம்.

வெட்டி: எதுவும் நமக்கு ஆயத்தமாக (ready-made) முடிவுகளைக் கொடுத்தால் அல்லது முடிவுகளை வலியுறுத்தினால் நாம் விழித்துக் கொள்ள வேண்டும். நாம் சிந்தித்து முடிவுக்கு வருகிறோமா அல்லது நாம் குறிப்பிட்ட முடிவுக்கு இழுத்துச் செல்லப் படுகிறோமா என்று கண்காணிப்பது பழக்கத்தில் தான் வரும். இது மிதிவண்டி ஓட்டுதல், நீச்சல் கற்றுக் கொள்ளுதல் போன்று பயிற்சியில் தான் வரும். படிப்பதால், கேட்பதால் வராது.

ஒட்டி: எல்லா நேரங்களிலும் இப்படி நாம் முடிவுக்கு வர முடியுமா?

வெட்டி: வழக்கமான உடல் நிலையில் நாம் உணவை உண்டு செரித்து ஊட்டத்தைக் கிரகித்துக் கொள்ளனும். ஆனால் உயிர் ஆபத்துள்ள அறுவை சிகிச்சை போன்ற நேரங்களில் அடுத்தவர் குருதியை நேரடியாக உடலில் ஏற்றிக் கொள்ளனும். அது போல் வாழ்வில் நாம் சிந்திக்க இயலாத தடுமாற்றம், துன்பத்தில் இருக்கும் போது  அவசரத்திற்கும் அவசியத்திற்கும் பெரியோர், முதியோர், துறை வல்லுநர் சொல்வதை அப்படியே கேட்டு நடக்கலாம். ஆனால் அன்றாட வாழ்வில் நமமிடம் வந்து சேரும் கருத்து, செய்திகளைச் சிந்தித்து, உரசிப் பார்த்து நம்முடைய அறிவாக, அனுபவமாக உயிர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒட்டி: இதை எப்படிப் பயிற்சி செய்வது?

வெட்டி: Dr. Edward de Bono வின்  Six Hats Thinking (2) ஒரு நல்ல தொடக்கமாகக் கொள்ளலாம். அது சிந்திப்பது என்பதை உடைத்து ஆறு கட்டங்களாக ஒழுங்கு படுத்துகின்றது; முறைப் படுத்துகின்றது.

ஒட்டி: இப்படியெல்லாம் சிந்திப்பதைக் கற்றுக் கொள்வதற்கும் என் சுயநலத்திற்கும் என்ன சம்பந்தம்?

வெட்டி: இப்படி முறையாகச் சிந்திக்கும் போது நம்மைப் பிறர் ஏமாற்றுவதும் நம்மை நாம் ஏமாற்றிக் கொள்வதும் கடினம். நம்முடைய உண்மையான சுயநலம் நமக்கு விளங்கும்.

ஒட்டி: அந்த உண்மையான சுயநலம் என்ன?

வெட்டி: இவற்றைப் புரிந்து வைத்துப் பின்பற்றுவது தான் உண்மையான சுயநலம்.

  1. எல்லோரும் எப்போதும் அவரவர் சுயநலத்துக்குத் தான் இயங்குகின்றார்கள், சில விதிவிலக்குகளைத் தவிர.
  2. என் சுயநலமும் பிறர் சுயநலங்களும் ஒட்டி உறவாடுபவை. அவை தனித் தனியாகத் தொங்கவில்லை.
  3. அப்படிச் சுயநலங்கள் ஒட்டி உறவாடுவதால் பிறர் சுயநலத்தை என் மீது ஏற்றி விட வாய்ப்புள்ளது. இது நட்பு, குடும்பம், சமுதாயம், அரசியல், பொருளாதாரம் எல்லாத் தளங்களிலும் தெரிந்தும் தெரியாமலும் திட்டமிட்டும் திட்டமிடாமலும் நடக்கின்றது,
  4. இந்த விழிப்புணர்வுடன் என்னை நான் பாதுகாத்துக் கொள்ளும் போது பிறரும் அவ்வாறு பாதுகாத்துக் கொள்ளத் தூண்டப்படுவார்கள்.

ஒட்டி: இதெல்லாம் புதுசா தெரியலையே.

வெட்டி: புதுசு இல்லை தான். இது போன்ற உளவியல் கருத்துகள் ஏற்கனவே நம்ம ஒவ்வொருவருக்கும் தெரியாமத் தெரியும். ஆனால் அவை அறிவுணர்வாகத் (conscious) தெரியும் போது தான் நமக்கு அவை தெரியும்ன்னு தெரியும். மிதிவண்டிய பேலன்ஸ் பண்ணவும் நீச்சலடிக்கவும் தேவையானது உன்னிடம் ஏற்கனவே இருக்கு. ஆனா அவை பயிற்சியில் தான் வெளிப்படுது. திறமையாக மாறுது. அதே போலத் தான் உன் உண்மையான சுயநலமும்.

ஒட்டி: எனக்குத் தெரியும்ன்னு தெரியலன்னா அதைத் தெரிந்து வைத்திருக்கும் பிறர் என்னைச் சூழ்ச்சியாக அடிமைப் படுத்தி விடலாம்.

வெட்டி: அது தான். விளம்பரங்களை மீண்டும் மீண்டும் பார்ப்பதால் நாம் பாதிக்கப் படுவோம் என்பதை நாம அறிவுணர்வாகத் தெரிஞ்சு வைச்சில்லேன்னா, அதைத் தெரிந்தவன் நம்மை நாம் அறியாமலே மயக்கி நம் பணத்தைப் பறிச்சுடுவான்.

ஒட்டி: விளம்பரங்களே கூடாதா? அவை இல்லேன்னா நம்மால் சந்தையில் என்னென்ன  இருக்குன்னு எப்படித் தெரிஞ்சுக்க முடியும்?

வெட்டி: விளம்பரங்கள் உண்மையும் சொல்லுது, பொய்யும் சொல்லுது. விளம்பரங்கள் உன் சுயநலத்துக்கான (மட்டும்) இல்லை. அவை அவர்கள் சுயநலத்துக்காகத்தான் முதன்மையா இருக்குன்னு புரிஞ்சுக்கறது தான் முக்கியம்.

ஒட்டி: இது மாதிரியே பார்த்துக் கிட்டு போனா, மனிதர்களுக்கு மனிதர் சந்தேகம், அவநம்பிக்கை தானே வளரும். அது நல்லதா?

வெட்டி: நல்ல கேள்வி. நமக்கு எதையும் கருப்பு வெள்ளையாக எளிமைப் படுத்திப் பார்த்து, அப்படிப் பார்க்க வைத்து, பழக்கம் ஆயிடுச்சு. அதனால நடைமுறைச் சாத்தியமா நடந்து கொள்வதும் விளம்பரம், இசம், நுகர்வுப் பண்பு போன்றவற்றிற்கு அடிமையாகிப் பலியாகாமல் இருப்பதும் எதிர் எதிரானவை அல்ல என்று புரிவதில்லை. குறுகிய கால நோக்கில் உலகியலாக நடந்து கொள்வதும் தொலை நோக்கில் பாதகமானவற்றை ஆதரிக்காமல் இருப்பதும் இயலும் போது ஆரோக்கியமானவற்றை ஆதரிப்பதும் ஒன்றுக்கொன்று முரண்பாடனவை அல்ல. அதனால நாம ஏமாறாமல் விழிப்பா இருப்பது என்பதும் நமக்குள் ஒருவரை ஒருவர் நம்பி வாழ்வதும் எதிர் எதிரானவை அல்ல.

ஒட்டி: இப்ப நீ சொல்றத நான் துருவித் துருவிக் கேள்வி கேட்கிற மாதிரி, சிலரிடம் கேட்டா, ‘என் மேல் நம்பிக்கை இல்லையா?’ என்று சண்டைக்கு வந்துடுவாங்க.

வெட்டி: உண்மை தான். நமக்கு இது போல் சிந்திப்பது ஒரு பண்பாக, மரபாக, பழக்கமாக பரவலாக இல்லாததால் நீ சொல்லும் சிக்கல் இருக்கத் தான் செய்யும். அவர்களிடம் ‘அவர்கள் சொல்வதைக் கேட்டு நாம் சிந்தித்து முடிவுக்கு வரும் போது, உண்மையில் நம்பிக்கை அதிகம் ஆகும் என்பதையும் அந்த முடிவைச் செயல் படுத்துவதில் நாம் முனைப்பாகவும் பொறுப்பாகவும் இருப்போம் என்பதையும்’’ பொறுமையாக விளக்கிச் சொல்ல வேண்டும். சிந்திப்பதும் சிந்திப்பதை அனுமதிப்பதும் இன்றைய சூழ்நிலையில் சுலபம் என்று யாரும் சொல்ல முடியாது.

ஒட்டி: நீ சொல்வது சரி தான். மந்தையாக இருப்பதும் மந்தைகளை மேய்ப்பதும் சுலபம். ஆனால் எல்லோரும் சிந்திக்க ஆரம்பித்தால் என்ன ஆவது? எல்லோரும் எல்லாவற்றிலும் சிந்திக்கும் அளவுக்குத் தகுதி பெற்றிருக்க முடியுமா?

வெட்டி: உலகில் சிந்திக்கத் தெரிந்ததாய் நினைத்துக் கொண்டிருக்கும் மேய்ப்பர்கள் இருக்கிறார்கள். சிந்திக்கத் தெரியாத மந்தை ஆடுகள் உள்ளனர். இரண்டிற்கும் இடையில் அரைகுறையாகச் சிந்திக்கத் தெரிந்தவர்கள் (link persons) (3) ஆடுகளிடம் மேய்ப்பர்களின் அயோக்கிய ஏஜெண்டுகளாக உள்ளனர். இதில் சரியாகச் சிந்திக்கத் தெரிந்த மிகச் சிலரின் எச்சரிக்கைக் குரல் மேய்ப்பர்களின் காதுகளையோ ஆடுகளின் காதுகளையோ எட்டுவதற்கே வழியில்லாமல் இருக்கிறது. அதனால் நீ நினைக்கும் ஆபத்து அண்மை எதிர்காலத்துக்குள் நேர வழியில்லை.

ஒட்டி: நம் காலத்தில் நடக்க வாய்ப்பில்லாத எதிர் விளைவுகளை நினைத்துக் கொண்டு, இன்று பின்பற்ற வேண்டியதை நாம் புறக்கணிக்கக் கூடாது. எல்லாவற்றிலும் நன்மை, தீமை இருக்கும். அது மிகும் போது அப்போது உள்ளவர்கள் பார்த்துக் கொள்வார்கள். இல்லையா?

வெட்டி: சரி தான். அதே சமயம் மந்தையாக இருப்பது தவறில்லை.

ஒட்டி: என்னது? மந்தைத் தன்மையும் வேண்டுமா?

வெட்டி: ஆமாம், மந்தைத் தன்மையும் வேண்டும்.

ஒட்டி: இது என்ன புதுக் கரடியா இருக்கு. இவ்வளவு நேரம் சொன்னதெல்லாம் என்ன ஆச்சு?

வெட்டி: புதுக் கரடி இல்ல. அதாவது நாம சிந்திச்சு முடிவு பண்ணி மந்தையா இருக்க வேண்டிய போது இருக்கனும்.

ஒட்டி: அதுவும் நம்ம சுயநலமா?

வெட்டி: ஆமாம், எதிர்காலத்த முழுக்க யாராலும் கணிக்கவோ தீர்மானிக்கவோ முடியாது. அதனால பல நேரங்களில் சிந்திப்பதைக் கட்டுப்படுத்தி மந்தைத் தன்மையா செயலில் இறங்கித் தான் அடுத்த கட்டத்துக்குப் போக முடியும்.

ஒட்டி: என்னப்பா இது, வெட்டிக் கிட்டுப் போயிட்டு இப்ப ஒட்டிக் கிட்டு வர்றே. இருந்தாலும் நீ சொல்றது சரியாத் தான் படுது.

வெட்டி: ஏன் சரியாப் படுது?

ஒட்டி: தெரியலையே.

வெட்டி: நான் சொல்றேன். சிந்திப்பதைப் பற்றிச் சிந்திப்பது என்பது சிந்திப்பதை ஆளுவதாக மாற வேண்டும்.

ஒட்டி: அப்படின்னா?

வெட்டி: அதாவது, எப்ப சிந்திக்கனும் எப்ப சிந்திக்கக் கூடாது என்று அதை ஆட்சி செய்யனும்.

ஒட்டி: அப்பனே, இது ரொம்ப காம்பிளிகேட்டா (complicate) போவுது. நான் பேசாம ஆண்டவனுக்கும் நம்மள ஆளுறவனுக்கும் அடிமையாவே இருந்துட்டுப் போறேன். அதில் வசதியும் இருக்கு. சுகமும் இருக்கு. அது சுலபமாவும் இருக்கு.

வெட்டி: ஓய் ஒட்டி, நீ கெட்டாலும் குட்டிச் சுவர விட்டு வர மாட்டே.

ஒட்டி: இந்த பாரு. நீ சொல்றது சரியா இருந்தா மட்டும் பத்தாது; சுலபமாவும் இருக்கனும். இல்லேன்னா என் கிட்டே எடுபடாது.

வெட்டி: நீ சரியான மந்தை ஆடு!

ஒட்டி: நீ வழி தவறிய ஆடு!

வெட்டி: நீ உருப்பட மாட்டே!

ஒட்டி: நீ எல்லாத்தையும் தொலைச்சுட்டுத் தெருவில திண்டாடுவே!

வெட்டி: சரி போய் ஒட்டித் தொலை, (மனதிற்குள்: வேறு ஆடு கிடைக்காமலா போய் விடும்?)

ஒட்டி: அப்பாடா, தப்பிச்சேன். (மனதிற்குள்: அறிவுள்ளவனா இருக்கனும். ஆனா, அப்படி நம்மள வெளியக் காமிச்சுக்கக் கூடாது. இந்த வெட்டிப் பயலுக்கு அது இன்னும் புரியலை.)

ஒட்டியும் வெட்டியும் நம் ஒவ்வொருவர் உள்ளும் இருக்கின்றன. மந்தையில் தான் தனித்துவத்திற்குப் பொருள் / பயன் இருக்கும். கூட்டத்தில் (கூட்டத்தோடு) தான் கொடி தூக்க வேண்டும். இவற்றை ஆரோக்கியமான விகிதத்தில் (சமமான விகிதத்தில் இருக்காது) திறம்பட ஆளுமை செய்வது நலமான வளமான நிறைவான வாழ்க்கைக்கு அவசியம்.

It is the ordinary who give stability and the extra-ordinary who change the world.

சாதாரணமானவர்கள் உலகைத் தாங்குகிறார்கள்; வித்தியாசமானவர்கள் உலகை மாற்றுகிறார்கள்.

இது குறித்த சுருக்கமான வலைப் பதிவு:

http://tholthamiz.blogspot.co.uk/2011/03/change-and-stability.html

(1)        ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப் படும் (திருக்குறள்: 214)

(2)           http://edwdebono.com/

(3)           The Role of Link Persons by Dr.S.A.Veerapandian

L acquisition depends on learners https://pro-essay-writer.com/ interacting with other l speakers and engaging with increasing amounts of new information which steadily builds on previous knowledge

வேம்பையன் தொல்காப்பியன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சுயநலம் சரணம் கச்சாமி!”

அதிகம் படித்தது